நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: வழக்கமான பருவ மழை... கவனிக்க வேண்டிய ஒரு டஜன் பங்குகள்! முதலீட்டுக்கு கைகொடுக்கும் ஆலோசனை

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

S H A R E L U C K

சரியாக மாலை 3.45 மணிக்கு வீடியோகாலில் வந்தார் ஷேர்லக். கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறித்து சில நடப்பு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டவர், அடுத்து நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் புதிய பங்கு வெளியீட்டில் இறங்குவது பற்றி?  

“தூத்துக்குடியைத் தலைமையக மாகக் கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு இது 100-வது ஆண்டு. தற்போது இந்த வங்கி, பொதுமக்களுக்கு பங்கு வெளியிடத் (ஐ.பி.ஓ) தயாராகிவிட்டது.

கடந்த 2020, அக்டோபரில் நடந்த வங்கியின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஐ.பி.ஓ குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒப்புதல் வழங்கி யுள்ளனர்.  அதனால், நடப்பு ஆண்டின் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் ஐ.பி.ஓ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.ஓ-வுக்கான ஆவணங்களை 8 முதல் 10 வாரங்களுக்குள் செபியிடம் வழங்கப்படும் என இதன் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கே.வி.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் முதலீட்டாளர் களிடமிருந்து ரூ.1,000 கோடி நிதி திரட்ட இந்த வங்கி முடிவு செய்துள்ளது. பங்கு விலை மற்றும் இதர விவரங்கள் சில வாரங்களுக்குப் பிறகு, வெளியாகும் என எதிர் பார்க்கலாம்.

2020-21-ம் நிதி ஆண்டில் கொரோனா பாதிப்பு காலத்திலும் வங்கி சிறப்பாகச் செயல்பட்டிருப் பதால், நிகர லாபம் 47.99% உயர்ந்து, ரூ.603.33 கோடியாக உள்ளது.

கடந்த நிதி ஆண்டில் ரூ.36,825 கோடியாக இருந்த வைப்புத் தொகை தற்போது ரூ.40,970 கோடியாக அதிகரித்துள்ளது. இது 11.26% உயர்வு ஆகும்.’’

ஷேர்லக்
ஷேர்லக்

டி.வி.எஸ் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென அதிகரித்திருக்கிறதே?

“இந்த நிறுவனம் மார்ச் காலாண்டு முடிவை வெளியிட்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட்டதால், இதன் நிகர லாபமும் வருமானமும் அதிகரித்திருக்கிறது. இது பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக, கடந்த 28-ம் தேதி இதன் பங்கின் விலை 16% வரை விலை அதிகரித்து 661.10 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்த விலையானது 52 வார உச்ச விலையைவிட அதிகமாகும். இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 319.19 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.”

கேஸ்ட்ரோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவு வெளியிடப்பட்டது. சிறப்பான செயல்பாடுகளைப் பதிவு செய்திருப் பதால், இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் இதற்கு முந்தைய ஆண்டின் மார்ச் காலாண்டைவிட அதிகரித் திருக்கிறது.

இதனால் கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 7% வரை அதிகரித்து, 134.15 ரூபாய்க்கு வர்த்தகமானது. நிகர லாபம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.”

ஸொமேட்டோ நிறுவனம் ஐ.பி.ஓ வருவது பற்றி...

“உணவு விநியோக நிறுவனமான ஸொமேட்டோ, ஐ.பி.ஓ வெளியிட முடிவு செய்திருக்கிறது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 8,250 கோடி நிதியை முதலீட்டாளர்களிடமிருந்து திரட்ட முடிவு செய்திருக்கிறது. இதற்கு அனுமதி வேண்டி செபி அமைப்பிடம் கடந்த வாரம் விண்ணப்பித்திருக்கிறது. இதில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் 7,500 கோடி ரூபாயும், ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 750 கோடி ரூபாயும் திரட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட வர்த்தக இழப்பை சரிசெய்வதற்காக, இந்த ஐ.பி.ஓ மூலம் திரட்டப்படும் நிதியை இந்த நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப் படுகிறது.”

ஆப்டெக் நிறுவனத்துக்கு செபி அபராதம் விதித்திருக்கிறதே... ஏன்?

“ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 2016 வரையிலான காலத்தில் ஆப்டெக் நிறுவனம் இன்சைடர்் டிரேடிங் விதிமுறைகளை மீறியுள்ளதா என்பதை அறிய செபி விசாரணை நடத்தியது. அப்போது 2016-ம் ஆண்டில் பி.ஐ.டி விதிமுறைகளை இந்த நிறுவனம் மீறியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் காரண மாக, செபி அமைப்பு ஆப்டெக் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது.”

முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு அதிகரித்திருக்கிறதே?

“சர்வதேசக் காரணிகள் பலவும் இந்திய பங்குச் சந்தைக்கு சாதகமாக உள்ள நிலையில், பொருளாதாரம் குறித்த அறிக்கை கள், கொரோனா தொற்றிலிருந்து மீள இந்தியாவுக்கு பல நாடுகளும் உதவ முன் வந்திருப்பது எனப் பலவும் சந்தைக்கு சாதகமாக இருக் கின்றன.

மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருப் பதும் சந்தை ஏற்றத்துக்கு ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக கடந்த மூன்று தினங்களாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு சந்தை களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கடந்த மூன்று நாள்களில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.6.39 டிரில்லியனாக உயர்ந்தது.

கடந்த மூன்று நாள்களில், பென்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 1855.39 புள்ளிகள் அல்லது 3.88% அதிகரித்து, 49733.84-ஆகவும், நிஃப்டி 532.2 புள்ளிகள் அல்லது 3.65% அதிகரித்து 14864.55-ஆக முடிவடைந்தது.

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிக பட்ச ஏற்றத்தைச் சந்தித்திருக் கின்றன. இந்த நிறுவனத்தின் பங்கு விலை 8.32% வரையும், இண்டஸ்இண்ட் பேங்க் பங்கு விலை 5.08% வரையும், பஜாஜ் ஃபைனான்ஸ் சர்வீசஸ் நிறுவனத் தின் பங்கு விலை 4.03% வரையும், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கு விலை 3.72% வரையும் மற்றும் கோட்டக் மஹிந்திரா பேங்க் பங்குவிலை 3.52% வரையும் ஏற்றம் கண்டன.’’

வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்குமாறு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நிபந்தனைகளுடன் மேற்கொள்வதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு ஏப்ரல் 27-ம் தேதி அனுமதி அளித்திருக்கிறது.

இந்த அனுமதியின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் தயாரிக்கலாம். இதன் காரணமாக, ஏப்ரல் 28-ம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு விலை 5.1% வரை அதிகரித்து ரூ.236.10 ரூபாய் வரை வர்த்தகமானது.”

இந்த ஆண்டு பருவ மழை எப்படி இருக்கும், கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது?

“நடப்பு ஆண்டில் பருவ மழை வழக்கம் போல் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அறுவடை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அளிப்பு அதிகரிக்கும். இதனால், பணவீக்க விகிதம் குறையும் பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப் பாக இருக்கிறது.

பருவ மழை நன்றாக இருந்து விளைச்சல் அதிகரிக்கும்பட்சத்தில், இந்தியக் கிராமப்புற வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) கிராமப்புறங்களின் பங்களிப்பு 53 சதவிகிதமாக இருக்கிறது.

நல்ல பருவமழை இருக்கும் பட்சத்தில், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கிராமப்புற நிதி உதவி, வேளாண் ரசாயனங்கள், எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் லாபம் அடையும் என மோதிலால் ஆஸ்வால் பங்குத் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய மெட்ரோலாஜிக்கல் துறை காலண்டர் ஆண்டு 2021-ல் நீண்ட கால சராசரி அளவில் வழக்கமான 98% மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதைப் பருவ மழைக் கணிப்புக்கான தனியார் நிறுவனங்களும் உறுதிப்படுத்தி உள்ளன.

கேப்பிடல் வயா குளோபல் ரிசர்ச் (Capital Via Global Research) பங்குத் தரகு நிறுவனம், கொரமண்டல் இன்டர்நேஷனல், தனுகா அக்ரிடெக், எஸ்கார்ட்ஸ், காவிரி சீட் கம்பெனி, நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் என்று சொல்லி யிருக்கிறது.

ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பங்குத் தரகு நிறுவனம், கொரமண்டல் இன்டர்நேஷனல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், எஸ்கார்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹிரோ மோட்டோ கார்ப், வி-கார்ட் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகளை முதலீட்டுக்குப் பரிசீலிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

மோதிலால் ஆஸ்வால் பங்குத் தரகு நிறுவனம், கோத்ரெஜ் அக்ரோவெட், மாரிகோ, டாபர், கொரமண்டல் இன்டர்நேஷனல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனப் பங்குகளைக் கவனிக்கலாம் எனச் சொல்லி யிருக்கிறது.

நிஃப்டி 15,000 புள்ளிகளுக்குமேல் உயர்ந்துள்ளதே..!

‘‘நடுவில் சரிந்த எஃப் அண்ட் ஓஎக்ஸ்பைரியை முன்னிட்டு வேகமாக உயர்ந்தது. ஆனால், இன்று எஃப் அண்ட் ஓ காரணமாக, சந்தை மேலும் உயர முடியாமல், தடைப் பட்டிருக்கிறது. இனி, கொரோனா செய்திகள், உள்நாடு மற்றும் உலக நிலைமைகள் தொடர்பான செய்திகள் அடிப் படையிலேயே சந்தை மேலே செல்லுமா அல்லது இறக்குமா என்பது தெரியும்.

நீண்டகால முதலீட்டாளர்கள் இந்த இறக்கத்தைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். நல்ல பங்குகளை குறைந்த விலைக்கு வாங்க இதுவே சரியான தருணம். எனவே, நல்ல பங்குகளை மட்டும் வாங்கிச் சேருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அங்கும் இங்கும் ஊர் சுற்றாமல், கொரோனா நோய் அண்டாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டு, வீடியோகாலை கட் செய்தார் ஷேர்லக்.

ஷேர்லக்: வழக்கமான பருவ மழை... கவனிக்க வேண்டிய ஒரு டஜன் பங்குகள்! முதலீட்டுக்கு கைகொடுக்கும் ஆலோசனை

முதலீட்டில் ரிஸ்க் மேனேஜ்மென்ட்!

நாணயம் விகடன் நடத்தும் ‘முதலீட்டில் ரிஸ்க் மேனேஜ்மென்ட்!’ என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி 2021, மே 15, சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது. சிறுசேமிப்பு தொடங்கி பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் வரை அனைத்து முதலீடுகளிலும் ரிஸ்க் இருக்கிறது. இதை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் எடுத்துச் சொல்லப்படும். இந்த நிகழ்வில் இளைஞர்கள், நடுத்தர வயதினர், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று பலன் பெற முடியும். நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம் (இணை நிறுவனர், Holisticinvestment.in) இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகிறார். கட்டணம் ரூ.350. முன்பதிவு செய்ய https://bit.ly/3mO05XC

லாபகரமான இண்டெக்ஸ் ஃபண்டுகள் & இ.டி.எஃப்-க்கள் முதலீடு..!

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் ‘இண்டெக்ஸ் ஃபண்டுகள் & இ.டி.எஃப்-க்கள்: முதலீடு செய்வது மூலம் கிடைக்கும் லாபம்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, மே 9-ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (இணை நிறுவனர், Primeinvestor.in) மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் புராடெக்ட் ஸ்பெஷலிஸ்ட் செந்தில் பாபு ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

நிகழ்காலத்தின் கட்டாயத் தேவை: மனம்... பணம்... ரிலாக்ஸ்..!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘நிகழ்காலத்தின் கட்டாயத் தேவை: மனம்... பணம்... ரிலாக்ஸ்..!’ என்ற நிகழ்ச்சி, மே 7, வெள்ளிக்கிழமை மாலை 4.00 - 5.30 மணிக்கு ஆன்லைனில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக குரு சுவாமி சுகபோதானந்தா, நிதி நிபுணர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கே.எஸ்.ராவ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
அனுமதி இலவசம்! பதிவு செய்ய: https://bit.ly/2IX53S2