Published:Updated:

ஷேர்லக்: வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகஸ்டில் செய்த முதலீடு... எந்தத் துறையில் எவ்வளவு?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகஸ்டில் செய்த முதலீடு... எந்தத் துறையில் எவ்வளவு?

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

வியாழக்கிழமை வழக்கம்போல 4 மணிக்கு வந்துசேர்ந்தார் ஷேர்லக்.மழையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் மழை கோட் அவர் கைவசம் இருந்தது.ஏசி குளிருக்கு இதமாகத் தயாராக இருந்த சூடான இஞ்ஜி டீயை ஒரு கப்பில் ஊற்றித் தந்தோம். அதை வாங்கி, பருகிக் கொண்டே நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் ஐ.பி.ஓ வெளியீடு வெற்றியடைந்ததா?

‘‘தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் ரூ.831.60 கோடி நிதி திரட்டும் நோக்கில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளி யிட்டது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டுக்கு முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பை வழங்கியிருக்கிறார்கள்.

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் நிறுவனம் அல்லாத பங்கு முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்கு அளவை விட 2.94 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன. ரீடெய்ல் பிரிவில் 6.48 மடங்கு பங்குகள் வேண்டியும், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 1.62 மடங்கு பங்குகள் வேண்டியும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. வருகிற 15-ம் தேதி அன்று இந்தப் பங்கானது சந்தையில் பட்டியல் இடப்படுகிறது. பார்ப்போம், இந்தப் பங்குக்கு இருக்கும் வரவேற்பு எப்படி என்று.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் பங்குத் தரகு நிறுவனம் பரிந்துரை செய்திருக்கும் பங்குகள் குறித்து..?

‘‘இந்தியாவில் தற்போது பொருளாதார நடவடிக்கைகள் பழைய நிலைக்குத் திரும்பி இருப்பதால், டிராவல், சுற்றுலா, ஹோட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகள், விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற சேவைத் துறைகளின் தேவை அதிகரித்திருக்கிறது. மேலும், வருகிற விழாக்காலங்களில் இந்தத் துறைக்கான தேவை இன்னும் அதிகரிக்கும் என்பதால், ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் பங்கு தரகு நிறுவனம் மாருதி சுஸூகி, பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்.பி.ஐ கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ், ட்ரென்ட், ரீலக்சோ ஃபூட்வேர் மற்றும் வி-மார்ட் ரீடெய்ல் என மொத்தம் ஆறு பங்குகளைக் குறிப்பிட்டுச் சொல்லி, அதில் முதலீட்டாளர்களைக் கவனம் செலுத்த பரிந்துரைத்திருக்கிறது. இந்தப் பங்குகள் அடுத்த 6 - 9 மாதங்களில் 10 - 15% வளர்ச்சியைத் தரும் எனவும் ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

இந்தத் தரகு நிறுவனம் மாருதி சுஸூகி நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி பரிந்துரைத்திருப்பதுடன், அதன் இலக்கு விலை ரூ.8,250 எனக் கணித்திருக்கிறது. எஸ்.பி.ஐ கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருப்பதுடன், இதன் இலக்கு விலையை ரூ.1,050-ஆக நிர்ணயம் செய்துள்ளது.

ட்ரென்ட் நிறுவனத்தின் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருப்பதுடன், இதன் இலக்கு விலையை ரூ.1,530-ஆக நிர்ணயம் செய்துள்ளது. ரெலஸோ நிறுவனத்தின் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருப்பதுடன், இதன் இலக்கு விலையை ரூ.1,120-ஆக நிர்ணயம் செய்துள்ளது. வி-மார்ட் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருப் பதுடன், இதன் இலக்கு விலையை ரூ.3,350-ஆக நிர்ணயம் செய்துள்ளது.’’

சிப்லா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

‘‘சிப்லா நிறுவனத்தின் பங்கு விலை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அன்று 2% வரை அதிகரித்து, ரூ.1,062-க்கு வர்த்தகமானது. இது கடந்த மார்ச் மாதத்தில் தொட்ட ரூ.1,083 என்கிற 52 வார உட்சபட்ச விலைக்கு நெருக்க மான விலையாகும். யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபுட் அண்டு டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் (USFDA) அமைப்பு சிப்லா நிறுவனத்தின் லெனலிடோமைடு மாத்திரைகள் 5 மி.கி, 10 மி.கி, 15 மி.கி மற்றும் 25 மி.கி-க்கான விண்ணப்பத்தை அங்கீகரித்துள்ளது என்று இந்த நிறுவனம் தெரிவித்ததை அடுத்து இந்தப் பங்கு விலை ஏற்றம் நடந்திருக்கிறது.’’

கடந்த வாரத்தில் சிமென்ட் பங்குகளின் நிலை எப்படி இருந்தது?

‘‘கடந்த செப்டம்பர் 6-ம் தேதி அல்ட்ராடெக் சிமென்ட்,  சிமென்ட், அம்புஜா, ஏசிசி, ராம்கோ மற்றும் ஜே.கே லட்சுமி சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2 - 6% வரை உயர்ந்து லாபம் ஈட்டின. ஏ.சி.சி, அம்புஜா மற்றும் ஹோல்சிம் நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமம் வாங்கியதைத் தொடர்ந்து இந்தத் துறையின் செயல்பாடும் மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என பல்வேறு பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

என்.எஸ்.இ தரவுகளின்படி, மார்கன் ஸ்டான்லி ஆசியா செப்டம்பர் 2-ம் தேதி அன்று சந்தையில் இருந்து ஏ.சி.சி-யின் 9.4 லட்சம் பங்கு களை ரூ.215 கோடிக்கு வாங்கியிருக்கிறது. எம்.கே குளோபல் தரகு நிறுவனம் சிமென்ட் நிறுவனத்தின் உள்ளீட்டு செலவுகள் குறைவு மற்றும் தேவைகள் அதிகரிப்பு காரணமாக சிமென்ட் நிறுவனங்களின் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதி யானது வலுவாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் பங்கை முதலீட்டாளர்களுக்கு வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலை ரூ.7,100 என நிர்ணயம் செய்துள்ளது. அதே போல,  சிமென்ட் நிறுவனத்தின் பங்குகளையும் வாங்கச் சொல்லி பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.23,550 என நிர்ணயம் செய்துள்ளது.

ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம் ஜே.கே. சிமென்ட் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய் திருப்பதுடன், அதன் இலக்கு விலையை ரூ.3,020-ஆக நிர்ணயம் செய்துள்ளது.”

இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

“டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியன் ஹோட் டல்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தின் போது 3% வரை அதிகரித்து ரூ.313.70 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதன் பங்கு விலை 10% வரை ஏற்றத்தை சந்தித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.87% ஏற்றத்தை சந்தித்திருக்கிறது.

கடந்த மூன்று மாதத்தில் சென்செக்ஸ் 7% வரை ஏற்றத்தைச் சந்தித்த நிலையில், இந்தப் பங்கு விலை 35% வரை ஏற்றத்தை பதிவு செய்திருக் கிறது. கடந்த ஆறு மாதத்தில் சென்செக்ஸ் 12% வரை ஏற்றத்தைச் சந்தித்த நிலையில், இந்தப் பங்கு விலை 65% வரை உயர்ந்திருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் இந்தப் பங்கு வெளியிடப்பட்ட போது இதன் விலை ரூ.150. இந்த விலையுடன் ஒப்பிடும் போது தற்போது 109% வரை விலையேற்றத்தை இந்தப் பங்கு சந்தித்திருக்கிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்தப் பங்கானது ரூ.309.80 என்கிற விலையில் வர்த்தகமானது.”

ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் ரூ.50,000 கோடிக்கு மேல் முதலீடு செய்திருப்பது பற்றி..!

“கடந்த ஆகஸ்டில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.51,000 கோடிக்குமேல் முதலீடு செய்திருக்கிறார்கள். இதனால்தான், அந்த மாதத்தில் இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்தைக் கண்டிருக்கிறது. கடந்த மாதத்தில் அவர்கள் வங்கிகள் மற்றும் நிதிச் சேவை நிறுவனப் பங்குகளில் மொத்தம் ரூ.12,636 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள். அதே நேரத்தில் முந்தைய ஜூலை மாதத்தில் 213 கோடி மதிப்புள்ள நிதிச் சேவை நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஹெல்த்கேர் நிறுவனப் பங்குகளில் ரூ.8,509 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். கடந்த ஜூலையில் இந்தத் துறையில் இவர்களின் முதலீடு ரூ.210 கோடி யாக இருந்தது. இதற்கு அடுத்த இடத்தில் நுகர்வோர் சேவைகள் நிறுவனத்தில் ரூ.5,655 கோடி மற்றும் வாகன உதிரிபாகங்கள் நிறுவனப் பங்குகளில் 3,736 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளன.

ஜூலை மாதத்தில் ரூ.5,335 கோடி மதிப்புள்ள ஆயில் அண்ட் கேஸ் நிறுவனப் பங்குகளை விற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகஸ்ட் மாதத்தில் இதே துறை பங்குகளில் ரூ.1,229 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். ஜூலை மாதத்தில் ரூ.4,665 கோடி மதிப்புள்ள ஐ.டி நிறுவனப் பங்குகளை விற்ற வெளிநாட்டு முதலீட் டாளர்கள் ஆகஸ்ட் மாதத்தில் இதே துறை பங்குகளில் ரூ.397 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங் களில் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளை முறையே ரூ.174 கோடி மற்றும் ரூ.1,585 கோடிக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்திருக்கிறார்கள்.

தொலைத்தொடர்பு துறை நிறுவனப் பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் முறையே ரூ.4,540 கோடி மற்றும் ரூ.2,046 கோடி மதிப்புக்கு வாங்கி உள்ளார்கள். இரண்டு மாதங்களிலும் எஃப்.எம்.சி.ஜி, கேப்பிடல் கூட்ஸ், கன்ஸ்யூமர் டூயுரபிள்ஸ், மின் உற்பத்தி, சேவைகள், கட்டுமானம், கட்டுமானப் பொருள்கள் ஆகிய துறையின் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். ஒன்பது மாதங்களாக இந்தியப் பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்து வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஜூலை மாதத்தில் ரூ.1,968 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.”

ஷேர்லக்: வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகஸ்டில் செய்த முதலீடு... எந்தத் துறையில் எவ்வளவு?

அம்புஜா மற்றும் ஏ.சி.சி நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருக்கிறதே?

‘‘அதானி குழுமத்தின் மொரீஷியஸைச் சேர்ந்த நிறுவனமான எண்டவர் டிரேட் அண்ட் இன்வெஸ்ட் மென்ட், நிறுவனம், கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி அன்று, அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் இருந்து 26% பங்குகளைப் பெறுவதற்காக ரூ.31,000 கோடி மதிப்புள்ள ஓப்பன் ஆஃபரைத் தொடங்கியது. செப்டம்பர் 9-ம் தேதி இந்த ஓப்பன் ஆஃபர் முடிவடைந்த நிலையில், அதற்கு முந்தைய வர்த்தகத் தினங்களில் குறிப்பாக, கடந்த வாரம் புதன்கிழமை அன்று அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் பங்கு விலை 2% வரை அதிகரித்து ரூ.446.50 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டு வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் 1 சத விகிதத்துக்்கும் குறைவாக அதிகரித்த நிலையில், இந்தப் பங்கின் விலை 17% அதிகரித்துள்ளது. அதே போல, புதன் கிழமை அன்று ஏ.சி.சி நிறுவனத்தின் பங்கு விலையும் 3% வரை அதிகரித்து ரூ.2,398.95-க்கு வர்த்தகமானது.”

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் பங்கு விலை அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தகமானது பற்றி...

“ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஐந்து வர்த்தக தினங்களாக அப்பர் சர்க்யூட் விலையில் வர்த்தகமாகிறது. கடந்த வார புதன்கிழமை வர்த்தகத்தில் சென்ச்கெஸ் 0.59% சரிந்து வர்த்தகமான நிலையில், 5% வரை அதிகரித்து ரூ.17.93-க்கு வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் 1.2% வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்தப் பங்கு விலை 25% வரை ஏற்றத்தைப் பதிவு செய்திருக் கிறது. வியாழக்கிழமை வர்த்தகத்தின்போது இதன் பங்கு விலை 4.89% சரிந்து ரூ.16.75-க்கு வர்த்தகமானது.”

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

‘‘கடந்த வாரம் புதன்கிழமை அன்று காலை வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 2% அதிகரித்து, ரூ.2,450 என்கிற 52 வார அதிகபட்ச விலையில் வர்த்தகமானது. சமீபத்தில் இயக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐ.ஏ.சி-1 விக்ராந்தில் பயன்படுத்தப்பட்ட எரிவாயு டர்பைன்ஸ்களை அசெம்பிள் செய்து சோதனை செய்ததாக இந்த நிறுவனம் சொன்னதை அடுத்து இதன் பங்கு விலை அதிகரித்திருக்கிறது. இந்த நேரத்தில் மார்கன் ஸ்டான்லி தரகு நிறுவனம் இந்தப் பங்குக்கு ‘மிகச் சிறந்த’ தரக்குறியீட்டை வழங்கியிருப்பதுடன், இதன் இலக்கு விலையை ரூ.3,024-ஆக நிர்ணயித்துள்ளது.’’

புறப்படும்முன் அவர் சொன்னதாவது... ‘‘தொழுதூரில் இயங்கும் ஜி.எஸ்.டி.எல் நிறுவனம் பற்றி நீர் புலனாய்வுக் கட்டுரை வெளியிட்டிருப்பது அருமை. இந்தச் சமயத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, அல்பாரி, அனிஎஃப்.எக்ஸ், அவா டிரேட், பினாமோ, எ-டோரோ, எஃப்.பி.எஸ், எஃப்.டி.எம்.ஓ, ஐ-ஃபாரக்ஸ் மற்றும் ஒலிம்ப் டிரேடு உள்ளிட்ட 34 நிறுவனங் களின் பட்டியலை வெளி யிட்டு, இந்த எக்ஸ்சேஞ்சுகள் ஃபாரக்ஸைக் கையாளவும் அல்லது அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளுக்கான பிளாட்ஃபார்ம்களை (ETP) இயக்கவும் அங்கீகரிக்கப்பட வில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச்களிலும் தொழுதூர் ஜி.எஸ்.டி.எல் நிறுவனத்திலும் பணம் போடக் கூடாது’’ என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்!

சுந்தரம் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் என்.எஃப்.ஓ புதிய சாதனை..!

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அண்மை யில் புதிய ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் வெளியீட்டில் களமிறங்கியது. இந்த ஃபண்டின் மூலம் சாதனை அளவாக ரூ.1,679 கோடி திரட்டப்பட்டிருக்கிறது. சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் 25 ஆண்டுக்கும் மேற்பட்ட சேவையில் இவ்வளவு அதிக தொகை திரட்டிய இரண்டாவது ஃபண்ட் இதுவாகும். இந்த என்.எஃப்.ஓ மூலம் திரண்ட தொகையில் பாதி டிஜிட்டல் முறையில் செய்யப்பட்ட முதலீடாகும். இந்த ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் வெளியேறும் ஓப்பன் எண்டெட் வகையைச் சேர்ந்தது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது.

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் சுப்ரமணியம் இது குறித்து கூறும்போது, “58,000 விநியோகஸ்தர்கள் மற்றும் 70,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களால் இது சாத்தியமாகியிருக்கிறது. இந்த ஃபண்ட் எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்ற நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்” என்றார்.“