Published:Updated:

2022-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும்?

கலந்தாய்வுக் கூட்டம்...
பிரீமியம் ஸ்டோரி
News
கலந்தாய்வுக் கூட்டம்...

பங்குச் சந்தை

புதிய ஆண்டான 2022-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (HCC), நிபுணர்களின் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. ‘சென்செக்ஸ் 2022’ என்கிற தலைப்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் அர்ஜுன் ஜி.நாகராஜன், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா நிறுவனத்தின் ஈக்விட்டி பிரிவு முதன்மை முதலீட்டு அதிகாரி ஆனந்த் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் சிறப்புரையாற்றினார்கள்.

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய அர்ஜுன், ‘‘கொரோனா, டெல்டா போன்ற வைரஸ்களுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் பாதிப்பு மிகக் குறைவுதான். இதனால், பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தவில்லை. சமூகக் கட்டுப்பாடுகள், தடுப்பூசிகள் ஆகிய வற்றையே பல நாடுகள் வலியுறுத்துகின்றன.

முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஃபண்ட் மேனேஜர் ஆனந்த் ராதாகிருஷ்ணன், 
ஹெச்.சி.சி பிரசிடென்ட் கே.சுரேஷ், முதலீட்டு ஆலோசகர் ஷியாம் சேகர், பொருளாதார நிபுணர் அர்ஜுன் ஜி நாகராஜன்
முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஃபண்ட் மேனேஜர் ஆனந்த் ராதாகிருஷ்ணன், ஹெச்.சி.சி பிரசிடென்ட் கே.சுரேஷ், முதலீட்டு ஆலோசகர் ஷியாம் சேகர், பொருளாதார நிபுணர் அர்ஜுன் ஜி நாகராஜன்

பொதுவாக, விலைவாசி (பணவீக்கம்) அதிகரித்தால், மத்திய வங்கிகள் வட்டியை அதிகரிக்கும். அதிக பொருளாதார வளர்ச்சி என்பது பணவீக்க விகிதத்தை உருவாக்கும். அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அங்கு விலைவாசி அதிகரித்து வருகிறது. இதனால், வட்டி அதிகரிக்கப்படும். அப்படி செய்யும்பட்சத்தில், இந்தியாவிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறக்கூடும். ஆனாலும் 2022-ம் ஆண்டில் இந்தியாவில் நெகட்டிவ் நிகழ்வுகள் குறைவாக இருக்கும்” என்றார்.

அடுத்து பேசினார் ஆனந்த் ராதாகிருஷ்ணன். ‘‘2022 –ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தையின் செயல்பாடு என்பது கச்சா எண்ணெய் விலை, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி, பணவீக்க விகிதம், வட்டி விகிதம், லிக்விடிட்டி, வேல்யூவேஷன் ஆகியவற்றைப் பொறுத்திருக்கிறது. இந்தியாவின் வட்டி விகிதம் நடுத்தர அளவில் இருந்தால், வட்டி விகிதமும் நடுத்தர அளவில் இருக்கும். எதிர் காலத்தில் மின்சார வாகனம், வீட்டு வசதி, உற்பத்தித்துறை சார்ந்த நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி பெறக்கூடும். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவு, பெட்ரோல் விலை அதிகரிப்பு போன்றவை இந்தியாவுக்கு பாதகமான அம்சமாகும்.

ஒரு காலத்தில் பல மூலப்பொருள்களுக்கு உலக நாடுகள் சீனாவை மட்டுமே நம்பி இருந்தன. இப்போது அந்த நிலை மாறியிருப்பதால், இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. சீனா, அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியக் குடும்பங்களின் கடன் அளவு குறைவுதான். சேமிப்பு அதிகமாக இருக்கிறது. இது சாதகமான அம்சமாகும். உ.பி உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் வருகிறது. இன்னும் சில மாதங்களுக்கு சில சலுகைகள் கிடைக்கக்கூடும்.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளின் வேல்யூவேஷன் அதிகமாக இருக்கிறது. மிட்கேப் பங்குகளின் மதிப்பீடு கவர்ச்சிகரமாக இருக்கிறது. 2022–ம் ஆண்டு பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு நியாயமான (Reasonable) வருமானத்தைத் தரும் ஆண்டாக இருக்கக்கூடும்” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு மீடியா பார்ட்னராக நாணயம் விகடன் இருந்தது.