Published:Updated:

ஷேர்லக்: டோலி கண்ணா முதலீடு செய்த 10 பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: டோலி கண்ணா முதலீடு செய்த 10 பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை தமிழ்ப் புத்தாண்டு என்பதால், புதன்கிழமையே இதழ் முடிக்கும் தகவலை ஷேர்லக்கிடம் முன்கூட்டியே சொல்லியிருந்தோம். புதன் மாலை சரியாக 3.30 மணிக்கு வந்துவிடுவதாக நமக்கு பதில் அளித்திருந்தார். அவர் சொன்னது போல சரியான நேரத்துக்கு வந்தவர், ‘‘தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்’’ என்றபடி நம் கேபினுக்குள் நுழைய, ‘‘உங்கள் வாழ்த்துகளை வாசகர்களுக்குத் தெரியப்படுத்திவிடுகிறோம்’’ என்றபடி இருக்கையில் உட்கார வைத்து, ஆப்பிள் ஜூஸை சில்லென்று தந்தோம். அதை ஒரு மடக்கு ரசித்துக் குடித்துவிட்டு, நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

எல்.ஐ.சி ஐ.பி.ஓ குறித்த செய்தி சில நாள்களுக்கு அடங்கி இருந்தது. இப்போது இந்த மாதத்தில் வரும் என்கிற பேச்சு கிளம்பி இருக்கிறதே..!

“2022-ம் ஆண்டின் மார்ச் 10-ம் தேதி ஐ.பி.ஓ வெளியிடப்படும் எனச் சொல்லப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இந்த நிலையில், எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடுவது சாதகமாக இருக்காது என்பதை உணர்ந்து, மத்திய அரசாங்கம் அதை ஒத்திவைத்தது.

தற்போது இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றப் போக்கில் காணப்படுவதால், நடப்பு மாதத்தில் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியாகும் என்கிற தகவல் வெளியாகியிருக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கொண்ட அமைச்சரவைக் குழு எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீட்டுக்கான தேதிகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் அடிப்படையில், நடப்பு மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அல்லது இறுதி வாரத்தில் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதிகபட்ச மாக மே மாதம் 12-ம் தேதிக்குள் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிடப்படலாம் எனவும் சொல்லப் படுகிறது. எல்.ஐ.சி-யில் பாலிசி வைத்திருப்பவர் களுக்கு இந்த ஐ.பி.ஓ-வில் பங்குகளை வாங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், இந்த நிறுவனப் பங்கை வாங்க பலரும் தயாராகி வருகிறார்கள்.”

குஃபிக் பயோசயின்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்து வருவது ஏன்..?

“கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று குஃபிக் பயோசயின்ஸ் (Gufic Biosciences) நிறுவனத் தின் பங்கு விலை 14% வரை அதிகரித்து 52 வார உட்சபட்ச விலையான ரூ.283.50-ஐ தொட்டு வர்த்தகமானது. அன்றைய காலை வர்த்தகத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.70% சரிந்து வர்த்தகமான நிலையில், இந்த பங்கு விலை மட்டும் 11% வரை அதிகரித்து, ரூ.274.75-க்கு வர்த்தகமானது.

கடந்த வாரம் திங்கள் அன்று, இந்த நிறுவனம் ‘Isavuconazonium Sulfate API’-ஐ தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகம் செய்ய மத்திய மருந்துகள் தரக் கட்டுப் பாட்டு அமைப்பு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அனுமதி யைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. இதற்குப் பிறகே பங்கு விலை ஏற்றத்தைச் சந்தித்தது.’’

எஸ்கார்ட்ஸ் பங்குகளை ராகேஷ் ஜுன் ஜுன்வாலா விற்றிருக்கிறாரே?!

“கடந்த டிசம்பர் காலாண்டு முடிவின்போது, பிரபல முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன் வாலாவின் போர்ட்ஃபோலியோ, இந்த நிறுவனத்தின் 5.68% பங்கை அதாவது, 75 லட்சம் பங்கை வைத்திருப்பதாகக் காட்டியது. ஆனால், கடந்த மார்ச் காலாண்டு முடிவின்படி, 1% மற்றும் அதற்குமேல் இந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களின் பட்டியலில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பெயர் இடம்பெற வில்லை. எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே இந்த நிறுவனப் பங்கு விலை இறக்கத்தைச் சந்தித்தது. 12-ம் தேதி உட்பட கடந்த 5 வர்த்தக தினங்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 17% சரிந்துள்ளது. டிசம்பர் காலாண்டு முடிவில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 32.27% சரிந்து, ரூ.194.19 கோடியாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.286.71 கோடியாக இருந்தது.”

எல்.டி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“இந்த நிறுவனப் பங்கு விலை கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை அன்று 4% வரை அதிகரித்து, ரூ.89.40-க்கு வர்த்தக மானது. கடந்த வாரத்தின் முதல் இரு வர்த்தக தினங்களில் மட்டும் இந்தப் பங்கு விலை 14% வரை ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.37% வரை சரிந்து 58508 என்கிற நிலையில் காணப்பட்டது. அன்றைய தினத்தில் என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ சந்தையில் 8.9 மில்லியன் ஈக்விட்டி பங்குகள் கைமாறியதால், பங்கு வர்த்தக அளவுகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்தன. 2022-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஆர்கானிக் வணிக லாபம் ஒருங்கிணைந்த அதிக எபிட்டாவுக்கு வழிவகுக் கும் என்று தரக் குறியீட்டு நிறுவனமான கிரிசில் கணித் துள்ளது.”

லாயிட்ஸ் மெட்டல்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிறுவனப் பங்கின் விலை கடந்த வாரம் 5% அப்பர் சர்க்யூட் விலையில் ரூ.183.30-க்கு வர்த்தகமானது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த நிறுவனப் பங்கின் விலை 1,301% அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.13-லிருந்து ரூ.183.3-ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 3% வீழ்ச்சி அடைந்த நிலையில், இந்தப் பங்கு விலை 24% வரை ஏற்றத் தைச் சந்தித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் தினசரி 1,50,000 பங்குகள் வர்த்தகமாகி வந்த நிலையில், கடந்த வாரத்தின் செவ்வாய்க்கிழமையில் ஒரே நாளில் 3,23,000 பங்குகள் வர்த்தகமாகின.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

பந்தன் பேங்க் பங்கு விலையும் அதிகரித்து ஆச்சர்யம் தந்துள்ளதே..!

“பந்தன் வங்கியின் பங்கு விலை ஆறு மாத உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று வர்த்தகத் தினங்களில் மட்டுமே பங்கின் விலை 9% அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 5.6% ஏற்றத்தைச் சந்தித்த நிலையில், இந்தப் பங்கு மட்டும் 28% ஏற்றத்தைச் சந்தித்துள்ளது.”

சென்னையில் பிரபல மெகா முதலீட்டாளர் டோலி கண்ணா 10 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறாரே?

“டோலி கண்ணா கடந்த மார்ச் காலாண்டில் நான்கு புதிய பங்குகள் உட்பட 10 பங்குகளை தனது போர்ட்ஃபோலியோவில் சேர்த்திருக்கிறார். அதே சமயம், மார்ச் காலாண்டில் ஆறு நிறுவனங்களின் பங்குகளை ஓரளவுக்குக் குறைத்திருக்கிறார்.

அவரது சமீபத்திய போர்ட் ஃபோலியோவானது அக்ரோ கெமிக்கல்ஸ், ஃபெர்டிலைசர்ஸ், சுரங்கம் மற்றும் தொழில் துறை கனிமங்கள் போன்ற துறைகளில் அதிக அளவில் முதலீடு செய் திருப்பதைக் காட்டுகிறது. அதே சமயம், அவர் சிமென்ட், ஜவுளி மற்றும் ஆட்டோ துறைகளில் இருந்து தனது பங்குகளைக் குறைத்துள்ளார். கடந்தஜனவரி - மார்ச் கால கட்டத்தில் டோலி கண்ணா, ஷார்தா க்ரோப்கெம் (Sharda CropChem) நிறுவனத்தின் 12,43,710 பங்குகளை அதாவது, 1.38% பங்கு களை வாங்கியிருக்கிறார். அதே போல, பெட்ரோகெமிக்கல் நிறுவனமான கோவா கார்பன்ஸ் நிறுவனத்தின் 1,26,117 பங்குகளை (1.38% பங்குகள்) வாங்கியிருக்கிறார்.

மேலும், சந்தூர் மாங்கனீஸ் அண்ட் அயர்ன் வோர் நிறுவனத் தின் 1,37,608 பங்குகளை (1.53% பங்குகள்) வாங்கினார். மேலும், கைதான் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸில் 9,89,591 பங்குகளை (1.02% பங்குகள்) வாங்கி யுள்ளார். இவர் முதலீடு செய் துள்ள கைதான் கெமிக்கல்ஸ் நிறுவனப் பங்கு விலை கடந்த ஓராண்டில் 570 சதவிகிதத்துக்கும் மேலாக ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. சந்தூர் மாங்கனீஸ் 335 சதவிகிதமும், ஷார்தா க்ரோப்கெம் 145 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

அதே போல, பிரகாஷ் பைப்ஸின் 2,48,323 ஈக்விட்டி பங்குகளை வாங்கியிருக்கிறார். தற்போது இவர் கைவசம் இந்த நிறுவனத்தின் 5,72,323 பங்குகள் இருக்கின்றன. டிசம்பர் காலாண்டில் இது 3,24,000 பங்குகளாக இருந்தது. அதே போல, அஜந்தா சோயா நிறுவனத்திலும், தனது பங்கு இருப்பை அதிகப்படுத்தியுள்ளார். அதாவது, 56,166 பங்குகளை வாங்கியுள்ளார். இதனால் தற்போது அவரிடம் மொத்தம் 2,34,666 பங்குகள் கைவசம் இருக்கின்றன. ராமா போஸ்பேட்ஸின் 48,000 பங்குகளை வாங்கி, இந்த நிறுவனத்தில் தனது பங்கு இருப்பை 4,52,987-ஆக உயர்த்தி யிருக்கிறார். ஆக மொத்தத்தில், சந்தை இறக்கத்தைப் பயன்படுத்தி, ஸ்மால்கேப் பங்குகள் பலவற்றில் அவர் முதலீடு செய்திருக்கிறார். அவர் முதலீடு செய்திருக்கிற ஒரே காரணத்துக்காக நாமும் இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. எந்தப் பங்கில் முதலீடு செய்வதாக இருந்தாலும் நாமே அலசி ஆராய்ந்து முடிவெடுப்பதே சரி.’’

டெல்டா கார்ப் நிறுவனம் எஃப் அண்ட் ஓ தடை பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது பற்றி?

‘‘ஃப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன் வர்த்தகத்தில் இருந்து ஆர்.பி.எல் பேங்க் தொடர்ந்து வர்த்தகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து தற்போது கேமிங் மற்றும் விருந்தோம்பல் நிறுவனமான டெல்டா கார்ப் எஃப் & ஓ தடைப் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்போது இரண்டு பங்குகள் தடைப் பட்டியலில் உள்ளன. இதன் காரணமாக கடந்த வாரம் வர்த்தகத் தொடக்க நாளான திங்கள்கிழமை அன்று 2% வரை சரிந்து வர்த்தகமானது. செவ்வாய்கிழமை வர்த்தக முடிவில் இந்தப் பங்கு விலை ரூ.317-க்கு வர்த்தக மானது. மார்ச் காலாண்டு முடிவின்படி, இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 17% குறைந்து, ரூ.48.11 கோடியாக உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.57.77 கோடியாக இருந்தது.''

நிஃப்டி, சென்செக்ஸ் கடந்த இரு வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதே..!

‘‘உண்மைதான். பணவீக்கம் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பது உட்பட பல காரணங்களை இதற்குச் சொல்கிறார்கள்.

சந்தை இறக்கத்தில் நல்ல பங்குகளில் முதலீடு செய்து, நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து வைத்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை’’ என்ற ஷேர்லக், மிச்ச மிருந்த ஆப்பிள் ஜூஸையும் குடித்துவிட்டுக் கிளம்பினார்.

ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம்..!

கடந்த மார்ச்சில் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறைப் பணவீக்க விகிதம் 6.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 17 மாதங்களில் இதுதான் அதிகபட்ச பணவீக்கம் ஆகும். தொடர்ந்து மூன்றாவது மாதமாக, 6 சதவிகிதத்துக்குமேல் பணவீக்கம் பதிவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மார்ச்சில் பணவீக்கம் 5.52 சதவிகிதமாக இருந்தது. கடந்த பிப்ரவரியில் 6.07 சதவிகிதமாக இருந்த நிலையில் மார்ச்சில் அதைவிட அதிகரித்து, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை மீறியுள்ளது. உணவுப் பொருள்கள், பால் பொருள்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்ததே இதற்குக் காரணம்..!

ஷேர்லக்: டோலி கண்ணா முதலீடு
செய்த 10 பங்குகள்..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism