பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: தனியார் வங்கிப் பங்குகள்... வாங்கிக் குவிக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

அடடா, அடடா, அடைமழைடா...’ என்று பாட்டுப் பாடியபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக்.

பங்குச் சந்தை ஏற்றத்தைப் பற்றி ஏதோ சொல்லப்போகிறார் என்று அவர் முகத்தைப் பார்த்தோம். நம் முகக்குறிப்பை உணர்ந்தவராக, ``அதைக் கடைசியில் சொல்கிறேன். கேள்விகளைக் கேளுங்கள்’’ என்றார். நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் பார்தி ஏர்டெல் பங்கு விலை இரண்டு மடங்கு அதிகரிக்குமாமே... உண்மையா?

ஷேர்லக்: தனியார் வங்கிப் பங்குகள்... வாங்கிக் குவிக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!

“பார்தி ஏர்டெல் நிறுவனம் டெலிகாம் துறையில் ஜாம்பவானாக இருந்தது. ஜியோ வருகை, மற்ற டெலிகாம் நிறுவனங்களைப் பதம் பார்த்ததுபோல, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வருமானத்திலும் உலைவைக்கப் பார்த்தது. ஆனால், ஒரு சிறந்த போட்டியாளனாக ஏர்டெல் நிறுவனம் இன்றுவரை தாக்குபிடித்துவருகிறது. இதன் சிறப்பான செயல்பாடுகளால் இந்த நிறுவனப் பங்கின் விலை இன்னும் ஐந்து ஆண்டுகளில் 800 ரூபாய்க்கு உயரும் என எலரா செக்யூரிட்டீஸ் (Elara Securities) பங்குத் தரகு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போதைய நிலையில், வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் சேவை குறைந்துகொண்டே வருகிறது. இதனால் அவற்றின் வாடிக்கையாளர்கள் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களின் பக்கமே ஈர்க்கப்படுவார்கள். இதனால் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.’’

தனியார் வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்கக் காரணம் என்ன?

“கடந்த செப்டம்பர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஹெச்.டிஎஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் கோட்டக் மஹிந்திரா பேங்க் ஆகிய பங்குகளை அதிகமாக வாங்கி இருக்கின்றன. ஹெச்.டிஎஃப்.சி பேங்க் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்குகளில் முறையே ரூ.7,400 கோடி மற்றும் ரூ.4,500 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் கோட்டக் மஹிந்திரா பேங்குகளில் முறையே ரூ.4,080 கோடி மற்றும் ரூ.3,730 கோடி முதலீடு செய்யப்பட்டிக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் பேங்கிங் செக்டார் ஃபண்டுகள் சராசரியாக 11% வருமானம் கொடுத்திருக்கின்றன.’’

பங்குச் சந்தை மதிப்பில் எஸ்.பி.ஐ முன்னேறியிருக்கிறதே!

ஷேர்லக்: தனியார் வங்கிப் பங்குகள்... வாங்கிக் குவிக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்!

“பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் எஸ்.ஐ.பி வங்கி 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த 14-ம் தேதி நிலவரப்படி, இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.8.60 லட்சம் கோடி), இரண்டாவது இடத்தில் டி.சி.எஸ் (ரூ.7.58 லட்சம் கோடி), மூன்றாவது இடத்தில் ஹெச்.டி.எஃப்.சி, நான்காவது இடத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் இருந்தன.பத்தாவது இடத்தில் இருந்த பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் பதினோராவது இடத்துக்குப் போனதால், அந்த இடத்துக்கு மீண்டும் எஸ்.பி.ஐ வந்திருக்கிறது. இதன் மொத்த பங்குச் சந்தை மதிப்பு ரூ. 2.28 லட்சம் கோடி”

சி.எஸ்.பி பேங்க், ஐ.பி.ஓ வெளியிடுவது குறித்து..?

“தனியார் துறையைச் சேர்ந்த கேத்தலிக் சிரியன் பேங்க் (CSB), ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கேற்ப பங்குச் சந்தையில் பங்குகளைப் பட்டியலிட முடிவு செய்திருக்கிறது. இதற்கான அனுமதி வேண்டி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செபி அமைப்புக்கு விண்ணப்பித்திருந்தது. ஐ.பி.ஓ வெளியிட செபி அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்த வெளியீட்டில் ரூ.30 கோடிக்குப் புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன. மேலும், ரூ.370 கோடி அளவு பங்குதாரர்களின் 1.98 கோடி பங்குகள் சந்தைக்கு வருகின்றன. மொத்தத்தில் இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் 400 கோடி ரூபாயைத் திரட்ட சி.எஸ்.பி முடிவு செய்திருக்கிறது.’’

இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி குறையும் என சர்வதேச நிதியம் சொல்லியிருக்கிறதே?

“ `இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 2019-ம் ஆண்டில் 7.3 சதவிகிதமாக இருக்கும்’ என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்) கூறியிருந்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது கணிப்பில் 0.3 சதவிகிதத்தைக் குறைத்தது. தற்போது இந்த அமைப்பு, இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதக் கணிப்பை 6.1% எனக் குறைத்திருக்கிறது. எனினும், `வரும் 2020-ம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7.0 சதவிகிதமாக அதிகரிக்கும்’ என்று கணித்திருக்கிறது. இந்த நிலையில், உலக வங்கி தற்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 2019-ம் ஆண்டில் 6 சதவிகிதமாகக் குறையும்’ என்று கணித்திருக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மந்தமாக இருக்கும் என்பதால், ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. `ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் தேவை குறைவு, வங்கிசாரா நிதி நிறுவனங்களின் செயல் பாட்டிலிருக்கும் தேக்கநிலை உள்ளிட்ட காரணங்களால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகமாக இருக்கும்’ என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் போலவே, சீனாவிலும் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 2018-ம் ஆண்டில் 6.6%, 2019-ம் ஆண்டில் 6.1%, 2020-ம் ஆண்டில் 5.8% ஆகச் சரிவதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.”

ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விலை ஒரே நாளில் 133% உயர்ந்திருக்கிறதே!

“ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐ.பி.ஓ) அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெளியீட்டு விலை, 320 ரூபாயாக இருந்தது. ஐ.பி.ஓ வெளியீட்டில் அதன் விலை 101% அதிகரித்து, ரூ.644 மதிப்பீட்டில் சந்தையில் பட்டியலிடப் பட்டிருக்கிறது. வர்த்தக இறுதியில் 133% உயர்ந்து, 743.8 ரூபாயில் நிறைவடைந்தது. கடந்த 14 வருடங்களில், அவென்யூ மார்க்கெட் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டுக்குப் பிறகு இந்த ஐ.ஆர்.சி.டி.சி ஐ.பி.ஓ-தான் நல்ல லாபத்தை ஈட்டிய இரண்டாவது ஐ.பி.ஓ-வாக இருக்கிறது.’’

இரண்டாம் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, பங்குகளின் இலக்கு விலை எப்படியிருக்கிறது?

“கே.ஆர்.ஷோக்சி என்ற தரகு நிறுவனம் இன்ஃபோசிஸ் பங்குக்கு 792 ரூபாயை இலக்கு விலையாகக் கொடுத்திருந்தது. அதை தற்போது 893 ரூபாயாக அதிகப்படுத்தியிருக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் இலக்கு விலையை 885 ரூபாயாக அதிகப்படுத்தியிருக்கிறது. அதேபோல, அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் இலக்கு விலையை ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் 1,450 ரூபாயிலிருந்து 1,700 ரூபாயாக அதிகப் படுத்தியிருக்கிறது. பிரபுதாஸ் லீலாதர் என்ற தரகு நிறுவனம் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கின் இலக்கு விலையை 1,967 ரூபாயிலிருந்து 2,083 ரூபாயாக அதிகப் படுத்தியிருக்கிறது. இதன் இலக்கு விலையை ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் 2,075 ரூபாயாக அதிகப்படுத்தியிருக்கிறது.”

தீபாவளி ‘முகூர்த்த டிரேடிங்’ குறித்து..?

“தீபாவளி சிறப்புப் பங்கு வர்த்தகம் அக்டோபர் 27-ம் தேதி மாலை 6:15 மணி முதல் 7:15 வரை நடக்கிறது. மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தை களான பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ ஆகிய இரு சந்தைகளிலும் ஒரே நேரத்தில் இந்த முகூர்த்த டிரேடிங் நடக்கவிருக்கிறது’’ என்றவர், ‘‘வெளியே எப்போது வேண்டுமானாலும் மழை வரும்போல இருக்கிறது. எனவே, பை பை...’’ என்றபடி வீட்டுக்குக் கிளம்பினார்!

ரிலையன்ஸ் சாதனை!

நடப்பு நிதி செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் 18.32% என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டைவிட ரூ.11,262 கோடி அதிகமாக லாபம் ஈட்டியிருக்கிறது ரிலையன்ஸ். `இந்த நிறுவனம் ரூ.11,000 கோடி அளவுக்கு லாபம் ஈட்டும்’ என்றுதான் பங்குச் சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தைவிட அதிகமாக லாபம் ஈட்டியதால், இந்த நிறுவனப் பங்கின் விலை வெள்ளிக்கிழமை அன்று 2.26% அளவுக்கு அதிகரித்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடியைத் தாண்டியது. `இந்தியப் பங்குச் சந்தையில் இவ்வளவு அதிகமான பங்குச் சந்தை மதிப்பைக்கொண்டிருக்கும் முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்தான்’ என்ற பெருமையை இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. இன்னும் சில காலாண்டுகளில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத் தொட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!