Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தை கடந்த வாரம் மீண்டும் காளையின் ஆதிக்கத்துக்கு வந்து புதிய உச்சத்துக்கு நகர்ந்ததைப் பார்த்தோம். பேங்க் நிஃப்டி கிட்டத்தட்ட 6000 புள்ளிகள் வரை பெரும் வீழ்ச்சிகண்ட நிலையில், நல்ல ஏற்றத்தைக் கண்டதுடன், பிற இரண்டு குறியீடுகளையும் உந்தித் தள்ளி ஏற்றத்தின் போக்கில் கொண்டு சென்றது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

ஆனாலும், சந்தையின் தற்போதைய போக்கில் சில எச்சரிக்கைகளும் இருப்பதால், நாம் குறிப்பிட்ட பங்குகளின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, முடிவுகளை எடுப்பது நல்லது. சந்தை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து தயக்கம் காட்டும் நிலையில், பிரதான குறியீடுகள் மீண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்கின்றன. சந்தையில் இப்போதும், சென்டிமென்ட் பாசிட்டிவ்வாகவே இருக்கிறது. எனவே, காளையின் போக்கிலேயே சந்தையை அணுகலாம்; என்றாலும் கொஞ்சம் விவேகத்துடன் இருப்பது நல்லது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தையின் நகர்வுகள் நிஃப்டி ஏற்றத்தின் போக்கில் நகர் வதற்கு உதவிய நிலையில் மிட்கேப், ஸ்மால்கேப் பிரிவுகளின் போக்கு என்னவென்று தெளிவாகக் காத்திருக்க வேண்டும். இந்தப் பிரிவுகளில் சிறு முதலீட்டாளர்கள் சற்று வெளியேறிய நிலையில் குறைந்த மட்டங்களில் மீண்டும் முதலீடு செய்யும் முயற்சிகளை எடுத்தனர். இதனால் மிட்கேப் குறியீட்டில் கணிசமான நகர்வைப் பார்க்க முடிகிறது.

இந்த மாதத்தில் கடந்த சில நாள்களில் அதிகபட்ச ஏற்றம் நடந்திருப்பதைக் காட்டுகிறது. ஆனாலும், பிற குறியீடுகளின் உதவியால் நிஃப்டி நகர்ந்து அதன் முக்கியமான ரெசிஸ்டன்ட் நிலையான 17650 புள்ளியை நோக்கி நகர்கிறது. இடையில் காணப்பட்ட சரிவு இன்ட்ராடே சார்ட்டில் உருவாக்கிய டபுள் பாட்டம் பேட்டர்ன் தற்போது முடிவுக்கு வந்து, நிஃப்டி நிலையான ஏற்றத்தை நோக்கி நகர்வதற்கான சாத்தியங்களுடன் இருப்பதை நமக்கு உணர்த்துகின்றன.

தற்போது ஏற்றத்தின் போக்கில் கொண்டு செல்லும் வகையிலான பாசிட்டிவ் விரிவாக்கத்தையும் நிஃப்டியில் காண முடிகிறது. எனவே, நிஃப்டியில் உருவாகியுள்ள 17300 - 17350 என்ற சிறப்பான வரம்பை நோக்கிய நகர்வுகளில் காணப்படும் இறக்கங்களை வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பேங்க் நிஃப்டி கடுமையான இறக்கங்களைக் கண்ட பிறகு, ஒருங்கிணைப்புக்கு உள்ளாகி, ரிசர்வ் வங்கி வட்டியில் மாற்றம் செய்யாததால் மீண்டுவந்துள்ளது. இதனால் கடந்த சில வர்த்தக நாள்களில் பேங்க் நிஃப்டி நன்றாக ஏற்றம் கண்டு 37900 என்ற நிலையை நோக்கி நகர்ந்து, அந்த நிலையில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. வரும் வாரத்தில், லாங் பொசிஷன்களைத் தொடர்ந்து வைத்திருப்பதுடன், இன்ட்ராவீக் இறக்கங்களில் கூடுதலான பொசிஷன்களைச் சேர்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் (PRESTIGE)

தற்போதைய விலை ரூ.467.35

வாங்கலாம்

பங்கின் நகர்வுகளில் இறக்கங்கள் காணப்படும்போது சப்போர்ட் நிலைகளை ஏற்ற நகர்வின் சராசரியில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளுமானால் அது ஏற்றத்தின் போக்குக்கான நல்ல அறிகுறி ஆகும். கடந்த அக்டோபர் மத்தியில் இருந்து இந்தப் பங்கில் உண்டான இறக்கங்களிலிருந்து மீண்டு ஏற்றத்தின் போக்கில் தன்னை தக்கவைத்திருக்கிறது. இதில் காணப்படும் இறக்கங்கள் அனைத்தும் நகர்வின் சராசரி அளவில் முடிவுக்கு வந்துவிடு கின்றன. அதேபோல், சமீபத்தில் காணப்பட்ட இறக்கம் சராசரி அளவில் முடிந்து ஏற்றத்தை நோக்கி நகர்ந்ததைக் கடந்த வாரம் பார்க்க முடிந்தது. எனவே, இந்தப் பங்கை ரூ.515 இலக்கு விலையுடன் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.430-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

லார்சன் அண்ட் டூப்ரோ (LT)

தற்போதைய விலை ரூ.1,879.95

வாங்கலாம்

இந்தப் பங்கு ஏற்கெனவே கணிசமான இறக்கம் கண்ட நிலையில் கிளவுட் பகுதியில் ஒருங்கிணைப்பு உருவாகி வலுவான வாங்கும் உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த சில நாள்களில் இந்தப் பங்கில் வலுவான மீட்சியைப் பார்க்க முடிந்தது. இதனால் பங்கின் நகர்வு போக்கானது காளையின் பக்கம் மாறியது. பொதுவாக, இந்தப் பங்கு நிலையான வளர்ச்சியைக் கண்டுவருகிறது. மேலும், இந்தப் பங்கு ஏற்றத்தின் போக்கை சில காலத்துக்குத் தக்கவைத்திருக்கும் என்பதால், வரும் வாரங்களில் மேலும் ஏற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே, புதிய உச்சங் களை எதிர்நோக்கி இந்தப் பங்கை வாங்கலாம். வரும் வாரங்களில் ரூ.1,200 வரை உயர வாய்ப்பு உள்ளது. ரூ. 1,100 வரை இறக்கத்தில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,080-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

இந்தியன் ஹோட்டல் (INDHOTEL)

தற்போதைய விலை ரூ.203.85

வாங்கலாம்

விருந்தோம்பல் துறை தொடர்ந்து நல்ல டிமாண்டில் இருந்து வருகிறது. இந்தத் துறையில் இந்தியன் ஹோட்டல் நிறுவனம் அதன் உரிமைப் பங்கு வெளியீட்டுக்குப் பிறகு சிறப்பான போக்கில் இருந்து வருகிறது.

இந்தப் பங்கு எட்டிய உச்சத்தில் 5 வாரங்கள் காத்திருந்த நிலையில், தற்போது அதன் சப்போர்ட் நிலையிலிருந்து மேல்நோக்கி நகரத் தயாராகி இருக்கிறது. எனவே, தற்போதைய நிலையில், 190 வரை இறக்கத்தில் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.225 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.185-ல் வைத்துக்கொள்ளவும்.

தொகுப்பு: ஜெ.சரவணன்