நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

ஷேர்லக்: அந்நிய நிதி நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்த துறைகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை 5 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். ‘துணிவா, வாரிசா..?’ என்று கேட்க, ‘‘நாணயம் விகடனுக்கு என்றும் துணிவு தான்’’ என்றபடி, தலையங் கத்தை நீட்டினோம். ‘‘சபாஷ், சரியான விளாசல்’’ என்றபடி நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரானார்.

மிகக் குறுகிய காலத்தில் மல்ட்டி பேக்கர் பங்குகளாக மாறிய ஐ.பி.ஓ பங்குகள் பற்றிச் சொல்லுங்களேன்...

“கடந்த டிசம்பரில் வெளி யான ஐ.பி.ஓ-களில் மூன்று ஐ.பி.ஓ-கள் மல்ட்டி பேக்கர் பங்குகளாக வளர்ந்திருக் கின்றன. அவை, 175% முதல் 400% வருமானத்தை முதலீட் டாளர்களுக்கு வழங்கியிருக் கின்றன.

பி.என்.ஜி.எஸ் கார்கி ஃபேஷன் ஜூவல்லரி நிறுவனம் கடந்த டிசம்பர் 20-ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலானது. பட்டியலான முதல் நாள் வெளியீட்டு விலையான 30 ரூபாயைவிட 90% பிரீமியம் விலையில் பட்டியலானது. மிகக் குறுகிய காலத்திலேயே இந்தப் பங்கு 400% விலை உயர்ந்துள்ளது.

அதேபோல, துரோணாச் சார்யா ஏரியல் இன்னோ வேஷன்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ கடந்த டிசம்பர் 23-ம் தேதி பி.எஸ்.இ சந்தையில் பட்டியலானது. முதல் நாளி லேயே வெளியிடப்பட்ட விலையான ரூ.54-லிருந்து 98.3% அதிகரித்து ரூ.107.21-க்கு வர்த்தகமானது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று 5% அப்பர் சர்க்யூட் விலையான ரூ.231.80-க்கு வர்த்தகமானது. வெளியிடப்பட்ட பங்கு விலையிலிருந்து இது 330% அதிகமாகும்.

பெஹெடி ரீசைக்ளிங் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் 8-ம் தேதி ஐ.பி.ஓ வெளியிட்டது. இதன் ஐ.பி.ஓ பங்கு விலை ரூ.45. முதல் நாளிலேயே 153% பங்கு விலை அதிகரித்து, ரூ.114-க்கு வர்த்தகமானது. கடந்த வாரம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை ரூ.117.25-க்கு வர்த்தகமானது. ஐ.பி.ஓ விலையில் இருந்து 168% அதிகரித்துள்ளது.

இந்தப் பங்குகளை இனிமேல் வாங்குகிறவர்கள் நன்கு ஆராய்ந்த பின்பே வாங்க வேண்டும். கடந்த காலத்தில் கிடைத்ததைப் போன்ற வருமானம் இனியும் கிடைக்கும் என்கிற ஆசையில் வாங்கக் கூடாது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

டி.சி.எஸ்ஸின் காலாண்டு முடிவு எப்படி?

‘‘டி.சி.எஸ் நிறுவனம் டிசம்பர் மாதத்துக்கான மூன்றாவது காலாண்டு முடிவை எப்போதும் போல முதலில் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் 19.1% அதிகரித்து, ரூ.5,82,290 கோடி யாக உள்ளது. இந்த நிறுவனத் தின் நிகர லாபம் சந்தை எதிர்பார்ப்பைவிட 11% அதிகரித்து, ரூ.10,846 கோடி யாக உள்ளது. இந்த நிறுவனம் 75 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. அதில் 67 ரூபாய் ஸ்பெஷல் டிவி டெண்ட் என்ற வகையில் வழங்கப்பட இருக்கிறது.

டி.சி.எஸ் நிறுவனத்தின் முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே அமைந்திருந்தது. வரும் நாள்களில் பல முன்னணி நிறுவனங்கள் முடிவுகளை வெளியிட இருக்கின்றன. அந்த முடிவுகளைப் பொறுத்து வரும் நாள்களில் பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தவிர, பட்ஜெட் தாக்கலும் வரப் போகிறது. எனவே, முதலீட்டாளர்கள் நிதானமாக சந்தையை அணுகுவது நல்லது.’’

சில குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளில் அந்நிய நிதி நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறதே?

“உண்மைதான். அவை 2022-ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் பின்பாதியில் சில துறைகளில் முதலீட்டை ஆரம்பித்திருக்கின்றன. இந்தக் கால கட்டத்தில் அந்நிய நிறுவனங்கள் இந்தியப் பங்குகளில் 25 கோடி டாலரை (இந்திய ரூபாயில் சுமார் 2,050 கோடி) நிகரமாக முதலீடு செய்திருக்கின்றன. நிதிச் சேவை நிறுவனப் பங்குகளில் ரூ.2,780 கோடியும், எஃப்.எம்.சி.ஜி துறை நிறுவனப் பங்குகளில் ரூ.1,353 கோடியும், நுகர்வோர் சேவைகள் துறை நிறுவனப் பங்குகளில் ரூ.968 கோடியும், ரியல் எஸ்டேட் துறை நிறுவனப் பங்குகளில் சுமார் ரூ.100 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், சாஃப்ட்வேர் மற்றும் சேவை நிறுவனப் பங்குகளை ரூ.2,247 கோடி மதிப்புக்கு அந்நிய நிதி நிறுவனங்கள் விற்று லாபம் பார்த்திருக் கின்றன. ரூ.550 கோடி மதிப்புள்ள எரிசக்தி நிறுவனப் பங்குகளை விற்றிருக்கின்றன. ரூ.225 கோடி மதிப்புள்ள வாகன மற்றும் வாகன உதிரிபாக நிறுவனப் பங்கு களை எஃப்.ஐ.ஐ-கள் விற்றிருக்கின்றன. மேலும், டெலிகாம் துறையைச் சேர்ந்த ரூ.74 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கிறார்கள்.”

ரயில் விகாஸ் நிகாம் பங்கு ஏற்றம் கண்டது ஏன்?

“இந்த நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் ரூ.1,134 கோடி மதிப்பிலான ஒரு கட்டுமானத் திட்டம் மற்றும் 9 எலிவேட்டட் மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் ஒப்பந்த ஆர்டர் கிடைத்துள்ளது. கடந்த ஜனவரி 10-ம் தேதி இதற்கான அதிகாரபூர்வ கடிதம் கிடைத்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு 1.85% ஏற்றம் கண்டு வர்த்தகமானது. நிறுவனத்தின் லாப வளர்ச்சி செப்டம்பர் மாத காலாண்டில் 36.5% உயர்ந்து, ரூ.381.22 கோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.”

புது வருடத்தில் 8 வர்த்தக நாளில் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு பங்குகளை எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள் விற்றிருக்கிறார்களே?

“கடந்த சில நாள்களாக நம் பங்குச் சந்தை இறக்கத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று. தவிர, விரைவில் நடக்க உள்ள ஃபெடரல் வங்கிக் கூட்டத்தில் மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. போர் தொடரும்பட்சத்தில் கமாடிட்டிகளின் விலை உயர வாய்ப்புள்ளது. ஏற்கெனவே பணவீக்கம் சவாலான விஷயமாக இருந்துவரும் நிலையில், கமாடிட்டிகளின் விலை உயர்வு பணவீக்கத்தில் தாக்கத்தை உண்டாக்கும்.

இது போன்ற பல்வேறு காரணங்களை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருவது சந்தையின் போக்கை இறக்கத்துக்குக் கொண்டு செல்வதாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை கவனமாக அணுக வேண்டிய காலகட்டம் இது என்பதை மறக்கக் கூடாது.”

