Published:Updated:

ஐ.பி.ஓ-வுக்கு முன்பே பங்கின் விலைப்போக்கைச் சொல்லும் கிரே மார்க்கெட்..!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

ஐ.பி.ஓ-வுக்கு முன்பே பங்கின் விலைப்போக்கைச் சொல்லும் கிரே மார்க்கெட்..!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

எல்.ஐ.சி-யின் பங்கு வெளியீடு சமீபத்தில் வந்தபோது, எல்லோரும் பேசி வந்த இன்னொரு விஷயம், ‘கிரே மார்க்கெட்’. ஐ.பி.ஓ வரும் பங்கு, பங்குச் சந்தையில் பட்டிய லாகும் முன்பே லாபத்தில் விற்பனை ஆகுமா அல்லது நஷ்டத்தில் விற்பனை ஆகுமா என்பது ‘கிரே மார்க்கெட்’டில் தெரிந்து விடும். இதனால்தான் இந்த கிரே மார்க்கெட்டை ‘நிழல் சந்தை’ என்கிறார்கள். நிழல் சந்தை என்றால் என்ன, நிழல் சந்தை உயர் மதிப்பு (Grey Market Premium) எவ்வாறு கணக்கிடப்படுகிறது, இந்தக் கருத்துருவை (concept) முதலீட்டாளர்கள் எப்படி விவேகமான முறையில் கையாளலாம் என்று பார்ப்போம்.

ப.சரவணன் 
நிதி மற்றும் கணக்கியல் பேராசிரியர், இந்திய மேலாண்மை நிறுவனம், திருச்சி
ப.சரவணன் நிதி மற்றும் கணக்கியல் பேராசிரியர், இந்திய மேலாண்மை நிறுவனம், திருச்சி

நிழல் சந்தை என்றால்...

சட்டபூர்வமற்ற கறுப்பு / கள்ளச் சந்தை என்பது குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். கள்ளச் சந்தையில் விற்கப் படும் / வாங்கும் பொருள்களுக்கு உத்தரவாதம் இல்லை. இருப்பினும், மக்கள் அதை விரும்பக் காரணம், ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைக்கும் கறுப்புச் சந்தைக்கும் இடையிலான விலை வேறுபாடுதான்.

நிழல் சந்தை என்பது எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை வாங்க மட்டுமல்ல, பங்குச் சந்தையுடனும் தொடர்பு உடையது. எப்போதெல்லாம் ஒரு நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு செய்கிறதோ, அப்போது அதற்கு இணையான மற்றொரு நிழல் சந்தையும் உருவாக்கப்படுகிறது.

பங்குச் சந்தை என்று வரும்போது முதன்மை / பிரதான (Primary Market) மற்றும் இரண்டாம் நிலை (Secondary Market) சந்தைகள் என இரண்டு முக்கியமான சந்தைகள் உள்ளன. பிரதான சந்தை என்பது முதலீட்டாளர்களுக்கு புதிய பங்குகள் மற்றும் பத்திரங்களானது பங்கு வெளியீடுகள் / ஆஃபர் ஃபார் சேல் மூலம் விற்கப்படும் இடமாகும். ஐ.பி.ஓ/ ஓ.எஃப்.எஸ் வந்து முடிந்ததும், பங்குகள் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ ஆகிய பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகத் தொடங்கிவிடும். இந்தப் பங்குச் சந்தைகள், இந்திய பங்குச் சந்தை கண்காணிப்பு வாரியம் (SEBI), கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (Ministry of Corporate Affairs) ஆகியவற்றால் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகின்றன.

பிரதான சந்தையில் ஐ.பி.ஓ / ஓ.எஃப்.எஸ் மூலம் நிறுவ னங்கள், தங்களின் பங்குகளை விற்கவும், பங்குச் சந்தைகளில் மேற்படி பங்குகள் பட்டியலிடப்படுவதற்கும் (listing) இடையே சிறிது கால அவகாசம் உள்ளது. இந்த நேரத்தில்தான் நிழல் சந்தை மற்றும் அதன் உயர் மதிப்பு (premium) என்ற கருத்துரு வருகிறது.

 ஐ.பி.ஓ-வுக்கு முன்பே பங்கின் விலைப்போக்கைச் சொல்லும் கிரே மார்க்கெட்..!

சட்டவிரோதமான சந்தை அல்ல...

நிழல் சந்தை என்பது அதிகாரபூர்வமற்ற (unofficial) சந்தையாகும். அங்கு தனிநபர்கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய பங்குகள் அதிகாரபூர்வ மாகப் பட்டியலிடப்படுவதற்கு (official listing) முன்பே பங்குகளில் வர்த்தகம் செய்கின்றனர்.

இந்தச் சந்தையானது வெறும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் வாய் வார்த்தையின் அடிப்படையில் நடக்கும். மேலும், இது முறை சாரா (unregulated), அதிகாரபூர்வ மற்ற விதிமுறைகள் இல்லாத ஒரு நடவடிக்கை முறையாகும் (OTC). மேலும், அனைத்துப் பரிவர்த்தனைகளும் (transactions) ரொக்கமாகவே மேற்கொள்ளப் படுகின்றன.

அடிப்படையில், பட்டியல் இடப்படாத மற்றும் இன்னும் விற்கப்படாத பங்குகளின் வர்த்தகம் நடக்கும் இடமே நிழல் சந்தை ஆகும். நிழல் சந்தை என்பது சட்ட விரோதமானதல்ல (illegal). ஆனால், ஒழுங்குபடுத்தப் படாதது (unregulated). அதாவது, அவை, செபி (SEBI), என்.எஸ்.இ, பி.எஸ்.இ போன்ற பங்குச் சந்தைகள், தரகு நிறுவனங்கள் (Broking firms) போன்ற ஒழுங்கு முறை அமைப்புகளால் முன் வைக்கப்படும் எந்த ஒழுங்குமுறை களுக்கும் கட்டுப்படாது.

நிழல் சந்தை உயர் மதிப்பின் நுணுக்கங்கள்...

நிழல் சந்தை உயர்மதிப்பு (Grey market premium) என்பது நிழல் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் விலை ஆகும். உதாரணமாக, ABC நிறுவனம் ஒன்று ஐ.பி.ஓ வெளியிடு கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியல் இடுவதற்குமுன் ரவி என்கிற முதலீட்டாளர் இந்தப் பங்குகளை வாங்க ஆர்வமாக இருக்கிறார். எனவே, அவர் ABC நிறுவனத்துக்கான சில்லறை முதலீட்டாளர் (retail investor) பிரிவில் குறிப்பிட்ட சில பங்கு களை எதிர்பார்க்கும் நபர் / தரகர் சுரேஷ் என்பவரை அணுகுகிறார். ரவியும், சுரேஷும் ஆரம்ப ஐ.பி.ஓ விலை மற்றும் குறிப்பிட்ட உயர் மதிப்புடன்கூடிய விலைக்கு வாங்க ஒப்புக்கொள்கின்றனர்.

இங்கு இரு தரப்பினரும் ஏதோ ஒரு வகையில் லாபம் ஈட்டு கிறார்கள். இதில் முதலீட்டாளர் ரவி என்பவர் பங்குகளைப் பெறுகிறார். சுரேஷ் என்பவர் பண ஆதாயத்தைப் பெறுகிறார் என்பது எடுத்துக்காட்டில் இருந்து தெளிவாகிறது. நிழல் சந்தை உயர் மதிப்பு என்பது முதலீட்டாளர் களின் உணர்வின் செயல்பாடு (function of Investor sentiment) ஆகும்.

முதலீட்டாளர்கள் விலகி நிற்பதே சரி...

ஐ.பி.ஓ சந்தை லாபகரமாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் ஐ.பி.ஓ-வுக்கு சந்தா செலுத்தும் முன் பயன்படுத்த வேண்டிய பல அளவீடுகளில் ஒன்றாக நிழல் சந்தை உயர் மதிப்பைப் பயன்படுத்தலாம். இருப்பினும், முதலீட்டாளர்கள் கிரே மார்க்கெட் ஐ.பி.ஓ வர்த்தகத்தில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருப்பது மிகவும் உத்தமம். ஏனெனில், இது ஒழுங்கு நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாமல், முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வர்த்தகமாகும். மேலும், நிழல் சந்தையில் முதலீட்டாளர் களுக்கு, சட்ட ரீதியான தீர்வு எதுவும் இல்லை. இந்தச் சந்தையின் அளவு மிகவும் சிறியது. எனவே, முதலீட்டா ளர்களின் உண்மையான மனநிலையை இந்தச் சந்தை பிரதிபலிக்கிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

மிக சமீபத்தில் பொதுப் பங்குகள் வெளியீடு செய்த நான்கு நிறுவனங்கள் குறித்த குறிப்பு மேலே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது. நான்கு நிறுவனங்களின் எதிர்பார்க்கப்படும் விலை (expected price), நிழல் சந்தை உயர்மதிப்பு மற்றும் பட்டியல் விலை (listing price) தொடர்பான விவரங்கள் அட்டவணையில் உள்ளன.

 ஐ.பி.ஓ-வுக்கு முன்பே பங்கின் விலைப்போக்கைச் சொல்லும் கிரே மார்க்கெட்..!

இந்த அட்டவணையில் எல்.ஐ.சி மற்றும் ரெயின்போ ஹாஸ்பிட்டல் ஆகிய நிறுவனங்களுக்கு, பட்டியலிடப்பட்ட நாளில் விற்ற விலையைவிட எதிர்பார்க்கப்பட்ட விலை அதிகமாக இருந்தது, மேலும், எல்.ஐ.சி.க்கு நிழல் சந்தை உயர்மதிப்பு கட்டணம் +/- ரூ.12 ஆகவும், ரெயின்போ மருத்துவமனைக்கு இது பாசிட்டிவ்-ஆக ரூ.12 ஆகவும் இருந்தது. இது, அசல் பட்டியல் விலையை நெருங்க முடியவில்லை. எனவே, மேற்படி இரண்டு பங்குகளும் விலை மிஸ் மேட்ச் (price mismatch) என்ற வகையின்கீழ் வருகிறது.

மற்ற இரண்டு நிறுவனங்களான, புரூடென்ட் கார்ப்பரேட் மற்றும் கேம்பஸ், நிழல் சந்தை உயர் மதிப்பு கட்டணம் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட விலையால் கணிக்கப்பட்டதை விட அதிக பட்டியல் விலையைப் பதிவு செய்துள்ளன. எனவே, முதலீட்டாளர்கள், நிழல் சந்தை உயர் மதிப்பை பட்டியலிடப்பட்ட விலையை மதிப்பிட ஒரு காரணியாக மட்டும் பயன்படுத்தலாம்.

நிழல் சந்தையில் ஈடுபடுவது சிறு முதலீட்டாளர்களுக்கு உகந்ததல்ல. எனவே, சாம்பல் சந்தைகளில் (கிரே மார்க்கெட்) இருந்து அவர்கள் விலகி இருப்பதே சாலச் சிறந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism