வால் ஸ்ட்ரீட்டை அதிரவைத்த `ரெட்டிட் க்ரூப்'... இந்த சம்பவம் உலகிற்கு சொல்லும் சேதி என்ன?

இந்த விளையாட்டு ஷார்ட் செய்வதில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க்கை உலகுக்கு உணரச் செய்திருக்கிறது. இந்தப் பிரச்னை எப்படி சரிசெய்யப்படப் போகிறது என்பதில் விழிபிதுங்கி நிற்கிறது வால் ஸ்ட்ரீட்.
கேம்ஸ்டாப் விளையாட்டு இப்போதைக்கு முடியாது என்று நேற்று நாம் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். இந்தப் பிரச்னை காரணமாக கேம்ஸ்டாப் நிறுவனம் ஒரே வாரத்தில் அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற நிறுவனமாக மாறிவிட்டது.
வியாழன் காலையில் அந்தப் பங்கு அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகமாவது நிறுத்தப்படும் என்ற வதந்தி பரவியது. இதனால் நேற்று கேம்ஸ்டாப் நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 346 டாலர் என்ற விலையில் இருந்து 152 டாலர் குறைந்து 193.60 டாலர் என்று முடிவடைந்தது.
இந்த நிலையில் கேம்ஸ்டாப் நிறுவனர் Vlad Tenev வியாழன் அன்று தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். கேம்ஸ்டாப் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகமாகும். ஒரு பங்கு வர்த்தகமாவதை நிறுத்த முடியாது. ஆனால், பங்கு வர்த்தகமாகும் அளவுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தப் பேட்டி சந்தை முடிவடையும் நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது. வர்த்தகமாகாது என்ற அச்சம் காரணமாக 193.60-க்கு முடிந்த அந்த பங்குக்கான டிமாண்ட் சந்தை மூடப்பட்ட பிறகு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அது மீண்டும் 318 டாலர் என்கின்ற பழைய விலைக்கே சென்றுள்ளது. சந்தையில் அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதிலிருந்து இந்தக் கண்ணா மூச்சி விளையாட்டு மீண்டும் தொடரும்.
இந்த விளையாட்டு ஷார்ட் செய்வதில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க்கை உலகுக்கு உணரச் செய்திருக்கிறது. இந்தப் பிரச்னை எப்படி சரிசெய்யப்படப் போகிறது என்பதில் விழிபிதுங்கி நிற்கிறது வால் ஸ்ட்ரீட்.
இந்தப் பிரச்னையில் ஷார்ட் செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையானது கேம்ஸ்டாப் நிறுவனத்தின் மார்க்கெட்டில் சுழற்சியில் இருக்கும் பங்குகளைவிட 1.3 மடங்கு அதிகமாக இருக்கிறது. பங்கு மூலதன வெளியீடு மூலம் 1,000 பங்குகள் வெளியிடப்பட்டு இருந்தால் 1,300 பங்குகள் ஷார்ட் செய்யப் பட்டிருக்கிறது. இது எப்படி இத்தனை காலம் பெரிய புரோக்கர்கள் ஊக வணிகம் மூலம் கொள்ளை லாபம் அடித்தனர் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் நிகழ்வாகவும் உள்ளது. இந்த ஷார்ட் டிரேடிங் குறித்து நேற்று வெளியான கட்டுரை...
7.1 கோடி கேம்ஸ்டாப் பங்குகள் இதுவரை ஷார்ட் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரச்னை எப்படி எழுந்தது என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு பங்கை ஷார்ட் செய்யும்போது பல விலைகளில் ஏல நடைமுறையில் பங்கு வாங்க விண்ணப்பிப்பார்கள். உதாரணத்துக்கு 1,000 பங்குகள் வேண்டி 5 ரூபாய்க்கு, 1,500 பங்குகள் வேண்டி 5.05 ரூபாய்க்கு, 1,200 பங்குகள் வேண்டி 5.10 ரூபாய்க்கு என்று விண்ணப்பிப்பார்கள். சிறு முதலீட்டாளர்கள் இது போன்று ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே பார்க்க முடியும். நமது நாட்டில் ஜீரோதா போன்ற பங்கு தரகு நிறுவனங்கள் 20 ஆர்டர்களை பார்ப்பதற்கு வசதி செய்துள்ளன. பெரிய தரகு நிறுவனங்கள் 100 ஆர்டர்களைப் பார்க்க முடியும்.

சிறு முதலீட்டாளர்களின் கண்களுக்கு மொத்தம் எத்தனை பங்குகள் விற்பனைக்கு வருகின்றன என்பதும் காட்டப்படும். பெரிய தரகு நிறுவனங்கள் மக்கள் மனதில் பயத்தை விதைக்க அதிக விலையில் அதிக பங்குகளைக் கேட்டு விண்ணப்பிப்பார்கள். இதுபோன்ற விண்ணப்பங்கள் பொதுவாக நிறைவேறாது. காரணம், அவ்வளவு அதிக விலை கொடுத்து அவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் பங்கு வாங்க மாட்டார்கள். அவ்வளவு பணமும் யாரிடமும் இருக்காது. இந்த நடைமுறையை வைத்துதான் பெரிய தரகு நிறுவனங்கள் சிறு முதலீட்டாளர்களிடம் பயத்தை விதைத்து பங்கு விலையைக் குறைத்து வந்தனர்.
இதை மோப்பம் பிடித்த சிறு முதலீட்டாளர் குழு கூட்டணி அமைத்து அதிக விலைக்கு அனைத்து பங்குகளையும் ஒரே நொடியில் விண்ணப்பித்து வாங்கிவிட்டது. இதில் வெளியிடப் படாத பங்குகளும் உள்ளதுதான் சோகம்.
இதன் காரணமாக இல்லாத பங்குகளை விற்பதில் நடைபெறும் பிரச்னை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. வெளியிடப்பட்ட பங்குகளைவிட 1.3 மடங்கு பங்குகளை சிறு முதலீட்டாளர் குழு வாங்கிவிட்டது. இப்போது சுவாரஸ்யமான விஷயம் அந்தக் கணக்கு எப்படி நேர் செய்யப்பட இருக்கிறது என்பதில் வந்து நிற்கிறது.
இந்தப் பிரச்னை காரணமாக ஷார்ட் செய்வதில் உள்ள சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

இதில் மிகவும் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த கில்லி சிறு முதலீட்டாளர்கள் குழுவில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்களாக இருப்பதுதான். இந்தச் சிறிய இந்திய கூட்டணி முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் பழம் தின்று கொட்டை போட்ட இரண்டு மிகப் பெரிய முதலீட்டு நிறுவனங்களை ஒரே நாளில் திவால் ஆக்கியிருக்கிறார்கள்.
இந்த விளையாட்டைப் பற்றி உலக பணக்காரர்களில் முன்னணியில் உள்ள டெஸ்லா நிறுவனர் எலன் மாஸ்க் வெளியிட்டுள்ள ஒரு வார்த்தை ட்வீட் மிகப்பெரிய வைரலாகி வருகிறது. அவர் Gamestonk என்று குறிப்பிட்டு Reddit விவாதம் பற்றிய லிங்கை இணைத்து ட்வீட் செய்திருந்தார்.
Stonk என்பது கேலியான ஒரு வார்த்தை. பங்குச் சந்தையில் Stock என்பதை வேண்டுமென்றே தவறாக Stonk என்று குறிப்பிடுவார்கள். அதன் அர்த்தம் என்னவென்றால் சரியாக செயல்படாத, தொடர்ந்து விலை குறையும் பங்கு என்பதாகும்.
இது போன்ற பிரச்னை நமது பங்குச் சந்தையிலும் இருக்கிறது. நமது பங்குச் சந்தையில் பங்குகளுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சர்க்யூட் உள்ளது. இதன் அளவாக பங்கைப் பொறுத்து 2%, 5%, 10%, 20% என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிக அதிக ஏற்ற இறக்கங்கள் தடுக்கப்படலாம். ஆனாலும் நமது சந்தையில் பிரச்னை இல்லை என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. பல பங்குகள் மாதக் கணக்கில் அப்பர் சர்க்யூட் அல்லது லோயர் சர்க்யூட்டில் வர்த்தகம் ஆன நிகழ்வுகளை நமது சந்தை பார்த்திருக்கிறது. நமது சந்தையிலும் பெரிய முதலீட்டு நிறுவனங்கள் இதே போன்ற அச்சமூட்டும் நிகழ்வுகளை செய்வதை பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அனுதினமும் பார்க்க முடியும்
ஷார்ட் செய்யும் நடைமுறை சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. என்றாலும் மிகப் பெரும்பான்மையான நாடுகளில் இது நடைமுறையில்தான் உள்ளது. புத்திசாலி இந்திய சிறு முதலீட்டாளர் குழு எறும்பாக இருந்து பெரிய யானையின் காதுக்குள் சென்று அதை வீழ்த்தியது ஷார்ட் செய்வதில் உள்ள பிரச்னைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பெரிய முதலீட்டு நிறுவனங்களால் சிறு முதலீட்டாளர்கள் இத்தனை ஆண்டுக்காலம் எப்படி தமது பணத்தை இழந்து வந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பெரிய முதலீட்டு நிறுவனத்தை சிறு கூட்டணி வீழ்த்தியது சிறு முதலீட்டாளர்களிடம் மிகப்பெரிய மகிழ்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது.
இந்த அமெரிக்க நிகழ்வு, முதலீட்டாளர்களைக் காப்பாற்றும் விதிமுறைகளை மாற்றும் நேரம் வந்துவிட்டது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்த விதிமுறைகளில் என்ன மாற்றங்களை வால்ஸ்ட்ரீட் மட்டும் அல்லாது நமது செபியும் செய்ய இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் பங்குச்சந்தை மீது இருக்கும்.