Published:Updated:

ஷேர்லக்: சந்தை சரிவு ஏற்படுத்திய வாய்ப்பு... நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: சந்தை சரிவு ஏற்படுத்திய வாய்ப்பு... நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற துறைகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். வந்ததும் வராதது மாக, ‘‘சபாஷ், மக்களை நினைத்துப் பார்க்க மறுப்பது ஏன் என்று நீர் வெளியிட்ட தலையங்கத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்தாரோ என்னவோ, நாணயம் விகடன் வெளியான அன்று மாலையே பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து விட்டார். உடனடியாக நடவடிக்கை எடுத்த நிதியமைச்சரை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்’’ என்றவரிடம், ‘‘நிச்சயமாக’’ என்று சொல்லிவிட்டு, ஐஸ் போடாத சாத்துக்குடி ஜூஸைக் கொடுத்தோம். அதை வாங்கிப் பருகிக்கொண்டே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார் ஷேர்லக்.

இரண்டு நிறுவனங்களின் சொத்துகளை ஏலம் விடப்போவதாக செபி சொன்னது ஏன்..?

“முதலீட்டாளர்களின் பணத்தை மீட்பதற் காக, கோல்டன் லைஃப் அக்ரோ இந்தியா மற்றும் சன்ஷைன் அக்ரோ இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்களின் மொத்தம் ஐந்து சொத்துகளை ஜூன் 16-ம் தேதி ரூ.11.5 கோடிக்கு ஏலம் விடுவதாக செபி தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் செபியின் விதிமுறை களைப் பின்பற்றாமல் முதலீட்டாளர் களிடமிருந்து நிதி திரட்டியிருக்கின்றன. இதில், கோல்டன் லைஃப் அக்ரோ 24,915 முதலீட்டா ளர்களிடமிருந்து ரூ.11.3 கோடியைத் தனிப்பட்ட ஒதுக்கீட்டின்மூலம் கடன் பத்திரங்களை வழங்கி நிதியைத் திரட்டியிருக்கிறது. சன்ஷைன் அக்ரோ இன்ஃப்ரா நிறுவனம் 2011-12-ல் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமைப் பங்குகளை வழங்கியதன் மூலம் நிதியைப் பெற்றிருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் என்றைக்கோ செய்த தவறுகளுக்கு இப்போது தண்டனை கிடைத்திருந்தாலும், செய்த தவறுக்கு என்றைக்காவது நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்கிற பயம் தவறு செய்யும் நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும் என்பதால் செபியை நிச்சயம் பாராட்டலாம்.”

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்று இந்திய சந்தையிலிருந்து வெளியேறி இருப்பதாகத் தெரிகிறதே?

“கடந்த எட்டு மாதங்களில் அதாவது, கடந்த அக்டோபரிலிருந்து நடப்பு மாதம் வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 2.5 லட்சம் கோடிக்கு நிகரான பங்குகளை விற்று வெளியேறியிருக்கிறார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2014 மற்றும் 2020-ம் ஆண்டுக்கு இடையில் உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ரூ.2.2 லட்சம் கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். இதன் படி பார்த்தால், கடந்த ஏழு ஆண்டு களில் அவர்கள் மேற்கொண்ட முதலீட்டு மதிப்புக்கு நிகரான தொகை யைக் கடந்த எட்டு மாதங்களில் அவர்கள் விற்றிருக்கிறார்கள்.”

ஷேர்லக்
ஷேர்லக்

கடந்த வாரத்தில் முக்கியமான மூன்று நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகரித்து உள்ளதே?

“அதிக பங்குச் சந்தை மதிப்பு கொண்ட டாப் ஐந்து நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் மேலும் அதிகரித்திருக் கிறது. அதாவது, கடந்த வாரத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் குறியீடு 1533 புள்ளிகள் அதிகரித்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் மற்றும் ஹிந்துஸ் தான் யுனிலீவர் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,78,651 கோடி அதிகரித்துள்ளது. தனித் தனியே பார்த்தால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,31,321 கோடி அதிகரித்து, ரூ.17,73,890 கோடியாக அதிகரித்துள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.30,815 கோடி அதிகரித்து, ரூ.5,56,397 கோடியாகவும், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் சந்தை மதிப்பு ரூ.16,515 கோடி அதிகரித்து, ரூ.7,33,156 கோடியாக உள்ளது.

தற்போதைய நிலையில் சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடத்திலும், 2-வது இடத்தில் டி.சி.எஸ், 3-வது இடத்தில் ஹெச்.டி.எஃப்.சி பேங்க், 4-வது இடத்தில் இன்ஃபோசிஸ் மற்றும் 5-வது இடத்தில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. எல்.ஐ.சி நிறுவனப் பங்கின் சந்தை மதிப்பு கடந்த வாரத்திலும் கொஞ்சம் குறைந்ததால், தற்போது ரூ.5.13 லட்சம் கோடியாக இருக்கிறது.”

பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தாலும் பல பங்குகளின் விலை நன்றாக அதிகரித்துள்ளதே?

“நடப்பு 2022-ம் ஆண்டில் இதுவரை பி.எஸ்.இ சென்செக்ஸ் 8% வரை சரிந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் அடைந்த உச்சத்தில் இருந்து 15% வரை வீழ்ச்சியில் தற்போது இருக்கிறது. இருப்பினும் குறிப்பிட்ட பங்குகள் 100% வரை ஏற்றத்தைச் சந்தித்து, மல்ட்டிபேகர் பங்குகளாக உருவெடுத் துள்ளன. குறிப்பாக, அதானி பவர் நிறுவனத்தின் பங்கு 212% வரை அதிகரித்துள்ளது. பி.எல்.எஸ் இன்டர்நேஷனல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 100% அதிகரித்துள்ளது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சாய்ஸ் இன்டர்நேஷனல், க்ரெஸ்ஸண்டா சொல்யூஷன்ஸ் நிறுவனப் பங்குகள் முறையே 202%, 164% மற்றும் 290% அதிகரித்துள்ளன. குஜராத் மினரல் டெவலெப்மென்ட் கார்ப்பரேஷன் (120%) சதனா நைட்ரோ கெம் (108%), எஸ்.இ.எல் மேனுஃபேக்சரிங் (2640%), சாந்தி மேனுஃபேக்சரிங் கம்பெனி (665%), ஷார்தா கார்ப்கெம் (110%), ஸ்வான் எனர்ஜி (100%) நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்துள்ளன.”

சமீபத்திய சந்தை இறக்கம் நீண்ட கால முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறதே?

“அண்மைக் கால இந்தியப் பங்குச் சந்தை இறக்கமானது, பல துறைகளை மிகவும் நியாயமான மதிப்பீட்டில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள், மருந்துத் தயாரிப்பு, சுற்றுலா, சரக்குப் போக்குவரத்து, நுகர்வோர் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நல்ல நிறுவனப் பங்குகளின் விலை கணிசமான இறங்கி உள்ளது. இப்போது இந்த நிறுவனப் பங்குகளை வாங்கினால், அடுத்த மூன்றாண்டுக் காலத்தில் கணிசமான லாபத்தைப் பார்க்க முடியும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.”

சர்க்கரைப் பங்குகளின் விலைச் சரிவை சந்தித்திருக்கின்றனவே... என்ன காரணம்?

“கோதுமை ஏற்றுமதி தடை மற்றும் சில எஃகு பொருள் களுக்கான ஏற்றுமதி வரி உயர்வுக்குப் பிறகு, உள்நாட்டு விலையைக் கட்டுக்குள் வைத் திருக்க சர்க்கரை ஏற்றுமதியை 100 லட்சம் மெட்ரிக் டன்னாக (மெட்ரிக் டன்) கட்டுப்படுத்துவதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. இதன் காரணமாக சர்க்கரைப் பங்குகளின் விலை சரிந்துள்ளன.

ஜூன் 1-ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை அரசாங்கம் அமல்படுத்த இருப்பதாக அறிவித்த பிறகு, கடந்த மே 25 அன்று சர்க்கரை பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. துவார கேஷ் சுகர் நிறுவனத்தின் பங்கு 8% வரையும், டால்மியா பாரத் சுகர் அண்டு இண்டஸ்ட்ரீஸ் 7% வரையும், திரிவேணி இன்ஜினீயரிங் அண்டு இண்டஸ்ட்ரீஸ் 6%, பல்ராம்புர் சினி மில்ஸ் 8%, அவாத் சுகர் அண்டு எனர்ஜி 6%, ரேணுகா சுகர்ஸ் 4% மற்றும் உத்தம் சுகர்ஸ் 5% வரை சரிவை சந்தித்திருக் கின்றன.”

பெயின்ட் நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறதே?

“கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் அதன் மூலதனச் செலவினத் திட்டத்தை இரட்டிப்பாக்கவும் பெயின்ட்ஸ் வணிகத்தில் நுழையப் போவதாக அறிவித்தது. இதை அடுத்து, பெயின்ட் பங்குகள் புதன்கிழமை காலை வர்த்தகத்தில் சரிவைச் சந்தித்தன. ஏசியன் பெயின்ட்ஸ் 3%, இண்டிகோ பெயின்ட்ஸ் 1.5%, பெர்கர் பெயின்ட் 4% ஷாலிமர் பெயின்ட்ஸ் 0.4% வரை சரிவை சந்தித்தன. இந்த நிலையில், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 2.5% வரை ஏற்றத்தைச் சந்தித்தன.

