Published:Updated:

ஷேர்லக்: சந்தை இறக்கத்திலும் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்த ஸ்மால்கேப் பங்குகள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: சந்தை இறக்கத்திலும் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்த ஸ்மால்கேப் பங்குகள்!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். சிங்கிள் மாஸ்க்குடன் வந்தவர், நம்மோடு பேசத் தொடங்கும் முன் டபுள் மாஸ்க் போட்டுக்கொண்டார். கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் அவருடைய எச்சரிக்கையைப் பின்பற்றி நாமும் மாஸ்க் அணிந்துகொண்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

இன்று வியாழக்கிழமை சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்குமேல் இறக்கம், திங்களன்றும் 1450 புள்ளிகள் இறக்கம் என முதலீட்டாளர்களை நொந்து போக வைக்கிறதே பங்குச் சந்தை..?

‘‘இந்த இரு இறக்கத்துக்கும் காரணம் அமெரிக்காதான். திங்களன்று சந்தை இறங்கக் காரணம், அமெரிக்கப் பணவீக்கம். வியாழன்று இறங்கக் காரணம், அமெரிக்க ஃபெட் 0.75 அளவுக்கு வட்டி விகிதம் உயர்த்தியது.

200 நாள் மூவிங் ஆவரேஜ், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் வெளியேற்றம், 60 நாள் மூவிங் ஆவரேஜ் என எல்லா விஷயங்களும் நம் சந்தைக்கு எதிராக உள்ளன. நிஃப்டியானது 15400 என்கிற நிலையைத் தாண்டி இறங்கினால், 14600 வரை இறங்க வாய்ப்புண்டு என்று டெக்னிக்கல் அனலிஸ்ட்டுகள் எச்சரிக்கிறார்கள். இது உண்மையிலேயே கஷ்ட காலம். கடந்த இரு ஆண்டுகளில் நல்ல லாபம் கண்டவர்கள், இந்தக் கஷ்ட காலத்தையும் தாண்டி வரக் கற்றுக்கொள்ள வேண்டும். பங்குச் சந்தை என்பது ஏற்றம் மட்டுமல்ல, இறக்கமும் கொண்டதுதான் என்பது புரிந்தவர்கள் பொறுமையாக இருந்து, நீண்ட காலத்தில் நல்ல லாபம் சம்பாதிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

“நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டின் முதல் இரண்டு மாதங்களில், பேடிஎம் நிறுவனத்தால் வழங்கப்பட்ட கடன் தொகையின் மதிப்பு ரூ.3,576 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 829% அதிகம். வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கையும் 471% உயர்வை சந்தித்துள்ளதாக இந்நிறுவனம் வெளியிட்ட இந்தச் செய்தியின் எதிரொலியாக, கடந்த ஜூன் 15-ம் தேதி இதன் பங்கு விலை 1.5% அதிகரித்து, ரூ.615.6 ஆக வர்த்தகமானது. வெளியிடப்பட்ட இதன் பங்கு விலையான ரூ.2,150-லிருந்து 70 சதவிகிதத்துக்குமேல் சரிந்து வர்த்தகமாகி வந்த நிலையில், தற்போது சற்றே ஏற்றத்துடன் காணப்படுகிறது. மேலும், 52 வார குறைந்தபட்ச விலையான ரூ.510-லிருந்து 20% வரை அதிகரித்து காணப்படுகிறது. வியாழன் அன்று சந்தை பெரிதாக சரிந்தபோதும், இந்தப் பங்கின் விலை பெரிதாகக் குறையவில்லை. அதற்காக அந்தப் பங்கை இப்போது வாங்கலாம் என்று கேட்டால், நீங்கள் எந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயார் என்பதைப் பொறுத்து பதில் மாறுபடும்.’’

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“அதானி குழுமம் மற்றும் டோட்டல் எனர்ஜீஸ் இணைந்து உலகின் மிகப் பெரிய பசுமையான ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கப் போவதாக அதானி என்டர்பிரைசஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, கடந்த ஜூன் 15-ம் தேதி வர்த்தகத்தில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 3% வரை அதிகரித்து வர்த்தகமானது. அன்றைய காலை வர்த்தகத்தில் பி.எஸ்.இ சந்தையில் 1.89% வரை அதிகரித்து, ரூ.2,120.70-க்கு வர்த்தகமானது.”

ஜி.ஆர் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனம் முறைகேடு பிரச்னையில் சிக்கியிருக்கிறதாமே... என்ன நடந்தது?

“அஸ்ஸாமில் நடைபெற்றுவரும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஷில்லாங், கவுஹாத்தி, குர்கான், பெங்களூருவில் உள்ள ஜி.ஆர் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் பல இடங்களில் கடந்த ஜூன் 13-ம் தேதி சி.பி.ஐ சோதனை நடத்தியது. மேலும், இந்நிறுவனத்தின் தலைவர் வினோத்குமார் அகர்வாலின் வீடு மற்றும் குருகிராமில் இருக்கும் கார்ப்பரேட் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தத் தகவல் பரவியதால், இந்நிறுவனத்தின் பங்கு விலை ஜூன் 14-ம் தேதி காலை 7.32% வரை சரிந்து, ரூ.1,143.05-க்கு வர்த்தகமானது. இரண்டு நாள் வர்த்தகத்தில் இதன் பங்கு விலை மொத்தம் 17% வரை சரிவை சந்தித் திருக்கிறது. இந்தப் பங்கில் முதலீடு செய்துள்ளவர்கள் கவனமாகவே இருப்பது நல்லது.”

சந்தை இறக்கத்திலும் ஃபண்ட் நிறுவனங்கள் பல ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்திருக் கின்றனவே!

“உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்ட நிலை யற்ற தன்மை, அதிக பணவீக்க விகிதம், பங்குச் சந்தையின் இறக்கம் என்பதையெல்லாம் தாண்டி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மே மாதத்தில் ஸ்மால்கேப் பங்குகளில் ரூ.18,500 கோடி முதலீடு செய்துள்ளன. இது முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 45% அதிகமாகும். கொரோனா நோய்த்தொற்று வந்த காலத்தில் அதாவது, 2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பங்குச் சந்தை மிகவும் இறக்கம் கண்டிருந்த போதும் இதேபோல் ஸ்மால் கேப் பங்குகளில் ஃபண்ட் நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்தன.

இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், மிர்சா இன்டர்நேஷனல், மகாராஷ் டிரா ஸ்கூட்டர்ஸ், பி.சி.பி.எல், தத்வா சிந்தன் பார்மா கெம், ஆர்.பி.எல் பேங்க், ஜே.கே பேப்பர், இன்செக் டிசைட்ஸ் இந்தியா (Insecticides India), ரூட் மொபைல், கோஃபேஷன் (இந்தியா) மற்றும் நசாரா டெக் னாலஜிஸ் ஆகிய ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருக்கின்றன.

அதே நேரத்தில், இன்ட லெக்ட்டிசைன் அரேனா, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஆசீயானா ஹவுஸிங், தி இந்தியா சிமென்ட்ஸ், பாலிப்ளக்ஸ் கார்ப்பரேஷன், இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட், மாஸ்டெக், கேப்ளின் பாயின்ட் லேபாரட்டரீஸ், அமரராஜா பேட்டரீஸ் மற்றும் ஜிண்டால் ஸ்டெயின் லெஸ் ஆகிய ஸ்மால்கேப் நிறுவனங்களை மே மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவ னங்கள் விற்பனை செய்துள்ளன.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனாஸ் நிறுவனத்தை எஃப் அண்ட் ஓ பட்டியலில் செபி சேர்த்தது ஏன்?

“ஆர்.பி.எல் வங்கி மற்றும் டெல்டா கார்ப் ஆகிய நிறுவ னங்கள் ஏற்கெனவே எஃப் அண்டு ஓ தடைப் பட்டியலில் உள்ள நிலையில், என்.எஸ்.இ கடந்த ஜூன் 15-ம் தேதி இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை எஃப் அண்டு ஓ தடை பட்டிய லில் மூன்றாவதாக நிறுவனப் பங்காகச் சேர்த்துள்ளது. இதன் காரணமாக, இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த நான்கு வர்த்தக தினத்தில் 15% வரை சரிவை சந்தித்துள்ளது. ஜூன் 15-ம் தேதி வர்த்தகம் முடிவில் ரூ.101.35-க்கு வர்த்தகமான இதன் பங்கு விலை, வியாழக்கிழமை 12 மணி அளவில் ரூ.98 என்கிற நிலையில் வர்த்தகமானது.”

கே.பி.ஐ (KPI) கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 9% வரை அதிகரித்து, ரூ.679.20-க்கு வர்த்தகமானது. இதற்கு முந்தைய இரு வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 0.29% ஏற்றத்தைப் பதிவு செய்திருந்த நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 21% வரை விலை உயர்வைச் சந்தித் திருக்கிறது.

5.20 எம்.டபிள்யூ.டி.சி (MWdc) சூரிய மின்சக்தித் திட்டத்துக்கான சான்றிதழை குஜராத் எனர்ஜி டெவெலப்மென்ட் ஏஜென்சியிடம் இருந்து பெற்ற ஆறு நாள்களில் இதன் பங்கு விலை 50% வரை ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இதன் பங்கு விலை 1,147% வரை விலை அதிகரித் திருக்கிறது. மின் உற்பத்தி சம்பந்தப்பட்ட நிறுவனம் இது என்பதால், முதலீட்டாளர்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.”

அபர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருத்தது ஏன்..?

‘‘கடந்த புதன்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 8% வரை விலை அதிகரித்து, ரூ.953-க்கு வர்த்தகமானது. கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு முடிவை இந்நிறுவனம் நல்ல முறையில் பதிவு செய்திருப்பதால், பங்கு விலை அதிகரித்திருக்கிறது. இதற்கு முந்தைய இரு வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 0.18% சரிவைச் சந்தித்திருந்த நிலையில், இந்தப் பங்கின் விலை மட்டும் 23% வரை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இதன் பங்கு விலை 53% வரை ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. மார்ச் காலாண்டு முடிவின்படி, இந்த நிறுவனத்தின் வருமானம் 58% அதிகரித்து ரூ.3,018 கோடியாக அதிகரித்துள்ளது. அதே போல, இந்நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய வருமானம் 73% அதிகரித்து, ரூ.83 கோடியாக இருக்கிறது.”

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து அதிக அளவில் பணத்தை வெளியில் எடுத்து வருகிறார்களே..?

“கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஃபைனான்ஷியல் மற்றும் ஐ.டி துறை சார்ந்த பங்குகளில் இருந்து கிட்டத்தட்ட ரூ.50,000 கோடியை வெளியில் எடுத்திருக்கிறார்கள். கடந்த மார்ச் மாத முடிவில் 17465 புள்ளி களில் வர்த்தகமான நிஃப்டி 50 இண்டெக்ஸ் 5% வரை சரிந்து, மே மாத முடிவில் 16585 புள்ளிகளாக இருந்தது. கடந்த வியாழன் அன்று இந்த இன்டெக்ஸ் 904 புள்ளிகள் குறைந்து, 15360-ஆக வர்த்தகம் ஆகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் இத்துறை சார்ந்த பங்குகளை விற்று வருவதால், கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ”

ஆர்.பி.எல் பேங்க் பங்கு விலை அதிரடியாக சரிவைச் சந்தித்திருக்கிறதே?

“இந்திய ரிசர்வ் வங்கி ஆர்.பி.எல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஆர். சுப்ர மணியகுமாரை நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஆர்.பி.எல் பேங்க் பங்கு விலை கடந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள் அன்று 22% வரை சரிவை சந்தித்து ரூ.87.90-ஆக வர்த்தகமானது. ஏனெனில் இவர் இதற்கு முன்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் ஆகிய நிதி நிறுவனங்களில் இருந்தபோது அந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என முதலீட்டாளர்கள் கருதியதே இந்த இறக்கத்துக்குக் காரணம் என்கிறார்கள்.’’

நவ்கர் அர்பன்ஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் பங்கு பிரிப்பு எப்போது?

‘‘கடந்த இரண்டு ஆண்டு களாக உலகப் பொருளாதாரம் பணவீக்கம் மற்றும் கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்தாலும், இந்தியப் பங்குச் சந்தையில் அதிக அளவில் மல்ட்டிபேக்கர் பங்குகள் உருவாகின. அதில் ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்த நவ்கர் அர்பன் ஸ்ட்ரக்சர் (Navkar Urbanstructure) பங்கும் ஒன்றாகும். இந்த பங்கின் விலையானது கடந்த ஒரு வருடத்தில் 280% வரை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. அதாவது, ஓராண்டுக்கு முன்பு ரூ.16-க்கு வர்த்தகமாகி வந்த இந்த நிறுவனப் பங்கு தற்போது ரூ.62-ஆக உயர்ந்துள்ளது.

இந்த மல்ட்டி பேக்கர் ஸ்மால்கேப் பங்கு ஏற்கெனவே ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கை 5:1 விகிதத்தில் பங்குப் பிரிப்பை அறிவித்திருந்த நிலையில், இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு 2022 ஜூன் 24-ம் தேதியைப் பங்குப் பிரிப்புக் கான பதிவுத் தேதியாக நிர்ணயித்துள்ளது’’ என்றவர், ‘‘நீர் புதிதாக ஆரம்பித்த தொடர்கள் அனைத்தும் அருமை’’ என்று பாராட்டி விட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

நிதித் திட்டமிடலில் சொத்து ஒதுக்கீட்டின் முக்கியத்துவம்..!

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘நிதித் திட்டமிடலில் சொத்து ஒதுக்கீட்டின் முக்கியத்துவம்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை, ஜூன் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி தரியன் ஆகியோர் பேச உள்ளனர். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். உங்களுடைய வருகையைப் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism