Published:Updated:

ஷேர்லக்: சந்தை இன்னும் இறங்கும்?

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

பிரமாண்டப் பூங்கொத்துடன் நம் அலுவலகத்துக்குள் நுழைந்தார் ஷேர்லக். ‘‘இந்தா பிடியுங்கள்’’ என்று நமக்குப் பூங்கொத்தினைக் கொடுத்துவிட்டு,

கை வலிக்கும் அளவுக்கு நம் கையைக் குலுக்கினார். ‘‘வெல் டன், வெல் டன்’’ என்று பலமான பாராட்டு வேறு. எதற்கு இந்தப் பூங்கொத்து, எதற்கு இத்தனைப் பாராட்டு என்பது தெரியாமல் நாம் முழிக்க, அவரே பேசத் தொடங்கினார்.

‘‘கடந்த வாரம் நான் பார்த்தவர்கள் கடந்த இதழில் நீங்கள் வெளியிட்ட கவர் ஸ்டோரியைப் பார்த்து, புகழ்ந்து தள்ளி விட்டார்கள். நீர் சொன்னபடியே, நிஃப்டி 11000 புள்ளிகளுக்குக் கீழே போய்விட்டது. முக்கியமான விஷயம் நடக்கவிருப்பதை முன்னரே நீர் சொன்னதன்மூலம் வாசகர்கள் அந்த விஷயத்தைப் பெரிய அதிர்ச்சி இல்லாமல் ஏற்றுக்கொண்டார்கள். அந்த வகையில் உமக்கும் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்’’ என்றவருக்கு சுக்குமல்லி காப்பியைக் கொடுத்து, செய்திகளைச் சேகரிக்க ஆரம்பித்தோம்.

ஷேர்லக்: சந்தை இன்னும் இறங்கும்?

பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பை உயர்த்தும் பட்ஜெட் அறிவிப்பு எந்த நிலையில் இருக்கிறது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பொது மக்களின் பங்களிப்பைக் குறைந்தபட்சம் 25 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக அதிகரிக்க செபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது எப்படிச் சாத்தியம் என்று யோசித்த செபி, இப்போது அதனைச் செயல்படுத்தும் முனைப்பில் இறங்கியுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சந்தை வல்லுநர் குழுவுடன் கலந்து பேசவிருக்கிறது.

அனைத்து நிறுவனங்களும் ஒரே நேரத்தில் இந்த வரம்பை நிறைவேற்றலாம் அல்லது அல்லது பொதுத்துறை நிறுவனங்களுக்கு வேறொரு கெடுகாலம் கொடுக்கலாமா என்கிற ரீதியிலும் செபி யோசித்து வருகிறது. அரசின் இந்த எதிர்பார்ப்பைச் செயல்படுத்தினால் சுமார் ரூ.3.9 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனைக்கு வரும். டி.சி.எஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் உள்ளிட்ட 100 பெரிய நிறுவனங்களின் பங்குகள் மிகுதியாக பொது விற்பனைக்கு வரக்கூடும். எனவே, இந்த விற்பனையைச் சீராகச் செயல்படுத்தும் வழிமுறைகளை செபி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இதனால் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நல்ல பங்குகள் குறைந்த விலைக்குக் கிடைக்கலாம். நீண்ட காலத்தில் பங்குச் சந்தையில் பலரும் பங்கெடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நாம்தான்.’’

ஸ்டெர்லிங் & வில்சன் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரவேற்பு எப்படி?

“ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தைச் சேர்ந்த சூரியசக்தி நிறுவனமான ஸ்டெர்லிங் & வில்சன் புதிய பங்குகளை வெளியிடுகிறது. இதன் பங்கு வெளியீடு ஆகஸ்ட் 6-ம் தேதி ஆரம்பிக்கிறது. 8-ம் தேதி நிறைவு பெறுகிறது. பங்கு விலைப்பட்டை ரூ. 775-780 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மொத்தம் ரூ.3,125 கோடி திரட்டப் படுகிறது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அமெரிக்காவில் வட்டி விகித குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதானே? பிறகு ஏன் இந்தியப் பங்குச் சந்தை அதிகம் இறங்கியது?

“அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளது. இது ஏற்கெனவே எதிர்பார்க்கப் பட்டதுதான். நிலையற்ற பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவான பணவீக்க விகிதம், அமெரிக்க - சீன வர்த்தகப் போர் ஆகிய வற்றால் ஆகஸ்ட் முதல் தொடர்ந்து 0.75% வரை வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஃபெடரல் ரிசர்வ் சேர்மன் ஜெரோம் பவல், ‘‘எதிர்காலத்தில் இந்தப் பிரச்னைகள் தொடர்ந்தால் மட்டுமே வட்டி விகிதம் குறைக்கப்படும்” என்று சொன்னதால், இந்தியப் பங்குச் சந்தை அதிக இறக்கம் கண்டது. இதனால் வியாழனன்று சென்செக்ஸ் 463 புள்ளிகள் குறைந்து 37018-க்கும், நிஃப்டி 138 புள்ளிகள் குறைந்து 10980-க்கும் இறக்கம் கண்டுள்ளன. இவை கடந்த மாதங்களில் மிகக் குறைவான நிலையாகும்.

ஷேர்லக்: சந்தை இன்னும் இறங்கும்?

அமெரிக்காவில் தொழில்துறை மற்றும் பொருளாதாரம் முன்பைவிடச் சற்று மேம்படத் தொடங்கியிருப்பதால், இனி வட்டி விகிதம் குறைக்கப்படும் என்கிற சூழல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வட்டி குறைக்கப்படாமல் இருந்தால் அல்லது வட்டி அதிகரிக்கப்பட்டால், அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடுகள் இந்தியச் சந்தைகளுக்கு வராமல் போகலாம் அல்லது இந்தியச் சந்தைகளிலிருந்து அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடுகள் வெளியே எடுக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பில் இந்தியச் சந்தை இறக்கம் கண்டிருக்கிறது என்கிறார்கள் பகுப்பாய்வாளர்கள்.”

சந்தை இன்னும் இறங்கும் என்று சொல்லி சிலர் பயமுறுத்துகிறார்களே!

“சிட்டி குழுமம், 2020-ம் ஆண்டில் சென்செக்ஸ் புள்ளிகள் 41000-க்கு அதிகரிக்கும் என இதற்கு முன் சொல்லியிருந்தது. அதனை இப்போது 39500 என்று குறைத்துள்ளது. பட்டியலிடப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி குறையக்கூடும் என்கிற நிலையில் அது இலக்கைக் குறைத்துள்ளது. ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பெரும் பணக்காரர்களுக்கான வருமான வரி 47.2 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருப்பதால், பல நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கும் எனப் பகுப்பாய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது, சந்தை இன்னும் இறங்கும் சூழல்தான் காணப்படுகிறது.’’

மியூச்சுவல் ஃபண்டுகள் பல பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கின்றனவே?

“கடந்த ஓராண்டு காலமாகப் பல மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் தரமான ஒரு டஜன் புளூசிப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வந்திருக்கிறார்கள். அந்த 12 நிறுவனங்கள், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், டி.சி.எஸ், ஆசியன் பெயின்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, ஆர்.ஐ.எல், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், எல் & டி, ஐ.டி.சி, ஹெச்.யூ.எல் ஆகியவையாகும். இவற்றில், கடந்த ஓராண்டில் எல் & டி, ஐ.டி.சி, ஹெச்.யூ.எல் ஆகிய பங்குகளின் விலை மட்டும் சில சதவிகிதங்கள் இறக்கத்தில் உள்ளன. மற்றப் பங்குகள் சுமார் 10% - 30% வரை வருமானம் கொடுத்திருக்கின்றன.’’

பங்கு விலை இறங்கியபின்பும் நிறுவனர்கள் தங்கள் நிறுவனப் பங்குகளில் முதலீட்டை அதிகரித்தி ருக்கிறார்களே?

“ஜூன் காலாண்டில் பல நிறுவனப் பங்குகள் கடுமையான விலைச் சரிவை சந்தித்தன. பி.எஸ்.இ 500 நிறுவனங்களில் பொதுத்துறை வங்கிகள் தவிர்த்த 43 நிறுவனங்களின் புரமோட்டர்கள், இந்த விலைச் சரிவைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, பங்குகளைப் புதிதாக வாங்கி நிறுவனத்தில் தங்களின் பங்கு மூலதனத்தை அதிகரித்துக்கொண்டுள்ளனர். இப்படி தங்கள் வசமுள்ள பங்குகளை அதிகரித்துக்கொள்வது சந்தைப் பங்களிப்பில் பாதுகாப்பான சூழலைக் கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.

ஏஸ் ஈக்விட்டி நிறுவனம் தரும் புள்ளிவிவரத்தின் படி, ஜூன் காலாண்டில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான புரமோட்டர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளின் அளவை அதிகரித்திருக்கிறார்கள். ஜூன் காலாண்டில் எஸ்கார்ட்ஸ், க்ளென்மார்க் பார்மா, வோடஃபோன் ஐடியா, ஜி.எம்.ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், எரிஸ் லைஃப்சயின்சஸ் மற்றும் ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்குகளின் விலை 20-34% இறக்கம் கண்டன.

அதேவேளையில், பஜாஜ் ஃபின்சர்வ், ஸென்சர் டெக்னாலஜீஸ், ராஜேஸ் எக்ஸ்போர்ட்ஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் மற்றும் ஏ.பி.எல் அப்போலோ ட்யூப்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை 3% - 23% வரை விலை அதிகரித்துள்ளன. இதற் கிடையே, என்.ஐ.ஐ.டி டெக்னாலஜீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டி.எல்.எஃப், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் & பவர் உள்ளிட்ட 43 நிறுவனங்களின் புரமோட்டர்கள் தங்கள் நிறுவனப் பங்குகளைக் கணிசமாக வாங்கியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஷேர்லக்: சந்தை இன்னும் இறங்கும்?

வோடஃபோன் ஐடியா பங்கு விலை திடீர் வீழ்ச்சி கண்டதன் காரணம் என்ன?

“சந்தாதாரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா பங்கு விலை ஒரே நாளில் 27% இறங்கியது. ஜூன் காலாண்டு முடிவு எதிர்பாராதவிதமாக இருந்ததால், முடிவு வெளியான தினத்தில் இத்தகைய சரிவு ஏற்பட்டது. இதன்மூலம் ரூ.7,126.34 கோடி அளவுக்குச் சந்தை மூலதனத்தில் இழப்பு ஏற்பட்டது. இது அந்த நிறுவனத்துக்கு மிகப் பெரிய இழப்பு. அன்றைய வர்த்தக நாளின் இடையில் பி.எஸ்.இ எக்ஸ்சேஞ்சில் வோட ஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலை அதிகபட்சமாக 29% இறங்கி, 6.56 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த இறக்கம், அந்த நிறுவனத்திற்கு முன்னெப்போதும் இல்லாத பெரிய அளவிலான வீழ்ச்சியாகும். இதன்மூலம் அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு ரூ.26,580.2 கோடியிலிருந்து ரூ.19,453.86 கோடியாக இறங்கியது. வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் வணிக உத்தி சரியாக இல்லாததால், அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்தது. அதன்காரணமாக வருவாயிலும் சரிவு ஏற்பட்டது. இதுவே காலாண்டு நிதிநிலை முடிவிலும் வெளிப்பட்டுள்ளது.”

ஸ்பாந்தனா பூர்த்தி ஃபைனான்ஷியல் நிறுவனம் ஐ.பி.ஓ வருவது பற்றி?

“மைக்ரோ ஃபைனான்ஸ் நிதி நிறுவனங்களின் ஒன்றான ஸ்பாந்தனா பூர்த்தி ஃபைனான்ஷியல், விரிவாக்கத்துக்குத் தேவையான பகுதி நிதியைத் திரட்டும் வகையிலும் எதிர்கால மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவும் புதிய பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ரூ.1,200 கோடி நிதியைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முகமதிப்பு 10 கொண்ட ஒரு பங்கின் விலைப்பட்டை ரூ.853-856-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 93,56,725 பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. பங்கு வெளியீடு ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி, 7-ம் தேதி முடிவடைகிறது.”

விப்ரோ நிறுவனம் பங்குகளை திரும்பப் பெறும் முடிவை வெளியிட்டிருப்பது பற்றி..?

“பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கியதை அடுத்து விப்ரோ நிறுவனம் பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. விப்ரோ நிறுவனத்தின் புதிய செயல் தலைவராக ரிஷாத் பிரேம்ஜி பதவி யேற்றிருக்கும் நிலையில், விப்ரோ நிறுவனம் தனது மொத்தப் பங்குகளில் 5.35% பங்குகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது.

இந்த நிறுவனம் திரும்பப் பெறும் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை 32.30 கோடி. இதன் மொத்த மதிப்பு ரூ.10,500 கோடி. ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பங்குகள் திரும்பப் பெறப்படும். ரூ.263-க்கு வர்த்தகமாகிக்கொண்டிருக்கும் பங்கு ஒன்றுக்கு அந்த நிறுவனம் கொடுக்கும் விலை ரூ.325.”

தரகுக் கட்டண விகிதத்தை செபி மாற்றியமைக்கப் போகிறதாமே?

“மியூச்சுவல் ஃபண்ட் தவிர்த்த முதலீட்டுத் திட்டங்களுக்கான தரகுக் கட்டண விதிமுறை களைக் கடுமையாக்கவுள்ளது செபி. பங்குச் சந்தை முதலீடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காக இந்த முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் கமிஷனை ஏற்கெனவே குறைத்துவிட்டதால், அவை தவிர்த்த முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யும்படி முதலீட்டாளர்களை அஸெட் மேனேஜர்களும் விநியோகஸ்தர்களும் கட்டாயப்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன. அதையடுத்து, போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (பி.எம்.எஸ்) மற்றும் மாற்று முதலீட்டுத் திட்டங்களை (ஏ.ஐ.எஃப்கள்) விதிக்கும் கட்டணங்களைத் திருத்தியமைக்க செபி முடிவெடுத்துள்ளது. இந்தப் புகார்களுக்குத் தீர்வு குறித்து பி.எம்.எஸ் துறையின் கருத்தை செபி கேட்டுள்ளது.

அஃப்ல் இந்தியா நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெற்றி அடைந்திருக்கிறதா?

‘‘மொபைல் மார்க்கெட்டிங் நிறுவனமான அஃப்ல் (Affle), ரூ.459 கோடி நிதி திரட்டுவதற்காகப் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. இதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை 33.80 லட்சம்தான். ஆனால், முதலீட்டாளர்கள் 29.20 கோடி பங்குகள் கேட்டு விண்ணப் பித்திருந்தார்கள். இது பங்கு வெளியீட்டைவிட, 86.5 மடங்கு அதிகமாகும். தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் 55.3 மடங்கும், நிறுவனம் சாரா முதலீட்டாளர்கள் 198.7 மடங்கும், சிறு முதலீட் டாளர்கள் 11 மடங்கும் அஃப்ல் நிறுவன பங்குகளைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள்’’ என்றவர், ‘‘சந்தை இறக்கத்தைப் பயன்படுத்தி, புதிதாக முதலீடு செய்வது அவசியம்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்..