Published:Updated:

ஷேர்லக்: ஏற்றத்தில் சந்தை... 52 வார உச்சத்தைத் தொட்ட 225 பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: ஏற்றத்தில் சந்தை... 52 வார உச்சத்தைத் தொட்ட 225 பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வழக்கம்போல வந்து சேர்ந்தார் ஷேர்லக். தயாராக இருந்த பக்கங்களைப் புரட்டி யவர், “வேலூர் ஐ.எஃப்.எஸ், திண்டுக்கல் பிரைட் வே என உங்கள் புலனாய்வுப் பணி தொடரட்டும். மக்களுக்கு சரி யான முதலீட்டு வழிகளைக் காட்டுகிறீர்கள். அதற்கு உமக்கு கோடி புண்ணியம்’’ என்றவர், கேள்விகளைக் கேட்கச் சொல்லி சிக்னல் தர, நாம் குறித்து வைத்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே..?

“கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் டாடா குழுமத் தைச் சேர்ந்த தேஜஸ் நெட் வொர்க்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 9% வரை அதிகரித்து, பி.எஸ்.இ சந்தை யில் ரூ.539.55-க்கு வர்த்தக மானது. இது, இதன் 52 வார உச்ச விலைக்கு நெருக்க மானதாகும். கூடவே வால்யூம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பங்கின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் மற்றும் பிராட் பேண்ட் நெட்வொர்க்குகளில் இருந்து குரல், டேட்டாக்கள் மற்றும் வீடியோ டிராஃபிக்கை எடுத்துச் செல்லும் அதிவேக தகவல் தொடர்பு நெட் வொர்க்குகளை உருவாக்கத் தேவையான தயாரிப்புகளை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய் வதில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் டெலி காம் துறையின் முக்கியமான நிறுவனமான ஏர்டெல் இந்த நிறுவனத்துக்கு ஆர்டரை வழங்கியிருந்தது.

அண்மையில் நடந்து முடிந்திருக்கும் 5ஜி ஸ்பெக்ட் ரம் ஏலத்துக்குப் பிறகு வயர் லைன் மற்றும் வயர்லெஸ் உள்கட்டமைப்பு இரண்டை யும் உருவாக்குவதற்கான வேலைகளில் டெலிகாம் துறைகள் களமிறங்கி இருக் கின்றன. இதனால் இந்த நிறுவனத்துக்கு பல ஆர்டர் கள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் எதிர்கால செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என முதலீட்டாளர் கள் நினைக்கிறார்கள். எனவேதான், இதன் பங்கு விலை ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

உஜ்ஜீவன் ஃபைனான்ஷியல் நிறுவனப் பங்கு விலை உயர்ந் திருக்கிறதே?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 9% அதிகரித்து, ரூ.200.65 என்கிற 52 வார அதிகபட்ச விலையைத் தாண்டி வர்த்தகமானது. மேலும், வால்யூம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டின் நவம்பர் 1-ம் தேதி வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.191.80-க்கு வர்த்தகமானது. இது அதன் 52 வார உச்சமாகும். கடந்த ஆறு மாதத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 8% ஏற்றம் அடைந்திருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 100% வரை அதிகரித் துள்ளது.”

என்.டி டிவி நிறுவனப் பங்கின் விலை அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமானது ஏன்?

“பிரனாய் ராய், ராதிகா ஆகியோரின் ஆர்.ஆர்.பி.ஆர் ஹோல்டிங் நிறுவனம் என்.டி டிவி நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் 29.18% பங்குகளை அதானி குழுமத்தின் ஏ.எம்.என்.எல் என்டர்பிரைசஸ் நிறுவனம் ஏற்கெனவே கையகப்படுத்தி இருக்கும் நிலையில், மேலும் 26% பங்குகளைத் தங்களுக்கு விற்பனை செய்ய என்.டி டிவி நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அதானி குழுமம் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் பங்குகளை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்தால் 55.18% பங்குகளுடன் என்.டி டிவி நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடும் அதானி குழும நிறுவனத்திடம் வந்துவிடும். தற்போதைய நிலையில், என்.டி டிவி-யின் 38.55% பொதுப் பங்குகளாக உள்ளன.

இந்த நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் என்.டி டிவி நிறுவனப் பங்கு விலை கடந்த 14 ஆண்டில் இல்லாத வகையில் 5% அப்பர் சர்க்யூட் விலையில் ரூ.384.50-க்கு வர்த்தகமானது. கடந்த மூன்று மாதங்களில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 8% ஏற்றத்தைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்தப் பங்கு விலை 140% அதிகரித்துள்ளது. அதே போல கடந்த ஒரு வருடத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 6% உயர்ந்திருக்கும் நிலையில் இந்தப் பங்கானது 380% ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. எலெக்ட்ரானிக் மீடியா துறையில் இந்தப் பங்குதான் மதிப்புமிக்க பங்காக இருக்கிறது.”

இந்தியப் பங்குச் சந்தையில் ஏராளமான பங்குகளின் விலை புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறதே?

“உண்மைதான். இடையில் சற்று இறக்கத்தைச் சந்தித்த இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் ஏற்றத்துக்குத் திரும்பி இருக்கிறது. பி.எஸ்.இ சென்செக்ஸ் மீண்டும் 60000 புள்ளிகளை நோக்கி ஏற்றம் கண்டு வருகிறது. நிஃப்டி 18000 புள்ளிகளை நோக்கி சென்றுகொண்டிருக் கிறது. கூடவே, பல பங்குகள் புதிதாக 52 வார உச்ச விலையை எட்டி இருக்கின்றன. இந்தியப் பங்குச் சந்தையில் சுமார் 225 நிறுவனப் பங்கு களின் விலை புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளன.

வியாழக்கிழமை இந்தியப் பங்குச் சந்தை காளையின் பிடியில் இருந்தது. பி.எஸ்.இ சந்தையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பங்கு களின் விலை புதிதாக 52 வார உச்ச விலையை எட்டின. அதானி டிரான்ஸ்மிஷன், என்.டி.டிவி, எய்ஷர் மோட்டார்ஸ், ஃபெடரல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, சீமென்ஸ், போனிக்ஸ் மில்ஸ், கோல் இந்தியா, ஏ.பி.பி இந்திய உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை புதிதாக 52 வார உச்ச விலையை எட்டின.

என்.எஸ்.இ பங்குச் சந்தையில் 75 நிறுவனப் பங்குகள் புதிதாக 52 வார உச்ச விலையை எட்டின. ஆஸ்ட்ரா மைக்ரோவேட் புரா டக்ட்ஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி, எல்.ஜி எக்யூப்மென்ட்ஸ், கணேஷ் ஹவுஸிங் கார்ப்ப ரேஷன், ஜோதி லேப்ஸ், கரூர் வைஸ்யா பேங்க். டி.வி.எஸ் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை புதிய உச்சத்தைத் தொட்டன. பல நிறுவனப் பங்குகளில் வால்யூம் அதிகமாகக் காணப்பட்டது. விலை ஏற்றம் பெற்ற பங்குகளில் அடிப்படையில் வலுவான பங்குகளை மட்டுமே நீண்ட கால முதலீட்டுக்கு வாங்க வேண்டும் எனப் பகுப்பாய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.”

சஃபாரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

“பிரபல முதலீட்டாளர்களில் ஒருவரான ஆஷிஷ் கச்சோலியா போர்ட்ஃபோலியோவில் உள்ள சஃபாரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரம் புதன்கிழமை அன்று 9% வரை அதிகரித்து ரூ.1,545.55-க்கு வர்த்தகம் ஆனது. இந்தப் பங்கு விலையானது கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி வர்த்தக விலையான ரூ.1,498.95-ஐ தாண்டியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 9% ஏற்றத் தைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்த நிறுவனத் தின் பங்கு விலை 75% வரை ஏற்றம் கண்டுள்ளது. ஆஷிஷ் கச்சோலியா இந்த நிறுவனத்தில் 2.74% பங்குகளை அதாவது, 6,14,228 பங்குகளைத் தன்வசம் வைத்திருக்கிறார்.”

இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்களே?

“பங்குச் சந்தை தரும் தரவுகளின்படி, கடந்த ஜூலை தொடக்கத்திலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 6.4 பில்லியன் டாலரை இந்தியப் பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் 27 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை இந்தியப் பங்குச் சந்தையில் அவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.

கட்டுக்குள் வராத பணவீக்க அதிகரிப்பால் அமெரிக்க ஃபெடரல் வங்கி நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் வட்டி விகிதங்களை உயர்த்தின. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவு பணத்தை வெளியில் எடுத்து, அந்நாட்டு முதலீடுகளில் முதலீட்டை மேற்கொண்டு வந்தனர். தற்போது கட்டுக்குள் வந்த பணவீக்க விகிதத்தால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்துவதில் சுணக்கம் காணப்படுவதால், மீண்டும் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் அதிக அளவில் முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்களும் நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் சுமார் 30 பில்லியன் டாலரை இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கின்றன.

வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க ஆரம்பித்ததால், கடந்த ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதியில் இருந்து பெரும்பாலான இண்டெக்ஸ்கள் சுமார் 10% ஏற்றத்தை சந்தித் துள்ளன. இதே காலகட்டத்தில், எம்.எஸ்.சி.ஐ உலக இண்டெக்ஸ் 6% ஏற்றத்தையும், எம்.எஸ்.சி.ஐ எமெர்ஜிங் மார்க்கெட் இண்டெக்ஸ் 2.8% இறக்கத்தையும் கண்டுள்ளன.’’

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சில நிறுவனப் பங்குகளில் தங்களின் பங்கு எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருப்பது பற்றி..?

“கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங் களில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டியிருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, ஆர்.ஹெச்.ஐ மக்நெஸிடா (RHI Magnesita India Ltd) இந்தியா நிறுவனத்தில் 2.2% வரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை அதிகரித்திருக்கிறார்கள். மார்ச் காலாண்டு வரை இதில் அவர்கள் 0.64% பங்குகளை மட்டுமே வைத்திருந்தனர். அதே போல, எசப் இந்தியா (Esab India Ltd) நிறுவனத்தில் 0.21 சதவிகிதத்தில் இருந்து 0.64 சதவிகிதமாகத் தங்களின் முதலீட்டை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். டாடா காபியில் 0.71 சதவிகிதத்திலிருந்து 1.78 சதவிகிதமாக அதிகப்படுத்தி இருக்கிறார்கள். ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 0.31 சதவிகிதத்திலிருந்து 0.67 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறார்கள். மங்களூரு ரீஃபைனரி அண்டு பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் 0.77 சதவிகிதத் திலிருந்து 1.6 சதவிகிதமாக அதிகரித்திருக் கிறார்கள். இந்த ஐந்து நிறுவனங்களின் பங்குகள் அல்லாமல், இந்தியன் பேங்க், ராஷ்ட்ரியா கெமிக்கல் அண்டு ஃபெர்ட்டி லைசர் ஆகிய நிறுவனங்களிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜூலைக்கு முந்தைய ஒன்பது மாதங்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் பணத்தை எடுத்து வந்தாலும், ஜூலை 28-ம் தேதியில் இருந்து தற்போது வரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தை யில் சுமார் ரூ.21,000 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள்.”

பாம்ஈஸி நிறுவனம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கி இருக்கிறதே..?

‘‘இந்த நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியல் இடுவதன்மூலம் மூலதனத்தைத் திரட்டி முடிவு செய்திருந்தது. ஆனால், ஷேர் ஹோல்டர்களுக்கு உரிமைப் பங்குகளைத் தருவதன்மூலம் மூலதனத்தைத் திரட்ட முடிவு செய்துள்ளது. இதனால் பங்குச் சந்தையில் பட்டியல் இடும் முடிவிலிருந்து பின்வாங்கி இருக்கிறது.

இப்படியெனில், அடுத்த வாரம் ஐ.பி.ஓ வரவிருக்கும் ட்ரீம்ஃபோக்ஸ் நிறுவனம், 20% அளவுக்கு பங்குகளைக் குறைத்து விற்க முடிவு செய்துள்ளது. ஸொமேட்டோ, பேடிஎம் போன்ற நிறுவனங்கள் அடைந்த சறுக்கலுக்குப் பிறகு, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐ.பி.ஓ வர பலமாக யோசிக்கின்றன’’ என்றவர், ‘‘இன்று மழை வருகிற மாதிரி இருக்கிறது. எனவே, வீட்டுக்குக் கிளம்புகிறேன்’’ என்று மழைக் கோட்டை மாட்டிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்!

ஷேர்லக்: ஏற்றத்தில் சந்தை... 52 வார உச்சத்தைத் தொட்ட 225 பங்குகள்..!

மதுரை மாநகரில் முதலீட்டுத் திருவிழா!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை உருவாக்குதல்..!’ என்ற நிகழ்ச்சி மதுரையில் செப்டம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை (மாலை 6.00 pm – 8.30 pm) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர், பேச்சாளர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் சிறப்புரையாற்றுகிறார். நிதி நிபுணர்கள் பி.வி.சுப்ரமணியம், வ.நாகப்பன் ஆகியோர் முதலீட்டு அம்சங்கள் குறித்து பேசுகிறார்கள்.

ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த கே.எஸ்.ராவ், எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla

ஷேர்லக்: ஏற்றத்தில் சந்தை... 52 வார உச்சத்தைத் தொட்ட 225 பங்குகள்..!

நெல்லையில்... உங்களை செல்வந்தர் ஆக்கும் முதலீட்டுக் கூட்டம்!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை உருவாக்குதல்..!’ என்ற நிகழ்ச்சி நெல்லையில் செப்டம்பர் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (10.00 am – 1.00 pm) நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர், பேச்சாளர் சௌந்தர மகாதேவன் சிறப்புரையாற்றுகிறார். நிதி நிபுணர்கள் பி.வி.சுப்ரமணியம், வ.நாகப்பன் ஆகியோர் முதலீட்டு அம்சங்கள் குறித்து பேசு கிறார்கள். ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த கே.எஸ்.ராவ், எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla