மதியம் 2 மணிக்கே வந்து ஆச்சர்யம் தந்தார் ஷேர்லக். “மாலை 4 மணிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. அதான் சீக்கிரம் வந்துட்டேன். அரைமணி நேரம் உங்களுக்கு...” எனப் பரபரத்தார். நாம் கேள்விகளைக் கேட்கத் தயாரானோம்.

ஐ.எம்.எஃப் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துள்ளதே... என்ன காரணம்?
“கடந்த ஏப்ரல் மாதத்தில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி 12.5% அதிகரிக்கும் என ஐ.எம்.எஃப் கணித்திருந்தது. அதை, தற்போது 9.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.
சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான ‘ஃபிட்ச் ரேட்டிங்’ நிறுவனமும், நடப்பு நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை ஏற்கெனவே 10 சதவிகித மாகக் குறைத்தது. இதற்கு முன், இது இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 12.6 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்திருந்தது. இந்திய ரிசர்வ் வங்கியும் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 9.5% மட்டுமே இருக்கும் எனக் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா இனி வராது. அப்படியே வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்பது நிச்சயமாகத் தெரிந்தால்தான் பொருளாதார வளர்ச்சி சூடுபிடிக்க ஆரம்பிக்கும்.”
கோஃபோர்ஜ் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென அதிகரிக்க என்ன காரணம்?
‘‘ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான கோஃபோர்ஜ் நிறுவனம், ஜூலை 28-ம் தேதி ஜூன் காலாண்டு முடிவு களை வெளியிட்டது. அதில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 54% அதிகரித்து, 123.60 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்து, ரூ.4,827 என்கிற 52 வார புதிய உட்ச விலையைத் தொட்டது. ஜூலை 29-ம் தேதி வர்த்தகம் ஆரம்பிக்கும் போதே, இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஏற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமானது. 4,825 ரூபாயில் ஆரம்பித்த வர்த்தகம், காலை 11 மணி அளவில் ரூ.5,009 என்கிற நிலையில் காணப் பட்டது.”
கேப்லின் பாயின்ட் நிறுவனப் பங்கு விலை கடந்த வாரத்தில் ஒரே நாளில் 20% வரை உயர்ந்தது ஏன்?
‘‘இந்த நிறுவனத்தின் தயாரிப்பான சுமட்ரிப்டன் என்ற மருந்துக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் இறுதி ஒப்புதல் தந்திருக்கும் செய்தி வெளி யானதைத் தொடர்ந்து இந்தப் பங்கு விலை கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று 19.99% வரை உயர்ந்தது. இந்த நிறுவனப் பங்கு விலை கடந்த ஒரு மாதத்தில் 38 சதவிகிதமும், இந்த ஆண்டில் 79 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் வேகமான வளர்ச்சி கண்டுவரும் நிறுவன மாக இந்த நிறுவனம் இருக்கிறது.’’
பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா விமானச் சேவை நிறுவனத் தைத் தொடங்கப்போவதாகச் சொல்லியிருக்கிறாரே?
“சில வாரங்களுக்கு முன்பே இந்தத் தகவல் கசிந்தது. அப்போது யாரும் இதைப் பெரிதாகப் பேசவில்லை. ஆனால், இப்போது அவரே அதுபற்றி வெளிப்படையாக அறிவித்திருப்பதால் மற்ற விமானச் சேவை நிறுவனங்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஏனெனில், அடுத்த நான்கு ஆண்டுகளில் 70 விமானங் களுடன் இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை நிறுவனத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்காக சுமார் 35 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து உள்ளதாகவும், இந்த விமானச் சேவை நிறுவனத்தில் 40% பங்கு களை மட்டுமே தன்வசம் வைத்திருக்க முடிவு செய்திருப்ப தாகவும் ராகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 15 தினங்களில் நாட்டின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து, விமான நிறுவனம் தொடங்க ஆட்சேபம் இல்லா சான்றிதழ் கிடைத்துவிடும் என்றும், புதிதாகத் தொடங்க வுள்ள விமானச் சேவை நிறுவனம் ‘ஆகாசா ஏர்’ (Akasa Air) என்று அழைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோவிட் காலத்தில் விமான சேவை நிறுவனங்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன. இந்த நிலையில், ராகேஷ் ஆரம்பிக்கும் ‘ஆகாசா’ ஆகாயத்தில் நிரந்தரமாகப் பறக்குமா என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.”
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?
“பார்தி ஏர்டெல் நிறுவனம், தனது போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை மேம்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகப் பங்கு விலை, கடந்த ஜூலை 28-ம் தேதி 5% வரை அதிகரித்து, ரூ.507 என்கிற விலைக்கு வர்த்தகமானது.’’
ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ், ஏ.பி.எல் ட்ரிகோட் டியூப்ஸ் நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?
“இந்த நிறுவனங்களின் இயக்குநர் குழு கூட்டம், வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற விருக்கிறது. இதில் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், ஜூன் மாதக் காலாண்டு முடிவுகள் குறித்த விஷயங்களையும் பரிசீலனை செய்யும் என்றும் நிறுவனங்களின் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக, கடந்த ஜூலை 28-ம் தேதி ஏ.பி.எல் அப்போலோ டியூப் நிறுவனத்தின் பங்கு விலை 5% அதிகரித்து, ரூ.1,838 என்ற விலையில் வர்த்தகமானது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 14% அதிகரித்துள்ளது. அதேபோல, ஏ.பி.எல் ட்ரிகோட் டியூப்ஸ் 7% வரை அதிகரித்து, ரூ.1,670 என்கிற விலையில் வர்த்தகமானது. இந்தப் பங்கு விலை கடந்த இரண்டு தினங்களில் 12% வரை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.”
மத்திய அரசு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங் களைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கிறதே?
“பொதுக் காப்பீட்டு நிறுவனங்களைத் தனியார்மயமாக்க வசதியாக மத்திய அரசின் பொதுக் காப்பீடு நிறுவனங்கள் குறித்த சட்டம் திருத்தப்படுகிறது. இதன்படி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் மத்திய அரசின் பங்கு மூலதனம் குறைந்தபட்சம் 51% இருக்க வேண்டும் என்கிற விதிமுறை நீக்கப்படும். இந்தச் சட்டத் திருத்தத்துக்கு நாடாளு மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே தனியார் மயமாகும்.
யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் தனியார்மயமாகும் எனப் பரவலாக எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இப்போது நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனி மற்றும் ஓரியன்டல் இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகியவை யும் தனியார்மயமாக்கப் பட்டியலில் சேர்க்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காப்பீட்டு நிறுவனங்கள் இப்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை என்பதால், பங்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு இல்லை. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவிகிதமாக அதிகரிக்கப் பட்டிருக்கும் நிலையில், பொதுத்துறை காப்பீட்டுத்துறை சிறப்பான வளர்ச்சியைப் பெறும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது நாட்டில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களான எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ ஆகியவை மட்டுமே பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டிருக்கின்றன. அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகும்பட்சத்தில், அந்தப் பிரிவில் நிறுவனங்கள் பட்டியலிடப்படும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.”
இந்திப் பட நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ‘வியான் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்துக்கு செபி அபராதம் விதித்திருக்கிறதே?
‘‘பங்குச் சந்தை மோசடிகளில் ஒன்றான இன்சைடர் டிரேடிங் வர்த்தகத்தில் ஈடுபட்ட தற்காக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ‘வியான் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்துக்கு, செபி, ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பான நோட்டீஸ் கிடைத்த 45 நாள்களுக்குள் அபராதம் செலுத்த வேண்டும் என செபி உத்தர விட்டுள்ளது.’’
ரோலெக்ஸ் ரிங்க்ஸ் ஐ.பி.ஓ வெளியீடு எப்படி?
‘‘இந்த நிறுவனம் ரூ.731 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிட்டது. இதன் பங்கு விலை ரூ.880 - 900 என நிர்ணயம் செய்யப் பட்டிருந்தது. ஐ.பி.ஓ வெளியீட்டின் முதல் நாளான கடந்த வாரம் புதன்கிழமை அன்று, வெளியிடப் பட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாக வெளியிட்ட பங்குகளைவிட அதிக பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். மொத்தம் 56,85,556 பங்குகள் வெளியிடப்பட்டன. ஆனால், முதலீட்டாளர்கள் 63,47.712 பங்குகள் வேண்டி விண்ணப்பித்திருக் கிறார்கள். இது வெளியீட்டு அளவை விட 1.12 மடங்கு அதிகமாகும். நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 7% விண்ணப்பங்களும், ரீடெய்ல் முதலீட்டாளர் பிரிவில் 2.20 மடங்கு விண்ணப்பங்களும் வந்திருக்கின்றன.’’
தேவ்யானி இன்டர்நேஷனல் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுவது குறித்து...
“கே.எஃப்.சி, பிஷா ஹட், டாகோ பெல் ஆகிய நிறுவனங்களின் இந்திய ஃப்ரான்சைஸி செயல்பாட்டாளரான தேவ்யானி இன்டர்நேஷனல் நிறுவனம், நிதி திரட்டும் நோக்கில் புதிய பங்கு வெளியிட (ஐ.பி.ஓ) முடிவு செய்திருக்கிறது. இந்த நிறுவனம் பங்கு விலை குறித்த விவரங்களை இன்னும் வெளியிட வில்லை. வரும் நாள்களில் வெளி யாகும் என எதிர்பார்க்கலாம்.
இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் 440 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன. ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ள நிறுவனப் பங்குகளை ஓ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்யவும் இந்த நிறுவனம் முடிவு செய்திருகிறது. அதன்படி, மொத்தம் 15.53 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.’’
கடந்த வாரத்தில் மூன்று நாள் இறங்கிய சந்தை இறக்கம் கண்டது ஏன்?
‘‘நமது பங்குச் சந்தை இறங்கிய தற்குக் காரணம், அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் மீது எடுத்த சரமாரி நடவடிக்கை காரணமாக அந்த நிறுவனப் பங்குகள் கடுமையாக விழுந்திருக்கிறது. இந்த வீழ்ச்சி உலக நாடுகளின் பிற பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தன. நம் பங்குச் சந்தையும் திங்கள், செவ்வாய், புதன் என மூன்று நாள் விழுந்தன. சீன சந்தை இறக்கம் நம் சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பது செவ்வாய் அன்றே தெரிந்துவிட்டது. இனிவரும் நாள்களிலும் சந்தை இன்னும் கொஞ்சம் இறங்கினாலும் பயம் வேண்டாம்; இப்போதைய நிலையில், பெரிய அளவில் சந்தை விழ வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து. எதற்கும் ஜாக்கிரதையாக சந்தையை ஃபாலோ செய்யுங்கள்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் ஷேர்லக்.
குடும்பத் தலைவிகள், பணிபுரியும் பெண்கள்... உங்களுக்கு ஏற்ற முதலீடுகள்..!
அவள் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘குடும்பத் தலைவிகள், பணிபுரியும் பெண்கள்: உங்களுக்கு ஏற்ற முதலீடுகள்..!’ என்ற நிகழ்ச்சி, ஆகஸ்ட் 8, காலை 10 - 12 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர், நிதி ஆலோசகர்கள் வ.நாகப்பன், வித்யா பாலா மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ் ஆகியோர் பேசுகிறார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்! பதிவு செய்ய:http://bit.ly/NV-Aditya-Birla

பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்..!
நாணயம் விகடன் வழங்கும் ‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்..!’ என்ற கட்டண வகுப்பு நடக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 21, 2021, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மற்றும் ஆகஸ்ட் 22, 2021, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. கட்டணம் ரூ.6,000 ஆகும். Ectra.in நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார். பதிவு செய்ய https://bit.ly/3xSQ405