Published:Updated:

இளைஞர்களை ஈர்க்கும் `டே டிரேடிங்'... முதலீட்டுக்கு முன் நீங்கள் கேட்க வேண்டிய 4 கேள்விகள்!

முதலீடு (மாதிரி படம்)
முதலீடு (மாதிரி படம்)

புதிதாகப் பங்குச்சந்தை ருசி கண்ட சில இளம் முதலீட்டாளர்கள், ``பேசாமல் வேலையை விட்டுவிட்டு பங்குச் சந்தையிலேயே டே டிரேடிங் செய்து சம்பாதித்து பெரிய நிலைக்கு வரலாமே!'' என்று யோசித்து வருகிறார்கள்.

கொரோனா பயங்கரம் தொடர்ந்தாலும், லாக் டௌன் முடிந்து, பெரும்பாலான மக்கள் மறுபடி அரக்கப்பறக்க வேலைக்குப் போவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், புதிதாக பங்குச் சந்தை ருசி கண்ட சில இளம் முதலீட்டாளர்கள் (ராபின் ஹூட் இன்வெஸ்டர்கள்), ``பேசாமல் வேலையை விட்டுவிட்டு பங்குச் சந்தையிலேயே டே டிரேடிங் செய்து சம்பாதித்து பெரிய நிலைக்கு வர முயற்சி செய்யலாமா” என்று யோசிப்பதும் புரிகிறது.

``வேலையில் இருப்பது போல பாஸ் தொல்லை இல்லை; சேல்ஸ் டார்கெட், நிலுவை வசூலிப்பு டார்கெட் போன்ற தொந்தரவுகள் இல்லை; தினமும் கிளம்பி இந்த வெயிலிலும் மழையிலும் டிராஃபிக்கிலும் ஆபீஸ் செல்லும் தலைவலியும் இல்லை. ஒரு கம்ப்யூட்டர், இன்டர்நெட் கனெக்ஷன் மட்டும் இருந்துவிட்டால் ஹாயாக கோவா பீச்சில் உட்கார்ந்துகூட, டே டிரேடிங்கில் சம்பாதித்து பெரிய அளவில் வாழலாம்" என்று இளைஞர்கள் காணும் கலர்ஃபுல் கனவுகளுக்கு வாட்ஸ்அப் மற்றும் போனில் வரும் தூண்டில் விளம்பரங்கள் வண்ணம் சேர்க்கின்றன. ஆங்கிலத்தில் `பிகினர்ஸ் லக்’ என்பார்கள் - அப்படி இந்த கொரோனா காலத்திலும் பங்குச் சந்தை வேறு லாபத்தை வாரிக் கொடுத்து, இவர்களது ஆர்வத்தை அதிகரிக்கிறது.

லாபம் சம்பாதிப்பவர்களைவிட...

ஆனால், இந்த இளைஞர்களுக்கு ஓர் உண்மை அதிர்ச்சித் தகவல் தெரியாது. டே டிரேடிங்கில் லாபம் சம்பாதித்திருக்கும் தனிமனிதர்கள் வெறும் 10% தான் என்கிறது ஒரு சர்வே. ``இல்லை, இல்லை. ஒரே 1% அளவுதான். மீதி 99 பர்சென்ட் டிரேடர்களும் நஷ்டப்பட்டே வெளியேறுகிறார்கள்” என்கிறார் வின்டேஜ் பாயின்ட் டிரேடிங் கம்பெனியைச் சேர்ந்த கோரி மைக்கேல் என்பவர். ``பண நஷ்டம் மட்டுமன்றி, கண்ணெதிரே நொடிக்கு நொடி சந்தை ஏறுவதையும் இறங்குவதையும் பார்த்துப் பதைபதைத்துப் போவதில் உடலும் மனமும்கூட சலித்து நொந்துபோகும், ஜாக்கிரதை” என்கிறார்.

மூன்று வகை முதலீட்டாளர்கள்...

பெரிய பெரிய வங்கிகளும் நிறுவனங்களும்கூட டே டிரேடிங்கில் ஈடுபடும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு அறிவுரையா என்று எண்ண வேண்டாம். பொதுவாக, பங்குச் சந்தை டிரேடிங்கில் ஈடுபடும் தனி மனிதர்கள் மூன்று வகை.

பங்குச் சந்தையில் பல வருடங்களாக ஊறித் திளைத்து வல்லமை வாய்ந்த அனுபவசாலிகள் (Seasoned Investors),

தொழில் வல்லுநர்கள் (Professionals),

தனிமனித வர்த்தகர்கள் (Individual Traders).

இந்த மூன்று வகை முதலீட்டாளர்கள் பற்றி கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

அனுபவசாலிகள் (Seasoned Investors)

இவர்கள் பல வருடங்களாகப் பங்குச் சந்தையில் இயங்குபவர்கள். டாக்டர், இன்ஜினீயர், வங்கி அதிகாரி, கம்பெனி ஓனர் என்று பலதரப்பட்ட வேலையில் இருந்தாலும், அதற்குக் குந்தகம் வராமல் பங்குச் சந்தையிலும் இயங்கி, அதன் பன்முகத்தன்மையை அறிந்தவர்கள். ஏற்றம், இறக்கம், லாபம், நஷ்டம் எல்லாவற்றையும் சமமாகப் பாவிக்கும் தன்மை வாய்ந்தவர்கள். அதற்கு உறுதுணையாக இருப்பது அவர்கள் பார்க்கும் வேலையிலிருந்து வரக்கூடிய வருமானம். அதில் ஒரு பகுதியை நீண்ட கால முதலீடாகவும், இன்னொரு பகுதியை சிறிய டிரேடிங்குகளுக்காகவும் உபயோகித்து சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டவர்கள். இவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அதனால் இவர்கள் செல்வநிலை பெரிதாக மாறுவதில்லை என்பதால், வருடக்கணக்கில் பொறுமை காத்து அதை லாபமாக மாற்றும் வழி அறிந்தவர்கள்.

பங்குச்சந்தை
பங்குச்சந்தை

தொழில் வல்லுநர்கள் (Professionals)

என்.எஸ்.இ அகாடமி, பி.எஸ்.இ அகாடமி, என்.ஐ.எஸ்.எம், என்.ஐ.எஃப்.எம், என்.டி.ஏ (NSE Academy, BSE Academy, National Institute of Securities Market, National Institute of Financial Market, Nifty Trading Academy) போன்ற இந்திய நிறுவனங்களில் அல்லது எல்.எஸ்.இ (London School of economics) போன்ற அயல் நாட்டுக் கல்வி நிறுவனங்களில் சந்தையைக் கற்றுத் தேர்ந்தவர்கள் இந்த புரொஃபஷனல்ஸ். பெரிய வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் வேலைக்கு சேரும் இவர்களுக்கு அங்கும் நல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் வேலையில் ஈடுபடும்போதும், கூடவே நியமிக்கப்படும் வழிகாட்டி (Mentor) பெரிய தவறுகள் நேராவண்ணம் காக்கிறார். அதிவேகமான கம்ப்யூட்டர்கள், விரல் நுனியில் தகவல்கள் இவற்றுடன் செயல்படும் இவர்கள் கண்ணசைவில் கோடிகள் புரளுகின்றன. பெரிய அளவில் பணம் புரளுவதால், கமிஷன், கட்டணம் போன்றவற்றில் இவர்களுக்கு பலவிதமான சலுகைகள் கிடைத்து, லாபம் அதிகரிக்கிறது. நன்கு பயிற்சி பெற்றதால், இவர்களால் உணர்ச்சிக்கு அடிமையாகாமல் மூளையை உபயோகித்து ஜெயிக்க முடிகிறது. லாபம் வராவிட்டாலும், நஷ்டமே வந்தாலும் அன்றைய தின முடிவில் வர்த்தகத்தை அமைதியாக முடித்துச் செல்லும் ஒழுக்கம் கற்றவர்கள்.

தனிமனித வர்த்தகர்கள் (Individual Traders)

இவர்களில் பலர் அதிக முன்அனுபவமோ, கற்றறிதலோ, பெரிய அளவு பணமோ இன்றி, பங்குச் சந்தை என்னும் இந்த சக்கர வியூகத்துக்குள் நுழைபவர்கள். மாதச் செலவுக்கும், வாடகைக்கும்கூட பங்குச் சந்தை தரக்கூடிய லாபத்தை நம்பி இருப்பவர்கள். முதலீடு செய்வது இவர்களிடம் உள்ள சொற்பப் பணம் அல்லது கடன் வாங்கிய பணம் என்பதால் அதை இழந்துவிடுவோமோ என்னும் அச்சம் இவர்களைத் தூக்கமின்றி இரவு, பகலாக உழைக்க வைக்கிறது. கமிஷன், கட்டணங்கள், வரி போன்றவை இவர்களது லாபத்தில் பெரும் பங்கை விழுங்கிவிடுகின்றன. கைப்பணத்தைக் கோட்டைவிட்டு, பங்குச் சந்தையை விட்டு வெளியேறுபவர்கள் இவர்கள்தாம்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

டே டிரேடிங்கில் இறங்கும் முன்...

பங்குச் சந்தையில் டே டிரேடிங்கில் இறங்கும் முன் நீங்கள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை. இந்த நான்கும் உங்களிடம் இருக்கிறதா எனக் கேட்டுக்கொள்ளுங்கள்.

1. முதலீட்டுக்கு ஒதுக்கிய பணம் தவிர, ஒரு வருட காலத்துக்கு வீட்டுச் செலவுகளுக்கான பணம் உங்களிடம் இருக்கிறதா?

2. டே டிரேடிங்குக்கு உகந்த பங்குகள் பற்றியும், வாங்கும் விற்கும் உத்திகள், சார்ட் பேட்டர்ன்கள் பற்றியும் டெக்னிக்கல் தெளிவு.

3. வேகமாக இயங்கும் திறமை.

4. நஷ்டங்களைச் சந்திக்கும் தைரியம்.

இவற்றோடு, டே டிரேடிங்கை ஒரு அன்றாடத் தொழிலாக மேற்கொள்ள விரும்புபவர்கள் என்.எஸ்.இ போன்ற நிறுவனங்கள் தரும் கட்டணப் பயிற்சியைப் பெறுவது அவசியம்!

டே டிரேடிங் என்பதை ஒரு சூதாட்டமாக நினைக்காமல், நன்கு விஷயம் தெரிந்து செய்யக்கூடிய சாதுரியமான வர்த்தகம் என்று நினைத்து புத்திசாலித்தனமாகச் செய்ய முடிவெடுத்தால், அதில் இறங்கலாம். இல்லாவிட்டால், இருப்பதே போதும் என்று நினைத்து நம் தினப்படி வேலைகளில் கவனம் செலுத்தலாம்!

அடுத்த கட்டுரைக்கு