டி.பி ரியாலிட்டி பங்கு விலை அப்பர் சர்க்யூட்டில் லாக் செய்திருக் கிறார்களே, என்ன காரணம்?

“டி.பி ரியாலிட்டி நிறுவனத் துக்குச் சொந்தமான கொர்கான் ஹோட்டல் அண்ட் ரியாலிட்டி நிறுவனம் ரிலையன்ஸ் கமர் ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனத் திடம் வாங்கிய கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, ரூ.185.60 கோடியைத் தவணை முறையில் செலுத்த உள்ளது. இந்த நிறுவனம் தனது கடன்களைக் குறைப்பதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையடுத்து இந்த நிறுவனப் பங்கின் விலை சரசரவென உயர்ந்து வர்த்தகமானது. பி.எஸ்.இ-யில் 5% வரை உயர்ந்து வர்த்தகமான நிலையில் அப்பர் சர்க்யூட்டில் லாக் செய்யப் பட்டிருக்கிறது. இதன் விலை ஒரே நாளில் 10%, 20% என உயர்ந்துவிடக் கூடாது என்பதற் காக இப்படி அப்பர் சர்க்யூட் லிமிட் நிர்ணயம் செய்திருக் கிறார்கள்.”

பேடிஎம் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தது ஏன்?

“பேடிஎம் பங்கு விலை கடந்த வாரம் வியாழன் அன்று 8.8% வரை சரிந்தது. இதற்குக் காரணம், பேடிஎம் நிறுவனத்தின் 19.20 மில்லியன் பங்குகள் அதாவது, சுமார் 3% பங்குகளை அலிபாபா குழுமத்தின் ஒரு நிறுவனமான ஆன்ட் (Ant) ஃபைனான்ஷியல் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இப்படித் திடீரென்று மொத்தமாக பங்குகள் விற்கப்பட்டதால், பேடிஎம் பங்கு சரிவைச் சந்தித்தது.

பேடிஎம் நிறுவனத்தின் பங்கு சமீப காலமாகவே தொடர்ந்து விலை இறக்கம் கண்டுவந்தது. விலை இறக்கத்தைக் கட்டுக்குள் வைக்க பேடிஎம் நிறுவனம் பங்குகளைத் திரும்ப வாங்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. சமீபத்தில் ரூ.850 கோடி மதிப்புக்கு பங்குகளைத் திரும்ப வாங்கும் திட்டத்துக்கு இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்தப் பங்கு ரூ.540 என்ற அளவில் வர்த்தகமாகிறது. அதிகபட்சமாக ரூ.810 என்ற விலையில் பங்குகளைத் திரும்ப வாங்கலாம் எனத் தெரிகிறது.”

பில்கேர் பங்கின் விலை ஏற்றத்துக்கு என்ன காரணம்?

“இந்த நிறுவனத்தின் பங்குகளை பிரபல முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன் வாலா விற்றதுதான் காரணம். ஜனவரி 9 முதல் 11-ம் தேதி வரையிலான மூன்று வர்த்தக தினங்களில் மொத்தமாக 15.9 லட்சம் பில்கேர் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இதனால் இந்த நிறுவனப் பங்கின் விலை 3 வர்த்தக தினங் களில் 25% உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது. ராகேஷ் ஜுன் ஜுன்வாலா ஒரு பங்கை விற்றால், விலை குறையும். அவர் மனைவி விற்றால், விலை உயர்கிறது. முதலீட்டாளர்களின் சிந்தனைப் போக்கு விநோதமானதுதான்.”

பார்தி ஏர்டெல் பங்கின் விலை குறைந்திருக்கிறதே..?

“ஜே.பி மார்கன் நிறுவனம் பார்தி ஏர்டெல் பங்குக்கான ரேட்டிங்கைக் குறைத்ததால், அதன் பங்கு விலை 4% வரை குறைந்துள்ளது. 2022-ல் சென்செக்ஸ் 4.4% ஏற்றம் கண்டிருந்த நிலையில், பார்தி ஏர்டெல் 18% வளர்ச்சி கண்டது. ஆனால், தற்போது எதிர் பார்த்ததைவிட அதிகமான மூலதனச் செலவு, தாமதமான கட்டணச் சீரமைப்பு, 5ஜி-யின் மூலமாக வருவாய் எதிர் பார்த்தபடி இல்லாமல் போனது எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்த பங்கின் ரேட்டிங்கை ஜே.பி மார்கன் குறைத்துள்ளது. தற்போது இந்த பங்கின் புதிய இலக்கு விலையையும் குறைத்து ரூ.710 என நிர்ணயித்துள்ளது” என்றவர், ‘‘கடந்த வாரம் நீர் நடத்திய மியூச்சுவல் ஃபண்ட் கூட்டங்களுக்கு நல்ல கூட்டம் வந்திருந்தது. தொடரட்டும் உமது பணி’’ என்று பாராட்டிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

இண்டெக்ஸ் ஃபண்டுகள்... பெருகும் முதலீட்டாளர்களின் ஆதரவு..!

கடந்த ஓராண்டுக் காலத்தில் இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட தொகை மிகவும் அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.42,880 கோடியிலிருந்து ரூ.1.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஓராண்டுக் காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய இண்டெக்ஸ் ஃபண்டுகளின் எண்ணிக்கை 62-லிருந்து 137-ஆக அதிகரித்துள்ளது. ஓராண்டில் மட்டும் இண்டெக்ஸ் ஃபண்டுகளின் முதலீட்டுக் கணக்குகள் எண்ணிக்கை 50% உயர்ந்து 30 லட்சமாக அதிகரித்துள்ளது. இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் லார்ஜ்கேப் பிரிவில் சுமார் 155 திட்டங்கள் உள்ளன. கடந்த பத்தாண்டுக் காலத்தில் (ஜனவரி 9, 2023 நிலவரப்படி) டாப் 10 ஃபண்டுகள் ஆண்டுக்கு சராசரியாகக் கொடுத்த வருமானம் 15 - 17 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் 13 - 14%, மூன்றாண்டுகளில் 16 - 18% வருமானம் கொடுத்திருக்கின்றன. டாப் ஃபண்டுகளின் வருமானம் அனைத்துக் காலகட்டத்திலும் பணவீக்க விகிதத்தைவிட சுமார் 4% - 8% அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் அனைவரும் இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.

எல்.ஐ.சி-யின் புதிய ஜீவன் சாந்தி பாலிசி பென்ஷன் அதிகரிப்பு..!

எல்.ஐ.சி ஆஃப் இந்தியா, அதன் பென்ஷன் (ஆன்யுனிட்டி) திட்டமான புதிய ஜீவன் சாந்தி பாலிசியில் வருடாந்தர பென்ஷன் விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதிக கொள்முதல் விலைக்கான ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒத்திவைப்புக் காலத்தின் அடிப்படையில் கொள்முதல் விலை ரூ.1,000-க்கு ரூ.3 முதல் ரூ.9.75 வரையில் பென்ஷன் விகிதங்கள் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன. ஒற்றை பிரீமிய திட்டமான இந்த பாலிசியில் பாலிசிதாரருக்கு தனிநபர் மற்றும் கணவர், மனைவியுடன்கூடிய ‘ஜாயின்ட் லைஃப்’ ஒத்திவைக்கப்பட்ட பென்ஷனைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இந்த பாலிசி பணியில் இருப்பவர்களுக்கு அல்லது சுயதொழில் செய்பவர்களுக்கு குறிப்பிட்ட ஒத்திவைக்கப்பட்ட காலத்துக்குப் பின் நிலையான பென்ஷன் வருமானத்தை அளிக்கக்கூடியது. பாலிசியின் தொடக்கத்திலேயே வருடாந்தர பென்ஷன் விகிதங்கள் உத்தரவாதமாக அளிக்கப்படுகின்றன. இந்தத் திட்டம் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் கிடைக்கிறது.