Published:Updated:

அதானி குழும பங்குகள் திடீர் சரிவு; அதானி குழுமம் அளித்த விளக்கம் என்ன?

அதானி
அதானி ( vikatan )

`இந்தத் தவறான செய்தி முதலீட்டாளர்களுக்கு ஈடு செய்ய முடியாத பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், அதானி குழுமத்தின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது' - அதானி அறிக்கை!

அதானி நிறுவனத்தின் பங்குகளின் விலைப் போக்கை, நேற்று (ஜூன் 14, 2021) பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்துக்கொண்டிருந்தார்கள். ஏனெனில், அன்றைய வர்த்தக தொடக்கத்திலேயே அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 25% வரை சரிந்து வர்த்தகமானதுதான் மிக முக்கிய காரணம்.

அதானி குழும நிறுவனங்களில் ரூ. 43,000 கோடி முதலீடு செய்துள்ள 3 வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கணக்குகளை என்.எஸ்.டி.எல் அமைப்பு முடக்கியுள்ளது என்கிற செய்தி வெளியானதுதான், அதானி நிறுவனத்தின் பங்குகள் குறைவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

மொரீஷியஸ் நாட்டில் இயங்குவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட், கிரெஸ்டா ஃபண்ட் மற்றும் ஏ.பி.எம்.எஸ் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் ஆகிய நிறுவனங்கள் அதானி குழுமத்தில் பெரும் முதலீடுகள் செய்துள்ளன. அதானி குழும நிறுவனங்களில் இவை சுமார் ரூ.43,000 கோடி அளவு பங்குகளை தன் வசம் வைத்துள்ளன. இந்நிலையில்தான், என்.எஸ்.டி.எல் சில காரணங்களை முன்வைத்து, அந்நிறுவனங்களின் கணக்குகளை முடக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகின.

அதானி போர்ட்ஸ்
அதானி போர்ட்ஸ்
புளூம்பர்க் ஆசிய பணக்காரர் பட்டியல்: சீனத் தொழிலதிபரை பின்தள்ளிய அதானி!

இந்தச் செய்தி வெளியானதும், ஜூன் 11-ம் தேதி ரூ.1,600-க்கு வர்த்தகமான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு, நடப்பு வாரத்தின் முதல் வர்த்தகத் தினமான நேற்று, ரூ.1,200-க்கு குறைந்து வர்த்தகமானது. இதே போல மற்ற அதானி நிறுவனப் பங்குகளின் விலையும் சடாரென சரிந்தன.

ஆனால், அதானி குழுமம், இச்செய்தியை மறுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் `முதலீட்டாளர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்த செய்யப்பட்ட விஷயம்தான் இது.

இந்தத் தவறான செய்தி முதலீட்டாளர்களுக்கு ஈடு செய்ய முடியாத பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், அதானி குழுமத்தின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை அடுத்து, அதானி நிறுவனப் பங்குகளின் விலை சிறிது மேம்பட்டது. வர்த்தக இறுதியில், `அதானி என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் பங்கு விலை, 6.26% சரிவுடன் ரூ.1,509 ரூபாய்க்கு நிறைவடைந்தது. `அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம்’ பங்கு விலை ஜூன் 11-ம் தேதி விலையான ரூ.839லிருந்து ரூ.703 வரை குறைந்து, நேற்றைய வர்த்தக முடிவில் ரூ.774-யில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதானி என்டர்பிரைசஸ்
அதானி என்டர்பிரைசஸ்
ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர்... அசத்தும் அதானி..!

ஆனால், அதானி பவர், அதானி டோடல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய பங்குகள் லோயர் சர்க்யூட் விலையைத் தொட்டிருக்கின்றன. இன்றும் (ஜூன் 15) லோயர் சர்க்யூட் விலையிலேயே வர்த்தகமாகி வருகின்றன. அதானி க்ரீன் எனர்ஜி மட்டுமே 0.68% விலை அதிகரித்து ரூ.1,226க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதானி நிறுவனம் அறிக்கை வெளியிட்டு, தற்காலிகமாக முதலீட்டாளர்களின் போக்கை திசை திருப்பியிருந்தாலும், அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சி இன்றும் தொடர்கிறது. அதனால், சிறு முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளில் முதலீடு செய்யும் போது மிகக் கவனமாக இருக்கவும்!

அடுத்த கட்டுரைக்கு