நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: தரமான, நல்ல பங்குகளை வாங்கும் நேரமிது..! பங்கு முதலீட்டாளர்கள் கவனத்துக்கு...

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

S H A R E L U C K

அதிகாலை முதலே ஷேர்லக்கை நம்மால் தொடர்புகொள்ள முடியவில்லை. முக்கியமான மீட்டிங்கில் இருக்கலாம் என நினைத்து, நாம் கேள்விகளை அவருடைய மெயிலுக்கு அனுப்பி விட்டுக் காத்திருந்தோம். சரியாக மாலை 4 மணிக்கு அதிரடியாக நம் கேபினுக்குள் நுழைந்தார். “சாரி... மும்பை நண்பர் ஒருவருடன் சீக்ரெட் மீட்டிங்கில் இருந்ததால், உங்கள் போனை எடுக்க முடியவில்லை. நீங்கள் கேள்விகளை அனுப்பியதும் நல்லதுதான். நேரம் மிச்சம். பதில்களை ஆடியோவாக உங்கள் வாட்ஸ்அப்புக்கு அனுப்பிவிட்டேன்’’ என்றவரிடம், நாம் கூடுதலாகக் கேட்ட ஒன்றிரண்டு கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லி விட்டுக் கிளம்பினார். இனி நம் கேள்விகளும் அவரது பதில்களும்...

அரவிந்த் ஃபேஷன்ஸ் உரிமைப் பங்கு வெளியிடுகிறதே?

“அரவிந்த் ஃபேஷன் நிறுவனத்தின் இயக்குநர் குழு, உரிமைப் பங்கு (ரைட்ஸ்) மூலம், ஏற்கெனவே தனது நிறுவனத்தில் பங்கு முதலீட்டாளர் களாக இருப்பவர்களிடம் 198.84 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. விருப்பமுள்ள முதலீட்டாளர்கள் இதில் கலந்துகொள்ளலாம். இந்த உரிமைப் பங்கு வெளியீட்டின் மூலம் 1.48 கோடி பங்குகளை வெளியிட இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. 4 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் விலை 135 ரூபாய். தற்போதைய நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 60.27% பொது மக்களிடம் இருக்கின்றன. 8.31% வெளிநாட்டு முதலீட்டாளர் களிடமும், 13.10% மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடமும், 13.34% சிறு முதலீட்டாளர்களிடமும் இருக்கிறது.”

ஷேர்லக்
ஷேர்லக்

ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் நிதி திரட்டுகிறதே... எதற்காக..?

‘‘ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க், வங்கியின் வளர்ச்சிக்காக பத்திரங் களை வெளியிடுவதன்மூலம் ரூ.3,000 கோடி நிதி திரட்டப் போவதாக முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை வங்கி இயக்குநர்கள் குழு அளித்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இதன் காரணமாக இந்தப் பங்கு 52 வார அதிகபட்ச விலையைத் தொட்டிருக் கிறது. இதன் 52 வார அதிகபட்ச விலை 65.70 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று, பி.எஸ்.இ சந்தையில் 11.79% வரை விலை உயர்ந்து, 64.95 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதே சமயம், என்.எஸ்.இ வர்த்தக சந்தையில் 52 வார அதிகபட்ச விலையையும் கடந்து, 11.62% விலை அதிகரித்து 66.80 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

யுனிகெம் லேபரட்டரீஸ் (Unichem Laboratories) நிறுவனத்தின் பங்கு விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“இந்த நிறுவனம், தனது அப்ரெமிலாஸ்ட் (Apremilast Tablets) மாத்திரைககளுக்கு அமெரிக்க மருந்து நிர்வாகம் ஒப்புதல் கிடைத் திருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த ஒப்புதல் காரணமாக 10 மி.கி, 20 மி.கி மற்றும் 30 மி.கி அளவுள்ள மாத்திரைகளை இந்த நிறுவனம் தயாரிக்கப்போகிறது. நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, திங்கள்கிழமை சந்தையில் இதன் பங்கு விலை 6% வரை உயர்ந்து 324 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

சவிட்டா ஆயில் டெக்னாலஜீஸ் நிறுவனம் பைபேக் செய்யப் போவதாக அறிவித்திருப்பது பற்றி...

“சவிட்டா ஆயில் டெக்னாலஜீஸ் (Savita Oil Technologies) நிறுவனம், 35.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,51,000 பங்குகளைத் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறது. இது மொத்த பங்குகளில் 1.78% ஆகும். பங்குகள் திரும்பப் பெறுவது குறித்து முடிவெடுப்பதற்காக கடந்த 19-ம் தேதி இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்த பிறகு, அதற்கான நடவடிக்கையில் இந்த நிறுவனம் இறங்கியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் பங்கின் விலை 7% வரை அதிகரித்து வர்த்தகமானது. திரும்பப் பெறும், 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு 1,400 ரூபாய் கொடுப்பதாக இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருகிற மார்ச் 5-ம் தேதி அன்று, எந்த முதலீட்டாளர்களிடம் இந்த நிறுவனத் தின் பங்குகள் இருக்கின்றனவோ, அவர்கள் இந்த பைபேக் திட்டத்தில் கலந்துகொள்ள முடியும். வியாழக்கிழமை வர்த்தக முடிவில் இந்தப் பங்கு ரூ.1,088-க்கு வர்த்தகமாகி முடிந்தது.”

ஹிந்துஸ்தான் காப்பர் பங்கு விலை ஒரே மாதத்தில் 130% அதிகரித்திருப்பது முதலீட் டாளர்களுக்கு மகிழ்ச்சிதானே..!

“இருக்காதா பின்னே... ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் பங்குகள், பிப்ரவரி 2013-க்குப் பிறகு, இப்போது அதிக அளவில் வர்த்தகமாகி இருக்கின்றன. புதன்கிழமை வர்த்தகத்தில் 9% விலை அதிகரித்து, 127 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்றைய தினம் மட்டும் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ ஆகிய இரு சந்தை களிலும் சேர்ந்து 20.9 மில்லியன் பங்குகள் பரிவர்த்தனையானது.

மேலும், கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகளை இந்த நிறுவனம் அறிவித்த பிறகு, இதன் பங்கு விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 130% வரை அதிகரித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 108.19 கோடி ரூபாயாக இருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில், இந்த நிறுவனம் 95.61 கோடி ரூபாயை நிகர இழப்பாகப் பதிவு செய்திருந்தது. அதேபோல, இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானமும் 93.29 கோடி ரூபாயிலிருந்து ஆறு மடங்கு அதிகரித்து, 538.42 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.”

நவபாரத் வென்ச்சர்ஸ் பங்கு விலை, திடீரென அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு பங்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து பிப்ரவரி 26-ம் தேதி பரிசீலிப்பதாக சொல்லியிருப்பதை அந்த நிறுவனம் கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை அன்று ஒரே நாளில் 15% வரை விலை அதிகரித்து, 67.30 ரூபாய்க்கு வர்த்தகமானது.

கடந்த ஆறு மாதங்களில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 29% வரை ஏற்றம் பெற்றபோதும், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது, 1% வரை மட்டுமே ஏற்றம் கண்டது. மேலும், இந்தப் பங்கு விலையானது கடந்த ஓராண்டில் 3% நெகட்டிவ் வருமானத்தைத் தந்திருக்கிறது. இதே சமயத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 24% வரை வருமா னத்தை வழங்கியிருக்கிறது. இந்த நிலையில், பங்கின் விலை ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது.”

கோல் இந்தியா நிறுவனம் இரண்டாவது இடைக்கால டிவி டெண்டை வழங்கப் போகிறதாமே!

“2020-21-ம் நிதியாண்டுக்கான இரண்டாவது இடைக்கால டிவிடெண்டைத் தங்களின் முதலீட்டாளர்களுக்குத் தருவதற் கான முடிவை எடுக்க வருகிற மார்ச் 5-ம் தேதி கோல் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் குழு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், மார்ச் 16-ம் தேதி இடைக்கால டிவிடெண்டை வழங்க முடி வெடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தத் தகவல் வெளியானதும், இந்த நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த 24-ம் தேதி 4% வரை அதிகரித்து 142.80 ரூபாயாக வர்த்தகமானது.”

கொச்சின் சிப்யார்டு நிறுவனத்தின் பங்கு விலை திடீரென அதிகரிக்க என்ன காரணம்?

“புதுடெல்லியின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் நடைபெற்ற கூட்டத்தில், ஆறு அடுத்த தலை முறை ஏவுகணைக் கப்பல்களைக் (என்.ஜி.எம்.வி) கட்டுவதற்காக இந்தியக் கடற்படை வழங்கிய டெண்டர் கொச்சின் சிப்யார்டு நிறுவனத்துக்குக் கிடைத்திருப் பதாக இந்த நிறுவனம் அறிவித் திருக்கிறது. இந்த ஆர்டரின் மொத்த மதிப்பு 10,000 கோடி ரூபாய். இந்த அறிவிப்பின் காரணமாக, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி இதன் பங்கு விலை 9% வரை அதிகரித்து, 386.30 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதன் வால்யூம் 10.16 மடங்கு அதிகரித்து, 1,80,014 பங்குகளில் வர்த்தக மானது. இதற்கு முந்தைய ஐந்து நாள்களில் சராசரி வால்யூம் 13,917 பங்குகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.”

இந்தியப் பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?

“சென்செக்ஸ் 51000 புள்ளி களும் நிஃப்டி 15000 புள்ளிகளும் என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகின்றன. வரும் மாதங்களில் சென்செக்ஸ் சுமார் 53000 புள்ளிகள், நிஃபடி 16000 புள்ளிகள் என்கிற அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கான தடுப்பூசி போடுவது முன்பைவிட அதிகரித்துள்ளது. இதனால், விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும்; பொருளாதாரம் வேகமான வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பங்குச் சந்தையும் சிறப்பாகச் செயல்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பங்குத் தரகு நிறுவனங்களும் சந்தை ஆய்வாளர்களும் இந்தியப் பங்குச் சந்தை மீது பாசிட்டிவ் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வோர் இறக்கத்தையும் நல்ல தரமான பங்குகளை வாங்குவதற் கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அவர்கள் முதலீட் டாளர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.”

தற்போதைய நிலையில் வாங்கக் கூடிய பங்குகள் ஏதாவது?”

‘‘ஐ.சி.ஐ.சிஐ டைரக்ட், நிதிச் சேவை, நுகர்வோர், பார்மா உள்ளிட்ட துறைகள் சிறப்பாகச் செயல்படும் எனச் சொல்லி இருக்கிறது. அந்த வகையில், எஸ்.பி.ஐ லைஃப், இண்டஸ்இண்ட் பேங்க், ஹெச்.யூ.எல், டைட்டன், வோல்டாஸ், டிவிஸ் லேப்ஸ், சன் பார்மா போன்ற பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் என அது தெரிவித்துள்ளது.’’

செபி அமைப்பின் தலைவர், இந்திய பங்குச் சந்தையின் போக்குக் குறித்து பேசியிருக்கிறாரே?!

“பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் தலைவர் அஜய் தியாகி, ‘கொரோனா நோய் பரவல் காரணமாகவும், நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரண மாகவும், மார்ச் 2020-ல் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சந்தையின் ஏற்ற இறக்கம் இருந்தது. இருப்பினும் வெகு சீக்கிரமாகவே பங்குச் சந்தைகள் மீண்டுவந்திருக்கின்றன. இந்திய சந்தையைப் போலவே, பல வெளிநாட்டுச் சந்தைகளும் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு ஏற்ற இறக்கத்தைச் சந்தித்திருக்கின்றன. ஆனால், கொரோனா மீட்சிக்குப் பிறகும், ஊரடங்குத் தளர்வுக்குப் பிறகும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் பங்களிப்பு, முன்பைவிட வேகமாகவும் அதிகமாகவும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 10 மாதங்களில் நான்கு கோடியிலிருந்து ஐந்து கோடியாக டீமேட் கணக்குகள் அதிகரித்துள்ளன. இது மூன்று கோடி யிலிருந்து நான்கு கோடியாக அதிகரிக்க 28 மாதங்கள் வரை எடுத்துக்கொண்டது.

அதே சமயம், கடந்த மூன்று மாதங்களாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து வெளியேறிய தொகை அதிகமாக இருந்தது. குறிப்பாக, டிசம்பரில் வெளியேறிய தொகை மிக அதிகம். அதேபோல, எஸ்.ஐ.பி முறையில் ஈக்விட்டி ஃபண்டுகளில் மேற் கொள்ளும் முதலீடுகளும் குறைய ஆரம்பித்தன.

ஆனால், முன்னெப்போதும் போல இல்லாமல், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்திருக்கிறது. 2020-ம் ஆண்டில் மட்டும் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை, இந்திய பங்குச் சந்தையில் அவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். பல்வேறு நிறுவனங்கள் பத்திரங்களை வெளியிட்டதன்மூலம் இந்திய முதலீட்டாளர்களிடமிருந்து 6.5 லட்சம் கோடி ரூபாயை திரட்டியிருக்கிறார்கள்.

ஈக்விட்டி மூலம் நிதி திரட்டுவதும் நாளும் நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல, கடந்த ஆண்டில் வெளியிட்ட ஐ.பி.ஓ-க்களுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தன.”

நுரேகா நிறுவனத்தின் முதல் நாள் பங்கு வர்த்தகம் எப்படி இருந்தது?

“ஹோம் ஹெல்த்கேர் மற்றும் உடல்நலம் சார்ந்த பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனமான நுரேகா நிறுவனத்தின் பங்கு, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி 58.74% பிரீமியத்துடன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப் பட்ட பங்கு ஒன்றின் விலை 400 ரூபாய். ஆனால், முதல் வர்த்தக தினத்தன்றே இதன் பங்கு விலை வெளியீட்டு விலையைவிட 61% அதிகரித்து, 634.95 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

எம்.டி.ஏ.ஆர் டெக்னாலஜீஸ் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறதாமே?

“எரிசக்தி, அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் சேவை வழங்கும் நிறுவனமான இது, மார்ச் 3-ம் தேதி ஐ.பி.ஓ வெளியிடுதற்கு முடிவு செய்துள்ளது.”

பி.எஸ்.இ ஈக்விட்டி டேர்ன்ஓவர் அதிகரித்திருக்கிறதே?

“என்.எஸ்.இ-யில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணமாக கடந்த பிப்ரவரி 24-ம் தேதி பி.எஸ்.இ ஈக்விட்டி பிரிவில் ரூ.40,600 கோடிக்கு டேர்ன்ஓவர் நடந்திருக்கிறது. கடந்த 30 நாள்களில் இந்த டேர்ன்ஓவர் சராசரியாக ரூ.5,200 கோடியாக இருந்துள்ளது. பங்குகளை வாங்கியவர்கள் மற்றும் விற்றவர்கள் பி.எஸ்.இ-யை பயன்படுத்தியதால் இது நடந்துள்ளது.”

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்
டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

வேல்யூ இன்வெஸ்ட்டிங் – பேசிக்! ஆன்லைன் கட்டணப் பயிற்சி

நாணயம் விகடன், வேல்யூ இன்வெஸ்டிங் – பேசிக் என்ற ஆன்லைன் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இது மார்ச் 6, 2021 , காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. 30 வருடங்களுக்கும் மேலான பங்குச் சந்தை அனுபவம் கொண்ட ‘கோயம்புத்தூர் கேப்பிடல்’ டாக்டர் எஸ்.கார்த்திகேயன் இந்தப் பயிற்சி வகுப்பை நடத்துகிறார். வேல்யூ இன்வெஸ்ட்டிங் என்றால் என்ன? அதன் அடிப்படையில் முதலீட்டுக்கு பங்கை எப்படி சரியாகத் தேர்வு செய்வது என்பது குறித்த விரிவான கட்டண வகுப்புதான் இது. பயிற்சிக் கட்டணம் ரூ.500 ஆகும். முன்பதிவுக்கு: https://bit.ly/3jE2KRY

தி.ரா.அருள்ராஜன்
தி.ரா.அருள்ராஜன்

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பேசிக்ஸ் & அட்வான்ஸ்டு

நாணயம் விகடன் ஃபண்ட மென்டல் அனாலிசிஸ் – பேசிக்ஸ் & அட்வான்ஸ்டு என்ற ஆன்லைன் கட்டண பயிற்சி வகுப்பை நடத்துகிறது. Ectra.in நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார். மார்ச் 20-ம் தேதி 9.30 am to 6.30 pm வரை வகுப்பு நடக்கிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.4,000 முன்பதிவுக்கு: https://bit.ly/3k1fwu0