பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

உச்சத்தில் பங்குச் சந்தைகள்... இன்னும் எழுச்சி பெறுமா?

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

பங்குச் சந்தை

கடந்த வாரத்தில் பங்குச் சந்தை திடீர் வேகம் எடுத்தது. சென்செக்ஸ் ஏறக்குறைய 600 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. இதற்கு முக்கியமான காரணம், அமெரிக்காவின் மாதாந்தர பணவீக்க விகித குறியீடு வெளியிடப்பட்டதுதான்.

சென்ற அக்டோபர் மாதத் துக்கான அமெரிக்கப் பண வீக்கக் குறியீடு 7.9% என்ற அளவுக்கு இருக்கும் என்று வல்லுநர்கள் கணித்திருந்தனர். ஆனால், அதைவிடக் குறைவாக அதாவது, அக்டோபர் மாதத்துக்கான குறியீடு 7.7% என்ற அளவில் குறைந்திருந்தது.

இதன் காரணமாக அமெரிக்காவின் முன்னணி குறியீடுகளில் இரு தினங்களில் 9.4% அளவுக்கு உயர்ந்தது. கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு நாள்களில் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வு இது ஆகும். இதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளும் அதன் 52 வார உச்ச பட்ச நிலையை எட்டிப் பிடித்து உள்ளன. பேங்க் நிஃப்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

உச்சத்தில் பங்குச் சந்தைகள்... இன்னும் எழுச்சி பெறுமா?

கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் பெரும் பாலான முன்னணிப் பங்கு நிறுவனங்கள் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டதும் சந்தை உயர்வுக்கு இன்னொரு முக்கியமான காரணம்.

ஆனால், இவையெல்லாம் நாணயத்தின் ஒரு பக்கமாகவே இருக்கிறது. ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பு பணவீக்க விகிதம் 2 சத விகிதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். தற்போது அது 7.7% என்கிற நிலையில் இருக்கிறது. அதை 2 சதவிகித மாகக் குறைக்க நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

மேலும், அமெரிக்கப் பங்குச் சந்தையை பாதிக்கும் பல்வேறு நிகழ்வுகள் தொடர் கின்றன. குறிப்பாக, பல முன்னணி நிறுவனங்கள் தற்போது பல்லாயிரக்கணக் கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. ஃபேஸ்புக்கை வைத்திருக்கும் மெட்டா நிறுவனம் 11,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. இதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்திய எலான் மஸ்க், பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தார். அதன் பிறகு, அமேசான் நிறுவனமும் பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

பெரிய நிறுவனங்கள் மட்டுமன்றி, பல்வேறு சிறிய நிறுவனங்களும் ஆயிரக் கணக்கான தொழிலாளர் களைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்வது அதிகரித்து வருகிறது.

மேலும், அமெரிக்காவில் உள்ள 37% சிறு நிறுவனங்கள் கடந்த அக்டோபர் மாதத் துக்கான வாடகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர் என்று ஒரு சர்வே தெரிவித்துள்ளது. பொதுமக்களின் வாங்கும் திறன் குறைந்ததன் காரணமாக ஏற்பட்ட சிரமங்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இவை அனைத்தும் பங்குச் சந்தைகள் இன்னும் சரிவிலிருந்து முழுமையாக மீளவில்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

மேலும், கடந்த இரு வாரங்களாக பெரும்பாலான கிரிப்டோகரன்சிகள் மிகப் பெரிய சரிவை சந்தித்து வருகிறது. சென்ற ஒரு வாரத்தில் மட்டும் 30 பில்லியன் டாலர் அளவுக்கு கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் நஷ்டத்தைச் சந்தித்து உள்ளனர். உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்சான எஃப்.டி.எக்ஸ் சென்ற வாரத்தில் திவால் ஆனது. இந்த எக்ஸ்சேஞ்சில் 10 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் முதலீடு செய்திருந்த பணத்தின் பெரும் பகுதியை இழந்தது பரிதாபம்.

உச்சத்தில் பங்குச் சந்தைகள்... இன்னும் எழுச்சி பெறுமா?

அமெரிக்காவில் பணவீக்க விகிதம் குறைந்திருப் பதைப்போல, நம் நாட்டிலும் குறைந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்படி, முடிந்த அக்டோபர் மாதத்தின் பணவீக்க விகிதக் குறியீடு கடந்த மூன்று மாதங்களின் குறைந்தபட்ச அளவாக 6.77 சதவிகிதமாக இருந்து வந்துள்ளது.

ஆனால், மத்திய ரிசர்வ் வங்கி பணவீக்க விகிதம் 6 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால், கடந்த 10 மாதங்களாக இந்த அளவைவிட பணவீக்க விகிதம் அதிகமாகவே இருந்துவருகிறது. என்றாலும் பல்வேறு உலக நாடு களைவிட இந்தியப் பொருளாதாரம் சற்று சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக நிஃப்டியானது வரும் டிசம்பருக்குள் அதன் உச்சபட்ச புள்ளிகளைத் தாண்டி 19,000 புள்ளிகள் என்கிற அளவில் வர்த்தக மாகும் என்று பல சந்தை வல்லுநர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். என்றாலும், அதற்கு அச்சமூட்டும் முக்கியமான அம்சமாக உயர்ந்துவரும் பணவீக்க விகிதம் உள்ளது. பணவீக்க விகிதத்தை எப்படிக் கட்டுப்படுத்த இருக்கிறோம் என்பதை வைத்துதான் பங்குச் சந்தை யில் காளையின் கை ஓங்குமா அல்லது கரடியின் பிடி இறுகுமா என்பதைக் கணிக்க முடியும்!