நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிதாக முதலீடு செய்த பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழன் அன்று மாலை 4 மணிக்கு வேகமாக நம் கேபினுக்குள் நுழைந்த ஷேர்லக், ‘‘சாரி, டீ எல்லாம் வேண்டாம். தண்ணீர் மட்டும் போதும். 5 மணிக்கு முக்கிய மான ஒருவரை சந்திக்க செல்ல வேண்டும்’’ என்று பரபரப்பு காட்ட, நாம் அவருக்கு ஒரு தண்ணீர் பாட்டிலைத் தந்துவிட்டு, கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

பட்ஜெட்டுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், துறை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டுமா?

“வருகிற பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023- 24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த நிலையில், எல்.கே.பி செக்யூரிட்டிஸ் நிறுவனம், பவர் ஃபைனான்ஸ் கார்ப்ப ரேஷன், ஐ.டி.சி, டாடா பவர், என்.டி.பி.சி, சீமென்ஸ் மற்றும் சம்பல் ஃபெர்டி லைசர்ஸ் அண்டு கெமிக் கல்ஸ் ஆகிய ஆறு பங்கு களைக் குறிப்பிட்டு, இந்தப் பங்குகளின் விலை அடுத்த 3-4 மாதங்களில் ஏற்றத்தைச் சந்திக்கும் எனச் சொல்லியிருக்கிறது.

எல்.கே.பி செக்யூரிட்டிஸ் நிறுவனம், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இலக்கு விலையை ரூ.167-ஆகவும், ஐ.டி.சி நிறுவனப் பங்கின் இலக்கு விலையை ரூ.375-ஆகவும், டாடா பவர் நிறுவனப் பங்கின் இலக்கு விலையை ரூ.270-ஆகவும், என்.டி.பி.சி-யின் இலக்கு விலை ரூ.200-ஆகவும், சீமென்ஸ் நிறுவனப் பங்கின் இலக்கு விலை ரூ.3,400-ஆகவும், சம்பல் ஃபெர்ட்டிலைசர் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலை ரூ360-ஆகவும் இருக்கும் எனச் சொல்லியிருக்கிறது.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.20,000 கோடிக்கு மெகா எஃப்.பி.ஓ வெளியிடுகிறதே!

“அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.20,000 கோடி மதிப்பிலான தொடர் பங்கு வெளியீட்டை (FPO) ஜனவரி 27-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதன் விலைப் பட்டை ரூ.3,112 - 3,276. இதன் குறைந்தபட்ச விலையானது தற்போதைய வர்த்தக விலையைவிட 13.5% குறைவான விலையாகும். ஜனவரி 31-ம் தேதி வரை இருக்கும் இந்த எஃப்.பி.ஓ வெளியீட்டில் குறைந்தபட்சம் நான்கு பங்குகள் வரை வாங்கலாம். அதற்குமேல் வாங்க நினைத்தால், நான்கின் மடங்கில் வாங்கலாம்.

இந்த அறிவிப்பு வெளியானதும் கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 1.2% வரை சரிந்து, ரூ.3,596.70-க்கு வர்த்தகமானது. வியாழன் வர்த்தகத்தில் மேலும் சரிந்து, ரூ.3,443.80-க்கு வர்த்தக மானது. இந்த எஃப்.பி.ஓ வெளியீட்டில் நிறுவனத்தின் ஊழியர் களுக்கு 5%, சிறு முதலீட்டாளர்களுக்கு 35%, நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு 15% ஒதுக்கப்பட்டுள்ளது.”

ஓலாடெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறதே... என்ன காரணம்?

“ஓலாடெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வும் கடந்த ஐந்து மாதங்களில் பல மடங்கு விலை உயர்ந்த மல்ட்டி பேக்கர் பங்காக வளர்ந்திருக்கிறது. எஸ்.எம்.இ துறையைச் சேர்ந்த இந்தப் பங்கானது கடந்த 2022-ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.27 என்கிற விலையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. முதல் நாள் வர்த்தகத்திலேயே 90% விலை அதிகரித்து, ரூ.53.85-க்கு இந்தப் பங்கு விலையானது வர்த்தகமானது. அதற்குப் பிறகான நாள்களில் இந்தப் பங்கு விலை மளமளவென அதிகரித்து, ரூ.135 வரை ஏற்றத்தைச் சந்தித்தது. தற்போது இதன் பங்கு விலை ரூ.85-க்கு வர்த்தக மாகிறது. வெளியிடப்பட்ட விலையிலிருந்து இந்தப் பங்கு விலை 200% ஏறியிருந்தாலும், மிக மிக அதிக ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் மட்டும் இந்தப் பங்கை ஃபாலோ செய்யலாம்.’’

