Published:Updated:

பங்குச்சந்தைகளுக்குள் நடந்த பனிப்போர்: BSE-ஐ தட்டிக்கேட்க வந்த NSE-யும் சறுக்கியது ஏன்?

என்.எஸ்.இ
News
என்.எஸ்.இ

என்.எஸ்.இ கதையும் இதேதான். மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சைத் திருத்த வந்த நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) பிற்பாடு பி.எஸ்.இ.யைவிட எப்படி மோசமாக செயல்பட்டது என்பதுதான் இந்தப் புத்தகம் முழுக்க சொல்லப்பட்டிருக்கிறது.

பங்குச் சந்தை உலகில் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு புத்தகம் பரபரப்பாகப் பேசப்பட்டு விவாதிக்கப்படும். அப்படி இப்போது விவாதிக்கப்படும் புத்தகம், சுச்சிதா தலால் - தேபசீஸ் பாசு சேர்ந்து எழுதிய `அப்சொல்யூட் பவர்’ (Absolute Power - Inside Story of the National Stock Exchange’s Amazing Success, Leading to Hubris, Regulatory Capture and Algo Scam) என்கிற புத்தகம். சுச்சிதா தலால், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் பணியாற்றியபோது, ஹர்ஷத் மேத்தா மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்.

Absolute power
Absolute power
Photo: Twitter / @suchetadalal

பங்குச் சந்தையில் எப்போதெல்லாம் மோசடிகள் நடக்கிறதோ, அப்போதெல்லாம் முதலீட்டாளர்களின் குரலாக சுச்சிதா தலால் பேசுவார். தேபசீஸ் பாசு - பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர். கடந்து 15 ஆண்டுக் காலத்தில் என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சில் நடந்த முறைகேடுகளைத் தங்களது இந்த லேட்டஸ்ட் புத்தகத்தின் மூலம் இந்த இருவரும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தனுஷ் நடித்த மாரி படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தப் படத்தின் ஹீரோ நல்லவன்தான். ஆனாலும் ரெளடித்தனம் செய்பவன். அவன் கொட்டத்தை ஒழிக்க ஒரு இன்ஸ்பெக்டர் வருகிறான். ஹீரோவை ஓரங்கட்டிய இன்ஸ்பெக்டர், ஹீரோ செய்ததைவிட பல அட்டூழியங்களை செய்கிறான். அந்த இன்ஸ்பெக்டரை ஹீரோ எப்படி ஒழித்துக் கட்டிவிட்டு, பழைய இடத்தைப் பிடிக்கிறான் என்பதுதான் அந்தப் படம்.

மாரி தனுஷ்
மாரி தனுஷ்

என்.எஸ்.இ கதையும் இதேதான். மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சைத் திருத்த வந்த நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) பிற்பாடு பி.எஸ்.இ.யைவிட எப்படி மோசமாக செயல்பட்டது என்பதுதான் இந்தப் புத்தகம் முழுக்க சொல்லப்பட்டிருக்கிறது.

என்.எஸ்.இ அப்படி என்னதான் செய்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் எனில், முதலில் பி.எஸ்.இ எப்படிச் செயல்பட்டது என்கிற பின்னணிக் கதையைப் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பி.எஸ்.இ என்னும் புரோக்கர்களின் புகலிடம்

பி.எஸ்.இ ஒரு எக்ஸ்சேஞ்சாக இருந்தாலும் அது புரோக்கர்களால் நடத்தப்பட்டு வந்தது. செயல் இயக்குநர் இருந்தாலும் அவரால் புரோக்கர்களை மீறி செயல்பட முடியாது. அதே போல, பி.எஸ்.இ உறுப்பினர் ஆவதும் எளிது கிடையாது. 1980-களில் பி.எஸ்.இ மெம்பர்ஷிப் பெற நினைத்தால், ஒரு கோடி ரூபாய் தர வேண்டும். மிகச் சிலர் மட்டுமே அந்த எக்ஸ்சேஞ்சில் இருந்ததால், வெளிப்படைத்தன்மை குறைவாக இருந்தது. பங்குகள் செட்டில்மென்ட் ஒழுங்காக இருக்காது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் புரோக்கர்கள் அடிக்கடி திவால் ஆகிவந்தார்கள்.

இந்த எக்ஸ்சேஞ்சில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க வேண்டும் என்று நினைத்த மத்திய அரசு, ஜி.எஸ்.படேல் தலைமையில் 1987-ம் ஆண்டு ஒரு கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி பி.எஸ்.இ-யின் செயல்பாட்டில் பல மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.

BSE
BSE

1991-ம் ஆண்டில் எம்.ஜே.பெர்வானி தலைமையில் மற்றொரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி புதிய எக்ஸ்சேஞ்ச் ஒன்றை உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.

பங்குச் சந்தைகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைக்க 1988-ம் ஆண்டு செபி (SEBI) என்னும் அமைப்பு தொடங்கப்பட்டாலும், அந்த அமைப்புக்கு அப்போது பெரிய அளவில் அதிகாரம் தரப்படவில்லை. 1991-ம் ஆண்டு புதிய எக்ஸ்சேஞ்ச் உருவாக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்தாலும், அதற்கு பி.எஸ்.இ உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், செபியால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், பி.எஸ்.இ என்கிற எக்ஸ்சேஞ்ச் புரோக்கர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டதே தவிர, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கோ, முதலீட்டாளர்களுக்கோ அல்ல.

இந்த நிலையில், 1992-ம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா மோசடி நடந்தது. இதனால் பங்குச் சந்தையில் பெரும் இறக்கம் கண்டு, முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்னும் சூழலில்தான் புதிய எக்ஸ்சேஞ்சான என்.எஸ்.இ உருவாக்க அப்போதைய நரசிம்மராவ் அரசு அனுமதி அளித்தது.

என்.எஸ்.இ வரும்போதே டெக்னாலஜி என்கிற பலத்துடன் வந்தது. கம்ப்யூட்டர்கள் என்பது அதிகம் இல்லாத அந்தக் காலத்தில் என்.எஸ்.இ-யின் பாச்சா பலிக்காது என பி.எஸ்.இ நினைத்தது. ஆனால், என்.எஸ்.இ செயல்பாடு காலமாற்றத்தின் தேவையை எடுத்துச் சொல்கிற மாதிரி இருந்ததால், பல புரோக்கர்கள் அதில் உறுப்பினராகத் தொடங்கினார்கள். இதைப் பார்த்த பி.எஸ்.இ திக்குமுக்காடிப் போனது.

என்.எஸ்.இ என்னும் புதிய எக்ஸ்சேஞ்ச்!

பி.எஸ்.இ-யில் நடந்த தவறுகள் என்.எஸ்.இ-யில் நடக்கக் கூடாது என்பதில் ஆர்.ஹெச்.பாட்டீல் மிகவும் தெளிவாக இருந்தார். என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சின் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் புரொஃபஷனல்கள் மட்டுமே இருப்பதென முடிவெடுக்கப்பட்டது. புரோக்கர்கள் குழு தங்களையும் இயக்குநர் குழுவில் சேர்க்க வேண்டும் என லாபி செய்தது. இதை ஆர்.ஹெச்.பாட்டீல் ஏற்கவேயில்லை. அப்போது மண்டல அளவில் செயல்பட்ட எக்ஸ்சேஞ்சுகளும் என்.எஸ்.இ-க்கு தேசிய அதிகாரம் தரக்கூடாது என்றன. இந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு, என்.எஸ்.இ தேசிய அளவில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இப்படி அரசுத் தரப்பில் அனைத்து ஆசீர்வாதங்களுடன் 1994-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி தீபாவளியில் என்.எஸ்.இ தொடங்கப்பட்டது.

இந்தச் சமயத்தில் பி.எஸ்.இ-யின் ஒரு நாள் வால்யூம் 100 கோடி ரூபாய். தொடங்கப்பட்டு சில வாரங்களில் ரூ.10 கோடி வால்யூமை என்.எஸ்.இ அடைந்தது. ஒரே ஆண்டில் பி.எஸ்.இ-யில் நடக்கும் வர்த்தகத்தைவிட என்.எஸ்.இ-யில் அதிக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தர்களுக்கு சாதகமான பல மாற்றங்களை என்.எஸ்.இ தொடந்து செய்துகொண்டே வந்தது. புதிய பல புராடக்டுகளை உருவாக்கியது.

Stock Market
Stock Market
Photo by Nick Chong on Unsplash

ஆர்.ஹெச்.பாட்டீலுக்குப் பிறகு?

இதுவரை என்.எஸ்.இ மிகச் சரியாகத்தான் சென்றது. ஆனால், 2001-ம் ஆண்டு பாட்டீல் விலகிய பிறகு, ரவி நாராயண் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். 2004-ம் ஆண்டு என்.எஸ்.இ-யின் 10-ம் ஆண்டு விழா நடந்தது. விழா மேடையில் முதல் வரிசையில் பாட்டீல் இருந்தபோது, அவரைப் பற்றி ஒரு வார்த்தைகூட ரவியோ, சித்ராவோ பேசவில்லை. என்.என்.இ-யின் நிர்வாகம் அடுத்தடுத்து பல நடவடிக்கை எடுத்தபோதும், அதில் சில தவறு இருந்தாலும் பாட்டீலால் எதிர்க்க முடியவில்லை. இத்தனைக்கும் பாட்டில் என்.எஸ்.இ-யின் இயக்குநர் குழுவில் இருக்கிறார்.

ரவியின் காலத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை என்.எஸ்.இ அடைந்தாலும் அது மர்மதேசமாக இருந்தது. அந்த நிறுவனத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக அரசுக்கு 35.7% பங்குகள் இருந்தாலும், அந்தச் செயல்பாடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக்கூட யாரும் அறிய முடியவில்லை. அதேபோல, அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையும் யாருக்கும் கிடைக்காது.

போட்டியை நசுக்குதல்!

சர்வாதிகாரத்துக்கு அனைத்து எதிர்ப்புகளையும் என்.எஸ்.இ எளிதாக சமாளித்து வந்த காலத்தில், பி.எஸ்.இ-யும் காலத்தின் தேவைக்கேற்ப மாறத் தொடங்கியது. அப்போது அமெரிக்கப் பங்குச் சந்தையான நாஸ்டாக், பி.எஸ்.இ-யின் 26% பங்குகளை வாங்கத் திட்டமிட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குமேல் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. செபி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முதலீடு இறுதிக்கட்டத்தை அடையவிருந்த நிலையில், இந்திய சந்தையில் 5 சதவிகிதத்துக்குமேல் மேல் பங்குகள் இருக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவு போட்டது. இதன் பின்னணியில் என்.எஸ்.இ இருந்தது அப்போது யாருக்கும் தெரியாது.

புரோக்கர்களுக்கான `ஓ.டி.ஐ.என்’ (ODIN) என்னும் சாஃப்ட்வேரை ஜிக்னேஷ் ஷா விற்றுவந்தார். அவருக்குப் போட்டியாக நவ் என்னும் சாஃப்ட்வேரை என்.எஸ்.இ-யின் துணை நிறுவனம் கொண்டுவந்ததுடன், அதை புரோக்கர்களுக்கு இலவசமாகக் கொடுத்தது. ஆனால், அந்த சாஃப்ட்வேர் தோல்வி அடைந்த நிலையில், ஜிக்னேஷ் ஷாவின் ஓ.டி.ஐ.என் சாஃப்ட்வேரை புரோக்கர்கள் பயன்படுத்தக் கூடாது என வாய்வழி உத்தரவு பிறப்பித்தது.

ஸ்டாக் லிஸ்ட்டிங்
ஸ்டாக் லிஸ்ட்டிங்

டிரேடிங் சாஃப்ட்வேர்களை உருவாக்குவதில் மன்னராக விளங்கிய ஜிக்னேஷ் ஷா, கமாடிட்டி சந்தைக்கென எம்.சி.எக்ஸ் (multi commodity exchange) என்கிற சந்தையை உருவாக்க, அதற்குப் போட்டியா என்.சி.டி.இ.எக்ஸ் உருவாக்கப்பட்டது. மிகவும் குறைந்த கட்டணத்தில் இந்த எக்ஸ்சேஞ்ச் செயல்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடுத்தபோது, என்.எஸ்.இ மீது அபராதம் விதிக்கப்பட்டது.

மதுகண்ணன் பி.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக வந்தபின் கேம்ஸ் நிறுவனத்தின் 51% பங்குகளை வாங்கத் திட்டமிட்டார். ஆனால், பங்குகளை வாங்க அனுமதிக்க முடியாது என செபி சொன்னது. பி.எஸ்.இ இந்தத் திட்டத்தைக் கைவிட்ட அடுத்த சில ஆண்டுகளில் அதே கேம்ஸ் நிறுவனத்தில் என்.எஸ்.இ முதலீடு செய்தது. இதற்கு செபியும் ஒப்புதல் அளித்தது.

முறைகேடான நியமனம்

ரவி நாராயண் பதவியில் இருந்து விலகிய பிறகு நேரடியாக அடுத்த சி.இ.ஓ-வாக சித்ரா ராமகிருஷ்ணா நியமிக்கப்பட்டார். இதற்கு எந்தவிதமான விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. செபியிடம்கூட அனுமதி வாங்கப்படவில்லை. அவர் மட்டுமல்ல, அவரால் என்.எஸ்.இ-யின் பெரும் பதவிகளில் மிகப் பெரிய சம்பளத்தில் நியமிக்கப்பட்டவர்கள்கூட செபியின் அனுமதி இல்லாமல் நியமிக்கப்பட்டனர். உதாரணமாக, சுப்ரமணியன் ஆனந்த் என்பவர் சித்ராவின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டு, பிற்பாடு என்.எஸ்.இ-யின் சி.ஓ.ஓ-ஆகவும் நியமிக்கப்பட்டார்.

எம்.சி.எக்ஸ் தொடங்கப்பட்டபோது பலர் என்.எஸ்.இ-யில் இருந்து வெளியேறினார்கள். அப்போது உதவித் துணைத் தலைவராக இருந்த செபாஸ்டினும் விலகினார். ஆனால், இவரது புகைப்படத்தை வெளியிட்டு இவருக்கும் நிறுவனத்துக்கும் சம்பந்தம் இல்லை என ஆங்கில மற்றும் பிராந்திய மொழி நாளிதழ்களில் என்.எஸ்.இ விளம்பரம் செய்து அசிங்கப்படுத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த செபாஸ்டின், என்.எஸ்.இ-யின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர, கோர்ட்டுக்கு வெளியே செட்டில்மென்ட் செய்துகொண்டது என்.எஸ்.இ.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo by Lorenzo from Pexels

கோலொகேஷன் முறைகேடு!

இப்படி அடுத்தடுத்து பல தவறுகளைத் தைரியமாகச் செய்த என்.எஸ்.இ, இறுதியில் மாட்டியது `கோலொகேஷன்' என்கிற முறைகேட்டில்தான். 2010-ம் ஆண்டு கோலொகேஷன் சேவையை அறிமுகம் செய்தது என்.எஸ்.இ. இதில் குறிப்பிட்ட சில புரோக்கர்கள் மட்டுமே பயன் அடைந்தார்கள். உதாரணமாக, எந்த சர்வரில் குறைவான நபர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒரு புரோக்கர் தெரிந்துகொண்டால், அந்த சர்வரில் மட்டுமே நுழைந்து மில்லி செகன்ட் வித்தியாசத்தில் பெரும் பணம் சம்பாதிக்க முடியும். இந்தத் தகவலைப் பயன்படுத்தி ஓ.பி.ஜி செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட சில புரோக்கிங் நிறுவனங்கள் பெரும் பணம் சம்பாதித்தன.

இது குறித்த புகார் செபிக்குப் போனது. இது பற்றி விசாரிக்க சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா தலைமையில் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அமைக்கப்பட, அந்தக் குழு கோலொகேஷன் முறைகேடு நடந்ததை உறுதி செய்தது.

இந்நிலையில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி என்.எஸ்.இ இயக்குநர் குழு கூட்டம் கூடவிருந்தது. என்.எஸ்.இ நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டைக் கொண்டுவருவதை அறிவிக்கும் கூட்டமாக அது இருக்கும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்தக் கூட்டத்தில் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார் சித்ரா ராமகிருஷ்ணா.

கோலொகேஷன் முறைகேட்டுக்காக என்.எஸ்.இ மீது ரூ.1,000 கோடி அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதனால் என்.எஸ்.இ, ஐ.பி.ஓ.வும் இன்னும் வெளியாகாமலே இருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள், `என்.எஸ்.இ ஐ.பி.ஓ எப்போது வரும், அதில் நாம் போட்ட பணத்தை எப்போது எடுத்துக்கொண்டு போகலாம்’ என்று காத்திருக்கிறார்கள். இந்த ஐ.பி.ஓ ஒவ்வோர் ஆண்டும் நிச்சயமாக வெளியாகும் என்று விக்ரம் லிமயே (தற்போதைய சி.இ.ஓ) சொல்லி வருகிறார். நடக்குமா என்று தெரியவில்லை.

பி.எஸ்.இ-யைத் திருத்த வந்த நிறுவனமே சர்ச்சையில் சிக்கியது எப்படி என்பதை சினிமா படம் போல விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை பங்குச் சந்தை ஆர்வலர்கள் அனைவரும் ஒருமுறை படிக்கலாம்!