Published:Updated:

ஷேர்லக்: உச்சம் கண்டு இறங்கிய சந்தை... இனி என்ன நடக்கும்? முதலீட்டு முடிவை எடுக்கலாமா..?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

S H A R E L U C K

ஷேர்லக்: உச்சம் கண்டு இறங்கிய சந்தை... இனி என்ன நடக்கும்? முதலீட்டு முடிவை எடுக்கலாமா..?

S H A R E L U C K

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

சரியாக மாலை 4.30 மணிக்கு நம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். “அரை மணி நேரம்தான் உங்களுக்கு. ஐந்து மணிக்கு ஏர்போர்ட் போகணும்” என அவசரப்படுத்தினார். நாம் தயாராக வைத்திருந்த கேள்வி களைக் கேட்க, பதில் சொல்ல ஆரம்பித்தார்.

இந்தியப் பங்குச் சந்தை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டிருக் கிறதே?

“மும்பை பங்குச் சந்தையின் (பி.எஸ்.இ) சென்செக்ஸ் குறியீடு கடந்த 6-ம் தேதி அன்று புதிய உச்சத்தில் வர்த்தகமானது. அன்றைய தினம் காலையில் சென்செக்ஸ் 58 புள்ளிகள் அதிகரித்து, 52919 புள்ளி களில் வர்த்தகத்தை ஆரம்பித்தது. இடையில், 52700 வரை சரிவைச் சந்தித்து, வர்த்தகம் முடியும்போது, 194 புள்ளிகள் உயர்ந்து, 53054 என்கிற நிலைக்கு உயர்ந்தது. சென்செக்ஸ் வரலாற்றிலேயே இதுதான் உச்சபட்ச உயர்வாகும். அதேபோல, நிஃப்டியும் 61 புள்ளிகள் அதிகரித்து, 15879 புள்ளி களில் தனது வர்த்தகத்தை முடித்தது. அன்றைய தேதியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலை 4% ஏற்றம் அடைந்து, ‘டாப் கெயினர்ஸ்’ பட்டியலில் முன்னிலை வகித்தது. பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ்இண்ட் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி, நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், சன் பார்மா மற்றும் பவர்கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வைச் சந்தித்தன. அதே சமயம், டைட்டன் நிறுவனத்தின் பங்கு விலை 2% வரை சரிந்து காணப்பட்டது. மாருதி சுஸூகி, ரிலையன்ஸ், எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா, என்.டி.பி.சி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்கு விலையும் சரிவைச் சந்தித்தன.’’

ஷேர்லக்: உச்சம் கண்டு இறங்கிய சந்தை... இனி என்ன நடக்கும்? முதலீட்டு முடிவை எடுக்கலாமா..?

உச்சத்தைத் தொட்ட சந்தை, வியாழன் அன்று இறக்கத்தில் முடிந்தது அதிர்ச்சி அளிக்கிறதே!

‘‘வியாழக்கிழமை அன்று சென்செக்ஸ் 52950 என்கிற நிலையில் இறங்கி வர்த்தகமானது. இதைப் பார்த்து சிறு முதலீட்டாளர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருப் பது உண்மைதான். சந்தை இன்னும் இறங்குமா அல்லது மீண்டும் மேலே செல்லுமா என்ற கேள்வி அவர்களின் மனதில் எழுந்திருக்கிறது.

பங்குகளின் மதிப்பீடு அதிகமாக இருப்பதாக அனலிஸ்ட்டுகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். நிஃப்டி குறியீட்டின் பத்தாண்டு சராசரி பி.இ 20 மடங்காகும். ஆனால், தற்போது பி.இ விகிதம் 27-ன் மடங்காக இருக்கிறது. பங்குச் சந்தை மதிப்புக்கும் நாட்டின் மொத்த உற்பத்திக்குமான (ஜி.டி.பி) சராசரி விகிதம் 79-ஆக இருந்தது. இது இப்போது 105-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சர்வதேச காரணங்களும் சந்தைக்குச் சாதகமாக இல்லாமல் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு தலைவலியாக மாறியிருக் கிறது. டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் 75-க்கு மேல் உயர்ந்து, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி இருக்கிறது. கூடவே உணவுப் பொருள்கள் தொடங்கி கட்டுமானப் பொருள்கள் வரை விலை உயர்ந்து, பணவீக்கம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. கொரோனா பாதிப்பும் இன்னும் முழுமையாக விலகாமல் இருக்கிறது.