கடந்த டிசம்பர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதாகச் சொல்லப்படுகிறதே?

“கடந்த டிசம்பர் மாதத்தில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ரூ.14,700 கோடியை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளது. அதே சமயம், ரூ.6,300 கோடி பங்குகளை விற்று, எஃப்.ஐ.ஐ-கள் வெளியேறியிருக்கிறார்கள். இதில், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஐந்து லட்சம் பங்குகளை வாங்கியிருக்கிறது. மேலும், சுலா வினயார்ட்ஸ், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் மற்றும் லேண்ட்மார்க் கார்ஸ் ஆகிய பங்குகளையும் வாங்கியிருக்கிறது. அதே போல, ஐ.சி.ஐ.சி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் நிறுவனத்தின் 17.85 லட்சம் பங்குகளை வாங்கியிருக்கிறது. அத்துடன் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் மற்றும் பி.இ.எம்.எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கியிருக்கிறது.

கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், எலின் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத் தின் 14.75 லட்சம் பங்குகளையும், சௌத் இந்தியன் பேங்க், அதானி பவர், தீபக் ஃபெர்டி லைசர்ஸ் ஆகிய நிறுவனங் களின் பங்குகளை வாங்கி யிருக்கிறது. எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சுலா வினயார்ட்ஸ் நிறுவனத்தின் 27.76 லட்சம் பங்குகளையும், அத்துடன் எலின் எலெக்ட் ரானிக்ஸ் மற்றும் சாகர் சிமென்ட்ஸ் ஆகிய பங்கு களையும் வாங்கியிருக்கிறது. டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆபர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 7.97 லட்சம் பங்குகளையும், ஹிண்ட்வேர் ஹோம் மற்றும் டாடா கம்யூனி கேஷன் நிறுவனத்தின் பங்குகளையும் வாங்கியிருக்கிறது.

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், கேஃபின் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 61.99 லட்சம் பங்குகளையும், அத்துடன் வெஸ்ட் லைஃப் ஃபுட், எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஆகிய பங்குகளையும் வாங்கி யிருக்கிறது. ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஜி.எம்.எம் பிஃபாட்லர் நிறுவனத்தின் 17 லட்சம் பங்குகளை வாங்கி யிருக்கிறது. அத்துடன் சுலா வினயார்ட்ஸ், எலின் எலெக்ட் ரானிக்ஸ் மற்றும் லேண்ட் மார்க் கார்ஸ் நிறுவனத்தின் பங்குகளையும் வாங்கியிருக் கிறது.

அதேபோல, டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கிர்லோஸ்கர் ஃபெரோஸ் நிறுவனத்தின் 5.28 லட்சம் பங்குகளையும், ஆஸ்டர் டி.எம் ஹெல்த், சி.சி.எல் புராடக்ட்ஸ் மற்றும் மெட்ரோபொலிஸ் ஹெல்த் ஆகிய நிறுவனப் பங்குகளையும் வாங்கியிருக்கிறது. எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 7 லட்சம் பங்குகளை யு.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. அத்துடன் கேஃபின் டெக்னாலஜிஸ், ரேடியன்ட் கேஸ் மேனேஜ்மென்ட் மற்றும் கே.பி.ஆர் மில் ஆகிய நிறுவனத்தின் பங்கு களையும் வாங்கியிருக்கிறது.”

லேண்ட்மார்க் கார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று லேண்ட்மார்க் கார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை பி.எஸ்.இ சந்தையில் ஒரே நாளில் 7% அதிகரித்து, ரூ.598.60-க்கு வர்த்தகமானது. கடந்த டிசம்பர் காலாண்டு முடிவின்படி, இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 41.29% அதிகரித்து, ரூ.3,384 கோடியாக உயர்ந்திருக்கிறது என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 1.5% ஏற்றத்தைச் சந்தித்த நிலையில், இதன் பங்கு விலை 13% வரை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. ரூ.506 என்கிற வெளியீட்டு விலையில் இருந்து 18% வரை விலை அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை மதிய நிலவரப்படி, இந்தப் பங்கு விலை ரூ.610.80.’’

உஷா மார்டின் நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்துகொண்டே இருக்கிறதே..?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று உஷா மார்டின் நிறுவனத்தின் பங்கு விலை 8% அதிகரித்து, ரூ.198.75-க்கு வர்த்தகமானது. அன்றைய தினத்தில் 56.4 லட்சம் பங்குகள் கைமாறின. கடந்த ஒரு மாதத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.41% சரிந்துள்ள நிலையில் இந்த பங்கு விலை மட்டும் 50% ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இதன் பங்கு விலை 115% ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது.”

நைகா நிறுவனத்தின் பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருவதால், முதலீட்டாளர்கள் கவலையில் இருக்கிறார்களே..!

“நைகா நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வார புதன்கிழமை அன்று 7.5% வரை சரிந்து, ரூ.123.30-க்கு வர்த்தகமானது. இது 52 வார அதிகபட்ச சரிவாகும். கடந்த ஐந்து தினங்களில் மட்டும் இதன் பங்கு விலை 20% வரை சரிந்துள்ளது. கடந்த ஆறு மாதத்தில் இதன் பங்கு விலை 45% சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20% இந்த பங்கு சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் ஐ.பி.ஓ-வுக்கான லாக்இன் பீரியட் முடிந்ததால், நிறைய முதலீட்டாளர்கள் தங்களிடம் இருந்த நைகா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தனர். குறிப்பாக, என்.ஆர்.ஐ முதலீட்டாளரான மாலா கோபால் கோன்கர், நைகா நிறுவனத்தின் 5.75 கோடி பங்குகளை, பங்கு ஒன்றுக்கு சராசரியாக ரூ.175.48-க்கு விற்றார். லைட்ஹவுஸ் இந்தியா ஃபண்ட்-III நைகா நிறுவனத்தின் பங்குகளை 525 கோடி ரூபாய்க்கு விற்றது. இவற்றின் காரணமாக பங்கின் விலை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.”

ஓயோ (Oyo) நிறுவனம் ஐ.பி.ஓ வரப்போகிறதாமே..!

“செபி அமைப்பு நடப்பு ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஓயோ நிறுவனத்திடம் புதிய பங்கு வெளியீடு தொடர்பான டி.ஆர்.ஹெச்.பி ஆவணத்தை மறுசீரமைத்து மீண்டும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டது. இந்த நிலையில், வருகிற பிப்ரவரி மத்தியில் மறுசீரமைக்கப்பட்ட டி.ஆர்.ஹெச்.பி ஆவணங்களை சமர்பிப்பதாக செபியிடம் ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் செபியின் அனுமதி ஓயோ ஐ.பி.ஓ-வுக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகே மற்ற விவரங்கள் தெரியவரும்.”

ஜே.ஜி (J.G) கெமிக்கல்ஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிட களம் இறங்கியிருக்கிறதா?

‘‘கொல்கத்தாவைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல் படும் ஜிங்க் ஆக்ஸைடு தயாரிக் கும் நிறுவனமான ஜே.ஜி கெமிக்கல்ஸ் ஐ.பி.ஓ வெளியிட அனுமதி கேட்டு செபியிடம் ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளது. இந்த ஐ.பி.ஓ-வில் ரூ.202.50 கோடி மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியிடப் படுகிறது. ஓ.எஃப்.எஸ் முறையில் 57 லட்சம் பங்குகள் வெளியிடப்படுகிறது’’ என்று சொன்னவர், ‘‘வருகிற பட்ஜெட்டில் நீண்ட நாள் மூலதன ஆதாய வரி குறித்து சில அறிவிப்புகள் வரலாம் என்கிறார்கள். பார்ப்போம், என்னென்ன அறிவிப்புகள் வருகிறது என்று’’ என்றபடி , 5 மணி சந்திப்புக்காக வேகமாகப் புறப்பட்டுச் சென்றார் ஷேர்லக்!

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

அமெரிக்கா வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை..!

நாணயம் விகடன் நடத்தும் ‘அமெரிக்கா வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை’ என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 18-ம் தேதி இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை (இந்திய நேரம்) நடைபெற உள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (NRI) வருமான வரி முதலீடு / வருமான வரிக் கணக்கு தாக்கல், வீடு, மனை வாங்குதல், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இவற்றுக்கு விடையளிக்கும் விதமாக இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியை என்.ஆர்.ஐ-களுக்கு வருமான வரி மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கிவரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் வழங்குகிறார். இவர் ‘ஜி.எஸ்.டி: ஒரே நாடு, ஒரே வரி’ என்கிற புத்தகத்தை எழுதி இருக்கிறார். ஆடிட்டிங் பணியில் 30 ஆண்டுக்கால அனுபவம்கொண்டவர். இந்த வகுப்புக்கான கட்டணம் ரூ.900 ஆகும். முன்பதிவுக்கு: https://bit.ly/3QMIs9N