Published:Updated:

ஷேர்லக்: ஆகஸ்டில் ஃபண்ட் மேனேஜர்கள் புதிதாக முதலீடு செய்த பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: ஆகஸ்டில் ஃபண்ட் மேனேஜர்கள் புதிதாக முதலீடு செய்த பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

இதழ் முடிக்கும் பணியில் நாம் பிஸியாக இருந்ததால், நம் கேபினுக்குள் ஷேர்லக் நுழைந்ததை நாம் கவனிக்கவில்லை. அவர் வந்த விவரத்தை அறிந்து சட்டென்று நாம் எழுந்து நிற்கவே, ‘‘பங்குச் சந்தை வர்த்தகர்கள் டெர்மினலைக் கண் சிமிட்டாமல் பார்க்கிற மாதிரி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உமக்கு என் பாராட்டுகள்’’ என்று பேசத் தொடங்க, அவருக்கு ஸ்ட்ராங்கான டிகிரி காபியை கப்பில் ஊற்றித் தந்தோம். அதை எடுத்து கொஞ்சம் குடித்தவர், ‘‘சூப்பர், நாணயம் விகடன் போலவே சூப்பராக இருக்கிறது’’ என்றபடி நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துள்ளதே, என்ன காரணம்?

“ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டுக்கான இந்தியா வின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை ஏற்கெனவே கணித்திருந்த 7.8 சதவிகிதத் தில் இருந்து தற்போது 7 சதவிகிதமாகக் குறைத் துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் கணிப்பான 7.2 சதவிகிதத்தைவிடக் குறைவாகும்.

அதே போல, 2023-24-ம் நிதி ஆண்டுக்கான ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தையும் ஏற்கெனவே கணித்திருந்த 7.4 சதவிகிதத்தில் இருந்து 6.7 சதவிகிதமாகக் குறைத் துள்ளது.

இந்தியா கொரோனா காலத்துக்கு முந்தைய பொருளாதார நிலையை அடைந்திருந்தாலும், உலக அளவில் நிலவும் மந்தநிலை, உயர் பணவீக்க விகிதம், நிறுவனங்களுக்கான எரிசக்தி செலவுகள் அதிகரிப்பு போன்ற பல காரணங்களைக் சுட்டிக்காட்டி ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தைக் குறைத் துள்ளது.

இந்த விகிதம் இன்னும் கொஞ்சம் குறைந்தாலும், இந்த அளவுக்கு வளர்ச்சி விகிதத்தை வேறு எந்த நாடும் அடையவில்லை என்பதே முதலீட்டாளர்கள் கவனிக்கத் தவறக் கூடாது.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

ஐ.டி நிறுவனங்களின் பங்கு விலை இறங்குமுகத்தில் இருக் கிறதே, என்ன செய்யலாம்?

“இந்திய ஐ.டி நிறுவனங் களின் வளர்ச்சியில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பெரிய அளவில் உள்ளது. வருகிற 2023-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்த ஆபத்து ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் உருவாக உள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக, இந்திய ஐ.டி நிறுவனங்களான டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங் களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் வழங்கும் புராஜெக்ட்டுகளில் தொய்வு ஏற்படலாம். இதனால் ஐ.டி நிறுவனங்களின் வருமான வளர்ச்சி பாதிக்கப் படலாம் என்பதால், ஐ.டி துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் இறங்கு முகத்தில் காணப்படுகின்றன. கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் ஐ.டி இண்டெக்ஸ் 3.5% வரை சரிந்து, 28096 என்கிற நிலைக்கு இறங்கி வர்த்தகமானது.

குறுகிய கால நோக்கில் ஐ.டி துறை பங்குகளை வைத்திருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. ஐ.டி செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்திருப் பவர்கள் முதலீட்டு ஆலோசகர்களைக் கலந்து பேசுவது அவசியம்.”

எஸ்.பி.ஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியைத் தொட்டு சாதனை செய்திருக்கிறதே..!

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி பங்கானது பி.எஸ்.இ சந்தையில் 1.3% அதிகரித்து, ரூ.564.85 என்கிற உச்சத்தைப் பதிவு செய்தது. இதன் காரணமாக ரூ.5 லட்சம் கோடி சந்தை மதிப்பைத் தாண்டும் மூன்றாவது இந்திய வங்கி என்ற பெருமையை எஸ்.பி.ஐ பெற்றுள்ளது. எஸ்.பி.ஐ வங்கி பங்கின் விலை நடப்பு ஆண்டில் இதுவரை 20% ஏற்றம் கண்டிருக்கிறது. கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் 6% விலை ஏறி இருக்கிறது.’’

லாஜிஸ்டிக் நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்கள் சர்வதேச சந்தைக்குச் செல்லும்போது அதிகமான போக்குவரத்துச் செலவு, போட்டித்தன்மை அதிகரிப்பு ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில் பிரதம மந்திரி கதி ஷக்தி திட்டத்தின் கீழ் செப்டம்பர் 17-ம் தேதி தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையைப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். இந்த நிலையில், டி.சி.ஐ எக்ஸ்பிரஸ், ஜி.ஏ.டி.ஐ, ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ், ஆல்கார்கோ, மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஸ்நோமேன் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய நிறுவனங் களின் பங்கு விலை, செப்டம்பர் 14-ம் தேதி வர்த்தகத் தின்போது 4 - 8% வரை ஏற்றத்தை சந்தித்தன.

நம் நாட்டின் ஜி.டி.பி-யில் சரக்குப் போக்குவரத்து 13% முதல் 14 சதவிகிதாக இருக்கிறது. இதைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் கொள்கையில் முக்கியமான அம்சமாக டிஜிட்டல்மயமாக்கல், ரீ-இன்ஜினீயரிங், மல்ட்டி-மோடல் போக்குவரத்து ஆகியவை குறித்து இருக்கும்.

மோதிலால் ஆஸ்வல் தரகு நிறுவனம் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சியைக் குறிப்பிட்டு, இதன் இலக்கு விலையை ரூ.860-ஆக நிர்ணயித்து உள்ளது. அதே போல, ஷேர்கான் பங்குத் தரகு நிறுவனம் மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனப் பங்கை வாங்கச் சொல்லி முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலையை ரூ.600-ஆக நிர்ணயித்துள்ளது. எடெல்வைஸ் வெல்த் பங்குத் தரகு நிறுவனம், ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத் தின் பங்குகளை வாங்கச் சொல்லியிருப்பதுடன், அதன் இலக்கு விலையை ரூ.315-ஆக நிர்ணயம் செய்துள்ளது.”

வேதாந்தா நிறுவனம் குஜராத்தில் வேதாந்தா செமி கண்டக்டர் தொழிற்சாலை ஆரம்பிக்கப்போவதாக வந்த செய்திதான் அந்த நிறுவனப் பங்கு விலை அதிகரிக்கக் காரணமா?

“கரெக்ட், வேதாந்தா மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனம் செப்டம்பர் 13-ம் தேதி அன்று குஜராத் அரசாங்கத்துடன் அகமதாபாத் அருகே செமிகண்டக்டர்கள் மற்றும் லேப்டாப் கிளாஸ் டிஸ்ப்ளே தயாரிக்கும் யூனிட்டை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த அறிவிப்பு வெளியான பிறகு, கடந்த செப்டம்பர் 14 அன்று வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் 10% உயர்ந்து, ரூ.305 என்கிற நிலையில் வர்த்தகமானது. வியாழக்கிழமை அன்று வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.314.30 என்கிற விலையில் வர்த்தகமானது.

இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து சுமார் ரூ.154 லட்சம் கோடி முதலீடு செய்து இந்தத் தொழில்சாலையை அமைக்க விருக்கின்றன. இந்தியாவில் லேப்டாப்புக்கான டிஸ்ப்ளே கிளாஸ் மற்றும் சிப்ஸ் தயாரிப்பு இருந்தால் லேப்டாப் விலை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.40,000ஆகக் குறையும் என வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ரெலிகேர் பங்குத் தரகு நிறுவனம் வேதாந்தா நிறுவனப் பங்கை விற்கச் சொல்லி முதலீட்டாளர்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை ரூ.235. சென்ட்ரம் புரோக்கிங் மற்றும் ஜே.பி, மார்கன் ஆகிய இரு பங்குத் தரகு நிறுவனங்களும் இந்த நிறுவனப் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கின்றன. சென்ட்ரம் தரகு நிறுவனம் இலக்கு விலையை ரூ.507-ஆகவும், ஜே.பி.மார்கன் ரூ.490-ஆகவும் நிர்ணயித்துள்ளன.”

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பல ஃபண்ட் மேனேஜர்கள் புதிதாகப் பல பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்களே..?

“கேப்பிடல் கூட்ஸ் மற்றும் வாகன உதிரி பாகங்கள் நிறுவனப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் ஃபண்ட் மேனேஜர்கள் புதிதாக முதலீடு செய்திருக்கிறார்கள். செமி கண்டக்டர் பற்றாக்குறை சீராகி வருவதால், வாகன உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும், புதிய கார்களுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக் கும் காலம் குறைந்திருக்கிறது. இது வாகனத் துறைக்கு சாதக மான விஷயமாக இருக்கிறது.

கிர்லோஸ்கர் நுனுமேட்டிக், ரோலக்ஸ் ரிங்க்ஸ், ஹனிவெல் ஆட்டோமேஷன், பால் கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் ஆகிய வாகனத்துறை பங்கு களில் புதிதாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதிகமாக விற்கப்பட்ட பங்கு களான நிதிச் சேவை துறையைச் சேர்ந்த ஹெச்.டி.எஃப்.சி ஏம்.சி.சி, ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு, ஹெச்.டி.எஃப்.சி, பேங்க் ஆஃப் பரோடா பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் கள் பங்குகள் மீண்டும் புதிதாக வாங்கியுள்ளன.

இவை தவிர, கரூர் வைஸ்யா பேங்க், பெர்ஜர் பெயிண்ட்ஸ், ஜொமோட்டோ, கஜாரியா செராமிக்ஸ், ராம்கோ சிமென்ட்ஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், இன்டர்குளோப் ஏவியேஷன், என்.ஹெச்.பி.சி, ஆதித்ய பிர்லா கேப்பிடல், எய்ஷர் மோட்டார்ஸ், கிரிசில், நஸரா டெக் னாலஜிஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகளில் ஆகஸ்ட் மாதத்தில் புதிதாக முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றன.”

கே.இ.சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த செப்டம்பர் 14-ம் தேதி வர்த்தகத்தில் ஆர்.பி.ஜி குழும நிறுவனங்களில் ஒன்றான கே.இ.சி இன்டர் நேஷனல் நிறுவனத்தின் பங்கு விலை 5% வரை அதிகரித்து ரூ.450-க்கு வர்த்தகமானது. இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் டி & டி மற்றும் கேபிளிங் புராஜெக்ட்டு களுக்கான ஆர்டர்களைப் கே.இ.சி பெற்றுள்ளதாக ஆர்.பி.ஜி குழுமம் தெரிவித் துள்ளது. பவர் கிரிட் கார்ப்ப ரேஷனிடம் இருந்து இந்தியா வில் 400 கிலோ வோல்ட் டிரான்ஸ்மிஷன் லைன் ஆர்டர், இந்தியாவில் 132 கிலோ வாட் நிலத்தடி கேபிளிங் ஆர்டர், ஆப்பிரிக்காவில் 220 கிலோ வோல்ட் மற்றும் 330 கிலோ வோல்ட் டிரான்ஸ்மிஷன் லைன் ஆர்டர் என மொத்தம் ரூ.1,100 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் பங்கு விலை அதிகரித்திருக்கிறது. இருப்பினும், நடப்பு ஆண்டின் இதுவரை இந்த நிறுவனத்தின் பங்கு விலை 9% வரை விலை சரிந்தே வர்த்தகமானது.

ஜியோஜித் ஃபைனான்ஷியல் பங்குத் தரகு நிறுவனம், இந்த நிறுவனப் பங்கை வாங்கச் சொல்லி உள்ளது. இதன் இலக்கு விலை ரூ.435 என நிர்ணயம் செய்துள்ளது. ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் இந்த நிறுவனப் பங்கை விற்கச் சொல்லியுள்ளதுடன், இதன் இலக்கு விலையை ரூ.375 எனக் குறைத்துள்ளது. சோழா வெல்த் இதன் பங்கை வாங்கச் சொல்லியும், இலக்கு விலையை ரூ.460 எனவும் சொல்லி யிருக்கிறது.”

டி.எம்.பி பங்கு விலை பட்டியலான முதல் நாளில் எப்படி இருந்தது?

“தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் (TMB) பங்கு கடந்த வியாழக்கிழமை அன்று பங்குச் சந்தையில் பட்டியலானது. இதன் புதிய பங்கு வெளியீட்டு (IPO) விலை ரூ.510-ஆக உள்ள நிலையில் 3% விலையில் இந்த வங்கிப் பங்கு ரூ.495-க்குப் பட்டியல் ஆனது.

முதல் நாள் வர்த்தக முடிவில் இந்த நிறுவனப் பங்கு என்.எஸ்.இ-யில் 35 காசுகள் குறைந்தும், பி.எஸ்.இ-யில் ரூ.1.55 குறைந்தும் வர்த்தகமாகி முடிந்தது. இனிவரும் நாள்களில் இந்த நிறுவனப் பங்கின் விலை எப்படி செல்கிறது என்று பார்ப்போம்.’’

ஹர்ஷா இன்ஜினீயரிங்ஸ் இன்டர்நேஷனல் ஐ.பி.ஓ வெளியீடு குறித்து சொல்லுங்கள்.

“செப்டம்பர் 14-ம் தேதி அன்று ஹர்ஷா இன்ஜினீயரிங்ஸ் இன்டர்நேஷனல் ஐ.பி.ஓ வெளியிடப்பட்டது. முதல் நாளிலேலே 2.87 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்தனர். அதாவது, மொத்தம் 4.84 கோடி பங்கு களுக்கு விண்ணப்பங்கள் வந்தன. வெளியிடப்பட்ட பங்கு களின் அளவு 1.68 கோடி. இதற்கு முந்தைய தினத்தில் ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து இந்நிறுவனம் ரூ.225.74 கோடியை திரட்டிய பிறகு, பொது பங்கு வெளியீட்டு அளவை 2.3 கோடி யிலிருந்து 1.68 கோடியாகக் குறைத்துக்கொண்டது.

இந்த பங்குக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் தேவை அதிகரித்து காணப்படுவதால், கிரே மார்க்கெட் என்று சொல்லப்படுகிற கள்ளச்சந்தையில் இந்த நிறுவனப் பங்கின் வெளியீட்டு விலையான ரூ314 - 330-ஐவிட 60% விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இந்தப் பங்கு சந்தையில் பட்டியல் ஆகும்போதுதான் விலை ஏற்றத்தை சந்திக்குமா அல்லது இறக்கத்தை சந்திக்குமா என்பது பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்’’ என்றவரிடம், புறப்படுவதற்குமுன் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னோம்.

‘‘இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. ஆனால், நீண்ட காலத்தில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்கிற கேள்வி பல முதலீட்டாளர்களிடம் இருக்கவே செய்கிறது. இந்த முக்கியமான கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள நினைக்கும் முதலீட்டாளர் களுக்கென ஸ்பெஷலாக ஒரு கூட்டத்தை நடத்தப்போகிறது நாணயம் விகடன். நாணயம் விகடனும் குவான்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன மும் இணைந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தப்போகிறது. இந்த நிகழ்ச்சியின் தலைப்பு ‘இந்தியா @75, அடுத்த 25 ஆண்டு எதிர்பார்ப்பு..!’ என்பதே.

செப்டம்பர் 24-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4.30-க்கு இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதில் நிதி ஆலோசகர் காந்த் மீனாட்சி, குவான்டம் மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஐ.வி.சுப்ரமணியம், ஜார்ஜ் தாமஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். ஆன்லைனில் இந்த நிகழ்ச்சி நடக்க இருப்ப தால், உலகம் முழுக்க உள்ள முதலீட்டாளர்கள் இந்த நிகழ்ச் சியில் தாராளமாக கலந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் என்பது முக்கியமான விஷயம். ஆனால், தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்கிறவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும். எனவே, கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்து (https://bit.ly/3S1tEU7) பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என்றவர், ஏதோ போன் வரவே சட்டென்று வீட்டுக்குப் புறப்பட்டார்!

உங்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படித் தேர்வு செய்வது?

நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் (Mirae Asset Mutual Fund) இணைந்து நடத்தும் ‘உங்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படித் தேர்வு செய்வது?’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30 am – 12.30 pm) நடைபெறுகிறது. நிதி ஆலோசகர் வித்யா பாலா (Primeinvestor.in), மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஏரியா ஹெட் (ரீடெய்ல் சேல்ஸ்) சுரேஷ் பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/3d2WG6G