அடுத்த சில வாரங்களில் ஸொமேட்டோ உட்பட முக்கிய மான பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ வருகின்றன. இந்த ஐ.பி.ஓ-வில் விண்ணப்பிப்பதற்காக வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ஏற்கெனவே செய்திருந்த முதலீட்டைத் திரும்ப எடுத்து வருகிறார்கள். தவிர, கடந்த ஜூன் மாதத்தில் கேஷ் மார்க்கெட்டில் டிரேடிங் டேர்ன் ஓவர் 8 சதவிகிதமும், ஃப்யூச்சர் மார்க்கெட்டில் 9 சதவிகிதமும் குறைந்துள்ளது. உச்சத்தைத் தொட்டபின் பக்கவாட்டில் சந்தை வர்த்தகமாக வாய்ப்பிருப்பதாகக் கருதுவதே டெரிவேட்டிவ் வர்த்தகத்தில் வால்யூம் குறைவதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.

என்றாலும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்த்த வர்கள், அந்த லாபத்தில் ஒரு பகுதியை திரும்ப எடுப்பது நல்லது என்று சில அனலிஸ்ட்டுகள் சொல்லியிருக் கிறார்கள். ஆனால், அதைச் செய்ய வேண்டுமா என்பதை முதலீட்டாளர் கள்தாம் முடிவெடுக்க வேண்டும். அதே நேரத்தில், நீண்டகால முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஒவ்வொரு இறக்கத்தையும் முதலீட்டுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி நல்ல பங்கு அல்லது ஃபண்டில் முதலீடு செய்வது நீண்டகாலத்தில் லாபகரமாகவே இருக்கும்.”

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“பன்னாட்டு பங்குத் தரகு நிறுவனங்களில் ஒன்றான சி.எல்.எஸ்.ஏ, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. மேலும், அதன் இலக்கு விலையை அதிகரித்து 1,450 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஜூலை 7-ம் தேதி டாடா ஸ்டீல் நிறுவனத் தின் பங்கு விலை 4% வரை அதிகரித்து வர்த்தகமானது. இந்தப் பங்கானது கடந்த ஓராண்டில் 250% வரை அதிகரித்து, தனது முதலீட்டாளர்களுக்கு அபிரிமிதமான வருமானத்தைத் தந்திருக்கிறது.”

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஏறியது ஏன்?

“நடப்பு நிதி ஆண்டின் ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பலமான வளர்ச்சியைப் பதிவு செய்த காரணத்தால், கடந்த ஜூலை 6-ம் தேதி வர்த்தகத்தில், ‘டாப் கெயினர் பங்குகள்’ பட்டியலில் இந்தப் பங்கும் இடம்பெற்றது. அன்றைய தினத்தில், இதன் பங்கு விலை 3.17% வரை அதிகரித்து, 6,264 ரூபாய்க்கு வர்த்தகமானது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்த நிறுவனம் வழங்கிய புதிய கடன்களின் எண்ணிக்கை 46 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 18 லட்சமாக இருந்தது. அதேபோல, கடந்த ஜூன் மாதத்தில், இந்த நிறுவனம் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு ரூ.1,59,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் இது ரூ.1,38,055 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் டெபாசிட் மதிப்பு ரூ.28,000 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும்.”

இன்டர்குளோப் ஏவியேசன் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விமானப் போகுவரத்தை மத்திய அரசாங்கம் தடை செய்திருந்தது. பிறகு, படிப் படியாகக் குறைவான பயணிகளுடன் விமானங்கள் உள்நாட்டுக்குள் இயங்க அனுமதி அளித்தது. அதன்படி 50% பயணிகளுடன் விமானங்கள் இயங்கி வந்தன. கடந்த ஜூலை 5-ம் தேதி பயணிகளின் எண்ணிக்கை சதவிகிதத்தை 50 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக அரசு அறிவித்த பிறகு, ஜூலை 6-ம் தேதி அன்று காலை வர்த்தகத்தில் இன்டர்குளோப் ஏவியேசன் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகளின் விலை தலா 2% அதிகரித்து வர்த்தகமாகின. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு விலை 2.53% வரை அதிகரித்து, 81.10 ரூபாய்க்கு வர்த்தகமானது. இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் பங்கு விலை 2.68% அதிகரித்து 1,803 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

14 வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ அபராதம் விதித்திருப்பது ஏன்?

“பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என மொத்தம் 14 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சில விதிமுறைகளுக்கு இந்த வங்கிகள் ஒத்துழைக்கவில்லை என்பதால், இந்த அபராத நடவடிக்கையை ஆர்.பி.ஐ மேற்கொண்டுள்ளது. இதில் எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா, பந்தன் பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கிரெடிட் சுயிஸ், இந்தியன் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க், கர்நாடகா பேங்க், கரூர் வைஸ்யா பேங்க், பஞ்சாப் & சிந்த் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், ஜம்மூ காஷ்மீர் பேங்க், உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகளுக்கு மொத்தம் ரூ.14.50 கோடி அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச அபராதமாக எஸ்.பி.ஐ-க்கு ரூ.50 லட்சம் விதிக்கப் பட்டுள்ளது. வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது, இதர கடன்கள் தொடர்பான விதிமுறைகள் மற்றும் பிற கட்டுப் பாடுகளுக்கு இந்த வங்கிகள் ஒத்துழைப்பு தரவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.”

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

“கடந்த ஜூலை 7-ம் தேதி ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்கு விலை 2% வரை சரிந்து வர்த்தகமானது. உலகளாவிய தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி, இந்தப் பங்கை ‘அன்டர் வெயிட்’ நிலைப்பாட்டில் வைத்ததுதான், இந்தப் பங்கின் விலை குறைந்ததற்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், மார்கன் ஸ்டான்லி இந்த நிறுவனத்தின் இலக்கு விலையை 126 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூலை 7-ம் தேதி, பங்கு விலை 2.63% குறைந்து, 118.30 ரூபாய்க்கு வர்த்தகமானது” என்ற ஷேர்லக், ‘‘ஏர்போர்ட்டுக்குச் செல்ல எனக்கு நேரமாகிவிட்டது. அடுத்த வாரம் கொஞ்சம் சாவகாசமாகப் பேச முயற்சி செய்கிறேன்’’ என்று சொல்லி விட்டு, புல்லட் வேகத்தில் கிளம்பிப் போனார்!

புதிய பங்கு வெளியீட்டில் ஸொமேட்டோ!

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களின் ஒன்றான ஸொமேட்டோ (Zomato), சில மாதங்களுக்கு முன்பிருந்தே பங்குச் சந்தையில் களமிறங்க நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில், செபி அமைப்பின் ஒப்புதலுக்குப் பிறகு, வருகிற ஜூலை 14 முதல் 16-ம் தேதி வரை தனது ஐ.பி.ஓ-வை வெளியிடுகிறது.

ஐ.பி.ஓ மூலம் 8,250 கோடி ரூபாயைத் திரட்ட முடிவு செய்திருந்த நிலையில், தற்போது 9,375 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்ட ஸொமேட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிடுகிறது. தனது விற்பனை பார்ட்னரான இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் மீதமுள்ள 375 கோடி ரூபாயைத் திரட்ட முடிவு செய்திருக்கிறது. இந்த ஐ.பி.ஓ-வில் 65 லட்சம் பங்குகள் ஸொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐ.பி.ஓ-வில் வெளியிடப்பட்டும் பங்கு ஒன்றின் விலைப்பட்டை 72-76 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 195 பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக இதன் மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களின் பிரிவுக்கு 75%, சிறு முதலீட்டாளர்களுக்கு 10%, நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கு 15% என ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.ஓ வெளியீட்டுக்குப் பிறகு, ஜூலை 26-ம் தேதியிலிருந்து ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டை கோட்டக் மஹிந்திரா கேப்பிட்டல், மார்கன் ஸ்டான்லி இந்தியா மற்றும் கிரெடிட் சூஸ் செக்யூரிட்டீஸ் (இந்தியா) ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. எஸ்.பி.ஐ கார்டு ஐ.பி.ஓ-வுக்குப் (ரூ.10,355 கோடி) வெளியாகும் மிகப்பெரிய ஐ.பி.ஓ இது என்பதால், முதலீட்டாளர்களிடம் இந்த ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஜி.டி.பி வளர்ச்சி: ஃபிட்ச் நிறுவனம் புதிய கணிப்பு..!

தரக் குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சியை (ஜி.டி.பி) 10 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலைக்குப் பிறகு, இந்தியப் பொருளாதார மீட்சியானது குறைவான வேகத்தில் உள்ளது. கொரோனா தடுப்பூசித் திட்டம் மந்தமான நிலையில் இருக்கிறது. இது விரைவுபடுத்தப் பட்டால், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் மத்தியில் நம்பிக்கை அளவை அதிகரிக்கச் செய்யும். ஜூலை 5-ம் தேதி நிலவரப்படி, 137 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 4.7% பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது நிலையான பொருளாதார மீட்சிக்கு ஆபத்தானதாகப் பார்க்கப்படுகிறது. இப்படி பல்வேறு காரணங்களால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஃபிட்ச் நிறுவனம் குறைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன்பு, இந்தியப் பொருளாதார வளர்ச்சி 12.9 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism