Published:Updated:

ஏற்றத்தில் ஏற்றுமதித் துறை... என்னென்ன பங்குகளை வாங்கலாம்?

ஏற்றுமதித் துறை
பிரீமியம் ஸ்டோரி
ஏற்றுமதித் துறை

கவர் ஸ்டோரி

ஏற்றத்தில் ஏற்றுமதித் துறை... என்னென்ன பங்குகளை வாங்கலாம்?

கவர் ஸ்டோரி

Published:Updated:
ஏற்றுமதித் துறை
பிரீமியம் ஸ்டோரி
ஏற்றுமதித் துறை

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டில் (2021-22) இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளது; அதாவது, 419.65 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. 2021 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, நமது ஏற்றுமதியானது கடந்த மார்ச்சில் மட்டும் 15% அதிகரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஷியாம் சுந்தர், 
கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

இந்த ஏற்றுமதியானது, கோவிட் 19-க்கு முந்தைய ஐந்து வருட சராசரி ஏற்றுமதி அளவான 300 பில்லியன் டாலர் என்கிற அளவைத் தாண்டி காணப்படுவது குறிப்பிடத் தக்கது. உலக நாடுகளுக்கு சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கமாடிட்டிகளுக்கு எப்போதுமே தேவையும் வரவேற்பும் இருக்கிற நிலை மாறி, இப்போது இந்திய கமாடிட்டிப் பொருள்களுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. தவிர, சீனாவில் மீண்டும் கோவிட் நோய்த் தொற்று காரணமாக முக்கிய நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டுமே தடைபட்டுள்ளன. ஒருபக்கம் சீனாவின் நோய்த்தொற்று, மறுபுறம் ரஷ்யா மீதான தடைகள் ஆகிய இவை இரண்டுமே இந்தியாவுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளன.

ஏற்றத்தில் ஏற்றுமதித் துறை... என்னென்ன பங்குகளை வாங்கலாம்?

மேலும், கன்டெய்னர் மற்றும் கடல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் கமாடிட்டி வர்த்தகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதன் எதிரொலியாக, உலக அளவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கமாடிட்டிப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போரின் விளைவாக, ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாகப் பல்வேறு பொருள் களுக்குத் தேவை ஏற்பட்டுள்ளன. பார்மா, பிளாஸ்டிக் பொருள்கள், வேதிப்பொருள்கள், வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருள்கள், தானியங்கள், டீ, காபி, பால் பொருள்கள் உள்ளிட்டவைக்கு பெரிய அளவில் தேவை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை சர்வதேச விலையைவிடக் குறைவான விலைக்கு இறக்குமதி செய்வதுடன், அதற்கு இணையாக நம் நாட்டிலிருந்து மேற்சொன்ன பொருள்களை சுத்திகரிப்பு செய்து ஏற்றுமதி செய்வதற்கும், ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதை இந்தியா பயன்படுத்திக்கொள்ள இருப்பது இந்திய உற்பத்தியாளர்களுக்கு சாதகமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கமாடிட்டிப் பொருள்களின் விலை ஏற்றம், இத்தகைய ஏற்றுமதிக்குச் சாதகமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், நம் நாட்டிலிருந்து சுத்திகரிக்கப் பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், ஸ்டீல், பிளாஸ்டிக், கெமிக்கல் தயாரிப்பு களுக்கான அடிப்படைப் பொருள் கள் விலையேற்றம் இந்திய ஏற்றுமதிகளுக்கு பாசிட்டிவ்வான செய்தியாகப் பார்க்கப் படுகிறது. மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படுகிற உணவு தானியங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் விவசாயம் சார்ந்த பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

பெட்ரோலியப் பொருள்கள்...

2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டின் சராசரி கச்சா எண்ணெய் விலையை ஒப்பிடும்போது, 73% அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதியில், பெட்ரோலிய ஏற்றுமதி சுமார் 65 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதியானது 2021 மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரண்டு மடங்காக அதிகரித்து, ரூ.59,281 கோடியாக அதிகரித்துள்ளது. டீசல், மோட்டார் ஸ்பிரிட், விமான எரிபொருள், நாப்தா போன்றவை யு.ஏ.ஐ, சிங்கப்பூர், அமெரிக்கா, துருக்கி, நேபாளம், மலேசியா, நெதர்லேண்ட் போன்ற நாடுகளுக்கு இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களால் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பெட்ரோலியத் துறை சார்ந்த ஐ.ஓ.சி சென்னைப் பெட்ரோலியம், மங்களூர் பெட்ரோ போன்ற நிறுவனங் களின் செயல்பாடுகளில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தொழில்நுட்பப் பொருள்கள் ஏற்றுமதி (இன்ஜினீயரிங் கூட்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்)

தொழில்நுட்பப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்ததற்குக் காரணம், அடிப்படை உலோகங்களின் விலை ஏற்றம் அடைந்ததே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். ஏற்றுமதி அளவு மற்றும் ஏற்றுமதியின் மதிப்பு ஆகிய இரண்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரட்டை இலக்கத்தில் காணப்படுகிறது. மேற்கத்திய உற்பத்தியாளர்களின் தேவை இதுவரை சீனாவை நோக்கியிருந்த நிலையில், தற்போது இந்திய நிறுவனங்களை நாடிவருகின்றன.

கோவிட் தாக்கத்தில் இருந்து உலகப் பொருளாதாரம் முழுமை யாகத் திரும்பும் நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் ஹைட்ரோ கார்பன் மீதான மூலதனச் செலவினங்கள் அதிகரித்து வரும் நிலைப்பாடு, நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டு களில் மிதமான அளவில் மூலதனம் அதிகரிக்கச் செய்தது... இவை அனைத்தும் இந்தத் ்துறைக்கு பாசிட்டிவ்வான செய்திகளாகப் பார்க்கப்படு கின்றன.

தெர்மாக்ஸ், எல் அண்ட் டி, கே.இ.சி இன்டர்நேஷ்னல், சீமென்ஸ் ஆகிய நிறுவனங்களின் செயல்பாடுகளில் உடனடியாக, பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், வரும் ஆண்டுகளில் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏற்றத்தில் ஏற்றுமதித் துறை... என்னென்ன பங்குகளை வாங்கலாம்?

டெக்ஸ்டைல் மற்றும் அணிகலன் ஏற்றுமதி

பருத்தி விலை கடந்த நான்கு மாதங்களாக மிகப் பெரிய ஏற்றத்தைச் சந்தித்தது டெக்ஸ் டைல் துறையினருக்கு அதிர்ச்சியை அளிக்கும் செய்தி யாகப் பார்க்கப்பட்டது. கடந்த வாரம், அரசாங்கம் பருத்தி இறக்குமதிக்கு இதுவரை இருந்து வந்த 11% இறக்குமதி வரியை வருகிற செப்டம்பர் இறுதி வரை நீக்கியுள்ளது. இதனால், இந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துருக்கி, மேற்கு ஆப்பிரிக்க நாடு களிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளன. அரசாங்கத்தின் இறக்குமதி வரி நீக்க நடவடக்கையின் காரணமாக, ஆசியப் பிராந்தியத்தில் நிலவுகிற சந்தைப் போட்டியை எதிர் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இந்திய நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலுமே, அமெரிக்காவுக்கு சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் டெக்ஸ் டைல் வகையிலான பொருள்கள் பெருமளவு குறைந்துள்ளன. சீனாவின் ஏற்றுமதிப் பங்களிப்பில் 8% குறைந்து காணப்பட்டுள்ளன. இதனால் ஏற்படுகிற வெற்றிடத்தை, இந்திய நிறுவனங்களால் நிரப்ப முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், உள்நாட்டில் மூலப் பொருள் (காட்டன்) விலை உயர்வு ஓரளவுக்குக் கட்டுக்குள் வரும் என்பது நிறுவனங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அம்பிகா காட்டன் மில்ல்ஸ், நகார் மில்ஸ், ஃப்னியோடெக்ஸ் கெமிக்கல்ஸ் (Fineotex Chemical) ஆகிய நிறுவனங்கள் சூழ்நிலை யைச் சாதகமாக்கிக்கொண்டு வளரும் வாய்ப்பு உண்டு.

ஏற்றத்தில் ஏற்றுமதித் துறை... என்னென்ன பங்குகளை வாங்கலாம்?

எதிர்கால ஏற்றுமதி எப்படி இருக்கும்?

2022-23-ம் ஆண்டின் ஏற்றுமதி இலக்கு 500 பில்லியன் டாலர் களாக நிர்ணயம் செய்யப் பட்டிருந்தாலும், அந்த இலக்கை அடைய முடியுமா என்பதில் பலவிதமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில், உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்தச் சூழ்நிலையில், உலகப் பொருளாதாரமானது மத்திய வங்கிகளின் நிதிக் கொள்கைகளில் எதிர்பார்க்கப்படுகிற வட்டி உயர்வு போன்ற நிலைப்பாடுகளின் காரணமாக, பொருளாதார வளர்ச்சியில் இறக்கம் காண வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட நிலை ஏற்படுமாயின் நம் நாட்டின் ஏற்றுமதியும் குறைய வாய்ப்பு உண்டு. அதாவது, ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு (value) மற்றும் அளவு (volume) இரண்டுமே தடுமாற்றம் காணலாம்.

ஆனால், சாதகமான விஷயம் என்னவெனில், சீனாவின் பொருளாதாரத் தொய்வினால் ஏற்படக்கூடிய இடத்தை இந்தியாவால் நிரப்ப முடியும். இரண்டாவது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்கமடைவதால், ஏற்றுமதி வர்த்தகத்தின் மதிப்பு அதிகரிக்கிறது. மேலும், அரசாங்கம் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த எடுத்து வருகிற எஃப்.டி.ஏ நடவடிக்கைகள் மற்றும் இரும்பு, ஸ்டீல், பார்மா ஆகிய துறைகளுக்கு சலுகை அளிப்பது போன்ற முடிவுகள், நடப்பு நிதியாண்டின் ஏற்றுமதிக்கான இலக்கை அடைய செய்யபடுகின்ற முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

ஆக, அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுமதித் துறை ஏற்றம் தரும் துறையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

ஏற்றுமதித் துறையில் என்னென்ன பங்குகளை வாங்கலாம்?

இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிப் பாதையில் இருந்து வரும் நிலையில், ஏற்றுமதி சார்ந்து முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய பங்குகள் என்னென்ன என்று பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். அவர் பரிந்துரைத்த பங்குகள் இதோ...

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் (Rajesh Exports)

1989-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தங்க ஆபரணங்கள் வணிகத்தில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. பெங்களூரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், உலகம் முழுவதும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், உலகிலேயே ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மட்டுமே தங்க ஆபரணங்கள் வணிகம் சார்ந்த முழுமையான சங்கிலியில் அங்கம் வகிக்கிறது. அதாவது, தங்கம் ரிஃபைனிங் முதல் சில்லறை விற்பனை வரை அனைத்திலும் ஈடுபட்டு வருகிறது. உலகின் ஒட்டுமொத்த தங்கம் தயாரிப்பில் 35% இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இதனால் உலக அளவில் தங்கம் தயாரிப்பு நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து தங்கம் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இது உள்ளது.

இந்த நிறுவனப் பங்கில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், கடந்த டிசம்பர் காலாண்டில் சிறப்பான வருவாய், லாப வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. தவிர, இந்தப் பங்கு சென்செக்ஸ் செயல்பாட்டைவிடவும் 11% அதிகமாகக் கடந்த ஆண்டில் வளர்ச்சி கண்டுள்ளது.

சிறப்பான விற்பனை காரணமாக இதன் வரிக்குப் பிந்தைய லாபம் அதிகரித்துள்ளது. இதன் இ.பி.எஸ் ரூ.10-ஆக உள்ளது. இந்த நிலையில், தற்போது உலக அளவில் புவி அரசியல் சார்ந்த பதற்ற நிலையும், தொடர்ந்து அதிகரித்துவரும் தங்கத்துக்கான தேவையும் இந்த நிறுவனத்துக்கு வரும் காலத்திலும் நல்ல வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, இந்தப் பங்கை நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீட்டுக்காகக் கவனிக்கலாம். இதன் அடுத்த சப்போர்ட் நிலை ரூ.620 - 640 என்ற வரம்பில் உள்ளது. நடுத்தர காலத்தில் 684/720/747 வரை உயர வாய்ப்புள்ளது. விரைவில் இதன் நான்காம் காலாண்டு முடிவுகளும் வரவிருப்பதால் முதலீட்டாளர்கள் இந்தப் பங்கைக் கவனிக்கலாம்.

டிவிஸ் லேப் (Divis lab)

இது 30 ஆண்டுக்கால நிறுவனம். இது இந்தியாவின் முன்னணி பார்மா நிறுவனங்களில் ஒன்று. தவிர, ஜெனரிக் ஆக்டிவ் பார்மா உள்ளீட்டு பொருள்களின் நம்பகமான சப்ளையர் என்ற அங்கீகாரம் பெற்றது. பெரிய பார்மா நிறுவனங்களுக்குத் தயாரிப்புகளை வழங்கும் தனித்துவமிக்க உற்பத்தியாளரும் கூட. இந்த நிறுவனம் சமீபத்தில் உலகின் முன்னணி மூன்று ஏ.பி.ஐ உற்பத்தியாளர்களில் ஒரு நிறுவனம் என்ற இன்னொரு மைல்கல்லையும் எட்டியுள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகிலுள்ள 95 நாடுகளுக்குச் செல்கிறது. இந்தப் பங்கில் சமீபத்தில் எஃப்.ஐ.ஐ பங்களிப்பு சற்றுக் குறைந்துள்ளது. ஆனால், இதை சமன் செய்யும் வகையில் இதில் ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் தங்களுடைய பங்களிப்பை அதிகரித்திருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்த நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 24% என்ற அளவில் இருந்துவருகிறது. இதனால் அதன் வரிக்குப் பிந்தைய லாபமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து, ரூ.902 கோடியாக உள்ளது. தற்போது இந்தப் பங்கின் விலை சற்று மதிப்பு கூடுதலாக இருப்பதாக முதலீட்டாளர்கள் கருதினாலும், இந்தப் பங்கின் குறுகிய காலப்போக்கை ஆராயும்போது பாசிட்டிவ் சூழலே தெரிகிறது. எனவே, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில், இந்தப் பங்கின் விலை பங்கின் செயல்பாட்டுக்கேற்ப இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ரூ.3,340 என்ற நிலையில் குறுகிய கால சப்போர்ட்டுடன் இப்பங்கு 3,440 - 4,575 என்ற வரம்பில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையை உடைத்து நகரும்பட்சத்தில் திடீர் ஏற்றமாக 4,675/5,023 என்ற நிலை வரை உயர வாய்ப்புள்ளது. இதன் நான்காம் காலாண்டு முடிவுகளும் வெளிவர உள்ள நிலையில், இந்தப் பங்கில் வலுவான போக்கு உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

டெக் மஹிந்திரா

டெக் மஹிந்திரா 5.2 பில்லியன் டாலர் மதிப்பு நிறுவனமாகும். 90 நாடுகளில் செயல்பட்டுவரும் இந்த நிறுவனத்தில் 1.25 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் இந்திய ஐ.டி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்திலும், மொத்த ஃபார்ச்சூன் 500 பட்டியலில் 47-ம் இடத்திலும் உள்ளது. ஏரோஸ்பேஸ் முதல் இன்ஷூரன்ஸ் விநியோகம் வரை இருபதுக்கும் மேலான துறைகளில் தன்னை விரிவுபடுத்தி இயங்கிவரும் இந்த நிறுவனம் சிஸ்டம்ஸ், புராசஸ், சொல்யூஷன்ஸ் ஆகியவற்றில் முன்னணியில் இருந்துவருகிறது. உலக அளவில் பல பெரிய நிறுவனங்களின் விருப்பமான நிறுவனமாகவும் இது இருந்துவருகிறது.

டிசம்பர் 2021 முதல் இந்தப் பங்கில் எஃப்.ஐ.ஐ முதலீடு அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் பங்கில் டிவிடெண்ட் வளர்ச்சியும் தற்போதைய பங்கு விலையில் 3.44 சதவிகிதமாக வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இந்தப் பங்கு சென்செக்ஸ் விடவும் 13.7% அதிகமாக வளர்ச்சி கண்டிருக்கிறது. முக்கியமாக, இந்தப் பங்கு நிர்வாகம், வளர்ச்சி மற்றும் மூலதனக் கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தரமான பங்கு என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தப் பங்கு தற்போதைய விலையிலேயே கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. விற்பனை வளர்ச்சி வலுவாக உள்ளது. கடனாளிகளிடமிருந்து வரும் வருவாய் விகிதமும் அதிகரித்து 6.22 சதவிகிதமாக உள்ளது. சமீபத்தில் சற்று இறக்கத்துக்குள்ளான இப்பங்கு 1,280 - 1,480 என்ற வரம்பில் வர்த்தகமாகிறது. இதன் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளிவந்த பிறகு, பங்கு ஏற்றத்தில் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கலாம்.

டி.சி.எஸ் (TCS)

இந்திய அளவிலும், உலக அளவிலும் மிகப் பெரிய ஐ.டி நிறுவனமாக டிசிஎஸ் இருந்துவருகிறது. இதனால் இதற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. சமீபத்திய நான்காம் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்துள்ளது. இது இந்தப் பங்கில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. வருடாந்தர வரிக்குப் பிந்தைய லாப வளர்ச்சி 7 சதவிகிதமாக உள்ளது. ஐந்து ஆண்டுக் கால விற்பனை வளர்ச்சியும் 10 சதவிகிதமாக உள்ளது.

இந்தப் பங்கின் தற்போதைய விலை முதலீட்டாளர்களுக்கு அதிகமாகத் தோன்றலாம். ஆனாலும் நிகர விற்பனை இதுவரை இல்லாத அளவில் ரூ.50,591 கோடியாக உள்ளது. மேலும், கடனாளிகளிடமிருந்து வரும் வருவாய் விகிதமும் 5.63 சதவிகிதமாக உள்ளது. எனவே, நீண்ட காலத்தில் இந்தப் பங்கின் விலை நகர்வு அதன் தரம் மற்றும் செயல்பாட்டுக்கு ஏற்றவாறு இருக்கும் என்று நம்பலாம். எனவே, இந்தப் பங்கில் காணப்படும் ஏற்றத்தின் போக்கு முதலீட்டாளர்களுக்கு லாபம் தருவதாக இருக்கும்.

- ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism