Published:Updated:

ஷேர்லக்: ஆட்டோ, டெலிகாம் பங்குகள்... அதிகரிக்கும் வெளிநாட்டு முதலீடு!

Shareluck
பிரீமியம் ஸ்டோரி
News
Shareluck

ஷேர்லக்

கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலையில் நண்பர் தந்த முறுக்கு மற்றும் சீடைகளை நாம் சாப்பிட்டபடி இருக்க, சத்தமில்லாமல் நம் கேபினுக்குள் வந்து உட்கார்ந்தார் ஷேர்லக். ‘‘நிதி அமைச்சர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். ரேஸ் க்ளப்பில் முக்கியமான பிசினஸ்மேன்களுடன் நான் அதைப் பார்க்கிற மாதிரி பிளான். எனவே, சட்டென்று நாம் பேசி முடித்துவிடலாமா’’ என வந்ததும் வராததுமாகப் பரபரத்தார் ஷேர்லக். தயாராக வைத்திருந்த கேள்விகளை நாம் கேட்க, அவரும் சரசரவென்று பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம், ஐ.பி.ஓ வருகிறதே?

‘‘ரயில்வே சார்ந்த டிக்கெட் விநியோகம், சுற்றுலா, பாட்டில் குடிநீர் விற்பனை, உணவுச் சேவைகளை மேற்கொண்டு வரும், ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) புதிய பங்குகளை வெளியிட (ஐ.பி.ஓ)அனுமதி கேட்டு செபி அமைப்புக்கு விண்ணபித்துள்ளது. இந்த நிறுவனம் மொத்தம் சுமார் ரூ.600 கோடி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பங்கு வெளியீட்டின்மூலம், இந்த நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் மத்திய அரசு அதன் பங்கு மூலதனத்தை சுமார் 12.5% குறைத்துக்கொள்கிறது. அதாவது, மொத்தம் 2 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.

இந்த நிறுவனத்தின் விற்பனை 2018-19-ம் ஆண்டில் 25% அதிகரித்து, ரூ.1,899 கோடியாக உள்ளது. இதே காலகட்டத்தில் லாபம் 23.5% உயர்ந்து, ரூ.272.5 கோடியாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 8 லட்சம் டிக்கெட்டுகள் இதன் இணையதளம்மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆட்டோ, டெலிகாம் பங்குகளில் முதலீட்டை வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகரிக்க என்ன காரணம்?

‘‘கடந்த ஜூன் காலாண்டில் டெலிகாம், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் யாரும் எதிர்பாராதவிதமாக முதலீட்டை வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. முந்தைய மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில், நிறுவன முதலீட்டாளர்கள், பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 4.4% மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் 2.5% முதலீடுகளை அதிகரித்துள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது மொத்த முதலீட்டில் மூன்றில் இரண்டு பங்கை, அதாவது ரூ.19,000 கோடி ரூபாயை இந்த இரண்டு டெலிகாம் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் முதலீடு செய்ததன் அடிப்படை யிலேயே நிறுவன முதலீட்டாளர்களும் தங்கள் முதலீட்டை உயர்த்தியுள்ளனர்.

ஷேர்லக்:  ஆட்டோ, டெலிகாம் பங்குகள்... அதிகரிக்கும் வெளிநாட்டு முதலீடு!

தொலைத்தொடர்புத் துறையின் தொழில் முறையையே தீர்மானிக்கும் இடத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இருப்பதால், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரிய பணச்சிக்கலிலும், கடன் சுழலிலும் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கடந்த இரு காலாண்டு முடிவுகளின்படி, ஸ்மார்ட்போன் பிரிவில் விற்பனைச் சரிவு குறைந்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி வருவாய் கடந்த நான்கு காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது.

வங்கிசாரா நிதி நிறுவனங்களில், கடந்த ஜூன் காலாண்டில், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், க்ருஹ் ஃபைனான்ஸ், எக்விடாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் 1.5% முதல் 8% வரை அதிகரித்துள்ளன. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நல்ல மதிப்பீட்டில் வர்த்தகமாவதால் ஜூன் காலாண்டில் 5.7% அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்திருக்கின்றன. வணிகரீதியான வாகனங் களுக்கு ஃபைனான்ஸ் செய்வதில் வலுவான ஃபிரான்சைஸியாக ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் உள்ளது.

ஆட்டோமொபைல் பிரிவில் தேவைப்பாடு பெரிதும் குறைந்துள்ள சூழலிலும்கூட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இப்பிரிவில் முதலீடு செய்துள்ளார்கள். காரணம், இந்தத் துறையில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீரும் என வெளிநாட்டு நிறுவனங்கள் நம்புவதாகும். மாருதி சுஸூகி நிறுவனத்தில் 0.9% மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் 3% முதலீட்டை ஜூன் காலாண்டில் அதிகரித்துள்ளனர்.’’

நெஸ்லே இந்தியா நிறுவனம் நிஃப்டி இண்டெக்ஸில் இடம்பிடிக்கப்போகுதாமே?

‘‘நுகர்வோர் பயன்பாட்டுப்பொருள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நெஸ்லே இந்தியா, நிஃப்டி இண்டெக்ஸில் வரும் அக்டோபர் மாதம் முதல் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. அதேவேளை, ஜீ என்டர் டெய்ன்மென்ட் அல்லது இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் இண்டெக்ஸிலிருந்து வெளியேறக்கூடும். இது குறித்த விஷயங்கள் பரவியதை அடுத்து, கடந்த புதன்கிழமை, மும்பை பங்குச்சந்தையில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 5.6% உயர்ந்து சாதனை உச்சமாக 12,635 ரூபாயை எட்டியது.

இண்டெக்ஸானது ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஆறு மாத டேட்டாவைக் கொண்டு அரையாண்டுக்கணக்கில் மறு சீரமைக்கப்படும். அப்போது ஏதேனும் மாற்றமிருந்தால் பொதுவாக ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாத டெரிவேட்டிவ்ஸ் சீரிஸின் முதல் வேலைநாளில் அமல்படுத்தப்படும். இதன்படி இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு மாற்றாக நெஸ்லே இந்தியா நிறுவனம் ‘நிஃப்டி 50’ இண்டெக்ஸில் சேருமெனத் தெரிகிறது.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நிஃப்டி இ.பி.எஸ் மதிப்பீட்டை புளூம்பெர்க் குறைக்க என்ன காரணம்?

‘‘கடந்த மூன்று மாதங்களில் நிஃப்டிக்கான இ.பி.எஸ் மதிப்பீடு 4.2 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது என புளூம்பெர்க் தெரிவித் திருக்கிறது. இதற்கு முதலீட்டுத் தேக்கமும், குறைவான நுகர்வும் மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நிலவரப்படி, நிஃப்டி 12-மாத அடிப்படையில் இ.பி.எஸ் 654 ரூபாயாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஜூன் மாத இறுதியில் 678 ரூபாயாக இருந்தது. ஆட்டோமொபைல், மெட்டல் மற்றும் டெலிகாம் துறை சார்ந்த பங்குகளின் வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணம். மேலும், பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், இந்தியா புல்ஸ் ஹவுஸிங், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்களின் வருவாய் எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தை அளித்திருக்கின்றன.

ஷேர்லக்:  ஆட்டோ, டெலிகாம் பங்குகள்... அதிகரிக்கும் வெளிநாட்டு முதலீடு!

கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியை 15%-ஆகக் குறைத்துள்ளது, நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் 24% வருவாய் வளர்ச்சி இருக்கும் எனக் கூறியிருந்தது. தற்போதைய பொருளாதார மந்தநிலையை மாற்றுவதற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங் களை உயர்த்துவதற்கும் ஒரே வழி பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதுதான் என அந்த அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.’’

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு இலக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளதே!

‘‘முகேஷ் அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில், இன்னும் 18 மாதங்களில் கடன் இல்லா நிறுவனமாக மாறுவோம் என அறிவித்தார். இதனை அடுத்து, கிரெடிட் சூஸ் நிறுவனம் அதன் பங்கு மதிப்பீட்டை மேம்படுத்தி, இலக்கு விலையை அதிகரித்துள்ளது. 1,028 ரூபாயாக இருந்த பங்கு இலக்கு விலை, தற்போது 1,210 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2020-21-ம் நிதி ஆண்டிற்கான சவுதி அரம்கோ மற்றும் பி.பி நிறுவனத்துடனான ஒப்பந்தம், ஜியோ மதிப்பீடு, வலுவான பேலன்ஸ் ஷீட், 22 பில்லியன் டாலர் கடன் குறைப்பு போன்ற காரணிகள் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பை உயர்த்தியிருக்கின்றன.’’

ஸ்டெர்லிங் அண்டு வில்சன் நிறுவனப் பங்கு விலை பட்டியலிடப்பட்ட அன்றே குறைந்ததன் பின்னணி என்ன?

‘‘ஸ்டெர்லிங் அண்டு வில்சன் நிறுவனம் ஆகஸ்ட் 6-8-ம் தேதிகளில் புதிய பங்கு வெளியிட்டு நிதி திரட்டியது. பங்கு ஒன்றின் வெளியீட்டு விலை 780 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டது. மொத்தம் 92% பங்குகளுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்தன. கடந்த செவ்வாய் கிழமை, இந்தப் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது, வெளியீட்டு விலையை 7% குறைத்து 725.35 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டது. அன்றைய தினத்தில் அதிகபட்ச விலையாக 755.50 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 691 ரூபாய்க்கும் வர்த்தகமானது. பலவீனமான சந்தைப் போக்கு மற்றும் இதன் பங்கு வெளியீட்டுக்கு அதிக ஆதரவு இல்லாதது போன்றவையே, இந்தப் பங்கு விலை சரிவுக்கு மிக முக்கியக் காரணங்கள்.

ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம், ஸ்டெர்லிங் அண்டு வில்சன் நிறுவனப் பங்கு விலை அதிகம் என்றும், இந்தத் துறையில் போட்டி அதிகம் என்றும் குறிப்பிட்டிருந்தது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டி.ஹெச்.எஃப்.எல் மீண்டும் நிதி நெருக்கடியில் சிக்கி, முதலீட்டாளர்களை நோகடிக்கிறதே!

‘‘டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனம், தனது நிறுவனத்தில் கடன் பத்திரங்கள் வாயிலாக முதலீடு செய்தவர்களுக்கு, சுமார் 1,500 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையை இந்த நிறுவனம் இரண்டாவது முறையாகச் சந்திக்கிறது. முதலீடுகளுக்கான வட்டித் தொகை 363.77 கோடி ரூபாயும், பாதுகாப்பான கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கும் 25,058 முதலீட்டாளர்களுக்கு அசல் தொகை 1,059.91 கோடி ரூபாயும், பாதுகாப்பற்ற கடன் பத்திரத் தொகை 100 கோடி ரூபாயும் டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனம் வழங்க வேண்டி யிருக்கிறது. இந்த நிறுவனம் இதுவரை முதலீட்டாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை மதிப்பு 5,674.58 கோடி ரூபாயாக இருக்கிறது.

இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் முதல், நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் பெரும்பாலான கடனையும், முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையையும் இந்த நிறுவனத்தால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.’’

இன்று (வெள்ளிக்கிழமை) சந்தை திடீரென உயர என்ன காரணம்?

‘‘நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாலையில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் என்கிற தகவல் வெளியானதும், சந்தை கடகடவென ஏற ஆரம்பித்தன. பொருளாதார மந்தநிலையில் சிக்கித் தவிக்கும் தொழில்துறைக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அறிவிப்புகள் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பால் சந்தையில் புள்ளிகள் அதிகரித்தது’’ என்றவர், ‘‘இப்போது கிளம்பினால் தான் ரேஸ் க்ளப்புக்குச் செல்ல முடியும்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஷேர்லக்.

சி.ஐ.ஐ நடத்தும் பிராண்ட் சம்மிட்!

கன்ஃபடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரி (CII) அமைப்பு ‘இன்டர்நேஷனல் பிராண்ட் சம்மிட்’ என்கிற இரண்டு நாள் கருத்தரங்கை செப்டம்பர் 20, 21-ம் தேதிகளில் நடத்தவிருக்கிறது. எல்லா வயதினரும் பிராண்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவே இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. உலக அளவிலும் இந்திய அளவிலும் முக்கியமான பிராண்ட் துறை சார்ந்த நிபுணர்கள் இந்தக் கருத்தரங்கில் பேசவிருக்கின்றனர். பிரபல நடிகை காஜல் அகர்வால், டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாஸ்கர் பாட், ஹங்க்மா டிஜிட்டல் மீடியா நிறுவனத்தின் சி.இ.ஓ நீரஜ் ராய், ரேமண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சஞ்சய் பெஹல் எனப் பலரும் பேச விருக்கின்றனர்.

மார்க்கெட்டிங் துறை சார்ந்தவர்கள், நிறுவனங் களைத் தலைமை தாங்கி நடத்தும் சி.இ.ஓ-க்கள், பிராண்ட் மேனேஜர்கள், எம்.பி.ஏ மாணவர்கள் என பிராண்ட் தொடர்புடையவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ளலாம். சி.ஐ.ஐ உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் அதே கட்டணச் சலுகை நாணயம் விகடன் வாசகர் களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகை நாணயம் விகடன்மூலம் வரும் முதல் 50 வாசகர்களுக்கு மட்டுமே. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள www.ciibrandsummit.com என்கிற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். நல்ல வாய்ப்பைத் தவறவிட வேண்டாமே!

வேல்டெக் பல்கலைக்கழகத்தில் ஸ்டார்ட்அப் கருத்தரங்கம்!

சென்னை ஆவடிக்குப் பக்கத்தில் உள்ள வேல்டெக் ரங்கராஜன் & டாக்டர் சகுந்தலா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வருகிற 30-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிலைத்து நிற்கவும் பல மடங்கு வளரத் தேவையான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்படவிருக்கும் இந்தக் கருத்தரங்கில் கேம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் வி.சங்கர், இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் எஸ்.சுந்தர ராஜன், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் நாகராஜன். கிஷ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் உள்படப் பலரும் பேசுகின்றனர். இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் http://www.veltechtbi.com என்கிற இணையதள முகவரிக்குச் சென்று தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொள்ளலாம். இந்தக் கருத்தரங்கில் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்யும் ஏஞ்சல் நிறுவனங்களும் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களும் கலந்துகொள்ளவிருக்கின்றன. தமிழகம் முழுக்க உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இதில் கலந்துகொள்ளலாமே!

- ஆகாஷ்