பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்த ரூ.1 லட்சம் கோடி..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

நாலெட்ஜ் மரைன் அண்டு இன்ஜினீயரிங் வொர்க்ஸ் நிறுவனப் பங்கு விலை கடந்த நவம்பர் 16-ம் தேதி வர்த்தகத்தில் 5% உயர்ந்து, பி.எஸ்.இ-யில் ரூ.918 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

மழை வந்தால் குடை பிடித்துக்கொள்ளலாம் எனத் திட்டமிட்டு வந்திருந்தார் ஷேர்லக். நல்ல வேளையாக மழை ஏதுமில்லை. வந்தவரை உட்கார வைத்து வாழைப்பூ வடை தந்தோம். அதை ரசித்து சாப்பிட்ட ஷேர்லக், நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீட்டை அதிகரித் திருப்பது ஆரோக்கியமான விஷயம்தானே!

“நிச்சயமாக. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அதிகரித் துள்ளது. இதனால், சந்தை ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில், வெளிநாட்டு நிறுவனங்கள் 10 பங்குகளில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளன. அதிகபட்ச மாக டாடா ஸ்டீல் நிறுவனத் தில் ரூ.24,898 கோடி முதலீடு செய்துள்ளன. இந்தக் காலாண்டில் டாடா ஸ்டீல் பங்கின் விலை 14% ஏற்றம் கண்டிருக்கிறது.

இதை அடுத்து, வெளி நாட்டு நிறுவனங்கள், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்கு களில் ரூ.22,017 கோடியும், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகளில் ரூ.15,680 கோடியும், மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனப் பங்கு களில் ரூ.9,656 கோடியும், பார்தி ஏர்டெல் பங்குகளில் ரூ.8,807 கோடியும் முதலீடு செய்துள்ளன.

இவை மட்டுமல்லாமல், நியூ ஏஜ் பிசினஸ் வகை நிறுவனமான ஸொமேட் டோவில் ரூ.8,057 கோடி முதலீடு செய்துள்ளது. இந்தப் பங்கு ஐ.பி.ஓ வெளியீட்டு விலையைவிடக் குறைவாக ரூ.76-க்கு வர்த்தகமாகிறது.

தவிர, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிப் பங்குகளில் ரூ.7,615 கோடியும், ஹெச்.யு.எல் பங்குகளில் ரூ.4,495 கோடியும், கெயில் நிறுவனப் பங்குகளில் ரூ.4,018 கோடியும், ஐ.டி.சி பங்குகளில் ரூ.3255 கோடியும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து உள்ளன. நீண்ட கால முதலீட் டாளர்கள் இந்தப் பங்கு களைப் பரிசீலிக்கலாம்.”

நாலெட்ஜ் மரைன் அண்டு இன்ஜினீயரிங் வொர்க்ஸ் முன்னுரிமைப் பங்குகளை வழங்கு கிறதாமே... யார் யாருக்கு என்கிற விவரம் ஏதேனும் தெரியுமா?

“நாலெட்ஜ் மரைன் அண்டு இன்ஜினீயரிங் வொர்க்ஸ் நிறுவனப் பங்கு விலை கடந்த நவம்பர் 16-ம் தேதி வர்த்தகத்தில் 5% உயர்ந்து, பி.எஸ்.இ-யில் ரூ.918 என்ற புதிய உச்சத்தை எட்டியது. பிரபல முதலீட் டாளர் ஆஷிஷ் கச்சோலியா மற்றும் இன்னும் பிற முதலீட் டாளர்களுக்கு ரூ.10 முக மதிப்பு கொண்ட 5,65,000 முன்னுரிமைப் பங்குகளை பங்கு ஒன்று வீதம் ரூ.700-க்கு வழங்க இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து, இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த மூன்று வர்த்தக தினங்களில் 16% உயர்ந்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் இதன் பங்கு விலை 250% அதிகரித்துள்ளது. ஒரு வருடத்தில் சென்செக்ஸ் 2.8% ஏற்றத்தைச் சந்தித்திருக்கும் நிலையில், இதன் பங்கு விலை 740% அதிகரித்துள்ளது.’’

ஷேர்லக்: வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்த ரூ.1 லட்சம் கோடி..!

நைகா நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறதே?

“கடந்த நவம்பர் 10-ம் தேதி நைகா நிறுவனத்தின் ஐ.பி.ஓ லாக்-இன் பீரியட் முடிகிற சமயத்தில் அந்த நிறுவனம் போனஸ் பங்குகளை அறிவித்ததால், அதன் பங்கு விலை இறக்கம் தற்காலிகமாகத் தடைபட்டிருந்தது எனக் கடந்த வாரமே சொன்னேன். ஆனால், அதற்குப் பிறகான நாள்களில் இருந்து பங்கு விலை அதிக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

கடந்த நவம்பர் 16-ம் தேதி வர்த்தகத்தில் 9% வரை விலை சரிந்து, ரூ.175-க்கு வர்த்தகமானது. அன்றைய தினத்தின் வர்த்தகம் முடியும்போது பங்கு ஒன்றின் விலை ரூ.184.45-ஆகக் காணப்பட்டது. கடந்த இரண்டு வர்த்தகத் தினத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.19% இறக்கத்தை சந்தித்த நிலையில், இதன் பங்கு விலை 15% வரை சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இதன் பங்கு விலை 50% சரிவை அதன் முதலீட்டாளர்களுக்குப் பதிவு செய்துள்ளது. அதிக ஏற்றமும், அதிக இறக்கமும் கண்ட பங்கு இது என்பதால், இந்தப் பங்கை என்ன செய்யலாம் என்று தெரியாமல் தவிக்கிறார்கள் பல முதலீட்டாளர்கள்.’’

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் இரண்டாவது இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளதாமே?

“வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் கடந்த நவம்பர் 16-ம் தேதி இரண்டாவது இடைக்கால டிவிடெண்ட் வழங்குவது குறித்த தகவலை வெளியிட்டது. இந்தத் தகவலின் படி, தன் முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.15.50-ஐ இரண்டாவது இடைக்கால டிவிடெண்டாக வழங்குகிறது. இதற்கான மொத்தச் செலவு ரூ.6,500 கோடி.

64.92% பங்குகளை வைத்திருக்கும் அதன் தாய் நிறுவனமான வேதாந்தா, மொத்த இடைக்கால டிவிடெண்ட் தொகையில் அதாவது, ரூ. 6,549 கோடியில் கிட்டத்தட்ட ரூ.4,252 கோடியைப் பெறும். அதே போல, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் 29.50% பங்குகளை வைத்திருக்கும் அரசுக்கு மொத்த டிவிடெண்ட் தொகையில் கிட்டத்தட்ட ரூ.1,932 கோடி கிடைக்கும்.”

ஹிண்டால்கோ நிறுவனப் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

“ஹிண்டால்கோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 36% சரிந்து, ரூ.2,205 கோடியாகக் காணப்பட்டாலும், அதன் பங்கு விலை கடந்த நவம்பர் 14-ம் தேதி 5% அதிகரித்து, ரூ.449.90 என்கிற விலைக்கு வர்த்தகமானது. இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் இதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,427 கோடியாக இருந்தது.

அலுமினியம் விலை குறைந்ததன் காரணமாக இந்த நிறுவனத்தின் லாபம் பெருமளவு சரியும் என சந்தை மதிப்பீட் டாளர்களும், தரகு நிறுவனங்களும் கணித்திருந்தன. ஆனால், மதிப்பிடப்பட்டதைவிட அதிக லாபத்தை இந்த நிறுவனம் பதிவு செய்ததால், இதன் பங்கு விலை ஏற்றத்தைச் சந்தித்திருக் கிறது. மேலும், சீனாவில் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டதாலும் இந்த நிறுவனத்தின் விலை அதிகரித்துள்ளது.

மோதிலால் ஆஸ்வல் நிறுவனம் இந்தப் பங்குகளை வாங்கச் சொல்லி முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலையை ஏற்கெனவே நிர்ணயம் செய்திருந்த ரூ.480-லிருந்து அதிகரித்து, ரூ.520-ஆக அதிகப்படுத்தியிருக்கிறது. ஆனால், ஜே.பி.மோர்கன் பங்குத் தரகு நிறுவனம் ஓவர்வெயிட் மதிப்பீட்டை வழங்கி அதன் இலக்கு விலையை ரூ.560-லிருந்து ரூ.520-ஆகக் குறைத்துள்ளது.”

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்யும் ‘டார்லிங் பங்கால’ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருக்கிறதே?

“நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளி வந்துகொண்டிருக்கும் சமயம் இது. இந்த நேரத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தின் பங்குகளில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றன. முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்ப்பை சற்று பூர்த்தி செய்யவில்லை என்றாலும், பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் விருப்பமான பங்காக ரிலையன்ஸ் இருந்து வருகிறது. இது தவிர, இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ். ஹெச்.டி.எஃப்.சி, டாபர் ஆகிய பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிக முதலீடுகளை மேற்கொண்டிருக்கின்றன.”

எய்ஷர் மோட்டார்ஸ் மதிப்பீட்டை நோமுரா தரகு நிறுவனம் குறைத்தது ஏன்?

“எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாகனங்களுக் கான தேவை குறைந்திருப்பதையும், அந்த நிறுவனத்துக்கான போட்டி அதிகரித்திருப்ப தையும் சுட்டிக்காட்டி, மதிப் பீட்டைக் குறைத்து வழங்கி யிருக்கிறது நோமுரா தரகு நிறுவனம். மேலும், அந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலை ரூ.3,505-லிருந்து 2% குறைந்து, 12 மாத இலக்கு விலையாக ரூ.3,438-ஆக நிர்ண யித்துள்ளது.”

ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நிறுவனப் பங்கின் விலை அதிகரித்துள்ளதே என்ன காரணம்?

‘‘டி.எஸ்.பி இன்வெஸ்ட் மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனம், இந்த நிறுவனத்தின் 9.99% பங்குகளை வாங்க ரிசர்வ் வங்கி அனுமதி தந்ததுதான் காரணம். இந்தச் செய்தி வெளி யான பின்பு, இந்தப் பங்கின் விலை 12.64% வரை உயர்ந்தது. வர்த்தக முடிவில் 5 சதவிகிதத் துக்குமேல் உயர்ந்து முடிந்தது. இந்தப் பங்கை வாங்கலாம் என ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் பரிந்துரை செய் துள்ளது. இலக்கு விலை ரூ.70-ஆகவும் நிர்ணயித்துள்ளது.’’

அரபிந்தோ ஃபார்மா நிறுவனத் தின் இயக்குநரைக் கைது செய் துள்ளது அதிர்ச்சியளிக்கிறதே, ஏன் இப்படியொரு நடவடிக்கை?

“அமலாக்க இயக்குநரகம், அரபிந்தோ ஃபார்மா நிறுவனத் தின் இயக்குநர் சரத் ரெட்டியை டெல்லி மதுபான ஊழலில் கைது செய்ததை அடுத்து, நவம்பர் 10-ம் தேதி அன்று இந்த் நிறுவனத்தின் பங்குகள் பி.எஸ்.இ-யில் வர்த்தகத்தை முடிக்கும்போது 11.55% சரிந்து, ரூ.479-க்கு வர்த்தகம் ஆனது. அன்றைய தின வர்த்தகத்தின் போது பங்கு விலை 14% வரை சரிந்து, ரூ.464.50-க்கு வர்த்தக மானது. உயரதிகாரிகள் சரியாக நடந்துகொள்ளாவிட்டால், நிறுவனர்கள் மட்டுமல்ல, சிறு முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ப தற்கு இந்தச் செய்தி நல்லதொரு உதாரணம்.”

ஐநாக்ஸ் விண்ட் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு வெற்றி அடைந்ததா?

“ஐநாக்ஸ் விண்ட் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனம் ரூ.3,760 கோடி மதிப்புள்ள புதிய பங்கு களையும், ரூ.370 கோடி மதிப் புள்ள பங்குகளையும் ஓ.எஃப்.எஸ் முறையில் வெளியிட்டது. ஆனால், முதலீட்டாளர்கள் 10.37 கோடி பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப் பித்திருக்கின்றனர். அதாவது, வெளியிடப்பட்ட பங்கு அளவைவிட 1.55 மடங்கு அதிக பங்குகள் கேட்டு முதலீட் டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

இதில் சிறு முதலீட்டாளர்கள் மற்றும் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவு ஆதரவை வழங்கி யுள்ளனர். அதே சமயம், அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனம் சாரா முதலீட் டாளர்களின் பங்களிப்பு சற்றுக் குறைவாகவே காணப் பட்டது.

வருகிற நவம்பர் 18-ம் தேதிக் குள் ஐ.பி.ஓ பங்கு ஒதுக்கீட்டை ஐநாக்ஸ் கிரீன் நிறுவனம் இறுதி செய்யும் என்றும், நவம்பர் 21-ம் தேதிக்குள் ஐ.பி.ஓ-வில் பங்குகள் அலாட் செய்யப்படாத முதலீட்டாளர் களுக்குப் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும், மற்றும் தகுதியான முதலீட்டாளர்கள் நவம்பர் 22-ம் தேதிக்குள் தங்கள் டீமேட் கணக்குகளில் பங்குகளைப் பெறுவார்கள் என்றும் நிறுவனத்தின் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.’’

கீஸ்டோன் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருந்தது?

“கீஸ்டோன் ரியல்டர்ஸ் நிறுவனம் ரூ.635 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிட்டது. இந்த ஐ.பி.ஓ-வுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத் திருக்கிறது.

இந்த ஐ.பி.ஓ-வில் மொத்தம் 86.47 லட்சம் பங்குகள் வெளியிடப்பட்டன. ஆனால், முதலீட்டாளர்களிடம் இருந்து 1.71 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. வெளியிடப்பட்ட அளவைவிட 1.99 மடங்கு பங்குகளை முதலீட்டாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

அதிக சொத்து மதிப்புகொண்ட முதலீட்டாளர்கள் 3.03 மடங்கு பங்குகள் வேண்டியும், ரீடெய்ல் முதலீட்டாளர்கள் 48% பங்குகள் வேண்டியும், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் 3.84 மடங்கு பங்குகள் வேண்டியும் விண்ணப்பித்திருக்கிறார்கள். புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் ரூ.560 கோடியைக் கொண்டு கடன் திருப்பிச் செலுத்துவது மற்றும் புதிய ரியல் எஸ்டேட் புராஜெக்ட்டுகளை வாங்குவதற்கும் இந்த நிறுவனம் திட்ட மிட்டிருக்கிறது.”

ஷேர்லக்: வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்த ரூ.1 லட்சம் கோடி..!

குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் பங்கு பட்டியலிடப்பட்ட தேதியில் எப்படி வர்த்தகமானது?

“மெடாண்டா பிராண்டின்கீழ் மருத்துவமனைகளை இயக்கும் மற்றும் மருத்துவச் சேவைகளை வழங்கிவரும் குளோபல் ஹெல்த் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டு (ஐ.பி.ஓ) மூலம் ரூ.2,206 கோடி நிதி திரட்டும் நோக்கில் புதிய பங்குகளை வெளி யிட்டது.

இதற்கு அதிக சொத்து மதிப்புகொண்ட முதலீட்டாளர்கள் மற்றும் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பை வழங்கியிருந்தார்கள்.

சிறு முதலீட்டாளர்கள் 0.88 மடங்கு பங்குகள் வேண்டியும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 4.02 மடங்கு பங்குகள் வேண்டியும் விண்ணப் பிருந்தனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் 16-ம் தேதி இந்தப் பங்கு பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டது. நிர்ணயிக்கப்பட்ட ஐ.பி.ஓ விலையைவிட 19% பிரீமியம் விலையில் பட்டியலானது.

அதாவது, இந்தப் பங்கின் ஐ.பி.ஓ விலை ரூ.336. ஆனால், ரூ.401-க்கு பங்கு பட்டியலாகி இருக்கிறது. அன்றைய தினத்தில் இதன் பங்கு விலை ரூ.424.65 வரை ஏற்றத்தை சந்தித்தது. வர்த்தகம் முடியும் போது ரூ.415.30-க்கு வர்த்தகமானது.”

பிகாஜி ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ சக்சஸா?

“கடந்த நவம்பர் 3 - 7-ம் தேதி வெளியான பிகாஜி ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ பங்குகள், நவம்பர் 16-ம் தேதி அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டன. இதன் ஐ.பி.ஓ விலை ரூ.300. ஆனால், பங்குச் சந்தையில் பட்டியலானபோது 7.5% அதிகரித்து, பி.எஸ்.இ சந்தையில் ரூ.321.15-க்கு வர்த்தகமானது. என்.எஸ்.இ சந்தையில் ரூ.322.80-க்கு வர்த்தகமானது.

இந்த ஐ.பி.ஓ-வுக்கு முதலீட் டாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. ரூ.881 கோடி நிதி திரட்டும் நோக்கில் வெளியான இந்த ஐ.பி.ஓ-வில் 26.67 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப் பித்தனர்’’ என்றவர், ஏதோ ஒரு விஷயத்தை மறந்துவிட்டு, கொஞ்சம் யோசித்து ஞாபகப் படுத்தினார்.

‘‘நீர் வாரம்தோறும் வெள்ளிக் கிழமை அன்று காலை வெளி யிடும் ‘நாணயம் குட் ரீட்ஸ்’ என்கிற ஆன்லைன் மேகஸின் சூப்பர். கடந்த வாரம் ரியல் எஸ்டேட் குறித்து நீர் வெளியிட்ட ‘நாணயம் குட் ரீட்ஸ்’ (https://www.vikatan.com/vikatan-specials/11-nov-2022) மிகவும் அருமை யாக இருந்தது என என் நண்பர் கள் சொன்னார்கள். வளர்க உமது பணி. அடுத்த இதழ் 18-ம் ஆண்டு சிறப்பிதழ்தானே! படிப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார் ஷேர்லக்!

ஏற்ற இறக்கத்தில் எல்.ஐ.சி பங்கு விலை..!

எல்.ஐ.சி நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளி யிட்டுள்ளது. நிகர லாபம் ரூ.15,952-ஆக அதிகரித் துள்ளது. நிறுவனம் செய்திருக்கும் முதலீட்டின் மூலம் கிடைத்திருக்கும் வருமானம் 40% அதிகரித்துள்ளது. பிரீமிய வருமானம் 27% அதிகரித்துள்ளது. இதன் காரணமாகக் கடந்த வாரம் திங்கள்கிழமை வர்த்த கத்தில் இதன் பங்கு விலை 9% வரை அதிகரித்து, ரூ.682.70-க்கு வர்த்தகமானது. ஆனால், புதன்கிழமை வர்த்தக முடிவில் இதன் பங்கு விலை மீண்டும் சரிந்து, 642.65-க்கு வர்த்தகமானது.