பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சந்தை இறக்கம்... பங்கு, ஃபண்ட் முதலீட்டில் லாபம் ஈட்ட என்ன வழி..?

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தை இறங்குவதும் ஏறுவதுமாக இருக்கிறது. ஒட்டுமொத்த மாகப் பார்க்கும்போது சுமார் 10% இறக்கத்தில் இருக்கிறது. இந்தியப் பங்குச் சந்தை மட்டுமல்ல, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் இறங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ரூபாய் மதிப்பு 82 ரூபாய் அளவுக்கு இறக்கம் கண்டிருக்கிறது.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

இது போன்ற சூழ்நிலையில் பங்குச் சந்தை சார்ந்த நிறுவனப் பங்கு, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் முதலீடு செய்பவர்கள், மொத்தமாக, முதலீடு செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை 5% வரைக்குமான இறக்கத்தை இயல்பானது என்றே சொல்லலாம். அந்த வகையில், பங்குச் சந்தையில் ஏற்படும் சிறிய இறக்கத்தை ஆங்கிலத்தில் ‘கரெக்‌ஷன்’ (Correction) என்பார்கள். தமிழில் சொல்வது எனில், திருத்தம் எனக் குறிப்பிடலாம். ஏற்றம் மற்றும் இறக்கம் இரண்டும் சேர்ந்ததுதான் பங்குச் சந்தை ஆகும். அது சந்தையின் இயல்பான குணமாகும்.

பங்குச் சந்தை இறக்கத்தை மூன்றாகப் பிரிக்கலாம். பத்து சதவிகிதத்துக்குக்கீழ் இறங்கினால் அதை இறக்கம் (Fall) என்று சொல்லலாம். 10% - 30% இறக்கம் எனில், அதை வீழ்ச்சி (Crash) என்று சொல்லலாம். 30 சதவிகிதத்துக்கு மேல் இறங்கினால் சந்தை கரடியின் பிடியில் (Bear Market) இருக்கிறது எனலாம். இந்தியப் பங்குச் சந்தையின் தற்போதைய நிலை, வீழ்ச்சியும் கிடையாது, கரடியின் பிடியும் கிடையாது. ஒரு இயல்பான இறக்கம் அல்லது கரெக்‌ஷன் எனலாம்.

சந்தை இறக்கம்... பங்கு, ஃபண்ட் முதலீட்டில் லாபம் ஈட்ட என்ன வழி..?

முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை...

பங்குச் சந்தை எப்போதும் செய்திகளுக்கேற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கும். அதாவது, ஏற்றம் காணும் அல்லது இறக்கம் காணும். கடந்த 2020 மற்றும் 2021–ம் ஆண்டுகளில் ரெஷசன் (Recession), கொலாப்ஸ் (Collapse), கிராஷ் (Crash) போன்ற வார்த்தைகள் 20 லட்சம் தடவைகள் பல்வேறு கட்டுரைகள், செய்திகளில் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், 2020 மற்றும் 2021-ல் இறக்கம் கண்ட சந்தை மேலேதான் ஏறியது. இதே போல, 2005, 2006, 2007-ம் ஆண்டுகளில் இணையதளம் மற்றும் பத்திரிகைக் கட்டுரைகளில் ரெஷசன், கொலாப்பஸ், கிராஷ் ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. ஆனால். 2008-ம் ஆண்டில் உலக அளவில் பங்குச் சந்தைகள் அதிக வீழ்ச்சியைச் சந்தித்தன. சந்தையைப் பொறுத்தவரை, பொருத்தம் இல்லாத கணிப்புகள், செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கும். முதலீட்டாளர்கள் தான் இதிலிருந்து விலகி இருக்க வேண்டும். குறிப்பாக, நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த அர்த்தமற்ற இரைச்சல்களிலிருந்து (Noise) விலகி இருப்பது அவசியம்.

சந்தை இறக்கத்துக்கு என்ன காரணம்..?

இப்போது இந்தியப் பங்குச் சந்தை ஏன் இறங்கியது எனப் பார்த்தால், உலக அளவில் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டிருக்கின்றன. அதன் எதிரொலியாகதான் இந்தியப் பங்குச் சந்தையும் இறக்கம் கண்டிருக்கிறது. மேலும், சமீப காலமாக இரண்டு வாரங்களாக வெளிநாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்கள், பங்குகளை விற்பது அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல், ‘அமெரிக்காவில் இனி பணவீக்க விகிதம் அதிகரிக்கும் சூழ்நிலை இல்லை. இதனால், இனி வட்டியை உயர்த்த மாட்டோம்’ என எப்போது சொல்கிறாரோ, அப்போதுதான் அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்குக்குத் திரும்பும். அதுவரைக்கும் ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும். 2023 ஜனவரியில் ஜெரோம் பாவெல் ‘இனி வட்டியை அதிகரிக்க மாட்டோம்’ என சொல்ல வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில், 2022 டிசம்பர் வரைக்கும் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் தொடரத்தான் வாய்ப்பிருக்கிறது.

சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பொருளாதார பிரச்னைகள் இருந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்க விகிதம் அதிகரித்துக் காணப்படு கிறது. ஜெர்மனியில் எரிசக்தி பிரச்னை அதிகமாக இருக்கிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் அதிக கடன் பிரச்னையில் சிக்கியிருக்கின்றன. இலங்கையில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) வளர்ச்சி மிகவும் தடைபட்டிருக்கிறது. இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா அடிப்படையில் வலுவாக இருக்கிறது. உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா ஒளிர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சந்தை இறக்கத்துக்கு இரண்டு காரணங்கள்...

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, அது இரண்டு விஷயங் களுக்காகக் கீழே இறங்கும். முதல் முக்கிய காரணம், நாட்டின் அடிப்படையில், பொருளாதார வளர்ச்சியில் பிரச்னை இருப்பதாகும். அது போன்ற சூழ்நிலையில் பணத்தை வெளியே எடுப்பது நல்லது. காரணம், நிலைமை சீராகி வர எப்படியும் குறைந்தது மூன்று ஆண்டுகளாகும். உதாரணமாக, இலங்கை அல்லது பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலை போன்று இருக்கும் நாட்டின் பங்குச் சந்தையில் நீண்ட காலத்தில் பணத்தை முதலீடு செய்து பிரயோஜனம் இல்லை.

மற்றொரு காரணம், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இடையே காணப்படும் நெகட்டிவ் சென்டிமென்ட் ஆகும். தற்போது இந்தியப் பங்குச் சந்தை இறங்கி இருப் பதற்குக் காரணம், நெகட்டிவ் சென்டிமென்ட் ஆகும். நம் பக்கத்து வீட்டில் பிரச்னை எனில், நம் வீட்டுக்கும் வரும் என்கிற மாதிரியான பிரச்னை தான் இப்போது இந்தியாவுக்கு இருப்பதாகும்.

மாதம்தோறும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு மூலம் ரூ.12,000 கோடி வந்து கொண்டிருந்தாலும், மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் காப்பீட்டு நிறுவனங்களும் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்தாலும் எஃப்.ஐ.ஐ- களின் முதலீடுகளைப் பொறுத்துதான் இந்தியப் சந்தையின் செயல்பாடு இருக் கிறது. அதாவது, எஃப்.ஐ.ஐ-கள் முதலீடு செய்தால், சந்தை ஏறுகிறது; அவர்கள் விற்றால் சந்தை இறங்குகிறது. எஃப்.ஐ. ஐ-கள் அவர்கள் நாட்டில் அதிக வட்டி அல்லது அதிக வருமானம் கிடைக்கிறது எனில், இந்தியப் பங்குச் சந்தை யிலிருந்து பணத்தை எடுத்து அவர்கள் நாட்டில் முதலீடு செய்துவிடுகிறார்கள்.

தற்போதைய சூழலில், இந்திய கார்ப்பரேட் நிறுவனங் கள் தொய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பெரும் பாலான இந்திய நிறுவனங் களின் வருவாய் குறையவில்லை. இதையே தொடர்ந்து அதிகரித்து வரும் ஜி.எஸ்.டி வரி வசூல் சுட்டிக் காட்டுகிறது. நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பைப் பொறுத்துதான் அவற்றின் பங்கு விலை அதிகரிப்பும் இருக்கும்.

இப்போது முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் நிறுவனப் பங்குகள் அல்லது ஈக்விட்டி ஃபண்டுகளில் மொத்த முதலீடு செய்பவராகவோ, எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ப வராகவோ இருக்கலாம். எஸ்.ஐ.பி முதலீட்டாளராக இருந்தால், பயப் படாதீர்கள். தொடர்ந்து மாதம் தோறும் முதலீடு செய்து வரலாம். சந்தை கீழே இருந்தாலும் இன்னும் கீழே இறங்கினாலும் குறைந்த விலையில் பங்குகளை வாங்க முடியும். ஈக்விட்டி ஃபண்டுகளில் குறைந்த என்.ஏ.வி-யில் யூனிட்டு களை வாங்க முடியும். அதாவது, அதிக எண்ணிக்கையில் பங்குகள் மற்றும் யூனிட்டுகள் கிடைக்கும்.

நல்ல அனுபவம் கொண்ட நீண்ட கால முதலீட்டாளராக இருக்கும்பட்சத்தில், முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகள், 10 ஆண்டு களாக இருக்கும்பட்சத்தில் தாராள மாக மொத்த முதலீட்டை மேற்கொள்ளலாம். 2008, 2020 கரடி சந்தையைக் கண்ட முதலீட் டாளர்கள் ஓராண்டுக் காலத்துக்குள் சந்தை மீண்டுவந்து நல்ல வருமானம் கொடுத்ததை அனுபவபூர்வமாகக் கண்டிருப்பார்கள்.

அடிப்படை வலுவில்லாமல் சந்தை கரடிப் பிடிக்குள் சென்றா லும் இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டு வந்துவிடும். இப்போது இந்தியப் பங்குச் சந்தையில் நடந்திருப்பது ஃபண்டமென்டல் இறக்கம் இல்லை; சென்டிமென்ட் இறக்கம் என்பதால், சந்தை மிகக் குறுகிய காலத்திலேயே மீண்டு வந்து விட வாய்ப்புண்டு. புதிதாக முதலீடு செய்வதற்கும் ஏற்கெனவே செய்திருக்கும் நல்ல நிறுவனப் பங்குகளில் கூடுதலாக முதலீடு செய்வதற்கும் இது சரியான நேரம் ஆகும். உங்களிடம் மொத்தப் பணம் இருந்தால், அதை மூன்றாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு பகுதியை இப்போது முதலீடு செய்யுங்கள். ஒரு பகுதியை நவம்பரிலும், மற்றொரு பகுதி டிசம்பரில் முதலீடு செய்யுங்கள். சந்தை இன்னும் இறங்கினால் நல்ல விலையில் வாங்க முடியும். அதற்கு மாறாக, மேலே சென்றாலும் இப்போது குறைந்த விலையில் வாங்கிய பங்குகளின் விலை உயர்ந்து லாபம் கிடைக்கக்கூடும். மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்டு களில் மொத்தத் தொகையை லிக்விட் ஃபண்டில் போட்டு விட்டு அதிலிருந்து ஈக்விட்டி ஃபண்டுக்கு மாதம்தோறும் முதலீட்டை மாற்றும்போது, சரியாக அதிக யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் பொறுமையாக, நிதானமாக பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் நீண்ட காலத்துக்கு 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் முதலீடு செய்துவரும் பட்சத்தில் கணிசமான செல்வத்தை உங்களால் நிச்சயமாக உருவாக்க முடியும். ஈக்விட்டி சுழற்சி என்பது ஐந்தாண்டு ஆகும். ஈக்விட்டி முதலீட்டில் பெரும் தொகை கண்டவர்கள் எல்லாம் மிக நீண்ட கால முதலீட்டாளர்கள் ஆவார்கள். உலகின் முன்னணி முதலீட்டாளர் வாரன் பஃபெட் அவரின் 11 வயதிலிருந்து இப்போது 92 வயது வரை சுமார் 80 ஆண்டுகள் முதலீடு செய்து வருகிறார். சமீபத்தில் மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 40 ஆண்டுகள் முதலீடு செய்திருக்கிறார். இப்போது 2022-லிருந்து 2027 வரை முதலீட்டைத் தொடரும்பட்சத்தில் உங்களுக்கு ஈக்விட்டி முதலீட்டில் நல்ல லாபம் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது.

வட்டி உயர்த்தப்பட்டும் சந்தை உயர்ந்தது ஏன்?

அண்மையில் இந்தியப் பங்குச் சந்தை சுமார் 10% இறக்கம் கண்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை செப்டம்பர் 30-ம் தேதி ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% அதிகரித்தது. இதன் விளைவாக, இந்தியப் பங்குச் சந்தை அதிக இறக்கத்தைக் காணும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகமானது, காரணம், ரிசர்வ் வங்கி பணவீக்க விகிதத்தைக் கட்டுக்குள் கொண்டுவர இப்படி வட்டியை அதிகரிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும்!