பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: ஐ.பி.ஓ 2022 வெளியீடு... 50% மேல் வருமானம் தந்த பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மழை கோட்டைக் கையோடு எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார் ஷேர்லக். “மிகவும் எச்சரிக்கை மனிதராக இருக்கிறீர்களே...” என்றோம். “வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டபின்பும் நாம் அஜாக்கிரதையாகவும் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது அல்லவா... ஓகே, நீங்கள் கேள்விகளைக் கேளுங்கள்” என அவசரப்படுத்த, நாம் கேள்விகளைக் கேட்கத் தயாரானோம்.

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 6% சரிந்திருக்கிறதே..?

“கடந்த நவம்பர் 9-ம் தேதி இந்த நிறுவனப் பங்கு விலை 6% வரை சரிந்து, ரூ.1,412-க்கு வர்த்தகமானது. ஏனெனில், இந்த நிறுவனத்தின் 4.4% பங்குகள் அதாவது, 21 லட்சம் பங்கு மொத்தமாகக் கிட்டத்தட்ட ரூ.283 கோடிக்கு கைமாறியிருக்கிறது. இந்த வர்த்தகத்தில் பங்கு ஒன்றின் விலை ரூ.1,384-க்கு கைமாறியுள்ளது. இதன் காரணமாகவே பங்கு விலை சரிந்திருக்கிறது. இந்த நிறுவனப் பங்கு விலை வரும் நாள்களில் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதைச் சுட்டிக் காட்டி நுவாமா ரிசர்ச் நிறுவனம் இந்தப் பங்கை வாங்கச் சொல்லி முதலீட்டாளர் களுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இலக்கு விலையை ரூ.2,200-ஆக நிர்ணயித்துள்ளது. மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பங்குத் தரகு நிறுவனமும் இந்த நிறுவனப் பங்கை வாங்கச் சொல்லி பரிந்துரைத்தி ருக்கிறது. இலக்கு விலை ரூ.1,720-ஆக நிர்ணயம் செய்துள்ளது.”

கோல் இந்தியா நிறுவனப் பங்கு விலையும் ஒரே நாளில் 6% அதிகரித்துள்ளதே?

“கடந்த புதன்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 6% வரை அதிகரித்து, ரூ.263.30-க்கு வர்த்தகமானது. நடப்பு ஆண்டில் மட்டும் இதன் பங்கு விலை சுமார் 80% வரை விலை அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.15 என நிறுவனம் அறிவித்திருக்கிறது. முழு ஆண்டில், ரூ.20-ஐ டிவிடெண்ட் தொகையாக இந்த நிறுவனம் தன் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் என ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் எதிர்பார்க்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ரூ.22 மற்றும் ரூ.25-ஐ இந்த நிறுவனம் டிவிடெண்ட் தொகையாக தன் முதலீட்டாளர்களுக்கு வழங்க வாய்ப்புள்ளதாக ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் எதிர்பார்க்கிறது. மோதிலால் ஆஸ்வால் பங்குத் தரகு நிறுவனம் இந்தப் பங்கின் இலக்கு விலையை ரூ.325-ஆக நிர்ணயித்துள்ளது. தற்போதைய வர்த்தக விலையை விட இது 30% அதிகமாகும்.”

நைகா நிறுவனப் பங்கு விலை மேலும் சரிவை சந்தித்திருக்கிறதே..?

“இந்த நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடும்போது அதற்கு முதலீட் டாளர்கள் அமோக வரவேற்பு வழங்கினார்கள். ஆனால், ஐ.பி.ஓ-வுக்கு முந்தைய பங்குதாரர்களின் லாக்-இன் காலம் நவம்பர் 10-ம் தேதியுடன் முடிவடைந்ததால், இந்த நிறுவனப் பங்கின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், இந்த நிறுவனம் அறிவித்த 1:5 என்கிற போனஸ் பங்கு தரும் அறிவிப்பை வெளியிட்டதால், பங்கு விலை இறங்குவது தற்காலிகமாக நின்றுபோனது. நைகா நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 310 மில்லி யனாக இருந்த நிலையில், இப்போது அதன் எண்ணிக்கை 1,550 மில்லியனாக அதிகரித்திருக்கிறது.

இருப்பினும், ஸ்டெட்வியூ கேப்பிடல் மரீசியஸ், டி.பி.ஜி குரோத், லைட் ஹவுஸ் இந்தியா ஃபண்ட் மற்றும் அதிக சொத்து மதிப்புள்ள முதலீட்டாளர்களான ஹரிந்தர்பால் சிங் பங்கா, நரோதம் செக்சாரியா மற்றும் சுனில் காந்த் முன்ஜால் ஆகியோர் தங்கள் வசமுள்ள பங்குகளை விற்க தகுதியுடை வர்களாக இருக்கிறார்கள். மேலும், இந்த நிறுவனத்தின் புரொமோட்டரான ஃபால்குனி நாயர் மற்றும் அவரின் குடும்பத்தினர் 32.40% பங்குகளை விற்க முடியும். அதாவது, சுமார் 145 மில்லியன் பங்குகளை அவர்கள் லாக்-இன் பீரியட் முடிவடைந்திருக்கும் நிலையில் எதிர்வரும் நாள்களில் அவர்களது பங்குகளை விற்கலாம் அல்லது விற்காமலும் இருக்கலாம். போனஸ் பங்கு பிரிப்புக்குப் பிறகு, கடந்த வாரம் வியாழன் அன்று காலை வர்த்தகத்தில் இதன் பங்கு ஒன்றின் விலை ரூ.175.90-க்கு வர்த்தகமானது.”

ஷேர்லக்: ஐ.பி.ஓ 2022 வெளியீடு...
50% மேல் வருமானம் தந்த பங்குகள்..!

பி.எல்.எஸ் (BLS International Services) நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

‘‘விசா சேவை வழங்கும் நிறுவனமான பி.எல்.எஸ் இன்டர் நேஷனல், 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்கு வெளியிட இயக்குநர் குழு பரிந்துரை செய்தது. இதை அடுத்து, புதன் அன்று இன்ட்ரா-டே வர்த்தகத்தில் இந்த நிறுவனப் பங்கின் விலை பி.எஸ்.இ சந்தையில் 15% உயர்ந்து, ரூ.388.85 என்ற விலையில் வர்த்தகமானது. ஆனால், வியாழன் அன்று மதிய வர்த்தகத்தில் விலை சரிந்து ரூ.360 என்கிற விலை யில் வர்த்தகமானது. நடப்பு ஆண்டில் இதுவரை இந்த பங்கு விலை 300% வரை ஏற்றம் அடைந்துள்ளது. இதே கால கட்டத்தில் சென்செக்ஸ் சுமார் 3.5% ஏற்றமடைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சென்செக்ஸ் 50% ஏற்றம் அடைந்திருக்கும் நிலையில், இதன் பங்கு விலை 1,020% ஏற்றத்தைப் பதிவு செய் துள்ளது.’’

பொதுத்துறை வங்கிப் பங்குகளின் விலை அதிகரித்திருப்பது பற்றி?

‘‘ஜூலை - செப்டம்பர் காலாண்டில் பொதுத்துறை வங்கிகள் வலுவான வருவா யைப் பதிவு செய்ததை அடுத்து, நிஃப்டி வங்கிக் குறியீடு கடந்த வாரம் புதன்கிழமை அன்று 3,811 என்கிற புதிய உச்சத்தை எட்டியது. 52 வார குறைவி லிருந்து 65% அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25% உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், நிஃப்டி 50 குறியீடு 5.5% உயர்ந்துள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் பேங்க் மற்றும் யூகோ பேங்க் ஆகியவற்றின் பங்கு விலை கடந்த ஒரு மாதத்தில் 30 - 55% வரை அதிகரித்திருக்கின்றன. அதே போல, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஐ.ஓ.பி மற்றும் பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க் ஆகியவற்றின் பங்கு விலை 15 - 25% வரை ஏற்றம் கண்டுள்ளன.”

டிவிஸ் லேபரட்டரீஸ் நிறுவனப் பங்கு விலை குறைய என்ன காரணம்?

‘‘இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை என்பதாலும், அந்த நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 30% சரிந்து, ரூ.493.60 கோடியாக இருப்பதாலும் கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 2% சரிந்து, 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்டு ரூ.3,344.60-க்கு வர்த்தகமானது. ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் பங்குத் தரகு நிறுவனம் இந்தப் பங்கை தற்போதைக்கு தக்க வைக்கச் சொல்லி பரிந்துரைத்திருக் கிறது. இதற்கு முன்பாக இந்தப் பங்கை வாங்கச் சொல்லி முதலீட்டாளர் களுக்கு பரிந்துரைத்திருந்தது.’’

நடப்பு ஆண்டில் வெளியான ஐ.பி.ஓ-களின் செயல்பாடு எப்படி?

“நடப்பு ஆண்டில் இதுவரை 51 நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிட்டு அதன் மூலம் ரூ.38,155 கோடி நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டியிருக்கின்றன. இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது கடந்த 2021-ல் 55 நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளி யிட்டு மொத்தம் ரூ.64,768 கோடி நிதியை முதலீட் டாளர்களிடமிருந்து திரட்டி யிருக்கின்றன.

நடப்பு நிதி ஆண்டில் பெரும்பாலான நிறுவனப் பங்குகள் விலைச் சரிவை சந்தித்தாலும், நடப்பு ஆண்டில் வெளியான ஐ.பி.ஓ-கள் சராசரியாக 50% வரை வருமானத்தை வழங்கி இருக்கின்றன. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், எட்டு நிறுவனங் களின் வெளியீட்டு அளவு மட்டுமே பெரியதாக இருந்தது. அதில் எல்.ஐ.சி-யின் வெளியீட்டு அளவுதான் அதிகம். ஆனால், இதன் ஐ.பி.ஓ வெளி யீடு முதலீட்டாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைதான் தந்தது. மேலும், நடப்பு ஆண்டில் வெளியாகியிருக்கும் 33 நிறுவனங்களில் பங்கு வெளியீட்டு அளவு தலா ரூ.1,000 கோடிக்குமேல் இருந்தது.

2021-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை ஐ.பி.ஓ-கள் சராசரியாக 74% லாபத்தைப் பதிவு செய்தன. அதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 20% லாபத்தைப் பதிவு செய்தது. ஆனால், ரூ.1,000 கோடிக்குமேல் ஐ.பி.ஓ வெளியீட்டு அளவைக் கொண்டிருந்த நிறுவனங்களின் ஐ.பி.ஓ-கள் தள்ளுபடி விலையில்தான் வர்த்தகமாகி வருகின்றன. 2022-ல் வெளியான ஐ.பி.ஓ-களில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது ஒன்97 கம்யூனிகேஷன்ஸ். 65% சரிவு. அதே போல, எல்.ஐ.சி 30% சரிவு, ஸொமேட்டோ 20%. பி.பி ஃபின்டெக் 49%, ஸ்டார்ஹெல்த் அலைடு இன்ஷூரன்ஸ் 18%, கார்டிரேடு 60%, நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன் 35%, இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் 12% மற்றும் சன்மர் கெமிக்கல்ஸ் 22% சரிவை சந்தித்திருக் கின்றன. அதே சமயத்தில், அதானி வில்மர் ஐ.பி.ஓ வெளியிடப்பட்ட பங்கு விலையைவிட 205% ஏற்றத் தையும், சோனா பிரிசிசன் 82%, பதஞ்சலி ஃபுட்ஸ் 105%, பவர் கிரிட் 38%, வேதாந் ஃபேஷன்ஸ் 57% மற்றும் டெலிவரி 17.5% ஏற்றத்தைச் சந்தித்திருக்கின்றன.”

கீஸ்டோன் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு எப்போது?

“ரஸ்டோம்ஜி குழுமத்தால் நடத்தப்படும் கீஸ்டோன் ரியல்டர்ஸ் என்கிற மும்பையைச் சேர்ந்த ரியஸ் எஸ்டேட் நிறுவனம் புதிய பங்கு வெளியிட (IPO) முடிவு செய்திருக்கிறது. இந்த ஐ.பி.ஓ-வில் ரூ.560 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளையும், ரூ.75 கோடி மதிப்புள்ள பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையிலும் இந்நிறுவனம் வெளியிடுகிறது. பங்கு விலைப்பட்டை ரூ.514 - 541 என நிர்ணயித்துள்ளது. வருகிற நவம்பர் 14-ம் தேதி தொடங்கும் இந்த ஐ.பி.ஓ, நவம்பர் 16-ம் தேதி முடிகிறது. இந்த ஐ.பி.ஓ மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் நிதியை இந்நிறுவனம் கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், எதிர்கால ரியல் எஸ்டேட் திட்டங்களைக் கையகப்படுத்தவும் பயன்படுத்தும்.’’

எம்.எஸ்.சி.ஐ ரீபேலன்ஸிங் செய்யப்பட இருக்கிறதாமே..!

‘‘எம்.எஸ்.சி.ஐ இந்தியா இண்டெக்ஸின் அரையாண்டு இண்டெக்ஸ் ரீபேலன்சிங் நடக்க விருக்கும் சூழலில் இண்டெக்ஸிலிருந்து வெளியேறும் பங்குகளையும், இண்டெக்ஸுக்குள் இணையும் பங்குகளையும் பட்டியலிட்டுள்ளனர். வருண் பெவரேஜஸ், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், பஜாஜ் ஹோல்டிங்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோனாட் டிக்ஸ், ஏ.பி.பி இந்தியா ஆகிய ஏழு பங்குகள் இண்டெக்ஸில் இணைய உள்ளன. இந்த ஏழு பங்குகளும் சுமார் ரூ.13,000 கோடி அளவுக்கான முதலீடுகளை ஈர்க்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பங்குகள் ஏற்கெனவே அவற்றின் உச்ச மதிப்பில் வர்த்தகமாகி வருகின் றன. சில பங்குகள் புதிய உச்சங் களுக்கும் எட்டியுள்ளன. தீவிர முதலீட்டாளர்கள் இந்தப் பங்கு களில் ஏற்கெனவே அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறது. அதே சமயம், இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட், பயோகான் ஆகிய இரண்டு பங்குகளிலும் தலா ரூ.800 கோடி அளவுக்கான முதலீடுகள் வெளியேற வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பங்குகள் கடந்த சில நாள்களாகவே அவற்றின் இறக்க நிலை யில் வர்த்தகமாகின்றன.’’

நம் நாட்டில் டீமேட் கணக்குகள் தொடங்கப்படுவது குறைந்துள்ளதே...

‘‘கோவிட் தொற்றுக்குப் பிறகு, பங்குச் சந்தை முதலீட்டை நோக்கி பலரும் வெள்ளமென வந்தார்கள். அப்படிவருவது குறைந்திருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த அக்டோபரில் 17.7 லட்சம் பேர் மட்டுமே புதிதாக டீமேட் கணக்கு ஆரம் பித்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டின் ஜனவரியில் 34 லட்சம் பேர் டீமேட் கணக்கு தொடங்கினார்கள். பங்குச் சந்தை கடந்த ஓராண்டு காலமாக ஏற்ற, இறக்கத்தில் இருப்பதால், இந்த முதலீட்டைத் தேடிவருபவர் களின் எண்ணிக்கை குறைந் திருக்கலாம் என்கிறார்கள். ஆனால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் பெற நினைப்பவர்கள் டீமேட் கணக்கு தொடங்குவது அவசியம்’’ என்றவர், ‘‘18-ம் ஆண்டு சிறப்பிதழுக்குத் தயாராக ஆரம்பித்துவீட்டீர்கள்போல. வாழ்த்துகள்! உமது சேவை தமிழ் மக்களுக்குத் தேவை’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்!