Published:Updated:

ஷேர்லக்: 2022 இறுதியில் நிஃப்டி 16000 புள்ளிகள்..! முன்னணி பங்கு தரகு நிறுவனம் கணிப்பு..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: 2022 இறுதியில் நிஃப்டி 16000 புள்ளிகள்..! முன்னணி பங்கு தரகு நிறுவனம் கணிப்பு..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வருகிறேன் என அன்று காலையிலேயே நமக்குத் தகவல் அனுப்பி இருந்த ஷேர்லக், சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந் தார். ‘‘நீங்கள் எழுதிய தலையங்கத்தைக் கொடுங்கள்’’ என்று கேட்டு வாங்கிப் படித்தவர், “சபாஷ், இப்போது தக்காளி விக்கிற விலையைப் பார்த்தால், தமிழகத்திலும் பணவீக்கம் அதிகரித்துவிடும் போல... தக்காளி விலையைக் குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜூ.வி மூலமாகச் சொல்லுங்கள்’’ என்றவரிடம், பங்குச் சந்தை தொடர்பான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

டாப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிக அளவில் பணத்தை ரொக்கமாக வைத்திருப்பது ஏன்?

“தற்போதைய நிலையில் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கு வீழ்ச்சியில் இருந்து வருகிறது. சந்தை இன்னும் இறக்கத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட், ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் உட்பட டாப் 20 மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிய தொகையில் சுமார் 4.5% தொகையை ரொக்கமாக வைத்திருக்கின்றன. இனி சந்தை இறக்கத்தைச் சந்தித்தால், அப்போது இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் எனத் தெரிகிறது.

முடிந்த மார்ச் மாத நிலவரப்படி, எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 12.4% தொகையையும், ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 10.2% தொகையையும், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் 9.4% தொகை யையும் ரொக்கமாக வைத்திருக்கின்றன.”

ருச்சி சோயா நிறுவனத்தின் பங்கு விலை அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமானதே?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று ருச்சி சோயா நிறுவனத்தின் பங்கு விலை 10% வரை அதிகரித்து, அப்பர் சர்க்யூட் விலையில் ரூ.1,188.60-க்கு வர்த்தகமானது. இது கடந்த 10 மாதங்களில் தொடாத அதிகபட்ச விலை ஆகும். எஃப்.எம்.சி.ஜி நிறுவனமாக மாறுவதைத் துரிதப்படுத்துவதற்காக, பதஞ்சலி ஆயுர்வேத உணவு வணிகத்தை ரூ.690 கோடிக்கு முழுமை யாகக் கையகப்படுத்துவதாக நிறுவனம் அறிவித்ததை அடுத்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரை பதஞ்சலி ஃபுட்ஸ் என மாற்ற வும் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.”

ஷேர்லக்: 2022 இறுதியில் நிஃப்டி 16000 புள்ளிகள்..! முன்னணி பங்கு தரகு நிறுவனம் கணிப்பு..!

கோகல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் கோகல்தாஸ் நிறுவனப் பங்கின் விலை 9% வரை அதிகரித்து, ரூ.505.65-க்கு வர்த்தகமானது. கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய வருமானம் ரூ.61 கோடி என்கிற அளவில் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.16 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் ஆர்டரும் நன்றாக இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் 4% சரிந்துள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 30% வரை ஏற்றம் கண்டுள்ளது.”

நடப்பு ஆண்டின் இறுதியில் நிஃப்டி புள்ளிகளின் இலக்கை பேங்க் ஆஃப் அமெரிக்கா குறைத்திருக்கிறதே?

“அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதை மேற்கோள்காட்டி, நடப்பு 2022-ம் ஆண்டின் இறுதியில் நிஃப்டி இலக்கு 17000 புள்ளிகளாக இருக்கும் எனக் கணிக்கப் பட்டதிலிருந்து மாற்றப்பட்டு, 16000 புள்ளிகளாக இருக்கும் என பங்குத் தரகு நிறுவனமான பேங்க் ஆஃப் அமெரிக்கா (BofA) தெரிவித்துள்ளது. அமெரிக்கா ரிசர்வ் வங்கி ஜூன் மற்றும் ஜூலையில் வட்டி விகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள், மே மாதத்தில் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்வைத் தொடரலாம் என எதிர்பார்ப்பதாகவும், இது சந்தையின் போக்குக்கு எதிர்மறையான சூழலை உருவாக்கும் எனவும் அந்தப் பங்கு தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுவது போன்ற காரணங் களையும் இந்தத் தரகு நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.”

அதானி குழுமம் அம்புஜா மற்றும் ஏ.சி.சி சிமென்ட் நிறுவனப் பங்குகளை வாங்கியிருக்கிறதே?

‘‘ஹோல்சிம் ஏஜி நிறுவனம் அம்புஜா சிமென்ட் நிறுவனத்தில் 63.19% பங்குகளையும், ஏ.சி.சி லிமிடெட் நிறுவனத்தில் 4.48% பங்குகளையும் வைத்திருந்தது. இந்த பங்குகளை விற்றுவிட்டு, ஸ்விஸ் திரும்ப உள்ளதாக ஹோல்சிம் நிறுவனர் தெரிவித்திருந்தார். இதன்படி, இந்த இரு நிறுவனங்களில் 52% நிறுவன பங்குகளை வாங்க அதானி குழுமம் வாங்கியது. அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு ரூ.385 கொடுத்தும் மற்றும் ஏ.சி.சி நிறுவனப் பங்கு ஒன்றுக்கு ரூ.2,300 தந்தும் மொத்தம் ரூ.81,361 கோடிக்கு கௌதம் அதானி குழுமம் வாங்கியது. இதன் மூலம் சிமென்ட் உற்பத்தியில் இந்தியாவின் 2-வது பெரிய நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது. முதலிடத்தில் பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் உள்ளது குறிப்பிடத் தக்கது. இந்தக் கையகப்படுத்தல் அறிவிப்புக்குப் பிறகு, அம்புஜா நிறுவனப் பங்கு விலை கடந்த திங்கள்கிழமை வர்த்தகத்தில் 2.9 சதவிகிதமும், ஏ.சி.சி நிறுவனப் பங்கு விலை 6.4 சதவிகிதமும் உயர்ந்தன. அதே போல, அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 2.75% உயர்ந்தது.’’

ஆம்பர் என்டர்பிரைசஸ் நிறுவனத் தின் பங்கு விலை லோயர் சர்க்யூட் விலையில் வர்த்தகமாக என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?

“ஆம்பர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த புதன்கிழமை அன்று 20% வரை சரிந்து, ரூ.2,701.20-க்கு வர்த்தகமானது. மூலப்பொருள் களின் விலை அதிகரிப்பு மற்றும் நிறுவனத்தின் செயபாட்டுச் செலவினங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்கு விலை சரிவைச் சந்தித்துள்ளது.’’

ஐ.டி மற்றும் மெட்டல் குறியீடுகள் பெருமளவு சரிவைச் சந்தித்திருக் கின்றனவே?

‘‘கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று இந்திய பங்குச் சந்தையாக சென்செக்ஸ் 1,476 புள்ளிகள் சரிந்து, 52,740 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 50 இண்டெக்ஸ் 441 புள்ளிகள் வரை சரிந்து, 15,799 என்கிற நிலையில் வர்த்தகமானது. அதே போல நிஃப்டி பேங்க் குறியீடும் 908 புள்ளிகள் சரிந்து, 33,251 புள்ளி களில் வர்த்தகமானது. நிஃப்டி மிட்கேப் 50 குறியீடு 2.90%, நிஃப்டி ஸ்மால்கேப் 50 குறியீடு 2.68% சரிந்து வர்த்தகமானது. பி.எஸ்.இ மிட்கேப் 2.50% மற்றும் பி.எஸ்.இ ஸ்மால்கேப் 2.20% சரிந்து வர்த்தக மானது.

வியாழன் மதியம் 3.00 மணி நிலவரப்படி, ஐ.டி.சி (3.45%), டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (1.30%), பி.ஐ.இண்டஸ்ட்ரீஸ் (1.40%), அம்புஜா சிமென்ட்ஸ் (0.47%) , பவர் கிரிட் கார்ப் (0.31%) ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமானது. விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல் டெக், டி.சி.எஸ் உட்பட பெரும்பாலான பங்குகள் இறக்கத்தில் வர்த்தக மாகின. பொதுவாக, ஐ.டி இண்டெக்ஸ் 5%, மெட்டல் இண்டெக்ஸ் 4% சரிந்து வர்த்தக மானது. நிஃப்டி பி.எஸ்.யு இண்டெக்ஸ், பிரைவேட் பேங்க் 3% வரை சரிவை சந்தித்தது. நிஃப்டி ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், ஆயில் & கேஸ் 2% வரை சரிவைச் சந்தித்தன.’’

இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைந்தது ஏன்?

‘‘கடந்த மார்ச் காலாண்டு நிலவரப்படி, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் ஈக்விட்டி கையிருப்பு 6% சரிந்து, 612 பில்லியன் டாலராகக் குறைந்து உள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை மூலதனத்தில் அவர்களின் மொத்த பங்களிப்பு 18.3 சதவிகிதத்தில் இருந்து 17.8 சதவிகிதமாக சரிந்துள்ளது. மார்ச் காலாண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 14.59 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றிருக் கிறார்கள். இதற்கு முந்தைய டிசம்பர் காலாண்டில் 5.12 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை அவர்கள் இந்திய பங்குச் சந்தையில் வாங்கியிருந்தார்கள். வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் நம் சந்தையைத் தேடிவரும் வரை காத்திருப்பது தவிர வேறு வழியில்லை.’’

ஷேர்லக்: 2022 இறுதியில் நிஃப்டி 16000 புள்ளிகள்..! முன்னணி பங்கு தரகு நிறுவனம் கணிப்பு..!

டெலிவரி மற்றும் வேனஸ் பைப்ஸ் நிறுவனங்களின் ஐ.பி.ஓ வெற்றி அடைந்ததா?

“லாஜிஸ்ட்டிக் சேவைகளை வழங்கிவரும் நிறுவனமான டெலிவரி நிறுவனம், ரூ.5,235 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிட்டது. இந்த ஐ.பி.ஓ-வுக்குத் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் வரவேற்பை வழங்கியிருக் கிறார்கள். தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்கு அளவைவிட 2.66 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. மற்ற முதலீட் டாளர் பிரிவுகள் முழு சந்தாவைப் பெறத் தவறிவிட்டன. சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 26% விண்ணப்பங்கள் வந்தன. அதிக சொத்து கொண்ட தனிநபர் பிரிவில் 56% விண்ணப்பங்களைப் பெற்றது. மற்ற முதலீட்டாளர்கள் பிரிவில் இருக்கும் விண்ணப்பங்கள் பெறப்படாத பங்குகள் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் பிரிவுக்கு ஒதுக்கப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல, வேனஸ் பைப்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கும் முதலீட்டாளர்கள் நல்ல வரவேற்பை வழங்கி இருக்கிறார்கள். மொத்தம் 16.3 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. சிறு முதலீட்டாளர்கள் பிரிவுக்கு 19 மடங்கும், அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர் பிரிவுக்கு 15.6 மடங்கும், தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் பிரிவுக்கு 12 மடங்கும் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இந்த நிறுவனம், ரூ.165 கோடி நிதி திரட்ட ஐ.பி.ஓ வெளியிட்டிருக்கிறது.”

பிரதீப் பாஸ்பேட்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு குறித்து?

‘‘பிரதீப் பாஸ்பேட்ஸ் நிறுவனம் ரூ.1,501 கோடி நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிட்டது. புதிய பங்கு வெளியிடுவதன் மூலம் ரூ.1,004 கோடியும், ஓ.எஃப்.எஸ் முறையில் ரூ.497.73 கோடியும் இந்நிறுவனம் நிதி திரட்டுகிறது. மூன்றாவது தினத்தில் மொத்தம் 1.51 மடங்குக்கு இதன் பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 1.23 மடங்குக்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 48%, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 2.69 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இதன் பங்கு விலைப்பட்டை ரூ.39 – 42 ஆகும்.’’

பங்குச் சந்தை இன்று கடுமையாக இறக்கம் கண்டுவிட்டதே...

‘‘முக்கியமான கேள்வியைக் கடைசியில் கேட்கிறீரே... உலக அளவில் பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டுவரும் இந்த வேளையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் சந்தையில் இருந்து அதிகம் வெளியேறுவதால்தான், இந்த இறக்கம் ஏற்பட்டிருக்கிறது. சந்தை இன்னும் கரடியின் பிடியில்தான் இருக்கிறது. கரடியின் பிடி தளர்வதற்கு இன்னும் சில மாதங்கள்கூட ஆகலாம். எனவே, முதலீட்டாளர்கள் அனைவரும் பொறுமையாக இருப்பது தவிர, வேறு வழியில்லை’’ என்றபடி வீட்டுக்குப் புறப்பட்டார் ஷேர்லக்!

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

திருச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வுக் கூட்டம்..!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘Money Mantra @ மலைக்கோட்டை மாநகர்!’ என்ற நிகழ்ச்சி திருச்சியில் மே 31 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

பங்குச் சந்தை இறக்கத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும், முதலீடுகளைப் பிரித்து செய்வதன் மூலம் (அஸெட் அலொகேஷன்) கிடைக்கும் லாபம், முதலீட்டில் ரிஸ்க் எந்த அளவுக்கு எடுக்க வேண்டும், ரிஸ்கை குறைக்கும் வழிகள் என்னென்ன, எல்லா முதலீட்டையும் பங்குச் சந்தையிலோ, ரியல் எஸ்டேட்டிலோ போட்டால் என்ன நடக்கும் என்பன போன்ற விஷயங்களை முதலீட்டாளர்கள் இந்தக் கூட்டத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன், பங்குச் சந்தையின் போக்கு பற்றி விவரித்துப் பேசுகிறார். அனுமதி இலவசம்.

முன்பதிவு அவசியம்: https://bit.ly/NV-Adityabirla