Published:Updated:

ஷேர்லக்: ஏற்றுமதி அதிகரிப்பு... விலை உயரும் சர்க்கரைப் பங்குகள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: ஏற்றுமதி அதிகரிப்பு... விலை உயரும் சர்க்கரைப் பங்குகள்!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை காலை 7 மணிக்கே ஷேர்லக் தகவல் அனுப்பியிருந்தார். அவர் சொன்னபடி மாலை 4 மணிக்கு நம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். வழக்கமான பரபரப்புடன் இருந்தவர், “உங்களுக்கு அரை மணி நேரம்...” என வேகப் படுத்தினார். நாம் நேரிடையாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

கடந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் வெளியேறியிருக்கிறார்களே?

“கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங் களின் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்திருக்கிறார்கள். அதாவது, ரூ.1.4 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு விற்பனை செய்தது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முந்தைய 2020-21-ம் ஆண்டில் அவர்கள் ரூ.2.7 லட்சம் கோடி அளவுக்கு இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய் திருந்தனர். கடந்த நிதி ஆண்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்தது, உக்ரைன் - ரஷ்யா போர், இந்திய பொருளாதாரம் மீண்டுவருவதில் இருக்கும் மந்தநிலை போன்ற பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறி யிருப்பதாகத் தெரிகிறது. 2018-19-ம் நிதி ஆண்டில் இவர்கள் ரூ.88 கோடியை மட்டுமே இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து வெளியில் எடுத்திருக்கிறார்கள். 2015-16-ல் ரூ.14,171 கோடியும் 2008-09-ல் ரூ.47,706 கோடியும் வெளியில் எடுத்தார்கள்.”

ஓவியம் : அரஸ்
ஓவியம் : அரஸ்

கடந்த வாரத்தில் சர்க்கரைப் பங்குகளின் விலை ஏற்றத்தைச் சந்தித்திருக்கின்றனவே... என்ன காரணம்?

“கடந்த வாரத்தில் புதன்கிழமை வர்த்தகத் தின்போது மகத் சுகர் அண்ட் எனர்ஜி, ராணா சுகர், உத்தம் சுகர் மில்ஸ், கே.எம் சுகர், ஆந்திரா சுகர், மவானா சுகர் மற்றும்  ரேணுகா சுகர் ஆகிய சர்க்கரை நிறுவனங்களின் பங்கு விலை 10% முதல் 15% வரை உயர்ந்தன. முன்னணி சர்க்கரை நிறுவனங்களான துவாரகேஷ் சுகர், டால்மியா பாரத் சுகர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் திரிவேணி இன்ஜினீயரிங் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை 5 - 10% வரை அதிகரித்து வர்த்தகமாகின.

இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் 8.5 மில்லியன் டன்னைத் தொடும் என ஐ.எஸ்.எம்.ஏ அறிக்கை தெரிவிக்கிறது. சர்க்கரைக்கான தேவைகள் உள்நாட்டில் மட்டுமன்றி, உலக நாடுகளிலும் அதிகரித்திருப்பது இந்திய சர்க்கரை நிறுவனங்களுக்குக் கூடுதல் மவுசை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் சர்க்கரைப் பங்குகளின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.

இதற்கிடையில், உள்நாட்டு உற்பத் தியை அதிகரிக்கவும், 2025-ம் வருடத்துக்குள் எத்தனால் கலவையை 20% வரை அடையவும், பல்வேறு கடன் திட்டங்களின்கீழ் எத்தனால் திட்டங்களுக்குக் கடன் வழங்கு வதற்கான காலக்கெடுவை இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை மத்திய அரசாங்கம் நீட்டித்துள்ளது.

இது சர்க்கரை நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் நிலவரப்படி, சர்க்கரை உற்பத்தி அளவு 30.98 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.27.87 மில்லியன் டன்னாக இருந்தது.”

அதானி குழும நிறுவனங் களின் பங்கு விலை அதிகரித் திருக்கிறதே... என்ன காரணம்?

“கௌதம் அதானி தலைமை யிலான அதானி குழுமங் களின் அதானி என்டர் பிரைசஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி ஆகிய இரண்டு நிறுவனங் களும் அதானி டிரான் ஸ்மிஷனுடன் இணைந்து நிதி திரட்டும் திட்டங்களை அறிவித்த பிறகு, இந்த மூன்று நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றமடைந்தன. அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான் ஸ்மிஷன் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி ஆகியவற்றின் இயக்குநர்கள் குழுக்கள் நிதி திரட்டுவதற்கான திட்டத்தைப் பரிசீலிக்கக் கூடுகின்றன. கடந்த வாரம் புதன்கிழமை அன்று அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.2,164 வரை அதிகரித்தது. அதானி கிரீன் நிறுவனத்தின் பங்கு ரூ.2,250 வரை அதிகரித்தது. அதானி டிரான்ஸ்மிஷன் ரூ.2,471 வரை அதிகரித்தது. அதேபோல அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலை 5% வரை அதிகரித்து ரூ.244.50-க்கு வர்த்தகமானது. இந்தப் பங்கு கடந்த ஒரு மாதத்தில் 102% விலை அதிகரித்துள்ளது.”

இந்தியப் பங்குச் சந்தைகள் சரிந்து வர்த்தகமாகின்றனவே... என்ன காரணம்?

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஃபெடரல் வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்தப் போவதாகத் தெரிவித்திருந்தது. அந்த வட்டிவிகிதம் 50 புள்ளிகள் வரை இருக்கலாம் என்று கடந்த வாரம் புதன் கிழமை அன்று தகவல் வெளியானது. இதன் காரணமாகக் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கின.

இந்தியாவில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது. தொடர்ந்து ஆறாவது மாதமாக மொத்த விலைப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கிறது. இதனால், ரிசர்வ் வங்கி வரும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவிகிதத்தை உயர்த்தலாம் என்ற அச்சம் முதலீட்டாளர் களிடம் இருக்கிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும்போதே மும்பைப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 0.5% குறைந்து, 59,296 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 0.6% சரிந்து, 17,692 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஹெச்.டி.எஃப்.சி பேங்க் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் பங்கு விலை குறைந்திருக்கிறதே?

“ஏப்ரல் 4-ம் தேதி ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்கு விலை 14% வரை அதிகரித்து, ரூ.1,721.85 என்கிற நிலையிலும், ஹெச்.டி.எஃப்.சி பங்கு விலை 16% வரை அதிகரித்து, ரூ.2,855 என்கிற நிலையில் வர்த்தகமான நிலையில், புதன்கிழமை வர்த்தகத்தில் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் பங்கு விலை 11% வரை சரிந்து வர்த்தகமானது.

ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில், ஹெச்.டி.எஃப்.சி இன்வெஸ்ட் மென்ட் லிமிடெட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித் ததை அடுத்து இந்த விலை சரிவை சந்தித்திருக்கிறது.”

டாடா டெலிசர்வீசஸ் பங்கு விலை அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமானதே?

“டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த வாரம் புதன்கிழமை அன்று 5% அப்பர் சர்க்யூட் விலையில் ரூ.202.70-க்கு வர்த்தகமானது. கடந்த மார்ச்சில் இதன் பங்கு விலை ரூ.93.55-க்கு வர்த்தகமானது. இந்த நிலை யுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, 116% விலை அதிகரித் துள்ளது.’’

மாரிகோ நிறுவனத்தின் பங்கு விலை குறைய என்ன காரணம்?

“மாரிகோ நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை அன்று 2% வரை குறைந்து, ரூ.528-க்கு வர்த்தக மானது. இந்த நிறுவனம் ஜனவரி- மார்ச் காலாண்டு வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்ததை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தை யில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ஹேர் ஆயில் மற்றும் சஃபோலா சமையல் எண்ணெய் விலையை மாரிகோ நிறுவனம் உயர்த்தியது. இதன் காரணமாக விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்ததால், வருவாய் வளர்ச்சி குறைந்திருப்ப தாகச் சொல்லப்படுகிறது. சி.எல்.எஸ்.ஏ தரகு நிறுவனம் இந்தப் பங்கின் இலக்கு விலையை ரூ.530 என நிர்ணயித்துள்ளது.”

3ஐ இன்ஃபோடெக் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்துள்ளதே...!

“ஸ்மால்கேப் ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான 3ஐ இன்ஃபோடெக் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக ஏப்ரல் 5-ம் தேதி இந்த நிறுவனம் அறிவித்ததை அடுத்து 5% அப்பர் சர்க்யூட் விலையில் ரூ.59.35-க்கு வர்த்தகமானது. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பெரிய வணிக வங்கி ஒன்றிலிருந்து அதன் ‘NuRe’ இயங்குதளத்துக்கான கிளவுட் டிரான்ஸ் ஃபர்மேஷன் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.6.04 கோடி. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 30-ம் தேதி இந்த நிறுவனம் தானி லோன்ஸ் அண்ட் சர்வீசஸ் (dhani loans and services), அமரராஜா பேட்டரீஸ், ஆவாஸ் ஃபைனான்ஷியர்ஸ், எருலேர்னிங் சொல்யூஷன்ஸ் (Erulearning solutions private limited), விஷால் மெகா மார்ட் மற்றும் ராக்மேன் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய ஆறு நிறுவனங்களுடன் முதன்மை சேவை ஒப்பந்தங்களில் (MSAs) கையெழுத்திட்டது.”

ஆசியன் கிரானிடோஸ் நிறுவனம் உரிமைப் பங்குகள் வெளியிடுகிறதாமே?

“இந்தியாவின் முன்னணி செராமிக் டைல்ஸ் தாயாரிப்பாள ரான ஆசியன் கிரேனிடோஸ் நிறுவனம் ஏழு கோடி பங்குகளை ரூ.63 என்கிற விலையில் உரிமைப் பங்காக வெளியிட முடிவு செய்துள்ளது. இது கடந்த வாரம் வர்த்தக விலையான ரூ.118-ஐவிட 46.6% தள்ளுபடி விலையாகும். ரூ.441 கோடி நிதி திரட்டும் நோக்கில் வெளியிடப்படும் இந்த உரிமைப் பங்கு வெளியீடு வருகிற ஏப்ரல் 25-ம் தேதி ஆரம்பமாகிறது. மே 10-ம் தேதி நிறைவடைகிறது.’’

டி.சி.எக்ஸ் சிஸ்டம்ஸ் ஐ.பி.ஓ வெளியிடுகிறதாமே?

“பெங்களூருவைத் தலைமைஈிடமாகக் கொண்டு செயல் படும் இந்த நிறுவனம் முக்கியமாக சிஸ்டம் ஒருங்கிணைப்பு மற்றும் கேபிள்கள் மற்றும் வயர் ஹார்னஸ் அசெம்பிளிகள் உற்பத்தி செய்வதில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிறுவனம், ஐ.பி.ஓ மூலம் ரூ.600 கோடி நிதி திரட்ட அனுமதி கேட்டு செபிக்கு விண்ணப் பித்துள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் ரூ.500 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. ரூ.100 கோடி மதிப்புள்ள புரமோட்டார்களின் பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையில் வெளியிடுகிறது.’’

ஹரிஓம் பைப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு வெற்றியடைந்ததா?

“ஹரிஓம் பைப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.130 கோடி நிதி திரட்டும் நோக்கில் மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளியிட்டது. இதற்கு முதலீட்டாளர்கள் அமோகமான வரவேற்பை வழங்கியிருக் கிறார்கள். இந்தப் புதிய பங்கு வெளியீட்டில் வெளி யிடப்பட்ட மொத்தப் பங்கு களின் எண்ணிக்கை 85 லட்சம். ஆனால், 6.74 கோடி பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ண ப்பித்திருக்கிறார்கள். இது பங்கு வெளியீட்டு அளவை விட 7.93 மடங்கு அதிகமாகும்.

ஹைதராபாத்தைத் தலைமை யிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் எஃகு பொருள்களை உற்பத்தி செய்கிறது. தென் இந்தியாவில் பரவலான விநியோக சங்கிலியைக் கொண் டுள்ளது. இந்த நிறுவனம் வீடுகள், உள்கட்டமைப்பு, விவசாயம், வாகனம், சூரிய சக்தி, மின்சாரம், சிமென்ட், சுரங்கம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனமாக இருக்கிறது” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

ஓய்வுக்காலத்துக்கான சரியான திட்டமிடல்..!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘ஓய்வுக்காலத்துக்கான சரியான திட்டமிடல்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, ஏப்ரல் 17-ம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 to 12.00 மணி வரை நடைபெறும். இதில் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.குருராஜ், சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

ஷேர்லக்: ஏற்றுமதி அதிகரிப்பு... 
விலை உயரும் சர்க்கரைப் பங்குகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism