Published:Updated:

ஷேர்லக்: சென்செக்ஸைத் தாண்டி உயர்ந்த பொதுத்துறை பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: சென்செக்ஸைத் தாண்டி உயர்ந்த பொதுத்துறை பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை காலையில் ஷேர்லக் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந் தார். ‘‘இன்று மாலை முக்கியமான ஷேர் மார்க்கெட் புரோக்கரை சந்திக்கப்போகிறேன். எனவே, 4 மணிக்கு போனிலேயே பேசி விடலாமா’’ என்று கேட்க, சரியாக 4 மணிக்கு போன் செய்தோம். நமக்காகவே காத்திருந்தவர் போல, சட்டென்று போனை எடுத்தார். அடுத்து, நாம் கேள்விகளைக் கேட்க, அதற்கு அவர் அளித்த பதில்கள் இனி...

கடந்த வாரத்தில் பங்குச் சந்தை ஐந்து நாள் வரை இறங்கி எல்லோருடைய அடிவயிற்றையும் கலக்கி விட்டதே..!

“உண்மைதான். எனக்கு போன் மேல் போன் வந்தது. நீண்ட காலமாகவே வெளி நாட்டு நிதி நிறுவனங்கள் (எஃப்.ஐ.ஐ) ஆண்டின் கடைசிக் காலாண்டில் விற்பனையாளர்களாகத் தான் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால், உள்நாட்டு முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்ததால், சந்தை பெரிய அளவில் இறங்காமல் மீண்டும் ஏற்றப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது.

கடந்த மாதத்தில் எஃப்.ஐ.ஐ விற்பனை குறைந்து முதலீடு அதிகரித்தது. இதனால் எஃப்.ஐ.ஐ விற்பனை முடிவுக்கு வந்துவிட்ட தாகவே பலரும் கருதினார்கள். ஆனால், எஃப்.ஐ.ஐ-கள் மீண்டும் விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். அமெரிக்கக் கருவூல பத்திரங் களின் வருமான உயர்வின் காரணமாக, வளர்ந்துவரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் இருந்து, வளர்ந்த நாடுகளின் சந்தைகளுக்குத் தங்களுடைய கவனத்தைத் திருப்பினர். அடுத்து, கமாடிட்டிப் பொருள்களின் விலை உயர்வால் அவற்றை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் சந்தைகளிலிருந்து, கமாடிட்டி உற்பத்தி செய்யும் நாடுகளின் சந்தைக்குத் திரும்புகின்றனர். இதன் காரண மாகவே இந்தியச் சந்தையிலும் எஃப்.ஐ.ஐ தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்துவருகின்றனர்.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

ஐ.எம்.எஃப் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து ஏற்கெனவே வெளியிட்ட கணிப்பைவிட தற்போது குறைத்துள்ளதே?

“ஐ.எம்.எஃப், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை அவ்வப்போது வெளியிடும். கடந்த வாரம் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையிலும் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 8.7 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைத்தது. அதே சமயம், ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 7.2 சதவிகிதமாகவும், அடுத்த நிதி ஆண்டில் 6.3 சதவிகிதமாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளது. இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவின் ஜி.டி.பி 3.7 சதவிகிதமாகவும், சீனாவின் ஜி.டி.பி 4.4 சதவிகிதமாகவும் குறையும் என ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.”

சென்செக்ஸைத் தாண்டி பொதுத் துறைப் பங்குகள் வளர்ச்சிகண்டிருக்கிறதே, என்ன காரணம்?

“கடந்த 9 வர்த்தக தினங்களில் மட்டுமே பி.எஸ்.இ பொதுத்துறை குறியீடானது 10% வரை ஏற்றம் கண்டுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் தலா 7% வரை இறக்கம் கண்டிருக்கிறது. 9 வர்த்தக தினங் களில் 8 நாள் பிரதான சந்தைக் குறியீடுகள் இறக்கத்தில்தான் வர்த்தகமாயின. ஆனால், சில துறை யின் பங்குகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அவற்றில் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டன. ஏப்ரல் மாதத் தொடக்கத் திலிருந்து பார்த்தால், பி.எஸ்.இ பொதுத்துறை குறியீடானது 7% வளர்ச்சி கண்டுள்ளது. அதே காலத்தில், சென்செக்ஸ் 3 சதவிகிதமும் நிஃப்டி 3.6 சதவிகிதமும் இறக்கம் கண்டுள்ளது. இதற்கு காரணம், பொதுத்துறை நிறுவனப் பங்குகள் ஏப்ரல் மாதத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஏப்ரல் தொடக்கத் திலிருந்து இதுவரை 51% வளர்ச்சி கண்டுள்ளது.

எம்.ஆர்.பி.எல் பங்கு 40 சதவிகிதமும், மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் 31 சதவிகிதமும், என்.ஹெச்.பி.சி 22 சதவிகிதமும், என்.எல்.சி இந்தியா 22 சதவிகிதமும், மிஷ்ரா தாடு நிகம் லிமிடெட் 21 சதவிகிதமும், எம்.எம்.டி.சி 20 சதவிகிதமும் மற்றும் என்.டி.பி.சி 19 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. மேலும், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ், கொச்சின் ஷிப்யார்ட், ஹிந்துஸ் தான் ஏரோநாட்டிக்ஸ், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஹட்கோ, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் காப்பர், கெயில் இந்தியா, ஹெச்.பி.சி.எல், கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி ஆகிய பங்குகள் 9% முதல் 20% என்கிற அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.

உலகம் முழுவதுமே பணவீக்க உயர்வு அச்சம் நிலவி வருவதால், வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம், இந்தியப் பொதுத் துறை நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பும் சந்தையில் பலமாக உள்ளது. இதனால் பொதுத்துறை பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. மேலும், மின்சாரத் துக்கான தேவை அதிகமாகி யிருப்பதால், மின்துறை சார்ந்த பங்குகள் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.”

பிரதான சந்தை இறக்கத்தின் போக்கில் இருந்தாலும் 100-க்கும் மேலான ஸ்மால்கேப் பங்குகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது எப்படி?

“கடந்த இரண்டு வாரங்களில் பங்குச் சந்தை கணிசமான இறக்கத்தைக் கண்டது. ரஷ்யா- உக்ரைன் போர், பணவீக்க உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, வட்டி விகித உயர்வு உள்ளிட்ட காரணங்கள்தான் சந்தையைப் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தின. அவ்வப் போது சந்தை சற்று ஏற்றத்தில் வர்த்தகமானாலும் இந்தக் காரணிகளின் தாக்கம் தொடர்வதால், இறக்கத்தின் போக்கு சந்தையில் தொடர்ந்து காணப் படுகிறது. ஆனால், 100-க்கும் மேலான ஸ்மால்கேப் பங்குகள் கடந்த இரண்டு வாரத்தில் இரண்டு இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன.

இவற்றில் அதிகபட்சமாக சன்ஃபிளாக் அயர்ன் அண்ட் ஸ்டீல் 60% வளர்ச்சி கண்டுள்ளது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஷிவா சிமென்ட், ஸ்வான் எனர்ஜி, பாரத் டைன மிக்ஸ் ஆகியவை 40 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

 ரேணுகா சுகர்ஸ், சத்பவ் இன்ஃப்ரா புராஜக்ட்ஸ், சியாராம் சில்க் மில்ஸ், குஜராத் அம்புஜா எக்ஸ்போர்ட்ஸ், சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், மங்களூர் ரிஃபைனரி அண்ட் பெட்ரோ கெமிக்கல்ஸ், கோகுல் அக்ரோ ரிசோர்சஸ், டைம் டெக்னோப்ளாஸ்ட் ஆகியவை 30 சதவிகிதத்திலிருந்து 40% வரை வளர்ச்சி கண்டன.

ஜீனஸ் பவர் இன்ஃப்ரா, பி.எல்.எஸ் இன்டர்நேஷனல் சர்வீசஸ், மிர்சா இன்டர்நேஷனல், நவ்கார் கார்ப்பரேஷன், உத்தம் சுகர் மில்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி யல் இன்ஃப்ரா, ஜே.பி.எம் ஆட்டோ, உஜ்ஜிவன் ஃபைனான் ஷியல் சர்வீசஸ், ஆன்மொபைல் குளோபல், மங்களூர் கெமிக்கல்ஸ், மின்டா கார்ப்பரேஷன், ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ், நியூலேண்ட் லேபாரட்டரீஸ், ஜுவாரி அக்ரோ கெமிக்கல்ஸ், தீபக் ஃபெர்டிலைசர்ஸ் ஆகியவை 20 சதவிகிதத்துக்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளன.’’

ஆனால், மிட்கேப் மற்றும் லார்ஜ்கேப் பிரிவுகளில் வளர்ச்சி குறிப்பிடும்படி இல்லையே..!

‘‘மிகச் சரி. மிட்கேப் பிரிவில் 58 பங்குகள் இறக்கம் கண்டுள்ளன, 35 பங்குகள் ஏற்றம் கண்டன. லார்ஜ்கேப் பிரிவில் 57 பங்குகள் இறக்கத்திலும் 33 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. ஹெச்.டி.எஃப்.சி குழுமப் பங்குகள், ஐ.டி நிறுவனப் பங்குகள் அதிக இறக்கத்தைச் சந்தித்துள்ளன. ஹெச்.டிஎஃப்.சி இணைப்பு செய்திகளுக்குப் பிறகு ஹெச்.டி.எஃப்.சி குழுமப் பங்குகள் நல்ல ஏற்றத்தைப் பதிவு செய்த நிலையில், விரைவில் ஏற்றம் முடிவுக்கு வந்து இறக்கம் அடைய ஆரம்பித்தன. கடந்த இரண்டு வாரங்களில் ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் 20 சதவிகிதமும், ஹெச்.டி.எஃப்.சி வங்கி 19 சதவிகிதமும், ஹெச்.டி.எஃப்.சி ஏஎம்சி 10 சதவிகிதமும் இறக்கம் கண்டுள்ளன. அதே போல, ஐ.டி நிறுவனப் பங்குகள் கடும் இறக்கத்தைச் சந்தித்தன. இன்ஃபோசிஸ் பங்கு 17% அளவுக்கு இறக்கம் கண்டது. டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி இன்ஃபோடெக், விப்ரோ ஆகியவை 12% - 13% வரை இறக்கம் கண்டன.”

ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு விலை மூன்று நாள்களில் 10% வரை உயர்ந்து, ஆச்சர்யப்படுத்தியிருக்கிறதே..!

“சரிந்துகொண்டிருந்த சந்தையைத் தடுத்து நிறுத்தும் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது பாகுபலி பங்கான ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ். இந்த நிறுவனப் பங்கின் நான்காம் காலாண்டு முடிவு மிகச் சிறப்பாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் அந்தப் பங்கு விலை கடந்த செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளில் கிட்டத்தட்ட 10% வரை உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் பங்கில் முதலீடு செய்தவர்கள் மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்த மாதிரி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஓகே, நான் வெளியே செல்ல வேண்டும்’’ என்று சொல்லிவிட்டு, போனை கட் செய்தார் ஷேர்லக்!

ஏற்ற இறக்கப் பங்குச் சந்தையில் திறம்பட வர்த்தகம் செய்தல்..!

நாணயம் விகடன் வழங்கும் ‘ஏற்ற இறக்கப் பங்குச் சந்தையில் திறம்பட வர்த்தகம் செய்தல்..!’ என்ற நேரலை ஆன்லைன் பயிற்சி மே 7-ம் தேதி காலை 11.00 மணி முதல் 12.00 மணிவரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் இந்தியாவின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட் டாக்டர் சி.கே.நாராயண் (நிறுவனர், Growth Avenues) பேசுகிறார். இவர் பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர். மேலும், செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ரிசர்ச் அனலிஸ்ட் ஆவார். நிகழ்ச்சியில் டாக்டர் சி.கே.நாராயணின் நியோ டிரேடர் சாஃப்ட்வேர் பற்றி விளக்கிச் சொல்லப்படும்.
அனுமதி இலவசம் முன்பதிவு செய்ய: https://bit.ly/3OixU0o

ஷேர்லக்: சென்செக்ஸைத் தாண்டி
உயர்ந்த பொதுத்துறை பங்குகள்..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism