பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: வரிசைகட்டும் ஐ.பி.ஓ... ரூ.1 லட்சம் கோடிக்கு புதிய பங்கு வெளியீடு..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழன் அன்று மாலை 4 மணிக்கு விறுவிறுவென நம் கேபினுக் குள் நுழைந்தார் ஷேர்லக். அவர் கையில் மழைகோட். “வேகமாகப் பேசி முடிப் போம். மழை வரும்முன் வேறோரு முக்கியமான மீட்டிங்குக்குப் போக வேண் டும்” என அவசரப்படுத்திய வரிடம், நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

கடந்த வாரத்தில் சந்தையானது ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறதே?

“கடந்த வாரத்தின் தொடக்கத்தில் பி.எஸ்.இ மிட்கேப் இண்டெக்ஸ், பி.எஸ்.இ ஸ்மால்கேப் இண்டெக்ஸ் நல்ல ஏற்றத்தை சந்தித்தது. அதே போல, நிஃப்டி பிரைவேட் பேங்க், மெட்டல், பேங்க், பி.எஸ்.யு பேங்க், ஃபைனான்ஷியல் சர்வீசஸ், ஐ.டி மற்றும் நிஃப்டி எஃப்.எம்.சி.ஜி ஆகிய இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் முடிந்தன. இதன் காரணமாக முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.5.66 லட்சம் கோடி அதிகரித்தது.

அதாவது, சந்தையின் மார்க்கெட் கேப்பிடலை ஷேசன் ரூ.2,73,92,740 கோடி யாக உயர்ந்தது. வியாழக் கிழமை வர்த்தக முடிவில் ரூ.2,75,87,301 கோடியாக இருந்தது.”

பங்குச் சந்தைக்கு புதிய முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்திருப்பது ஏன்?

“கடந்த செப்டம்பரில் மட்டும் 21.1 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு முந்தைய நான்கு மாதங்களில் 22 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைக்குள் வந்திருக் கிறார்கள். இதன் காரணமாக மொத்த டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 1.02 கோடியாக அதிகரித்துள்ளது.

புதிய முதலீட்டாளர்கள் வருகையால் பங்குச் சந்தை யில் டிரேடிங் வால்யூம் ஜூன் காலாண்டில் இருந்ததைவிட அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த செப்டம்பரில் என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ இரண்டு சந்தைகளையும் சேர்த்து தினசரி சராசரி டேர்ன் ஓவர் 4.3% அதிகரித்து, ரூ.69,914 கோடியாக உள்ளது. இது ஜூன் மாத நிலையைவிட 41% அதிகமாகும். ஆனால், கடந்த ஏப்ரலில் இருந்த தினசரி சராசரி டேர்ன் ஓவர் ரூ.73,245 கோடியுடன் ஒப்பிடும்போது இது 8% குறைவாகும்.”

ஷேர்லக்: வரிசைகட்டும் ஐ.பி.ஓ... ரூ.1 லட்சம் கோடிக்கு புதிய பங்கு வெளியீடு..!

அதானி பவர் மற்றும் அதானி வில்மர் பங்குகள் ஒரே ஆண்டில் 200% லாபம் தர என்ன காரணம்?

“கடந்த 2021-ம் ஆண்டின் தசரா பண்டிகைக்குப் பிறகு, இந்தியப் பங்குச் சந்தை சாதனை உச்சத்தை எட்டியது. அதன்பிறகு 52 வாரக் குறைந்த அளவிலும் சரிந்துள்ளது. மிக முக்கியமான குறியீடு களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 5 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளன. மேலும், கடந்த ஆண்டு அக்டோபரில் சாதனை உச்சத்தைத் தொட்ட பிறகு, பங்குச் சந்தை மீண்டும் அந்த நிலைக்குத் திரும்ப வில்லை. இருப்பினும், பி.எஸ்.இ 500 பங்குகளில் 180-க்கும் மேற்பட்ட நிறுவனப் பங்குகள் அதே கால கட்டத்தில் நேர்மறையான வருமானத்தை அளித் துள்ளன. குறிப்பாக, 9 பங்குகள் மல்ட்டிபேக்கர்களாக, மூன்று இலக்க வருமானத்தை அளித்துள்ளன.

அதானி பவர் மற்றும் அதானி வில்மர் ஆகிய பங்கு நிறுவனங்கள் தசரா 2021-லிருந்து 200 சதவிகிதத்துக்கும் அதிகமாக விலை ஏறி இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அதானி குழும நிறுவனங்கள் பலவும் பல சிறப்பான பிசினஸ் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன் காரணமாக முதலீட் டாளர்களின் நம்பிக்கையை அதானி குழும நிறுவனங்கள் பெற்றிருக்கின்றன.

இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து பாரத் டைன மிக்ஸ், அதானி டோட்டல் கேஸ், தீபக் ஃபெர்டி லைசர்ஸ் அண்ட் பெட்ரோ கெமிக்கல்ஸ், ஷேஃப்லர் இந்தியா, எல்.ஜி எக்யூப்மென்ட்ஸ், மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் மற்றும் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகளின் விலை 100 சதவிகிதத்துக்கும் அதிகமாக ஏற்றம் கண்டிருக்கின்றன.

பி.எஸ்.இ 500 குறியீட்டைச் சேர்ந்த அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி என்டர்பிரைசஸ், டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா),  ரேணுகா சுகர்ஸ், கே.பி.ஐ.டி டெக்னாலஜிஸ், குஜராத் ஃப்ளோரோ கெமிக்கல்ஸ், லேட்டன்ட் வியூ அனலிட்டிக்ஸ், வருண் பெவரேஜஸ், டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி, அதானி கிரீன் எனர்ஜி, வெல்ஸ்பன் கார்ப், மஹிந்திரா லைஃப் இன்டர்நேஷனல், அசாஹி லைஃப் இந்தியா கிளாஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் இதே காலகட்டத்தில் 50% - 100% லாபத்தை அதன் முதலீட் டாளர்களுக்குத் தந்துள்ளன.

துறை சார்ந்த குறியீடுகளான பி.எஸ்.இ ஐ.டி மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதாவது, கடந்த 2021-ம் ஆண்டின் தசராவுக்குப் பிறகு 25% வரை சரிந்துள்ளது. ரியாலிட்டி இண்டெக்ஸ் 20%, மெட்டல் மற்றும் ஹெல்த்கேர் இண்டெக்ஸ் 10% சரிவைச் சந்தித்துள்ளன. அதே சமயம், பவர் இண்டெக்ஸ் 35% ஏற்றத் தைச் சந்தித்துள்ளது. கேப்பிடல் கூட்ஸ் 15%, ஆட்டோ மற்றும் எஃப்.எம்.சி.ஜி முறையே 10% மற்றும் 6% ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளன.”

ஐநாக்ஸ் விண்ட் எனர்ஜி நிறுவனப் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனப் பங்கு விலை 5% வரை அதிகரித்து, ரூ.1,010 என்கிற புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகான 6 வர்த்தக வாரங்களில் இதன் பங்கு விலை 101% வரை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 1.5% அதிகரித்துள்ள நிலையில், இதன் பங்கு விலை 25% வரை அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் காற்றாலை மின்சாரம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதற்கான தேவைகள் இந்தியாவுக்குள் அதிகரித்துள்ளதால், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எதிர்வரும் நாள்களில் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாழன் மாலை 4.99% உயர்ந்து, ரூ.1,056-ஆக வர்த்தகமானது.”

ஈசி ட்ரிப் பிளானர்ஸ் நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்குகிறதாமே?

“இந்த நிறுவனப் பங்கு விலை கடந்த செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 8% வரை அதிகரித்து ரூ.414.95-க்கு வர்த்தகமானது. முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்குவது மற்றும் பங்கு பிரிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க வருகிற அக்டோபர் 10-ம் தேதி அன்று இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கூடுகிறது. இதை முன்னிட்டு இந்த நிறுவனப் பங்கு விலை அதிகரித்திருக்கிறது. இதற்கு முன் இந்த நிறுவனம் 2021-22-ம் நிதி ஆண்டில் 1:1 என்கிற விகிதத்தில் தனது முதலீட் டாளர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்கியது குறிப்பிடத் தக்கது. வியாழன் அன்று வர்த்தக முடிவில் இந்த நிறுவனப் பங்கு விலை ரூ.401.85-ஆக வர்த்தகமாகி முடிந்தது.”

புளூடார்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனப் பங்கின் விலை அதிகரித்தது ஏன்?

“வருகிற ஜனவரி 1-ம் தேதியில் இருந்து இந்நிறுவனத்தின் ஷிப்மென்ட் கட்டணம் 9.6% அதிகரிக்கப்படுகிறது என நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம், நிறுவனத்தின் உள்ளீட்டுச் செலவுகள் அதிகரிப்பு போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்த விலை உயர்வை செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த ஒரு வாரத்தில் இந்த நிறுவனப் பங்கு விலை 14% வரை ஏற்றத்தை சந்தித்துள்ளது.

இந்த நிறுவனம் விமானம் மற்றும் தரைவழிப் போக்குவரத்து வாயிலாக இந்தியாவுக்குள் பொருள்களை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலத்தில் மட்டும் 7.71 கோடி ஷிப்மென்ட்களை இந்த நிறுவனம் கையாண்டிருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 5.12 கோடியாக இருந்தது. அதாவது, மொத்த 2,78,393 டன் பொருள்களை விநியோகித் துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 1,84,431 டன்னாக இருந்திருக்கிறது. வியாழன் அன்று மாலை வர்த்தக முடிவில் இந்த நிறுவனப் பங்கு விலை 1.38% குறைந்து, ரூ.9,240-ஆக வர்த்தகம் ஆகி முடிந்தது.”

லிபர்டி ஷூஸ் நிறுவனப் பங்கு விலை அதிகரித்துள்ளதே?

“இந்த நிறுவனப் பங்கு விலை 3% வரை அதிகரித்து ரூ.341.90-க்கு வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 1.7% சரிந்திருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 104% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் 2022-23-ம் நிதி ஆண்டில் 30% வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதே போல, இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால், வரிக்கு முந்தைய லாபத்தை அதிகபட்ச மாக பெறும் என்கிற எதிர் பார்ப்பும் நிலவுகிறது.”

நடப்பு ஆண்டில் ஐ.பி.ஓ வெளியீடு அதிக அளவில் இருக்கும் போலிருக்கிறதே..?

“எந்தவொரு நிறுவனமும் குழப்பமான சந்தையில் புதிய பங்குகளை வெளியிட நினைக் காது. செபி அமைப்பிடம் பெற்ற ஐ.பி.ஓ-வுக்கான அனு மதி காலாவதியானாலும், சரியான நேரத்தில் ஐ.பி.ஓ வெளியிடுவதற்கே பங்கு நிறுவனங்கள் காத்திருக்கும். அந்த வகையில், பல நிறுவனங் கள் சரியான நேரத்துக்காகக் காத்திருக்கின்றன. அதாவது, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்கு வெளியீடுகள் காத்திருப்பில் இருக்கின்றன. குறிப்பாக, பிகாஜி ஃபுட், எம்க்யூர் ஃபார்மாசூட்டிகல்ஸ், ஃபின் டெக்ஸ் மொபிக்விக் மற்றும் நவி டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் செபியிடம் அனுமதி பெற்ற நிலையில் காத்திருப்பில் இருக்கின்றன.

நடப்பு ஆண்டில் எப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை ஐ.பி.ஓ மூலம் ரூ.35,450 கோடி நிதி திரட்டப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு. அதாவது, 2021-ம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டில் ரூ.52,000 கோடி நிதி ஐ.பி.ஓ மூலம் திரட்டப்பட்டிருந்தது. கடந்த 2021-ம் ஆண்டில் மொத்தம் 1.22 லட்சம் கோடி ரூபாய்க்கு ஐ.பி.ஓ வெளியீடு இருந்தது. இருப்பினும் நிலையற்ற சந்தையின் காரணமாகப் பல ஐ.பி.ஓ நிறுவனங்களின் பங்கு விலை பெருமளவு சரிவைச் சந்தித்தன.

குறிப்பாக, பேடிஎம் நிறுவனம் கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை அன்று ரூ.674.75-க்கு வர்த்தகமானது. இதன் ஐ.பி.ஓ வெளியீட்டு விலை ரூ.2,150. அதே போல, ஸொமேட்டோ நிறுவனப் பங்கு விலை கடந்த வாரம் செவ்வாய் அன்று ரூ.64.05 வரை சரிந்து வர்த்தகமானது. இதன் ஐ.பி.ஓ விலை ரூ.76. அதே போல, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை ரூ.629 வரை சரிந்து வர்த்தகமானது. இதன் ஐ.பி.ஓ வெளியீட்டு விலை ரூ.949.

நடப்பு ஆண்டில், ஆர்க்கியன் கெமிக்கல், ஆதார் ஹவுஸிங் ஃபைனான்ஸ், பாரத் எஃப்.ஐ.ஹெச், கேப்பிடல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஃபேப் இந்தியா, சி.எம்.ஆர் கிரீன் டெக்னாலஜிஸ், டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் மற்றும் வி.எல்.சி.சி ஆகியவை புதிய பங்கு வெளியிடுகின்றன. அதே போல, ஏ.பி.ஐ ஹோல்டிங்ஸ், வெல்னஸ் ஃபார்எவர், டி.பி.ஓ டெக், சனாதன் டெக்ஸ்டைல்ஸ், புரனிக் பில்டர்ஸ், பெனா சிமென்ட் இண்டஸ்ட்ரீஸ், கெவென்டர் அக்ரோ ஆகிய நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிடும் நிறுவனங்களின் பட்டியலில் இருக்கின்றன.”

டிராக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறதாமே?

‘‘தனியார் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் நிறுவனமான டிராக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.309 கோடி நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு வருகிற அக்டோபர் 10-ம் தேதி ஆரம்பித்து 12-ம் தேதி முடிவடைகிறது. பங்கு விலை பட்டை ரூ.75 - 80. இந்த ஐ.பி.ஓ-வானது முழுவதும் ஓ.எஃப்.எஸ் முறையில் பங்குகளை வெளியிடுகிறது. இதில் மொத்தம் 3.86 கோடி பங்குகள் வெளியிடப்படுகின்றன.”

நைகா நிறுவனம் போனஸ் பங்குகளை வெளியிடுகிறதாமே?

‘‘மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஃபேஷன் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனமான நைகா, தன் பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. போனஸ் பங்கு வழங்க இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித் துள்ளது. அதன்படி 5:1 என்ற ரேஷியோவில் போனஸ் பங்கு கள் வழங்கப்படவுள்ளன. அதாவது, இந்த நிறுவனத்தின் ஒரு பங்கை வைத்திருப்பவர் களுக்கு 5 போனஸ் பங்குகள் வழங்கப்படும். இந்த போனஸ் பங்குக்கான ரெக்கார்டு தேதி நவம்பர் 3 என நிறுவனம் தெரிவித்துள்ளது.

போனஸ் பங்கு அறிவித்ததை அடுத்து இந்த நிறுவனப் பங்கு விலை கடந்த திங்கள்கிழமை வர்த்தகத்தில் 5 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்து, 1,304.55 ரூபாய்க்கு வர்த்தகமானது. வியாழன் அன்று வர்த்தகம் முடியும் சமயத்தில் விலை சற்றுக் குறைந்து ரூ.1,283 என்கிற நிலையில் வர்த்தக மானது.

எலெக்ட்ரானிக்ஸ் மார்ட் இந்தியா நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு வெற்றியடைந்ததா?

‘‘இந்த நிறுவனம் ரூ.500 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிட்டது. இந்த ஐ.பி.ஓ-வுக்கு முதல் நாளிலேயே முதலீட்டாளர்கள் நல்ல வரவேற்பு வழங்கினார்கள். வெளியிடப்படும் பங்கு அளவைவிட 1.69 மடங்கு பங்கு கள் வேண்டி விண்ணப்பித் தார்கள்’’ என்றவர், ‘‘அடுத்து சென்னை மற்றும் புதுச்சேரியில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு மீட்டிங்கா? பேஸ், பேஸ், வாசகர்கள் தவறாமல் இதில் கலந்துகொள்ள வேண்டும்’’ என்ற ஷேர்லக், அடுத்த மீட்டிங்கில் கலந்து கொள்ள விறுவிறுவென புறப்பட்டுச் சென்றார்.

ஷேர்லக்: வரிசைகட்டும் ஐ.பி.ஓ... ரூ.1 லட்சம் கோடிக்கு புதிய பங்கு வெளியீடு..!

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்..!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்..!’ என்ற நிகழ்ச்சி சென்னையில் அக்டோபர் 15, சனிக்கிழமையும் (மாலை 6 pm – 8.30 pm), புதுச்சேரியில் அக்டோபர் 16 ஞாயிற்றுக்கிழமையும் (10 am – 1 pm) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நிதி ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரையாற்றுகிறார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பங்கேற்கிறார். இவர்களுடன் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் எஸ்.குருராஜ், சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் பேசுகிறார்கள்.

அனுமதி இலவசம். முன் பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla