பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: ஏற்றத்துக்கு வாய்ப்புள்ள துறைகள்... கணிக்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். தயாரான பக்கங்களைப் புரட்டியவர், “ஐ.எஃப்.எஸ் விவகாரத்தை நீர் மட்டும்தான் விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறீர். மக்களுக்கு அநீதி இழைக்கப் படக்கூடாது என்பதில் உமக்கு இருக்கும் அக்கறை உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது பொருளாதாரக் குற்றப் பிரிவு மட்டும் அல்ல, இது மாதிரியான குற்றங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்தில் நடந்தாலும், அதைத் தடுத் தாக வேண்டிய பொறுப்பு உள்ள செபியும், ரிசர்வ் வங்கியும்கூட தங்கள் பணியை செய்யத் தவறி விட்டதோ என்கிற கேள்வி பிறக்கத்தான் செய்கிறது’’ என்றவரிடம், கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளின் செயல்பாடு எப்படி இருந்தது?

“கடந்த வாரத்தில் இந்திய பங்குச் சந்தை முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் ஏற்றத்துடன் காணப்பட்டன. குறிப்பாக, வியாழக்கிழமை எஃப் அண்டு ஓ எக்ஸ்பைரி தினம் என்பதால், அன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகள் அதிகரித்து 59000 புள்ளியைக் கடந்து வர்த்தகமானது. அதே போல நிஃப்டியும் 170 புள்ளிகள் வரை அதிகரித்து, 17720 என்கிற நிலையில் வர்த்தகமானது. டெக் மஹிந்திரா, விப்ரோ, இண்டஸ்இண்ட் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகபட்ச ஏற்றத்தைப் பதிவு செய்தன.

ஆனால், கடந்த ஜூனில் மிகவும் குறைந்து, அதிலிருந்து சந்தை 16% அளவுக்கு உயர்ந்திருப்பதால், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 39 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. சர்வதேச அளவில் பெரிய பாதகமான செய்தி எதுவும் வராதபட்சத்தில், சந்தை மேலே செல்வதற்கு வாய்ப்பு அதிகம் என்கிறார் நிபுணர்கள். அவர்கள் சொல்வதை அப்படியே நம்பத் தேவையில்லை. கவனத்துடன் முதலீட்டை மேற்கொள்வது நல்லது.”

முன்னணி முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய பங்குச் சந்தை பற்றி பாசிட்டிவ்வாக கருத்து தெரிவித்திருக்கிறாரே?

“எதிர்வரும் காலங்களில் இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அவர் சொன்னது உள்ளபடியே கவனிக்கத்தக்கதாக இருக் கிறது. அதாவது, இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாக உலகக் காரணிகள் ஆதரவாக இருக்கின்றன. வங்கித்துறை சார்ந்த பங்குகள் உயர நிறைய வாய்ப்புகள் உள்ளன. காரணம், இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் நன்றாக இருக்கின்றன. கடன்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது.

அதே போல, மருத்துவத் துறை சார்ந்த பங்குகளும் ஏற்றமடையும் என அவர் தெரிவித்துள்ளார். இவர் வசம் ஃபோர்டீஸ் ஹெல்த்கேரில் ஜூன் 2022 நிலவரப்படி, 4.2% பங்குகள் இருக்கிறது. மேலும், ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைடு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளராகவும் இவர் உள்ளார்.

டெலிகாம் துறை அவ்வளவு ஈர்ப்பாக இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐ.டி துறை 10-15% வரை ஏற்றம் பெறும் என தெரிவித்துள்ளார்.”

ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம் மித்ரா எனர்ஜி நிறுவனத்தைக் கையகப்படுத்துவது குறித்து...

“இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ நியோ எனர்ஜி சுமார் ரூ.10,530 கோடி மதிப்பில் மித்ரா எனர்ஜி (இந்தியா) நிறுவனத் திடமிருந்து 1,753 மெட்ரிக் வாட் அளவுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனைப் பெறுகிறது. இதுவரை மேற்கொண்ட நிறுவனக் கையகப்படுத்தலில் இதுவே மிகப் பெரியதாகும். இதன் காரணமாகத் தற்போதைய செயல்பாட்டு உற்பத்தித் திறனை 4,784 மெகாவாட்டிலிருந்து 6,537 மெகாவாட்டாக உயர்கிறது என ஜே.எஸ்.டபிள்யூ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே இந்திய போட்டி ஆணையத்தின் (சி.சி.ஐ) ஒப்புதல் உள்ளிட்ட அனைத்து வகையான ஒப்புதல்களும் கையெழுத்தாகி இருக்கின்றன. வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை 2.07% சரிந்து, ரூ.314.40-க்கு வர்த்தகமானது.”

செக்யூரெக்லவுட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நடக்கும் உள்விவகாரம் பற்றி ஏதாவது தெரிந்ததா?

“செக்யூரெக்லவுட் டெக்னாலஜிஸ் (Securekloud Technologies Ltd) நிறுவனத்தைச் சேர்ந்த மற்றும் மூன்று நபர்கள் நிதிநிலை அறிக்கைகளைக் கையாள்வதாகவும், நிறுவனத்திடமிருந்து பணத்தைத் திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இனி இவர்கள் பத்திரச் சந்தையில் ஈடுபடக் கூடாது எனத் தடை விதித்திருக்கிறது செபி.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செக்யூரெக்லவுட் டெக்னாலஜிஸ் மற்றும் சுரேஷ் வெங்கடாச்சாரி, ஆர்.எஸ். ரமணி மற்றும் குருமூர்த்தி ஜெயராமன் ஆகிய மூன்று நபர்களும் செக்யூரிட்டீஸ் சந்தை யில் இருந்து நிதிநிலை அறிக்கைகளைக் கையாளுதல் மற்றும் நிறுவனத்தின் நிதிகளை மோசடி செய்ததாகக் கூறி தடை விதித்துள்ளது. மேலும், செபி இயற்றிய 76 பக்க உத்தரவின்படி, பட்டியலிடப்பட்ட எந்தவொரு பொது நிறுவனத்தின் இயக்குநர்களாகவோ, முக்கிய மான நிர்வாகப் பணியாளர்களாகவோ, பொதுமக்களிடமிருந்து பணம் திரட்ட விரும்பும் எந்தவொரு பொது நிறுவனத்தின் புரொமோட்டராகச் செயல்படத் தடை விதித்துள்ளது. செபி அமைப்பானது 2017-18 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்துக் கான நிறுவனத்தின் விவகாரங்கள் மீதான விசாரணையைத் தொடங்கிய தில் முறைகேடுகள் நடை பெற்றது கண்டறியப் பட்டுள்ளது. இவர்கள் ஏன்தான் தமிழ்நாட்டின் பெயரைக் கெடுக்கிறார்களோ!”

ஷேர்லக்: ஏற்றத்துக்கு வாய்ப்புள்ள துறைகள்... கணிக்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா..!

எம்.ஆர்.எஃப் பங்கு விலை குறைந்திருக்கிறதே?

‘‘இந்த நிறுவனம் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இதில் இந்த நிறுனத்தின் லாபம் 25% குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 6% வரை சரிந்து ரூ.82,615-க்கு வர்த்தகமானது. லாபம் குறைந்திருந்தாலும் இந்த நிறுவனத்தின் விற்பனை ஜூன் காலாண்டில் 36.14% அதிகரித்து, ரூ.5,695.93 கோடியாக உயர்ந்துள்ளது.

மோதிலால் ஆஸ்வால் தரகு நிறுவனம் இதன் இலக்கு விலையைத் தற்போதைய வர்த்தக விலையில் இருந்து 9% குறைத்து, ரூ.80,000 ஆக நிர்ணயம் செய்துள்ளது. இதன் பங்கு விலையானது கடந்த ஓர் ஆண்டில் 14.79 சதவிகிதமும், நடப்பு ஆண்டின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து 4.45 சதவிகிதமும் அதிகரித்துள்ளது."

ஜே.எம்.சி புராஜெக்ட்ஸ் (இந்தியா) நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித் திருக்கிறதே?

‘‘ஜே.எம்.சி புராஜெக்ட்ஸ் (இந்தியா) நிறுவனம் இந்தியாவின் முன்னணி சிவில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு இ.பி.சி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் பி.எஸ்.இ சந்தையில் 3.09% அதிகரித்து, ரூ.88.50-ஆக வர்த்தகமானது. ஏனெனில், இந்த நிறுவனம் கடந்த வியாழக்கிழமை, கட்டுமானம் மற்றும் நீர்பிரிவுகளில் ரூ.1,524 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்களைப் பெற்றது.

இந்த ஆர்டர்களில் ஆசியாவில் ஒருங்கிணைந்த விமான நிலைய மேம்பாட்டுக்கான ரூ.1,012 கோடி மதிப்புள்ள கட்டுமானத் திட்டங்கள் அடங்கும். இந்தியா வில் ரூ.370 கோடி மதிப்புள்ள நீர் திட்டங்களையும், ரூ.142 கோடி மதிப்புள்ள கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான கட்டுமானத் திட்டங்களையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.’’

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் நிறுவனப் பங்கு விலை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறதே?

‘‘ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் நிறுவனத் தின் பங்கு விலை கடந்த வாரம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் 2% வரை அதிகரித்து, ரூ.865.55-ஆக வர்த்தகமானது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் இதன் பங்கு விலை 26% அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் 9.75% ஏற்றம் அடைந்திருக்கும் நிலையில், 12% ஏற்றம் அடைந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டின் அக்டோபர் 25-ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.859.70 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகு, கடந்த வியாழனன்று ரூ.865.55 என்ற புதிய உச்சத்தைப் பதிவு செய்திருக்கிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6.02 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட நிறுவனங்களில் சந்தை மதிப்பு அதிகம்கொண்ட நிறுவனங்களின் தரவரிசையில் 6-வது இடத்தை இந்த நிறுவனம் அடைந்திருக்கிறது.

எம்.கே குளோபல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் தரகு நிறுவனம் இந்த நிறுவனப் பங்குகளை வாங்கச் சொல்லி முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான இலக்கு விலையை ரூ.1,025-ஆக நிர்ணயம் செய்துள்ளது.’’

ஆர்.இ.சி நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்குவது குறித்து...

“அரசுக்குச் சொந்தமான ஆர்.இ.சி நிறுவனம், ரூ.658.30 கோடி கையிருப்பைப் பயன்படுத்தி 65.83 கோடி போனஸ் பங்குகளை வெளியிடும் திட்டத்துக்குப் பங்குதாரர்களின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 1:3 என்கிற விகிதத்தின் அடிப்படையில் பங்குதாரர்கள் அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு மூன்று பங்குகளுக்கு கூடுதலாக ஒரு பங்கைப் பெறுவார்கள். ஜூன் 30, 2022 அன்று நடைபெற்ற குழு கூட்டத்தில், நிறுவனத்தின் பங்கு தாரர்களுக்கு 1:3 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதற்கான முடிவை இந்த நிறுவனம் பரிசீலனை செய்தது. கடந்த வியாழன் அன்று வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை சற்று அதிகரித்து, ரூ.133.65-க்கு வர்த்தகமானது.”

என்.எஸ்.இ மேலும் இரண்டு நிறுவனத்தை எஃப் அண்டு ஓ தடைப் பட்டியலில் சேர்த்திருக்கிறதே..?

“தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ அதன் எஃப் அண்டு ஓ தடைப் பட்டியலில் மேலும் இரண்டு பங்குகளைச் சேர்த்தது. டெல்டா கார்ப் மற்றும் பல்ராம்பூர் சினி மில்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள்தான் அவை.

கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று கேசினோ கேமிங் நிறுவனமான டெல்டா கார்ப் 0.2% இறக்கத்தில் ரூ.194.55ல் முடிவடைந்தது. தொடர்ந்து சரிவைச் சந்தித்து, இதற்கு முந்தைய மூன்று வர்த்தகத் தினத்தில் மூன்று கரடுமுரடான கேண்டில் பேட்டர்னையும், வெள்ளிக்கிழமை தினசரி சார்டில் கிரேவெஸ்டோன் டோஜியையும் உருவாக்கியது. சர்க்கரை நிறுவனப் பங்கான பல்ராம்பூர் சின்னி மில்ஸ் 3.8% குறைந்து ரூ.350.65 என்கிற விலையில் கரடுமுரடான பெரிய கேண்டில் பேட்டனை உருவாக்கியது. இதைத் தொடர்ந்தே என்.எஸ்.இ இந்த நிறுவனங்களை எஃப் அண்டு ஓ தடைப்பட்டியலில் சேர்த்திருக்கிறது.’’

அவலான் டெக்னாலஜீஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறதாமே?

“இந்த நிறுவனம் ரூ.1,025 கோடி நிதி திரட்டும் நோக்கில் புதிய பங்கு வெளியிட (ஐ.ஓ.பி) முடிவு செய்திருக்கிறது. இதற்காக அனுமதி கேட்டு செபி அமைப்பிடம் இந்த நிறுவனம் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது. அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி, ரூ.400 கோடி மதிப்புள்ள பங்குகளை புதிய பங்குகளாகவும், ரூ.625 கோடி மதிப்புள்ள பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையிலும் இந்த நிறுவனம் வெளியிடுகிறது. ஐ.பி.ஓ வெளியிடுவதற்கு முன்பாக, ரூ.80 கோடியை திரட்ட இந்த நிறுவனம் பரிசீலிப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஐ.பி.ஓ அளவு குறையலாம்” என்றவர் வீட்டுக்குப் புறப்படும்முன், ‘‘நாணயம் விகடன் வாசகர் அனைவருக்கும் 75-வது சுதந்திர தின வாழ்த்துகள். நாம் அரசியல் ரீதியாக சுதந்திரம் அடைந்துவிட்டோம். ஆனால், தனிநபர் நிதி ரீதியாக சுதந்திரம் அடையவில்லை. அந்த சுதந்திரத்தை ஆண், பெண், படித்தவர், படிக்காதவர் என எல்லோரும் அடைய வேண்டும் என்பதே என் ஆசை. இந்த சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் கிடைக்க நீர் ஆற்றும் பணிக்காக உம்மை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். ஜெய்ஹிந்த்’’ என்றபடி கிளம்பினார்!

ஷேர்லக்: ஏற்றத்துக்கு வாய்ப்புள்ள துறைகள்... கணிக்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா..!

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை உருவாக்குதல்..!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை உருவாக்குதல்..!’ என்ற நிகழ்ச்சி மதுரையில் செப்டம்பர் 3-ம் தேதி சனிக்கிழமையும் (மாலை 6.00 pm – 8.30 pm), நெல்லையில் செப்டம்பர் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (10.00 am – 1.00 pm) நடைபெறுகிறது.

மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர், பேச்சாளர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் சிறப்புரையாற்றுகிறார்.திருநெல்வேலி நிகழ்ச்சியில் பேராசிரியர், பேச்சாளர் சௌந்தர மகாதேவன் சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்வுகளில் நிதி நிபுணர்கள் பி.வி.சுப்ரமணியம், வ.நாகப்பன் ஆகியோர் சிறப்புரை யாற்றுகிறார்கள். ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த கே.எஸ்.ராவ், எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 43% சரிவு!

பணவீக்கம், வட்டி விகித உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்பட்ட முதலீடு ஜூலை மாதத்தில் 43 சதவிகிதம் சரிவு கண்டுள்ளது. ஜூன் மாதத்தில் ரூ.15,495 கோடியாக இருந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஜூலையில் ரூ.8,898 கோடியாகக் குறைந்துள்ளது.