Published:Updated:

மத்திய பட்ஜெட்... பங்குச் சந்தைக்கு என்ன சாதகம்..? முதலீட்டாளர்கள் கவனிக்க...

SHARE MARKET

பிரீமியம் ஸ்டோரி

பட்ஜெட் 2021

கொரோனா பரவலுக்குப் பிறகு வரும் பட்ஜெட் மற்றும் இதுவரை இல்லாத பட்ஜெட் என அறிவிக்கப்பட்டிருந்ததால், பொது மக்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பில் இருந்தும் எதிர்பார்ப்பு இருந்தது. நடுத்தர மற்றும் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு பெரிய அளவில் எந்தச் சாதகமும் வழங்கப் படவில்லை. இதனால் ஏமாற்றம் இருந்தாலும் அதற்கான காரணம் அரசு சந்தித்துவரும் நிதிப் பற்றாக்குறை என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

வி.விஜயகுமார் 
நிறுவனர்,  zebuetrade.com
வி.விஜயகுமார் நிறுவனர், zebuetrade.com

காப்பீட்டுத்துறை

இந்த பட்ஜெட்டில் காப்பீட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி பங்கு வெளியீடு அடுத்த நிதி ஆண்டில் நிச்சயம் இருக்கும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உருவாகும். 2021-ம் ஆண்டில் வெளியாகும் ஐ.பி.ஓ-வாக இது இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதேபோல, காப்பீட்டுத் துறை யின் அந்நிய முதலீட்டை 49 சதவிகி தத்தில் இருந்து 74 சதவிகிதமாக உயர்த்தியிருப்பது நல்ல விஷயம். இதன்மூலம் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு உயரும். பலருக்கும் காப்பீட்டு வசதி சென்றடையும்.

மூலதன விரிவாக்கம்

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ள மற்றொரு முக்கியமான விஷயம், மூனதன விரிவாக்கத்துக்கான ஒதுக்கீடுதான். அடுத்த நிதி ஆண்டில் ரூ.5.54 லட்சம் கோடி அளவுக்கு மூலதன விரிவாக்கத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டைவிட 34% அதிக மாகும். இந்தத் தொகையை சரியாகப் பயன்படுத்தும்போது சந்தையில் தேவை உயரும்.

தவிர, மாநிலங்களின் மூலதன விரிவாக்கத்துக்காக ரூ.2 லட்சம் கோடியை ஒதுக்கியிருப்பதும் வரவேற்கத் தகுந்த அம்சமாகும். இதன் மூலம் கேப்பிடல் கூட்ஸ் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் பெரிய மாற்றம் ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகளும் தேவையும் பெருகும்.

வாகனக் கொள்கை

பழைய வாகனங்களை சந்தையில் இருந்து நீக்குவது குறித்து இன்னும் 15 நாள்களில் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழைய வாகனங்களை நீக்குவதன் மூலம் சுற்றுசூழல் மாசு மற்றும் எரிபொருள் பயன்பாடு குறையும். அதே சமயம், புதிய வாகனங்களுகான தேவையும் உயரும். எனவே, அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆட்டோ மொபைல் துறையினருக்கு முக்கியமான ஆண்டாக இருக்கும்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

பங்கு விலக்கல்

பங்கு விலக்கல் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது வரவேற்கத் தகுந்த விஷயம் என்றாலும், இது சாத்தியம்தானா என்பது அடுத்த நிதி ஆண்டில்தான் தெரியவரும். உதாரணத்துக்கு, ஏர் இந்தியாவை எடுத்துக் கொண்டால், ஓர் ஆண்டுக்கு மேல் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. தற்போது டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்றாலும் ஏர் இந்தியா வெற்றியைப் பொறுத்தே பங்கு விலக்கல் வெற்றியா என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

வாராக்கடனுக்குத் தீர்வு

வங்கிகளின் வாராக்கடன் பிரச்னைக்கு ஒரு தீர்வாக அஸெட் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். இதனால், வங்கிகள் இனி அதிகளவில் கடன் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

நிதி அமைச்சர் இப்போது அறிவித்திருக்கும் திட்டங்களைப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நன்கு வரவேற்றிருக்கின்றனர். அதனால்தான் சென்செக்ஸ் தொடர்ந்து 50000 புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகம் ஆகி வருகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு