Published:Updated:

ஷேர்லக்: டி.எம்.பி வங்கி புதிய பங்கு வெளியீடு... சிறு முதலீட்டாளர்களுக்கு 10% ஒதுக்கீடு..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: டி.எம்.பி வங்கி புதிய பங்கு வெளியீடு... சிறு முதலீட்டாளர்களுக்கு 10% ஒதுக்கீடு..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மழை கோட் சகிதமாக வந்து சேர்ந்தார் ஷேர்லக். குளிருக்கு இதமாக சூடாக ஏலக்காய் டீயை கப்பில் ஊற்றிக் கொடுத்தோம். வாங்கிப் பருகிக்கொண்டே நம் கேள்வி களுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

கடந்த வியாழன் அன்று பங்குச் சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகக் காரணம், இந்திய ஜி.டி.பி குறித்த புள்ளிவிவரம்தானா?

“ஆமாம், கடந்த வியாழன் அன்று சந்தை வர்த்தகத்தைத் தொடங்கும்முன்பே சென்செக்ஸ் 1.23% சரிந்து 58806-ஆக வர்த்தகமானது. நிஃப்டி 1.2% சரிந்து, 17552-ஆக வர்த்தகமானது. ஐ.டி மற்றும் வங்கிப் பங்குகள் பெரும் சரிவை சந்தித்ததே இதற்கு காரணமாகும். அதுமட்டும் இல்லாமல் எரிபொருள்கள் ஏற்றுமதி மற்றும் பெட்ரோல், டீசல் மீதான மீதான வரியை உயர்த்திய இந்திய அரசின் நடவடிக்கைகளும் சந்தையின் சரிவுக்கு ஒரு காரணமாகும். அன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் 1.7% வரை சரிந்தது. அதே போல, பேங்க் இண்டெக்ஸ் 0.9% வரை சரிவை சந்தித்தது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் சந்தையில் இத்தனை பெரிய இறக்கத்தை உண்டாக்கியது ஏன்?

“நமது பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 13.5% வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், நடப்பு நிதி ஆண்டில் இந்திய ஜி.டி.பி வளர்ச்சி 16.4 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்திருந்தது. இப்படி சந்தையின் கணிப்பைவிட குறைவான ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளதால், கோல்டுமேன் சாக்ஸ் தரகு நிறுவனம் 2022-ம் ஆண்டுக் கான இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை முன்பு கணித்த 7.6 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.

மூடீஸ் தரகு நிறுவனமும் 2023-ம் ஆண்டுக்கான முன்பு கணித்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 5.4 சதவிகிதத்தில் இருந்து 5.2 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. 2022-ம் ஆண்டுக்கு, முன்பு கணித்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை 8.3 சதவிகிதத்தில் இருந்து 7.7 சதவிகிதமாகக் குறைத் துள்ளது.”

கடந்த வாரத்தில் முதல் நாளில் பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்ததே?

‘‘கடந்த வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு சந்தைகளும் பெரிய இழப்பைப் பதிவு செய்தன. அதாவது, அன்றைய தினம் சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிந்து, 57972.62 என்கிற நிலையிலும், நிஃப்டி 246 புள்ளிகள் சரிந்து 17312.90 என்கிற நிலையிலும் வர்த்தக மானது. எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.

நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் 3.5% வரை வீழ்ச்சியைப் பதிவு செய்தது. இந்த சரிவின் காரணமாக பங்கு முதலீட்டாளர்களின் ரூ.2 லட்சம் கோடி சொத்து மதிப்பு குறைந்தது. அதாவது, இந்திய பங்குச் சந்தையின் மொத்த சொத்து மதிப்பு ரூ.276.96 லட்சம் கோடியில் இருந்து, ரூ.274.67 லட்சம் கோடியாகக் குறைந்தது.’’

அந்நிய நேரடி முதலீடு குறித்து ஏதேனும் செய்தி இருக்கிறதா?

“நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அந்நிய நேரடிப் பங்கு முதலீடு 6% குறைந்து, 16.59 பில்லியன் டாலர்களாக உள்ளது எனத் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 17.56 பில்லியன் டாலர்களாக இருந்தது. நடப்பு ஆண்டில் இதுவரை மொத்தம் 22.34 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்திருக்கிறது. இது கடந்த ஆண்டில் 22.52 பில்லியன் டாலராக இருந்தது.

ஏப்ரல்-ஜூன் காலத்தில் 5.7 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டுடன் சிங்கப்பூர் முன்னணி முதலீட்டாளராக உருவெடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, மொரீஷியஸ் (2.4 பில்லியன் டாலர்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( 2.2 பில்லியன் டாலர்), அமெரிக்கா (1.5 பில்லியன் டாலர்), நெதர்லாந்து (1 பில்லியன் டாலர்) மற்றும் ஜப்பான் (851 மில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.

கம்யூட்டர் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறை இந்த நிதியாண்டின் மூன்று மாத காலத்தில் அதிகபட்சமாக 3.5 பில்லியன் டாலர்களை ஈர்த்துள்ளது. அதைத் தொடர்ந்து சர்வீஸ் செக்டார் (2.6 பில்லியன்), டிரேடிங் (2 பில்லியன்), கெமிக்கல் (960 மில்லியன்), ஆட்டோமொபைல் (691 மில்லியன்) உள்கட்டமைப்புத் துறை (680 மில்லியன்) ஈர்த்துள்ளது.”

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குகளை அதிகமாக விற்பனை செய்திருப்பது பற்றி...

‘‘உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதத்திலும் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்துள்ளன. அதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் ரூ.1,642 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இது கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச மதிப்பாகும். இந்திய மியூச்சுவல் தொடர்ந்து மூன்று மாதங்களாக இப்படி பங்குகளை விற்பனை செய்து வருகின்றன.

நிறுவனப் பங்குகளின் மதிப்பீடு மிகவும் அதிகமாக இருப்பதால் ஈக்விட்டி ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட், இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் உள்ளிட்டவை களில் முதலீடு செய்திருந்த பங்குகளை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விற்றிருக்கின்றன. அதே நேரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியப் பங்குகளில் ரூ.50,000 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள். இது கடந்த 20 மாதங்களில் மிக அதிகம் ஆகும்.’’

கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைய பங்குகள் நல்ல லாபம் தந்திருக் கின்றனவே?

‘‘இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் அதிக அளவில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கமாடிட்டி பொருள்களின் விலை வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் உயர்வு கட்டுக்குள் வந்தது போன்ற பல காரணங்களால் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பங்குச் சந்தை சிறப்பான முறையில் செயல்பட்டது.

இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 40 பங்குகள் 20% - 45% விலை உயர்ந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் சென்செக்ஸ் 1967 புள்ளிகள் அல்லது 3.42% உயர்ந்து 59537-ஆகவும், நிஃப்டி 50 இண்டெக்ஸ் 601 புள்ளிகள் உயர்ந்து 17759-ஆகவும் இருந்தது; கடந்த ஆகஸ்டில் பி.எஸ்.இ 500 இண்டெக்ஸில் உள்ள சுமார் 130 பங்குகள் விலை இரட்டை இலக்கத்தில் அதிகரித்திருக்கின்றன.

குறிப்பாக, பி.இ.எம்.எல், ஜே.எஸ்.டபிள்யூ எனெர்ஜி, பாஜாகன் டாக் ஷிப்பில்டர்ஸ், எம்.ஏ.எஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், ஹிக்கல், எல்ஜி எக்யூப்மென்ட்ஸ், ஆர்.பி.எல் பேங்க், அதானி பவர் மற்றும் ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை நல்ல ஏற்றம் கண்டிருக்கின்றன.

அதே போல, தீபக் பெர்டி லைசர்ஸ், அதானி டிரான்ஸ் மிஷன், யுஃப்ளெக்ஸ், கன்சாய் நெரோலாக் பெயின்ட்ஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா, கிரைண்ட்வெல் நார்டன், ஐ.டி.பி.ஐ பேங்க், அதானி என்டர்பிரைசஸ், டாடா கெமிக்கல்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ், மெட்ரோ பிராண்ட்ஸ், ஸொமேட்டோ, அஃப்ல் இந்தியா, பி.ஏ.எஸ்.எஃப் இந்தியா, லா ஓபலா ஆர்.ஜி, ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ், சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், ஜே.கே பேப்பர், இந்திரப்பிரஸ்தா கேஸ், ரெடிங் டன் (இந்தியா), இண்டிகோ பெயின்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் கம்பெனி மற்றும் இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலை 20% - 30% வரை உயர்ந்துள்ளன.’’

ஷேர்லக்: டி.எம்.பி வங்கி புதிய பங்கு வெளியீடு... சிறு முதலீட்டாளர்களுக்கு 10% ஒதுக்கீடு..!

அசோக் லேலாண்ட் நிறுவனத் தின் பங்கு விலை அதிகரித் திருக்கிறதே?

“இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலாண்ட், ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்து 1,400 பள்ளிப் பேருந்துகளுக் கான ஆர்டர்களைப் பெற்றிருப் பதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பள்ளிப் பேருந்துகளை அசோக் லேலாண்ட் நிறுவனம்தான் அதிக அளவில் தயாரித்து வழங்கி வருகிறது. இதன் காரணமாக கடந்த வாரம் வியாழன் மதியம் வாக்கில் இந்த நிறுவனப் பங்கின் விலை 3.80% அதிகரித்து ரூ.159.80-க்கு வர்த்தகமானது.”

நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப் பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் பொதுப் பங்கு வெளியீடு உறுதியாகி இருக்கிறதே?

“உண்மைதான். டி.எம்.பி என சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்கின் புதிய பங்கு வெளியீடு செப்டம்பர் 5-ம் தேதி ஆரம்பித்து, செப்டம்பர் 7-ம் தேதி அன்று நிறைவடைகிறது. ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் விலைப்பட்டை ரூ.500 முதல் ரூ.525 ஆகும். குறைந்தபட்சம் 28 பங்குகளுக்கு ஏலம் கேட்க வேண்டும். அதன் பிறகு 28-ன் மடங்கில் ஏலம் கேட்கலாம். மொத்தம் 1,58,40,000 பங்குகள் ‘ஆஃபர்’ (Offer) முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. வங்கியின் கடன்கள் மற்றும் முதலீட்டு இலாகா என வங்கியின் எதிர்கால மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வங்கியின் அடுக்கு-I மூலதனத்தை அதிகரிக்க, இந்தப் பங்கு வெளியீடு மூலமான பணம் பயன்படுத்திக் கொள்ளப்படும். தனி முதலீட்டாளர் களுக்கு 10 சதவிகிதத்துக்குக் குறையாமல் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொத்தம் சுமார் ரூ.830 கோடி இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.”

பெஸ்ட் அக்ரோ லைஃப் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென அதிகரிக்க என்ன காரணம்?

‘‘கடந்த வாரம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் பெஸ்ட் அக்ரோ லைஃப் நிறுவனத்தின் பங்கு விலை 15% வரை அதிகரித்து, ரூ.1,268.90-க்கு வர்த்தகமானது. பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர்களுள் ஒருவரான அஷிஷ் கசோலியா பெஸ்ட் அக்ரோலைஃப் நிறுவனத்தின் 1.3% பங்குகளைக் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வர்த்தகத்தில் வாங்கிய பிறகு, இரு வர்த்தக தினங்களில் பங்கு விலை 37% அதிகரித்துள்ளது. கடந்த வார செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அஷிஷ் கச்சோலியா இந்த நிறுவப் பங்கு ஒன்றுக்கு ரூ.940.88 கொடுத்து மொத்தம் 3,18,000 பங்குகளை வாங்கினார். இதன் மொத்த மதிப்பு ரூ.30 கோடி.’’

கடந்த 10 ஆண்டுகளில் பல பங்குகளின் விலை 10 மடங்குக்குமேல் மேல் ஏற்றம் கண்டிருக்கின்றவே?

‘‘2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை பி.எஸ்.இ சென்செக்ஸ் 242% வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பி.எஸ்.இ 500 இண்டெக்ஸில் உள்ள பங்குகளில் 210 பங்குகள் சென்செக்ஸைவிட அதிகமான லாபத்தைப் பதிவு செய்திருக்கின்றன. அதில் 85 பங்குகள் 1,000% மற்றும் அதற்குமேல் லாபத்தை அதன் முதலீட்டாளர் களுக்கு வழங்கியிருக்கின்றன. இதில் குறிப்பாக, அல்கைல் அமினெஸ் கெமிக்கல் நிறுவனப் பங்கு விலை 13,345% அதிகரித் திருக்கிறது. 2012, ஆகஸ்ட் 31-ம் தேதி இதன் பங்கு விலை 22.07. ஆனால், கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி இதன் பங்கு விலை ரூ.2,967.20. அதே போல, டன்லா பிளாட்ஃபார்ம்ஸ் 13,000% ஏற்றத்தை 10 ஆண்டுகளில் பதிவு செய்திருக்கிறது. அதே போல தீபக் நைட்ரைட்ஸ் 11,639% ஏற்றத்தையும், கேப்லின் பாயின்ட் லேபரட்டரீஸ் 11,492% ஏற்றத்தையும், டாடா எலெக்சி 8,313% ஏற்றத்தையும், பஜாஜ் ஃபைனான்ஸ் 7,040% ஏற்றத்தை யும் பதிவு செய்துள்ளன. கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் 9,040% ஏற்றத்தையும், யு.என்.ஓ மைண்டா 9,475% ஏற்றத்தையும் பதிவு செய்திருக்கின்றன.’’

கிம்ஸ் நிறுவனம் எஸ்.பி.ஏ.என்.வி மெடிசர்ச் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வது பற்றி...

“300 படுக்கைகளுக்கு மேல் கொண்ட மல்ட்டி ஸ்பெஷா லிட்டி ஹாஸ்பிட்டல் கிங்ஸ்வே ஹாஸ்பிட்டல்ஸ் நடத்திவரும் நாக்பூரில் உள்ள எஸ்.பி.ஏ.என்.வி மெடிசர்ச் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தில் 51% பங்குகளை ரூ.80 கோடிக்கு வாங்க ஹைதராபாத்தைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல் படும் கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த வார வியாழக்கிழமை வர்த்தகத்தின்போது இந்த நிறுவனப் பங்கின் விலை என்.எஸ்.இ சந்தையில் 3.27% வரை அதிகரித்து 1,243.90 என்கிற விலைக்கு வர்த்தகமானது” என்றவர் புறப்படும் முன், ‘‘மோசடி முதலீட்டு நிறுவ னங்கள் பற்றி நீர் தொடர்ந்து எழுதி வருவது மிகப் பெரிய சேவை என்றுதான் சொல்ல வேண்டும். இனியாவது மக்கள் பேராசையுடன் செயல்படா மல், நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தரும் முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்’’ என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் ஷேர்லக்!

ஷேர்லக்: டி.எம்.பி வங்கி புதிய பங்கு வெளியீடு... சிறு முதலீட்டாளர்களுக்கு 10% ஒதுக்கீடு..!

நெல்லையில்... உங்களை செல்வந்தர் ஆக்கும் முதலீட்டுக் கூட்டம்!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை உருவாக்குதல்..!’ என்ற நிகழ்ச்சி நெல்லையில் செப்டம்பர் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (10.00 am – 1.00 pm) நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர், பேச்சாளர் சௌந்தர மகாதேவன் சிறப்புரையாற்றுகிறார். நிதி நிபுணர்கள் பி.வி.சுப்ரமணியம், வ.நாகப்பன் ஆகியோர் முதலீட்டு அம்சங்கள் குறித்து பேசுகிறார்கள். ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த கே.எஸ்.ராவ், எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி யில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla

ஜி.எஸ்.டி வசூல்: இந்தியா புதிய சாதனை..!

சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வசூலைவிட 28% அதிகம். மேலும் தொடர்ந்து நான்கு மாதங்களாக ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டி சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஆகிறது. இது புதிய சாதனை ஆகும். இதனால், மத்திய, மாநில அரசுகள் மகிழ்ச்சியில் இருக்கின்றன.