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் லாப அளவு குறையும் என்ற அச்சம் காரணமாக பெயின்ட் பங்குகள் விலை அழுத் தத்தில் உள்ளன. இந்த ஆண்டு இதுவரை கச்சா எண்ணெய் 50% வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பெயின்ட் நிறுவனங்களுக்கு உள்ளீட்டு செலவுகள் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. மேலும், பெயின்ட் வணிகத்தில் கிராசிமின் தீவிரத் தன்மை மற்ற பெயின்ட் நிறுவனங்களின் சந்தைப் பங்கைக் குறைக்கலாம் என்பதால், அவற்றின் பங்குகளின் விலை குறைந்துள்ளன.”

டிட்டாகர் வாகன்ஸ் (Titagarh Wagons) நிறுவனப் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“இந்திய ரயில்வேயிடமிருந்து 19,854 BCNA வேகன்கள் மற்றும் 4,323 BOXNHL வேகன்கள் என மொத்தம் 24,177 வேகன்களைத் தயாரித்து வழங்குவதற்கான ஆர்டருக்கான ஏற்புக் கடிதத்தை டிட்டாகர் வாகன் நிறுவனம் பெற்றுள்ள தாகத் தெரிவித்துள்ளது. இதை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்துள்ளது. கடந்த மே 25-ம் தேதி காலை வர்த்தகத்தில் 12% வரை விலை அதிகரித்து வர்த்தக மானது. இந்த ஆர்டரின் மொத்த மதிப்பு ரூ.7,800 கோடி. வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை ரூ.102-க்கு வர்த்தகமானது.”

ரூபா அண்டு கோ நிறுவனத்தின் பங்கு விலை சரிய என்ன காரணம்?

“உள்ளாடைத் தயாரிப்பாளரான ரூபா அண்டு கோ-வின் பங்குகள் மே 24 அன்று கிட்டத்தட்ட 20% சரிந்தன. இது மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் பலவீனமான வருவாயைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து மற்றும் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் உருவான மாற்றம் காரணமாக இந்தப் பங்கின் விலை வீழ்சியைச் சந்தித்திருக்கிறது. கடந்த 23-ம் தேதி நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவித்தபோது, தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் குமார் லோதா மற்றும் தலைமை நிதி அதிகாரி ரமேஷ் அகர்வால் ஆகியோர் திடீரென ராஜினாமா செய்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி யடைந்தனர். கடந்த மார்ச் காலாண்டு முடிவின்படி இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 25% சரிந்து ரூ.49 கோடியாக இருக்கிறது.”

ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே...

‘‘ஸொமேட்டோ நிறுவனம் தனது மார்ச் காலாண்டு முடிவை அறிவித்த மறுநாள், அந்தப் பங்கின் விலை 18 சத விகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்து வர்த்தகமானது. இந்த நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு முடிவின்படி, ரூ.359 கோடியை நிகர இழப்பாகப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலத்துடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகமாகும். இந்நிறுவனத்தின் எபிட்டா இழப்பு ரூ.449.70 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.153.5 கோடியாக இருந்தது. வியாழக்கிழமை ரூ.60.30 என்கிற விலையில் வர்த்தகமானது."

கொரோமண்டல் இன்டர்நேஷனல் பங்கு விலை குறைய என்ன காரணம்?

‘‘கொரமண்டல் இன்டர் நேஷனல் பங்கு விலை கடந்த மே 25-ம் தேதி பி.எஸ்.இ-யில் 10% சரிந்து ரூ.875.95 ஆக இருந்தது, அதன் சொந்த துணை நிறுவன மான சாமேரோ ஐரோப்பா பி.வி நிறுவனத்தைத் தானாக முன்வந்து கலைக்க இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து, பங்கு விலை குறைந்திருக்கிறது’’ என்றவரிடம்,

இந்த வார கவர் ஸ்டோரியைக் காட்டினோம். ‘‘அருமை, ஊரெங்கும் மோசடித் திட்டங் கள் நடக்கிற இந்த வேளையில் சரியான மேட்டரைத்தான் கவர் ஸ்டோரியில் போட்டிருக்கிறீர்’’ என்று புகழ்ந்துவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

பங்குச் சந்தை இறக்கத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘Money Mantra @ மலைக்கோட்டை மாநகர்!’ என்ற நிகழ்ச்சி திருச்சியில் மே 31 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

பங்குச் சந்தை இறக்கத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும், முதலீடுகளைப் பிரித்து செய்வதன் (அஸெட் அலொகேஷன்) கிடைக்கும் லாபம், முதலீட்டில் ரிஸ்க் எந்த அளவுக்கு எடுக்க வேண்டும் ரிஸ்க்கைக் குறைக்கும் வழிகள் என்னென்ன, எல்லா முதலீட்டையும் பங்குச் சந்தையிலோ, ரியல் எஸ்டேட்டிலோ போட்டால் என்ன நடக்கும், தற்போதைய நிலையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன போன்ற விஷயங்களை முதலீட்டாளர்கள் இந்தக் கூட்டத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன், பங்குச் சந்தையின் போக்கு பற்றி விவரித்துப் பேசுகிறார். அனுமதி இலவசம். முன் பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism