பிரீமியம் ஸ்டோரி

ரியாக நான்கு மணிக்கு வந்துசேர்ந்தார் ஷேர்லக். கடந்த வாரத்தில் பெய்த சிறுமழை அவரது தொண்டையைப் பதம் பார்த்திருந்தது. வந்ததும் வராததுமாகச் சூடாக சுக்கு காபியை அவர் கேட்கவே, அலுவலக கேன்டீனுக்கு அழைத்துச் சென்று வாங்கித் தந்தோம். வாங்கிப் பருகிக்கொண்டே நம் கேள்விகளுக்குப் பதில் அளிக்க ஆரம்பித்தார்.

முதலில் இன்று மதியத்துக்குமேல் வெளியான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு ரிசல்ட்டினைக் கொஞ்சம் சொல்லுங்கள்.

‘‘நமது முக்கியமான ஐ.டி நிறுவனமான இன்ஃபோசிஸ் இந்த நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் 5.2% லாபம் கண்டிருக்கிறது. கடந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.3,612 கோடி சம்பாதித்தது. இந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் ரூ.3,802 கோடி சம்பாதித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 13.9% உயர்ந்து, ரூ.21,803 கோடியாக இருக்கிறது. இந்த ஆண்டில் 7.5 - 9.5% அளவுக்கு வளர்ச்சி காண வாய்ப்பிருப்ப தாகக் கடந்த ஏப்ரலில் இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ சலீல் பரேக் சொன்னார். 2020-ல் 8.5-10% வளர்ச்சி காண வாய்ப்பிருப்பதாக இப்போது சொல்லியிருக்கிறார். முன்பைவிட இன்னும் கொஞ்சம் வளர்ச்சி காண வாய்ப்பிருக்கிறது என அவர் சொல்லியிருப்பது உண்மையிலேயே நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. அவர் சொல்வது நடக்குமா, இல்லையா என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’’

ஷேர்லக்: குறுகிய காலத்தில் சந்தை இறங்கும்?!

ஆனால், இண்டஸ்இண்ட் வங்கியின் லாபம் 38% அதிகரித்து ஆச்சர்யத்தைத் தந்திருப்பது எப்படி?

‘‘இந்த வங்கியானது பாரத் ஃபைனான்ஷியல் இன்குலேஷன் லிமிடெட் நிறுவனத்தை இணைத்துக்கொண்ட பிறகு வெளியாகும் முதல் காலாண்டு முடிவு இதுதான். ஆனால், இந்த முதல் காலாண்டு முடிவிலேயே நல்ல லாபத்தை ஈட்டியிருக்கிறது இந்த வங்கி. கடந்த காலாண்டில் இந்த வங்கியானது ரூ.1,035 கோடி லாபம் ஈட்டியது. ஆனால், இந்த காலாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,432 கோடியை ஈட்டி, ஏறக்குறைய 38% அதிகமான லாபத்தைக் கண்டிருக்கிறது. இந்த வங்கியின் வட்டி வருமானமும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. கடந்த காலாண்டில் ரூ.2,122 கோடி வட்டி வருமானம் சம்பாதித்திருக்க, முதலாம் காலாண்டில் ரூ.2,844 கோடியை வட்டி வருமானமாக ஈட்டியிருக்கிறது. ஆனால், இந்த வங்கியின் வாராக் கடனும் அதிகரிக்கவே செய்திருக்கிறது. கடந்த 2018 ஜூனில் இந்த வங்கியின் வாராக் கடன் 1.15 சதவிகிதமாக இருந்தது, இந்த நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் 2.15 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.’’

தொலைத்தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ளதே!

“தொலைத் தொடர்புத் துறையில் முடிந்த 2018-19-ம் நிதி ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) 43% சரிவடைந்து, 267 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய 2017-18-ம் நிதி ஆண்டில் 621 கோடி டாலராக இருந்தது. கடுமையான போட்டி மற்றும் கட்டணக் குறைப்பு காரணமாக தொலைத் தொடர்புத் துறை நிதி அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இதனால் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய தனியார் ஆபரேட்டர்களின் மொத்த வருவாய் 2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டுகளில் குறைந்துள்ளது.”

ஷேர்லக்: குறுகிய காலத்தில் சந்தை இறங்கும்?!

ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனம் புதிதாகப் பங்குகளை வெளியிட்டு ரூ.4,500 கோடி திரட்டுகிறதே?

“ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியைத் திரட்டும் வகையில் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்க முடிவு செய்தது. இதற்கான அனுமதி கேட்டு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்திருந்தது. அந்த அனுமதியை செபி இப்போது வழங்கியுள்ளது.

இந்த வெளியீட்டில் நிறுவனத் தலைவர் குர்ஷித் யாஸ்தி தருவாலா மற்றும் ஷாபூர்ஜி பலோன்ஜி அண்டு கம்பெனியின் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன்மூலம் ரூ.4,500 கோடியைத் திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் புதிய பங்குகள் மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.”

கடன் பத்திரங்கள்மூலம் ஆர்.இ.சி நிறுவனம் ரூ.75,000 கோடி திரட்ட முடிவெடுத்துள்ளதாமே?

“அடுத்த ஓராண்டு காலத்துக்கு, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறை, கடன் பத்திரங்கள் மூலம் ரூ.75,000 கோடி திரட்ட ஆர்.இ.சி நிறுவனத்துக்கு அதன் இயக்குநர் குழு ஒப்புதல் கொடுத்துள்ளது. 2019 ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற இயக்குநர் குழுவின் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 20, 2019 அன்று நடைபெறவுள்ள பங்குதாரர்களின் 50-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில், இதற்கு பங்குதாரர் களின் ஒப்புதலையும் பெற முடிவு செய்யப் பட்டுள்ளது. பங்குதாரர்களின் ஒப்புதல் கிடைத்த தேதியிலிருந்து அடுத்த ஓராண்டு காலத்துக்கு நிதி திரட்டும் பணி செயல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.”

டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்துக்கு வங்கிகள் புதிய கடனுதவியை வழங்குகின்றனவே, பணம் திரும்ப வருமா?

“டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனம் வங்கிகளிலிட மிருந்து புதிதாகக் கடனுதவியை எதிர்பார்க்கிறது. அப்படிக் கடனுதவி கொடுப்பதால் அந்த நிதி நிறுவனத்தின் புரமோட்டர்கள், அந்த கடனுக்கான அடமானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதாக உறுதிமொழியும் அளிக்கவேண்டுமென நிபந்தனை விதிக்கப் படுவதாகத் தெரியவருகிறது. டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்துக்குக் கடனுதவி தரப்பட்டால், அதனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அதன் துணை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று உறுதிமொழி பெறப்படலா மென்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தின் பாண்டுகளை வைத்திருக்கும் முதலீட்டாளர் களும், கடனுதவி வழங்கவுள்ள வங்கிகளும் சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கின்றன. அப்போது, ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள வாராக் கடனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்படுமெனத் தெரிகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனம் 7,000 கோடி ரூபாயைத் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கிறது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டி,சி.எஸ் பங்கு இலக்கு விலையை குறைத்திருக்கிறார்களாமே?

“நடப்பு நிதியாண்டில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவு எதிர்பார்த்தபடி இல்லாததால், இதன் இலக்கு விலையை சில புரோக்கரேஜ் நிறுவனங்கள் குறைந்திருக்கின்றன. சிட்டி நிறுவனம், இதன் இலக்கு விலையை 0.5% குறைத்து ரூ.1,970 எனவும், சி.எல்.எஸ்.ஏ நிறுவனம் 3% குறைத்து ரூ.2,570 எனவும், ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் 5.1% குறைத்து ரூ.1950 எனவும், ஜெஃப்ரீஸ் நிறுவனம் 0.8% குறைத்து ரூ.2,380 எனவும் நிர்ணயித்துள்ளன.

ஷேர்லக்: குறுகிய காலத்தில் சந்தை இறங்கும்?!

என்றாலும் இந்த நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி காண வாய்ப்பிருப்பதாக இந்த நிறுவனங்களே சொல்லியிருப்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது.’’

கே.பி.ஆர். மில் நிறுவனம் பங்குகளைத் திரும்ப வாங்கும் முடிவைக் கைவிட்டிருக்கிறதே!

‘‘கே.பி.ஆர் மில் நிறுவனம், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி 37.51 லட்சம் பங்குகளை பங்குதாரர்களிடமிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது. 2019-20-ம் ஆண்டின் நிதி பட்ஜெட்டில் பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கு 20% வரை வரி விதிக்கப் பட்டிருப்பதால், அந்த நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பை தற்போது திரும்பப் பெற்றிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.263 கோடி. ஒரு பங்கின் சந்தை விலை 592 ரூபாயாக வர்த்தகமாகிவரும் நிலையில், திரும்பப் பெறும் பங்கு ஒன்றுக்கு 702 ரூபாய் என விலை நிர்ணயம் செய்திருந்தது கே.பி.ஆர் மில் நிறுவனம்.’’ட்

பொதுத்துறை நிறுவனப் பங்குகளைக் கொண்ட இ.டி.எஃப் ஆறாவது தடவையாக விற்பனைக்கு வருகிறதாமே?

“ரூ.8,000 கோடி மதிப்புள்ள சென்ட்ரல் பப்ளிக் செக்டார் என்டர்பிரைஸ் இ.டி.எஃப் ஆறாவது தடவையாக ஜூலை 19-ம் விற்பனைக்கு வருகிறது. பெருமுதலீட்டாளர் களுக்கான விற்பனை ஜூலை 18-ம் தேதி நடைபெறும். நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்திய அரசு பொறுப்புக்கு வந்தபின் சி.பி.எஸ்.இ இ.டி.எஃப் முதல் தடவையாக விற்பனைக்கு வருகிறது. மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விலக்கிக் கொள்ளும் இலக்காக ரூ.1.05 லட்சம் கோடியை நிர்ணயித்துள்ளது. ஆறாவது தடவை நடைபெறவுள்ள சி.பி.எஸ்.இ இ.டி.எஃப் விற்பனையை ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நிர்வகிக்கவுள்ளது. சி.பி.எஸ்.இ இ.டி.எஃப்-ன் டிவிடெண்ட் யீல்டு வருமானம் 5 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருப்பதால், முதலீட்டாளர்களை ஈர்ப்பதாக உள்ளது. மேலும், இது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கேற்ப ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பிடம் ஒப்புதலைப் பெற்றுள்ளது.’’

இந்தியப் பங்குச் சந்தை குறுகிய காலத்தில் இறக்கம் காணும் போலிருக்கிறதே!

‘‘நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் நிகர அடிப்படையில் இந்திய மூலதனச் சந்தையில் ரூ.11.82 கோடியை முதலீடு செய்தனர். மார்ச் மாதத்தில் அது ரூ.45,981 கோடியாக உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் ரூ.16,093 கோடியாகக் குறைந்தது. மே மாதத்தில் ரூ.9,031 கோடியாகச் சரிந்து, ஜூன் மாதத்தில் ரூ.10,385 கோடியாக அதிகரித்தது.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் வெளியிடப் பட்ட பல அறிவிப்புகளை இந்தியப் பங்குச் சந்தை வரவேற்கவில்லை என்பதால், சந்தை இறக்கம் காண ஆரம்பித்திருக்கிறது. வங்கிசாரா நிதி நிறுவனங்களில் தொடரும் சிக்கல்கள், வெளிநாட்டு முதலீட்டாளர் களுக்கு வரி அதிகரிப்பு போன்றவற்றால் இந்தியப் பங்குகளை, தொடர்ந்து எஃப்.ஐ.ஐ-க்கள் விற்றுவருகிறார்கள். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ஜூலை 5-ம் தேதிக்குப் பிறகு நான்கு வர்த்தக தினங்களில் சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றிருக்கிறார்கள். அவர்கள் குறுகிய காலத்தில் இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகும் எனக் கருதி இப்படிச் செயல்படுவதாகப் பகுப்பாய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அந்த வகையில், குறுகிய கால முதலீட்டை மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது’’ என்றவர், அடுத்த வாரம் பார்ப்போம் என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குக் கிளம்பினார்.

மியூச்சுவல் ஃபண்ட் சொத்து மதிப்பு உயர்வு!

ந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்த ஏப்ரல் - ஜூன் காலத்தில் 4.4% அதிகரித்து, ரூ.25.49 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்புக்கு சிறுமுதலீட்டாளர்களின் பங்களிப்பு உயர்ந்தது முக்கியக் காரணமாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு நிகர அடிப்படையில் 42% அதிகரித்து, ரூ.7,663 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய மே மாதத்தில் அது ரூ.5,408 கோடியாக இருந்தது. 2025-ம் ஆண்டுக்குள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு