Published:Updated:

ஷேர்லக்: ஏற்றத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்... முதலீட்டுக்குக் கவனிக்கலாமா?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: ஏற்றத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்... முதலீட்டுக்குக் கவனிக்கலாமா?

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை வழக்கம்போல 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். புதுப் பொலிவு இதழின் பக்கங்களைப் புரட்டியவர் “சூப்பர்” எனப் பாராட்டினார். நாம் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கேள்வி களைக் கேட்க ஆரம்பித்தோம்.

தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் புதிய பங்கு வெளியிடுகிறதாமே..!

“100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் (டிஎம்பி) பங்குச் சந்தையில் பொதுப் பங்குகளை வெளியிட (IPO) செபி அனுமதி அளித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பித்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. சுமார் 1.58 கோடி புதிய பங்குகளும், ஓ.எஃப்.எஸ் முறையில் பங்குதாரர்களிடமிருந்து 12,505 பங்குகளும் இந்த ஐ.பி.ஓ மூலம் விற்பனைக்கு வரவுள்ளன. டி.பிரேம் பழனிவேல், பிரியா ராஜன், பிரபாகர் மகாதியோ போப்டே, நரசிம்மன் கிருஷ்ணமூர்த்தி, எம்.மல்லிகாராணி மற்றும் சுப்பிரமணியன் வெங்கடேஸ்வரன் ஐயர் ஆகியோர் வசமுள்ள பங்குகள் விற்பனை செய்ய உள்ளனர்.

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் இந்த வங்கி ரூ.1,000 கோடி நிதியை முதலீட்டாளர் களிடமிருந்து திரட்ட முடிவு செய்துள்ளது. ஜூன் 30, 2021-ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 509 கிளைகளைப் பரப்பி பிரமாண்ட மாக வளர்ந்திருக்கிறது. இந்த வங்கியின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர் களிடம் பெரும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விலை குறைந்து கொண்டே போவதால், முதலீட்டாளர்கள் மிகுந்த கவலை அடைந்திருக்கிறார்களே..!

“முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, எல்.ஐ.சி பங்கின் விலை சரிந்து கொண்டே வருகிறது. மே.17-ம் தேதி பங்குச் சந்தையில் வெளியீட்டு விலையைவிட குறைவான விலையிலேயே பட்டியலிடப் பட்டது. ரூ.5 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம், இன்ஷூரன்ஸ் துறையில் பொதுத்துறையைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனம், இப்போது விலை சரிந்தாலும் எதிர்காலத்தில் ஏற்றம் பெறும் என்கிற நம்பிக்கையில் வாங்கி வைத்திருக்கும் முதலீட் டாளர்களுக்கு, மேலும் மேலும் விலை வீழ்ச்சி யைத்தான் எல்.ஐ.சி பங்கு தந்து கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட விலையைவிட 15% வீழ்ச்சியைச் சந்தித்திருந்த நிலையில், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4.80 லட்சம் கோடிக்குக்கீழ் சரிந்தது. ஜூன் 9-ம் தேதி காலை வர்த்தகத்தில் மேலும் விலை சரிந்து ரூ.730 என்கிற நிலையில் வர்த்தகமானது. இதன் விலை ரூ.700-க்கும்கீழ் குறைய வாய்ப்பிருப்பதாக சந்தை வட்டாரத்தில் பேச்சு. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.”

எஸ்.ஜே.எஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிறுவனம் கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைத்த வருமானம் 13.4% அதிகரித்து, ரூ.104 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் நல்ல காலாண்டு முடிவை வெளியிட்டதால், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வர்த் தகத்தில் இதன் பங்கு விலை 9% வரை அதிகரித்து, ரூ.492-க்கு வர்த்தகமானது. இந்நிறுவனப் பங்கு விலை கடந்த 9 வர்த்தக தினங்களில் சுமார் 30% அதிகரித்திருக்கிறது. மார்ச் 31, 2022-ம் தேதி நிலவரப்படி, இந்த நிறுவனத்தில் பிரபல முதலீட்டாளரான அஷிஷா கசோலியா 3.77% பங்குகளை வைத்திருக்கிறார்.”

பயோகான் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்துகொண்டே இருக்கிறதே..?

“கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் பயோகான் (Biocon) நிறுவனத்தின் பங்கு விலை 1.5% வரை சரிந்து, ரூ.312-க்கு வர்த்தகமானது. கடந்த ஆறு வாரங்களில் இதன் பங்கு விலை 20% வரை சரிவைச் சந்தித் துள்ளது. ஏனெனில், கடந்த மார்ச் காலாண்டு முடிவின் படி, இந்நிறுவனத்தின் நிகர லாபம் 4% சரிந்து, ரூ.284 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே கால கட்டத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 296 கோடியாக இருந்தது.

கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் குறியீடு 15% ஏற்றத்தைச் சந்தித்துள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு 10% வரை சரிவையும், கடந்த ஒரு வருடத்தில் சென்செக்ஸ் 39% ஏற்றத்தைச் சந்தித்துள்ள நிலையில் இந்த பங்கு விலை 22% சரிவையும் சந்தித்துள்ளது.”

மங்களூர் ரிஃபைனரி அண்டு பெட்ரோகெமிக்கல்ஸ் (MRPL) நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“இந்த நிறுவனப் பங்குகள் கடந்த புதன்கிழமை அன்று பி.எஸ்.இ-யில் 9% உயர்ந்து, ரூ.118.55-ஆக உயர்ந்தது. கடந்த வாரத்தின் முதல் இரண்டு வர்த்தக நாள்களில் 30% உயர்ந்துள்ளது. நிறுவனத் தின் வருவாய் நன்றாக இருப்பதைத் தெரிவித்த பிறகு, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 135% வரை இந்தப் பங்கு விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது.”

மீண்டும் கொரோனா பரவல் ஆரம்பிக்கிறதே... இது சந்தையை பாதிக்குமா?

“கடந்த வாரத்தின் முதல் நாளிலேயே மகாராஷ்ட்ரா வில் கொரோனா தொற்று எண்ணிக்கை 54% உயர்ந் திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரளாவில் இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. தமிழகத் திலும் கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஜூன் 6-ம் தேதி என்.எஸ்.இ வர்த்தகத்தில் திரையரங்குகளை இயக்கும் பி.வி.ஆர் மற்றும் ஐனாக்ஸ் நிறுவனங்களின் பங்கு விலை முறையே 2.5% மற்றும் 3.3% என்கிற அளவில் சரிவை சந்தித்தது. கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத் தால், ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டு முதலில் மூடப்படுவது திரையரங்குகளாகத்தான் இருக்கும் என்கிற காரணத் தால் இந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந் துள்ளது.’’

ஷேர்லக்: ஏற்றத்தில் ரியல் எஸ்டேட்  பங்குகள்... முதலீட்டுக்குக்  கவனிக்கலாமா?

உலக வங்கியும், ஃபிட்ச் மாதிரி யான பல ரேட்டிங் நிறுவனங் களும் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி கணிப்பைக் குறைத்திருக் கின்றனவே?

“உலக வங்கி, இரண்டாவது முறையாக நடப்பு நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சியைக் கணித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.5 சதவிகிதமாக குறையும் எனக் கணித்துள்ளது. இதற்குமுன்பாக இதை 8% என உலக வங்கி கணித்திருந்தது.

பணவீக்கம், விநியோக பாதிப்பு, உலக அளவில் நிலவி வரும் அரசியல் சூழல் போன்றவை இதற்கு காரணமாகும். அடுத்த நிதி ஆண்டில் (2023-24) ஜி.டி.பி வளர்ச்சி 7.1 சதவிகிதமாகவும், 2024-25 நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 6.5 சதவிகிதமாகக் குறைய வாய்ப் புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியைப் போலவே, ஆர்.பி.ஐ-யும் 7.8 சத விகிதத்திலிருந்து 7.2 சதவிகிதமாகவும், ஐ.எம்.எஃப் 9 சதவிகிதத்திலிருந்து 8.2 சதவிகிதமாகவும் நமது ஜி.டி.பி வளர்ச்சியைக் குறைத்து கணித்துள்ளது.’’

கடந்த வாரத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருக்கிறதே என்ன காரணம்?

“கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தி 4.90 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நிதிக் கொள்கை அறிக்கையின்போது கூட்டுறவு வங்கிகளுக்கான தனிநபர் வீட்டுக் கடன் வரம்புகளை அதிகரிப்பது மற்றும் வணிக ரியல் எஸ்டேட் திட்டங் களுக்கு கடன் வழங்க கிராமப்புற கூட்டுறவு வங்கிகளை அனுமதிப்பது போன்ற நடவடிக் கைகளை அறிவித்தார்.

இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் ஜூன் 8 அன்று ஏற்றத்தில் வர்த்தக மாகின. டி.எல்.எஃப், மேக்ரோடெக் டெவலப் பர்ஸ், ஓப்ராய் ரியா லிட்டி,ஷோபா, பிரிகேட் என்டர்பிரைசஸ் மற்றும் கோத்ரேஜ் புராபர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2-3% வரை உயர்ந்தன. மேலும், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு, நிஃப்டி ரியாலிட்டி இன்டெக்ஸ் 2.4% அதிகரித்து, என்.எஸ்.இ சந்தையில் 405.80 என்கிற நிலையில் வர்த்தக மானது.

கடந்த சில ஆண்டுகளாக இறக்கத்திலிருந்த ரியல் எஸ்டேட் துறை ஏற்றத்துக்கு திரும்பி இருக்கிறது. இந்தியா முழுவதும் பத்திரப் பதிவுகளின் எண்ணிக்கை மேம்பட்டிருக்கின்றன. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்திருப்பது, மிக அதிகம் எனச் சொல்ல முடியாது என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள். அவர்கள் மூன்றாண்டு இலக்குடன் ரியால்டி பங்குகளில் இப்போதிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். ரிஸ்க் எடுத்து, பொறுமையோடு காத்திருக்கும் முதலீட்டாளர்கள் ரியல்டி பங்குகளில் முதலீடு செய்வது பற்றிப் பரிசீலிக்கலாம்.’’

மொபிக்விக் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறதாமே?

‘‘கடந்த ஆண்டு வெளியாகவிருந்த ஐ.பி.ஓ-வை பொபிக்விக் சிஸ்டம்ஸ் (Mobikwik Systems) நிறுவனம், பல காரணங்களால் அந்த முடிவை ஒத்திவைத்தது. ஏனெனில், பேடிஎம் நிறுவனம் ஐ.பி.ஓ-வில் படுதோல்வியைச் சந்தித்ததால், மொபிக்விக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியீட்டை ஒத்தி வைத்தன. இன்னும் பல நிறுவனங்கள் செபியிடம் இருந்து அனுமதி கிடைத்தும் ஐ.பி.ஓ வெளியிடாமல் இருக்கின்றன.

இந்த நிலையில், மொபிக்விக் நிறுவனம் நடப்பு ஆண்டில் ஐ.பி.ஓ வெளியிட முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்த வெளியீட்டின் மூலம் 100 மில்லியன் டாலர் நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட திட்டமிட்டிருக்கிறது.’’

சிமென்ட் நிறுவனப் பங்கு களுக்கு என்ன ஆச்சு, ஏன் அவற்றின் விலை குறைந்துகொண்டே வருகிறது?

‘‘தேவை குறைவின் காரண மாக சிமென்ட் விலை கடந்த மே மாதத்தில் 3% வரை சரிந்து காணப்பட்டது. கடந்த வாரத் தொடக்கத்தில் சிமென்ட் பங்குகளின் விலை 3 - 10% வரை சரிவைச் சந்தித்தன. குறிப்பாக  சிமென்ட், கிராசிம் இண் டஸ்ட்ரீஸ், பிர்லா கார்ப்பரேஷன், டால்மியா பாரத், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் ஜேகே சிமென்ட் நிறுவனங்களின் பங்கு விலை திங்கள்கிழமை வர்த்த கத்தில் 52 வாரக் குறைவைத் தொட்டன’’ என்றவர் புறப்படுவதற்குமுன், ‘‘நீங்கள் புதிதாகத் தொடங்கி இருக்கும் தொடர்களில் செளரப் முகர்ஜி எழுதும் ‘ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி’ தொடர், பங்குச் சந்தை வாசகர்களின் கவனம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை’’ என்றபடி வீட்டுக்குப் புறப்பட்டார்!

சிவராமகிருஷ்ணன்
சிவராமகிருஷ்ணன்

பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் ஈட்டும் எளிய வழிமுறைகள்..!

நாணயம் விகடன் நடத்தும் ‘பங்குச் சந்தை முதலீடு: செய்யக்கூடியதும், செய்யக் கூடாததும்..!’ என்ற ஆன்லைன் வகுப்பு ஜூன் 18, 2022 (சனிக்கிழமை) காலை 10.30 - 12 மணி வரை நடைபெறுகிறது. ஆடிட்டர் சிவராமகிருஷ்ணன் (நிறுவனர், www.sinceresyndication.com) இந்தக் கட்டண வகுப்பை நடத்துகிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.300. முன்பதிவுக்கு: https://bit.ly/3MNPbgJ

ஷேர்லக்: ஏற்றத்தில் ரியல் எஸ்டேட்  பங்குகள்... முதலீட்டுக்குக்  கவனிக்கலாமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism