பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த திட்டங்களில் பணவீக்கத்தை தாண்டிய வருமானம் கிடைக்கும் என்பது பலருக்கு தெரியும். ஆனால் இந்த ஒரு தகவலை மட்டுமே வைத்துக்கொண்டு பங்குச் சந்தையை அணுகினால் நஷ்டமே மிஞ்சும்.
`பங்குச் சந்தையில் எளிதாக பணம் பண்ணலாம்' என நண்பர்கள் கூறினார்கள், பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டார்கள் என அடுத்தவர்களின் தகவல்களை நம்பி முதலீடு செய்பவர்களும் இருக்கின்றனர். அப்படி செய்தாலும் நஷ்டம் நிச்சயம் என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை. பங்குச் சந்தை தரகு நிறுவனம் நடத்தி வருவதால் முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லது எவ்வாறு இழக்கின்றனர் என்பதை தினமும் பார்த்து வருகிறேன். அந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன்.
உபரித் தொகை
முதலில் உபரித் தொகை இருப்பவர்கள் மட்டும் பங்குச் சந்தைக்கு வருவது நல்லது. கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, கல்வி மருத்துவ, திருமணம் என குறிப்பிட்ட தேவைக்கென வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. இதுபோன்ற தேவையை வைத்துக்கொண்டு பங்குச் சந்தையில் முதலீடு / வர்த்தகம் செய்தால் பதற்றம் அதிகரிக்கும். அந்த பதற்றமே உங்களை நஷ்டத்தில் கொண்டுபோய் நிறுத்த வாய்ப்பு அதிகம். ஆகையால், உடனடியாக தேவைப்படாத தொகையை மட்டும் பங்குச் சந்தையில் முதலீடு / வர்த்தகம் செய்யதே சிறந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமுதலீட்டாளர் யார், வர்த்தகர் யார்?
உங்களிடம் இருக்கும் உபரி தொகை நீண்ட கால தேவை மற்றும் எதிர்கால நிச்சயமற்ற தேவைக்கு பயன்படும் என நினைப்பவராக இருந்தால் நீங்கள் முதலீட்டாளர். அதுவே உங்களிடம் இருக்கும் உபரி தொகையை வைத்துக்கொண்டு எதாவது கூடுதல் வருமானம் ஈட்ட முடியுமா? என யோசித்தால் இருந்தால் நீங்கள் வர்த்தகர்.
உபரி தொகை வைத்திருக்கும் அனைவரும் முதலீட்டாளராக இருக்க முடியும். ஆனால், அத்தனை நபர்களுக்கும் வர்த்தகர்களாகும் வாய்ப்பு குறைவு. வர்த்தகராக இருப்பதற்கான மனநிலை முற்றிலும் வேறு. தாங்கள் யார்? என்பதில் உள்ள குழப்பம் காரணாமாகவே பெரும்பாலானவர்கள் பங்குச் சந்தையில் பலர் தங்களுடைய பெரும் முதலீட்டை இழக்கின்றனர். ஆகையால், முதலில் அதில் தெளிவு வேண்டும்.

முதலீடு
முதலீட்டை மூன்று விஷயங்கள் முடிவு செய்கின்றன. வருமானம், ரிஸ்க் மற்றும் பணப்புழக்கம். `முதலீட்டில் அதிக வருமானமும் வேண்டும், பணப்புழக்கமும் இருக்க வேண்டும், ரிஸ்க்கும் குறைவாக இருக்க வேண்டும்' என்று நினைத்தால் எந்த முதலீட்டு வாய்ப்புகளையும் பற்றி நீங்கள் யோசிக்க முடியாது. ஏதாவது இரண்டுதான் நமக்கு கிடைக்கும். என்னால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடியும், அதற்கேற்ற வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தால் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.
நான் அதிக ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறேன். அதனால் எனக்கு அதிக வருமானம் கிடைக்குமா? என்று கேட்டால் அது சரியான எண்ணமாக இருக்காது. சராசரியாக ஆண்டுக்கு (சிஏஜிஆர்) 15 சதவிகித வருமானத்தை எதிர்பார்ப்பது நியாயமான எதிர்பார்ப்பு. இதை விட அதிகமான வருமானமும் பங்குச் சந்தையில் கிடைக்க கூடும். ஆனால், எப்போதும் நிலையாக கிடைக்காது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில ஆண்டுகளில் அதிக லாபம் கிடைக்கலாம். சில ஆண்டுகளில் நஷ்டம் ஏற்படலாம். அதனால் ஆண்டுக்கு எவ்வளவு தேவை என்பதை முடிவு செய்த பிறகு தகுந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வர்த்தகம்
ஏற்கெனவே கூறியதைப் போல என்னிடம் இருக்கும் தொகையை வைத்து கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என நினைப்பதுதான் வர்த்தகம். கூடுதலான பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டாலே, மற்ற தொழிலைப் போல இதுவும் ஒரு தொழில் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே அந்த தொழிலுக்கு தேவையானவற்றை செய்தால் மட்டுமே ஒரு வர்த்தகராக வெற்றியடைய முடியும்.
இல்லையெனில் தொழில்களை மூடுவது போல வர்த்தகத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் நிலை ஏற்படும். வர்த்தகத்தை தொழிலாக பார்க்காமல், வர்த்தகத்தை விட்டுச்சென்ற பலரை நாங்கள் பார்த்திருக்கிறோம். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் பலர் தவறான நடவடிக்கையால் பங்குச் சந்தையில் இருந்து நஷ்டத்துடன் வெளியேறி இருக்கிறார்கள்.

சரி இந்தத் தொழிலுக்கு என்ன தேவை? பணம், அறிவு, செயல்படுத்தும் திறன் இவை மூன்றும் முக்கியம். இதில் ஒன்று இல்லையென்றாலும் அதனை சரிசெய்த பிறகே நீங்கள் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். குறைந்த தொகையில் டிமேட் கணக்கு தொடங்க முடியும், டிரேடிங் கட்டணம் குறைவு என்பதாலே டிரேடிங் என்பது எளிதான விஷயம் என நினைத்து பலர் பணத்தை இழக்கின்றனர். அதேபோல பணம் சம்பாதிக்க எளிதான வழி பங்குச் சந்தை என்னும் எண்ணமும் பரவலாக இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல.
பல வெற்றிபெற்ற டிரேடர்களுடன் நான் உரையாடி இருக்கிறேன். அவர்களுக்கென சில பிரத்யேக குணங்கள் உள்ளன. சில வர்த்தகர்கள் தங்களுக்கென சில இலக்குகள் நிர்ணயம் செய்திருப்பார்கள். அவை பூர்த்தியானால் மட்டுமே வர்த்தகம் செய்வார்கள். வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் இல்லையெனில் அன்றைக்கு வர்த்தகம் செய்ய மாட்டார்கள். டிரேட் செய்தாக வேண்டும் என்னும் எந்த அழுத்தமும் அவர்களிடத்தில் இருக்காது. அவர்களை பொறுத்தவரை அது ஒரு தொழில். அந்தத் தொழிலில் அன்றைக்கு வாய்ப்பு இல்லை என்னும் மனநிலையில் இருப்பார்கள்.
அதேபோல டிரேடிங் மூலம் வரும் லாப நஷ்டம் குறித்தும் அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். லாபம் குறித்து அதிக கவலை வரும்போது, குறைந்த லாபத்தில் வெளியேறிவிடுவார்கள். நஷ்டம் வந்தால் உடனடியாக வெளியேறாமல் லாபத்துக்காக காத்திருப்பார்கள். நீங்கள் டிரேடராக இருந்தாலும், சமயத்தில் முதலீட்டாளர் மனநிலையில் சில முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். இதுபோன்ற முடிவுகள் கடும் நஷ்டத்தை ஏற்படுத்த கூடியவை. ஒரு நாளில் கோடி ரூபாயை இழந்தவர்கள் ஏராளம்.
`தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்’ என்னும் பழமொழி இங்கு பொருந்தாது. தொலைத்த பணத்தை மீட்க வேண்டும் என முடிவெடுத்து மேலும் அதிக பணத்தை தொலைத்தவர்கள்தான் அதிகம். ஒரு முறை நஷ்டமடைந்தால் மீண்டும் வெற்றி பெறமுடியாது என்பதல்ல. ஆனால், ஏற்கெனவே கூறிய அறிவு மற்றும் செயல்படுத்தும் திறனை வளர்த்துக்கொண்ட பிறகுதான் வெற்றியடைய முடியும்.
வாரன் பஃபெட் கூறியிருப்பதை போல ‘என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்வதில்தான் அதிக ரிஸ்க் இருக்கிறது.’ ஆகையால் தெளிவான கற்றலுடன் புரிந்து செயல்பட்டால் ரிஸ்கையும் குறைக்கலாம், லாபத்தையும் அதிகரிக்கலாம்.