Published:Updated:

30 நாள்களில் ரூ.60,596 கோடி முதலீடு; ரிலையன்ஸ் பங்குகள் வாங்க இது சரியான தருணமா?#VikatanFinance

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

ஒரு நிறுவனம் வளரும் சமயத்தில் அல்லது தொடக்க காலத்தில் அதில் விஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர் நிறுவனம் முதலீடு செய்வது வழக்கம். அப்படிதான் தற்போது ரிலையன்ஸ் ஜியோ வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் முதலீடு செய்திருக்கிறது.

உலகம் முழுக்க கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும்கூட, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பொருளாதார ரீதியாகப் புரட்சிகளைச் செய்து வருகிறது.

உலகின் முன்னணி நிறுவனங்கள் பல வரிசையாக ஜியோவில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கின்றன. இதனால் ஜியோ நிறுவனம் தற்போது வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கி உள்ளது.

30 நாளில் ரூ.60,596 கோடி!

முதன்முதலில் 10 சதவிகிதம் ஜியோ பங்குகளை வாங்கிக் கொண்டு, 43,574 கோடி ரூபாயை அந்நிறுவனத்தில் முதலீடு செய்தது ஃபேஸ்புக். இரண்டாவதாக, அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனம் ஜியோவின் 1.5 சதவிகிதப் பங்குகளை 5,655 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. தற்போது விஸ்டா ஈக்விட்டி 2.32 சதவிகிதப் பங்குகளை 11,367 கோடி ரூபாயைக் கொடுத்து வாங்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அடுத்ததாக, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் ஜியோ பிளாட்ஃபார்மில் அதிகபட்சமாக முதலீடு செய்வது இதுவே முதல் முறை. 

கடந்த 30 நாள்களில், மொத்தம் 13.37 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்து 60,596.37 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்தப் புதிய முதலீடுகளால் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 5.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக், ஜியோ புதிய கூட்டணி - ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்!

விஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர் அமெரிக்காவில் தொழில்நுட்ப ரீதியான நிறுவனங்களில் முதலீடு செய்யும் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் ஆகும். பொதுவாக ஒரு நிறுவனம் வளரும் சமயத்தில் அல்லது தொடக்க காலத்தில் அதில் விஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர் நிறுவனம் முதலீடு செய்வது வழக்கம். அப்படிதான் தற்போது ஜியோ வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் முதலீடு செய்திருக்கிறது. இந்நிறுவனத்தின் முதலீடு ஜியோ நிறுவனம் அதனுடைய இலக்கை நோக்கி செல்வதற்கும் அதன் கட்டமைப்பை வலுப்படுத்தவும் உதவும் என்று கருதப்படுகிறது. 

viSta equity partners
viSta equity partners

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சந்தை முடியும்போது, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து 1,579.70 ரூபாயை எட்டியது. இந்த ஏற்றத்துக்கு மிக முக்கிய காரணம், ஜியோ டிஜிட்டலில் விஸ்டா ஈக்விட்டி நிறுவனம் முதலீடு செய்வதாக அறிவித்ததுதான். இந்த அறிவிப்பு வெளியான பின்னரே, ரிலையன்ஸின் பங்குகள் அதிரடி ஏற்றத்தைச் சந்தித்தன என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

முகேஷ் அம்பானி வரவேற்பு!

விஸ்டா நிறுவனத்தின் முதலீடு குறித்து தெரிவித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ``உலகளவில் பெரிய தொழில்நுட்ப முதலீடு நிறுவனமான விஸ்டாவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து தரப்பட்ட இந்தியர்களும் பயன்பெறும் வகையில் இந்தியாவின் டிஜிட்டல் தளத்தை மாற்றுவதற்கு மற்ற முதலீட்டாளர்கள் முன்வந்ததுபோல விஸ்டா நிறுவனமும் முன்வந்துள்ளது. உருமாறும் தொழில்நுட்ப சக்திகள்தான் எல்லோருக்கும் சிறந்த எதிர்காலத்துக்கான திறவுகோலாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜியோ இன்னும் அதிகமான பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இதை வாங்க அமெரிக்கத் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லான்டிக் மற்றும் சவுதி அரேபியாவின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்டு ஆகிய இரு நிறுவனங்களும் போட்டி போட்டு வருவதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜியோ ஃபேஸ்புக் கூட்டணி... இ-காமர்ஸில் ஏற்படும் மாற்றங்கள்!

ரிலையன்ஸ் பங்குகளை வாங்கலாமா?

தனது கடன் சுமையைக் குறைப்பதற்காக, பெரும் முதலீடுகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஈர்த்துவரும் இந்த நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகளில் விலை தொடர்ந்து ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வருகிறது. இது ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்வதற்கு  ஏற்ற வாய்ப்பா? என்ற கேள்வியை பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். 

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்
இந்தியப் பங்குச் சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.53,125 கோடிக்கு உரிமைப் பங்கு வெளியிடவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

``பெரு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நுகர்வோரை மையப்படுத்தி நடைபெறக்கூடிய டிஜிட்டல், தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வர்த்தகம் உள்ளிட்டவற்றில் உலக அளவில் வளர்ச்சியடைந்திருப்பதால், உலகின் பெரிய நிறுவனங்கள் பலவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தோடு இணைந்து செயல்படப் போட்டியிடுகின்றன. எனவே, அடுத்த இரண்டாண்டுகளில் பல்வேறு வணிகங்களில் இந்த நிறுவனம் ஈடுபடவிருக்கும் நிலையில் அவற்றிலும் பங்கெடுக்க, தற்போதுள்ள பங்குதாரர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு.

உரிமைப் பங்கு வெளியீடு!

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துவரும் அதே சமயத்தில், இந்தியப் பங்குச் சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.53,125 கோடிக்கு உரிமைப் பங்கு வெளியிடவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிறுவனம் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதன்முறை. இந்த உரிமைப் பங்கு வெளியீட்டின் மூலம், பங்கு ஒன்றைச் சலுகை விலையில் ரூ.1,257-க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறது.

11.05.2020 - மதியம் 1;29 நிலவரப்படி
11.05.2020 - மதியம் 1;29 நிலவரப்படி
ஒரு நிறுவனத்தில் ஏற்கெனவே பங்குதாரர்களாக இருப்பவர்களுக்கு, சந்தை விலையைவிடச் சலுகை விலையில் பங்குகளை வாங்கும் அழைப்புதான் பங்குதாரர்களுக்கான உரிமை வெளியீடு.
கடந்த 5 ஆண்டு விலை நிலவரம்
கடந்த 5 ஆண்டு விலை நிலவரம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் எதிர்காலத்தில் மிகவும் மதிப்புள்ளதாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தால், பங்கு விலை ரூ.1,257 அல்லது அதற்கும் கீழாக இறங்கினாலோ இந்த உரிமை வெளியீட்டை விடுத்து, நேரடியாகச் சந்தை மூலமாகவே வாங்கலாம். பங்கு விலை ரூ.1,460 என்ற வரம்பிலேயே இருக்கும்பட்சத்தில், பங்குதாரர்களுக்கான உரிமை வெளியீட்டின் மூலம் 14% குறைவான சலுகை விலையில் வாங்கினால் அது லாபகரமாக இருக்கும். இப்போதுள்ள சூழலில் நீண்டகால எதிர்பார்ப்பின் அடிப்படையில் இது நல்லதொரு முதலீடாக அமையும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு