Published:Updated:

ஷேர்லக்: ஐ.பி.ஓ வெளியீடு... காத்திருக்கும் நிறுவனங்கள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: ஐ.பி.ஓ வெளியீடு... காத்திருக்கும் நிறுவனங்கள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். ‘‘மோசடி நிறுவனம் பற்றிய சலசலப்பை கடந்த இதழில் உருவாக்கி விட்டீர்கள். இனி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மக்கள்தான்’’ என்றவரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

ஆட்டோமொபைல் இண்டெக்ஸ் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறதே... என்ன காரணம்?

“கடந்த ஜூலை 6-ம் தேதி நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ் 2.6% அதிகரித்து, 11,952.20 என்கிற நிலையில் வர்த்தகமானது. இது கடந்த 2021-ம் ஆண்டின் நவம்பர் மாதத்துக்குப் பிறகான அதிகபட்ச உயர்வாகும். ஜூன் 20-ம் தேதிக்குப் பிறகு ஆட்டோ இண்டெக்ஸ் 11% வரை அதிகரித்திருக்கிறது. மார்ச் வீழ்ச்சியில் இருந்து 29% வரை ஏற்றம் அடைந்திருக்கிறது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஜூன் மாத விற்பனை விவரங்கள் வெளியாகி இருக் கின்றன. இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் அல்லாமல் கனரக வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால், ஆட்டோ இண்டெக்ஸ் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. மேலும், மெட்டல் மற்றும் வாகன தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது இந்த இண்டெக்ஸின் ஏற்றத்துக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக, டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 8.5% வரை ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது. எய்ஷர் மோட்டார்ஸ், மாருதி சுஸூகி இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் போஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3% வரை ஏற்றத்தை சந்தித்திருக்கின்றன. எம்.ஆர்.எஃப், பஜாஜ் ஆட்டோ மற்றும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா ஆகிய நிறுவனங் களின் பங்குகள் 2% வரை ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளன.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

மாரிகோ நிறுவனத்தின் தரக்குறியீட்டை சி.எல்.எஸ்.ஏ குறைத்தது ஏன்?

“எஃப்.எம்.சி.ஜி துறையின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தின் தரக் குறியீட்டை ‘underperform’ என சி.எல்.எஸ்.ஏ தரக் குறியீட்டு நிறுவனம் வழங்கி இருக் கிறது. ஏனெனில், இந்தியாவில் இந்த நிறுவனத் தின் வர்த்தகம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஒற்றை இலக்கத்தில் குறைந்திருக்கிறது.

மாரிகோ நிறுவனத்தின் முக்கியமான பிராண்டுகளான சஃபோலா எண்ணெய் மற்றும் பாராசூட் தேங்காய் எண்ணெய் விற்பனையும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவில் பிரதிபலிக்கிறது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்கை முதலீட்டாளர்கள் உற்றுக் கவனித்து வருகிறார்கள். இருப்பினும், கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 0.70% அதிகரித்து ரூ.496.10-ஆக வர்த்தகமானது.

அதே போல, ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தரக்குறியீட்டையும் சி.எல்.எஸ்.ஏ ‘outperform’ என்பதிலிருந்து ‘underperform’ என தரம் குறைத்திருக்கிறது. இதன் காரணமாக அந்த நிறுவனப் பங்கின் விலை ஜூலை 6-ம் தேதி வர்த்தகத்தில் 1.8% சரிந்து, என்.எஸ்.இ சந்தையில் ரூ.415.95-க்கு வர்த்தகமானது. மேலும், இந்த நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியானது அடுத்த மூன்று ஆண்டுகளில் 8 - 11% வரை சரியும் எனக் கணித்துள்ளது. அதே போல, இந்தப் பங்கின் இலக்கு விலையை ரூ.37.5% குறைத்து, ரூ.450-ஆக சி.எல்.எஸ்.ஏ தெரிவித்துள்ளது.”

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத் தின் பங்கு விலை அதிகரித்து ஆச்சர்யம் தந்திருக்கிறதே?

“நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகளை பல நிறுவனங்கள் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனமும் தனது ஜூன் காலாண்டு முடிவை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த நிறுவனத்தின் டெபாசிட் புத்தகத்தின் அளவு 22% அதிகரித்து, ரூ.34,100 கோடியாக உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.27,972 கோடியாக இருந்தது. அதே போல, இந்த நிறுவனம் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு ஜூன் காலாண்டு நிலவரப்படி, ரூ.2,04,000 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.1,56,115 கோடியாக இருந்தது.

மார்கன் ஸ்டான்லி தரகு நிறுவனம் இந்த நிறுவனத்தின் இலக்கு விலை ரூ.8,000 எனக் கணித்துள்ளது. சி.எல்.எஸ்.ஏ அதன் இலக்கு விலையை ரூ.6,000-லிருந்து ரூ.5,000-ஆக குறைத்துள்ளது. பெர்ன்ஸ் டெய்ன் (Bernstein) தரகு நிறுவனம் இந்த நிறுவனத்தின் இலக்கு விலையை ரூ.9,440 ஆக நிர்ணயத்துள்ளது. கடந்த வாரம் வியாழன் அன்று மதிய வர்த்தகத்தின்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை சற்றே சரிந்து ரூ.5,866 என்கிற அளவில் வர்த்தகமானது.”

ஷேர்லக்: ஐ.பி.ஓ வெளியீடு...
காத்திருக்கும் நிறுவனங்கள்..!

மெட்டல் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்ததுக்கான காரணம் என்ன?

“ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக சீனப் பொருளாதாரம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், தனது பொருளாதாரத்தை சீரான பாதையில் பயணிக்க வைப்ப தற்காக 75 பில்லியன் டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு நடவடிக்கையை அந்நாட்டு அரசு ஆரம்பிக்கவுள்ளது என்கிற செய்தி வெளியானதும் ஜூலை 5-ம் தேதி வர்த்தகத்தில் இந்திய மெட்டல் நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்து வர்த்தகமாகின.

உள்கட்டமைப்பு பணி களுக்குத் தேவையான மெட்டல் பொருள்களுக்கான ஆர்டர்களை இந்திய நிறுவனங்கள் பெறுவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு காரண மாக என்.எஸ்.இ பங்குச் சந்தையில் ஹிண்டால்கோ, வேதாந்தா, நேஷனல் அலுமினியம் கம்பெனி, டாடா ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா மற்றும் ஜே.எஸ்.டபிள்.யூ ஸ்டீல் பங்குகள் 1 - 3.5% வரை உயர்ந்தன. கடந்த வியாழக்கிழமை மாலை சந்தை முடிவில் நிஃப்டி மெட்டல் குறியீடு 3.79% உயர்ந்து, 4,842-ஆக இருந்தது. 2022-ல் இதுவரை மெட்டல் குறியீடு 13.96% சரிந்துள்ளது.”

யெஸ் பேங்க் நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்தது மகிழ்ச்சி யான செய்திதானே...!

“ஜூன் காலாண்டு முடிவுகளை சிறப்பாக வெளி யிட்டிருக்கிறது யெஸ் பேங்க். காலாண்டு முடிவுகள் வெளியானதும் ஜூலை 5-ம் தேதி பங்கு விலை 1.2% வரை அதிகரித்து, ரூ.12.80-க்கு வர்த்தகமானது. பேங்க் நிஃப்டி இண்டெக்ஸ் 3.5% வரை வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் இதுவரை இந்த நிறுவனத்தின் பங்கு விலை 5% வரை சரிவை சந்தித்துள்ளது. இந்த வங்கியின் கடன் அளவு ஜூன் காலாண்டில் 3.1% அதிகரித்து, மொத்தம் 1.9 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடன் வழங்குவதில் ஆண்டுக்கு 14% வரை வளர்ச்சியை இந்த வங்கியானது பதிவு செய்திருக்கிறது. அதே போல, டெபாசிட் வளர்ச்சி 18.3% அதிகரித்து, ரூ.1.93 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.”

மார்க்சன்ஸ் பார்மா நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறுகிறதாமே?

“இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு, நிறுவனத்தின் பங்குகளைத் திரும்பப் பெறும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கும் என்கிற எதிர்பார்ப்பால் கடந்த வாரத்தின் புதன்கிழமை வர்த்தகத்தில் 11% வரை அதிகரித்து, ரூ.47.95-க்கு வர்த்தகமானது. இதனால், அன்றைய வர்த்தகத்தில் 14% வரை பங்கு விலை அதிகரித்தது. தற்போதைய நிலையில், இதன் பங்கு விலை 52 வார அதிகபட்ச விலையில் இருந்து 48.72% குறைந்தும், 52 வார குறைந்தபட்ச விலையில் இருந்து 23.9% அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது. வியாழக்கிழமை மதிய வர்த்தகத்தில் 2.71% அதிகரித்து, 49.30-க்கு வர்த்தகமானது.”

ஐ.பி.ஓ வெளியிட 67 நிறு வனங்கள் தயாராக உள்ளதே...!

‘‘67 ஐ.பி.ஓ-களுக்கு செபி அமைப்பு அனுமதி தந்திருக்கும் நிலையில், நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 16 ஐ.பி.ஓ-கள் மட்டுமே வெளியிடப் பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 24 ஐ.பி.ஓ-கள் வெளியாகியிருந்தன.

ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான போர் சூழல், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் நாடுகளுக்கு இடையேயான அரசியல் பதற்றம் மற்றும் பணவீக்க விகிதம் அதிகரிப்பு போன்ற காரணிகள் சந்தையின் போக்குக்கு எதிர்மறையான நிலையை உருவாக்கு கின்றன. இதன் காரணமாக இந்திய சந்தைகள் உட்பட உலக சந்தைகளில் நிலையற்றதன்மை காணப்படுகின்றன. இந்த நிலை நடப்பு ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் இதுவரை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இண்டெக்ஸ் ஆகிய இரண்டும் 9 சதவிகிதத்துக்குமேல் சரிவைச் சந்தித்திருக்கின்றன. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 22 - 24% வரை முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வழங்கியிருந்தன.

ஒன் மொபிவிக் சிஸ்டம்ஸ், கோ ஏர்லைன்ஸ், பாரத் எஃப்.ஐ.ஹெச், டி.பி.ஓ டெக், ஆதார் ஹவுஸிங் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 67 நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிட செபி அனுமதி வழங்கியிருக்கிறது. ஸ்நாப்டீல், ஓயோ, பேமென்ட் இந்தியா, நவி டெக்னாலஜீஸ், ஜோயாலுகாஸ் இந்தியா, யாத்ரா ஆன்லைன் உள்ளிட்ட 38 நிறுவனங்களுக்கு செபி இனிமேல்தான் அனுமதி தர வேண்டும். நடப்பு ஆண்டு முடிவதற்குள் பெரும் பாலான நிறுவனங்களின் ஐ.பி.ஓ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.பி.ஓ-களில் பாதி ஐ.பி.ஓ-கள் வெளியிடப்பட்ட விலையைவிட குறைந்தே வர்த்தக மாகின்றன. ஏ.ஜி.எஸ் டிரான்ஸக்ட் டெக்னாலஜீஸ் 60%, எல்.ஐ.சி பங்கு விலையும் 20%, உமா எக்ஸ்போர்ட் 24%, புரூடென்ட் கார்ப்பரேஷன் அட்வைஸரி சர்வீசஸ் 22% என பல பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. இதன் காரணமாகவே பெரும்பாலான நிறுவனங்கள் சந்தையின் போக்கு சரியா கட்டும் எனக் காத்திருப்பதாகத் தெரிகிறது.”

ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் நிஃப்டி உயரும் எனச் சொல்லியிருக்கிறதே?

“எதிர்வரும் காலங்களில் இந்தியாவின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிலும், இந்திய வங்கிகளின் கடன் வழங்கு வதில் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்கிற கணிப் பாலும் 2022-23-ம் நிதி ஆண்டில் நிஃப்டியின் போக்கு ஏற்றத்தில் இருக்கும் என ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. இந்த நிதி ஆண்டின் மார்ச் மாத இறுதிக்குள் நிஃப்டி 18,400 என்கிற நிலைக்கு உயரும் என ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

குறுகிய காலத்தில் சந்தை எப்படி இருக்கும் என்று பார்க்காமல், நீண்ட காலத்தில் எப்படி இருக்கும் என்று கணித்து, பங்குச் சந்தையில் நேரடியாகவும், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மறைமுக மாகவும் தொடர்ந்து முதலீடு செய்வது அவசியம்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார் ஷேர்லக்!

வ.நாகப்பன்
வ.நாகப்பன்
எஸ்.குருராஜ்
எஸ்.குருராஜ்

முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்துவம்..!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘முதலீட்டை பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்துவம்..!’ என்ற நிகழ்ச்சி சென்னையில் ஜூலை 23, சனிக்கிழமையும் (6pm – 8.30pm), காஞ்சிபுரத்தில் ஜூலை 24, ஞாயிற்றுக் கிழமையும் (10 am – 1 pm) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla