Published:Updated:

தொடர் இறக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தை; நிபுணர்கள் சொல்லும் காரணங்கள் என்ன?

Share Market (Representational Image)

வீணாக கவலைப்படுவதை விட இறக்கங்களை வாய்ப்புகளாகக் கருத வேண்டும். இறக்கத்துக்காக காத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம். இப்போது சிறிய முதலீடுகளை மேற்கொண்டு சந்தையின் நகர்வுகளில் சவாரி செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

தொடர் இறக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தை; நிபுணர்கள் சொல்லும் காரணங்கள் என்ன?

வீணாக கவலைப்படுவதை விட இறக்கங்களை வாய்ப்புகளாகக் கருத வேண்டும். இறக்கத்துக்காக காத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம். இப்போது சிறிய முதலீடுகளை மேற்கொண்டு சந்தையின் நகர்வுகளில் சவாரி செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

Published:Updated:
Share Market (Representational Image)

பங்குச் சந்தைகள் சரியும் போதெல்லாம், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை உண்டாகும். அதே சமயம் சந்தை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே இருந்தால் முதலீடு செய்தவர்கள் வரவேற்பார்கள். ஆனால் புதிதாக முதலீடு செய்ய காத்திருப்பவர்களுக்கு அது முட்டுக்கட்டையாக இருக்கும். எனவே, எந்த வகையில் பார்த்தாலும் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு சவால்கள் இருக்கவே செய்கின்றன. இந்த முறையும் அப்படித்தான். ஆனால் இப்போது சந்தை சொல்லும் கதை என்ன?

அதற்கு முன் கடந்த காலத்தைச் சற்று சுருக்கமாகத் திரும்பி பார்ப்போம்.

மார்ச் 2020-ல் கொரோனா முதல் அலை, நிச்சயமற்ற தன்மையையும், வளர்ச்சி பற்றிய கவலையையும் கொண்டுவந்தது. அப்போது சந்தைகள் இறக்கம் கண்டு, நிஃப்டி 7511 என்ற குறைந்தபட்ச நிலையைத் தொட்டது. பின்னர் கவலைகள் சற்றுத் தணிந்து எதிர்பார்ப்புகள் அதிகரித்ததால் சந்தை மீண்டு சரவெடியாக ஏற்றம் கண்டது. இரண்டாவது அலை வந்தபோதும் அதேபோல் கவலை வந்தது.

ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்
ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்
விகடன்

சந்தையும் சற்று இறக்கத்துக்குள்ளாகி மீண்டு ஏற்றத்தில் பயணித்தது. சமீபத்தில் நவம்பர்-டிசம்பர் 2021 காலத்திலும் அதே போக்கு. ஆனாலும் ஒவ்வொரு முறையும் முந்தைய அலையைக் காட்டிலும் கவலை குறைவாகவே காணப்பட்டதால், சந்தை இறக்கங்களிலிருந்து மீண்டன. தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பெரிய பொருளாதார முடக்கத்தைத் தவிர்க்கவும், சந்தைகளில் நெகிழ்வான தன்மையைத் தக்கவைக்கவும் மிகவும் உதவியது. இதனால் மார்ச் 2020-ல் 7,511க்கு சரிந்த சந்தை 2021 அக்டோபரில் 18,604 வரை ஏற்றம் கண்டது.

தற்போது சந்தையில் என்ன மாற்றம் உண்டாகியிருக்கிறது. எதனால் இறக்கம் காண்கிறது, இந்த இறக்கும் மேலும் அதிகமாகுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1.பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வுகள்:

2021-ல் ஆற்றல், உணவு மற்றும் பொருட்களின் விலைவாசி பல நாடுகளில் பல தசாப்த காலத்தில் இல்லாத அளவுக்கு கடும் உயர்வைச் சந்தித்தது. இதனால் அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் இந்தியா வரை பணவீக்க விகிதம் உயர்ந்தது. இந்தியாவில், நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 5.6 சதவிகிதம் உயர்ந்தது. இது முந்தைய மாதத்தில் 4.9 சதவிகிதத்தில் இருந்தது. இந்திய மத்திய வங்கியானது பணவீக்கத்தை 4% எனும் அளவில் தக்கவைக்க இலக்கு வைத்துள்ளது. இதைவிட 2% கூடவோ குறைவோ மாறுபாடு இருக்கலாம் என நிர்ணயித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனாலும் உயரும் பணவீக்கம் கவலை தரக்கூடியது. இந்த பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் எரிபொருட்களின் விலை உயர்வு ஆகும். கச்சா எண்ணெய் விலை 2020-ல் 32.8% சரிந்திருந்த நிலையில் 2021ல் 67.2% உயர்ந்திருப்பதாக உலக வங்கி அறிக்கை சொல்கிறது. இயற்கை எரிவாயு விலையும் 2021-ல் மூன்று மடங்கு உயர்ந்தது, இதனால் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமும் உயர்ந்தது. கூடவே, வானிலை. பருவமழை போன்றவற்றினால் ஏற்பட்ட விநியோக இடையூறுகள் மற்றும் சீனாவில் இருந்து அதிக உணவுப் பொருட்கள் இறக்குமதி போன்ற காரணங்களால் உணவுப் பொருட்களின் விலையும் தசாப்த காலத்தில் இல்லாத உயர்வை எட்டியது.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)

இத்தகைய பணவீக்க உயர்வு பல நாடுகளின் மத்திய வங்கிகளின் பணக்கொள்கை நிலைப்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தியது. இதனால் சில மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டன. உதாரணமாக, அமெரிக்க ஃபெடரல் அதன் சமீபத்திய கூட்டத்தில், மார்ச் 2022-க்குள் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் குறிக்கும் வகையில், அதன் சொத்து வாங்குதல் நடவடிக்கைகளை விரைவாக முடிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தது. அதே நேரத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி பெருந்தொற்றுக்கால அவசர கொள்முதல் திட்டத்தையும் (Pandemic Emergency Purchase Program) மார்ச் 2022-க்குள் நிறுத்துவதற்கான சமிக்ஞைகளைச் செய்துள்ளது.

இங்கிலாந்து, ரஷ்யா, பெரு, போலந்து, அர்ஜென்டினா மற்றும் பல நாடுகள் தங்களின் வட்டி விகிதங்களை உயர்த்தின. இது உலகம் முழுவதும் தொடரும் என்ற போக்கு நிலவுவதால், பணவீக்கம் எந்த நேரத்திலும் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் இப்போதைக்கு இல்லை. மேலும் கொரோனா பரவல் அதிகரிப்போ, முக்கிய மத்திய வங்கிகளின் பணவியல் கொள்கை நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களோ நிதிச் சந்தைகளில் எந்த நிலையான போக்கையும் உருவாக்கவில்லை. மொத்தத்தில் உற்சாகமான நுகர்வு மற்றும் வணிக சூழல் மீதான நம்பிக்கை ஆகியவற்றினால் இந்தியாவில் ஒட்டுமொத்த பொருளாதார செயல்பாடு வலுவாகவே உள்ளது.

இந்தப் பின்னணியில், பிப்ரவரி 7-9 இடையில் நடக்கும் ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தின் மீது அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது. ஒமிக்ரான் பரவல் கவலையால் ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதத்தில் பணப்புழக்கத்தை இயல்பாக்கும் முயற்சியை இடைநிறுத்த முடிவு செய்தது. இப்போது இத்தகைய கவலைகள் நிலையற்றதாக மாறிவிட்டதால், 2020-ல் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தளர்வான பணக் கொள்கை நிலைப்பாட்டை மத்திய வங்கி மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதிகரித்த பணவீக்கம் குறைவது 2022-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில்தான் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் தொடர்ந்து வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்தால், ஏற்கெனவே வெளியீட்டு இடைவெளி எதிர்மறையாக இருப்பதால், கொள்கை முடிவுகள் மேற்கொள்வது மிகவும் சிக்கலானதாகிவிடும்.

பொதுவாகவே வட்டி விகித உயர்வுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் சந்தை நேர்மறையாக இருக்காது. மேலும் அத்தகைய நடவடிக்கைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தாலே இறக்கங்கள் சந்தையில் காணப்படும். எனவே, பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகித நிலைப்பாட்டை அறிவிக்கும் வரை இந்தக் காரணி பெரிய நிழல் போல சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்திவரும்.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)

2. நிதிநிலை முடிவுகளும், காலம் கடந்த இறக்கமும்:

இது நிறுவனங்களின் வருவாய் சீசன். இந்தியாவில் நிறுவனங்கள் தங்களின் 3-ம் காலாண்டு முடிவுகளை அறிவிக்கின்றன. வெளிநாடுகளில் நிறுவனங்கள் தங்களின் 4-ம் காலாண்டு முடிவுகளை அறிவிக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிநிலை அறிக்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்தியாவில், குறிப்பிட்ட துறைகளில் நிறுவனங்களின் செயல்திறன் வலுவானதாகவே இருக்கிறது. மற்றவை பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஆரம்பக்காலத்தில் இருக்கிறோம் என்றாலும், பாதிக்கப்பட்ட வளர்ச்சியின் அறிகுறியாகவே இருக்கின்றன. 430 நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளின் தரவுகள் வந்துள்ளன. இதில் பெரும்பான்மையான ஆரோக்கியமான செயல்திறன் மிக்க நிறுவனங்கள் ஐடி துறை, நிதி சேவை மற்றும் மருந்து மற்றும் நுகர்வோர் துறை நிறுவனங்களாகவே உள்ளன.

ஆனால், 4,000க்கும் மேலான பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதனால் துறை சார்ந்த செயல்பாடு மாறக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதேசமயம் சந்தை இயக்கத்தை பாதிக்கும் மற்றொரு காரணி, இறக்கம் குறித்த எதிர்பார்ப்பு. தற்போது காலம் கடந்த இறக்கம் என பலரும் நம்புகின்றனர். இப்படியான எதிர்மறையான எதிர்பார்ப்புகள் வழங்கும் முதல் யோசனை முதலீட்டை வெளியே எடுப்பதாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சமீப காலமாக நிகர விற்பனையாளர்களாக இருந்து வருகின்றனர், இதனால் மற்ற முதலீட்டாளர் பிரிவுகளும் சேரும்போது தற்போது கண்டிருக்கும் இறக்கத்தின் வேகமானது மேலும் விரைவாகும். இருப்பினும், இறக்கத்தின் வேகம் முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. 5 நாட்களில் நிஃப்டி 1,500-க்கும் மேலான இறக்கமும், சென்செக்ஸில் 5000-க்கும் மேலான இறக்கமும் ஏற்பட்டுள்ளது. அப்படியானால், இது இன்னும் எந்தளவுக்கு தொடரும் என்பதுதான் முக்கியமான கேள்வி.

டெக்னிக்கல்

சந்தையின் சமீபத்திய நகர்வுகளிலிருந்து கிடைக்கும் பாடம்: அக்டோபர் 19, 2021 அன்று பதிவான 18,604 என்ற உச்சத்திலிருந்து மூன்று தனித்துவமான நகர்வுகளைப் பார்க்க முடிந்தது.

டிசம்பர் 20, 2021 அன்று 16,614 வரை இடைக்கால இறக்கத்தைச் சந்தித்தோம், பின்னர் அதிலிருந்து மீண்டு 18 ஜனவரி 2022 அன்று அதிகபட்சமாக 18,350 வரை ஏற்றம் கண்டது. அ

தன்பிறகு 25 ஜனவரி 2022 அன்று 16,836 க்கு மீண்டும் ஒரு இடைக்கால இறக்கத்தை உண்டாக்கியது. டிசம்பர் 20, 2021-ல் கண்ட இறக்கத்திலிருந்து ஜனவரி 18,2022-ல் கண்ட உச்சம் வரை 28 நாட்களில் 87 சதவிகிதம் மீட்சி கண்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஜனவரி 18,2022-ல் கண்ட உச்சத்திலிருந்து 25 ஜனவரி, 2022-ல் கண்ட இறக்கம் வரை அதே 87 சதவிகித நகர்வானது 7 நாட்களில் நடந்துள்ளது.

அப்படியெனில் 16,838 என்பது இந்தப் போக்கின் குறைந்தபட்ச நகர்வு என்று அர்த்தமா? இல்லவே இல்லை. இந்த நகர்வுக்கு காரணம் டபுள் டாப் பேட்டர்ன் உருவாக்குதலின் காரணமாக நிகழ்ந்துள்ளது.

இதன் அர்த்தம் 16,614 என்ற நிலையைச் சோதிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதாகும். 16,614 ஐ தாண்டி நகரும் எந்த நடவடிக்கையும் 16,000 அல்லது அதற்கும் குறைவான நிலைகளுக்கு ஆழமான இறக்கத்தை உண்டாக்கலாம்.

தற்போது நாம் கவனிக்க வேண்டியவை இவைதான்:

(i) வட்டி விகித அறிவிப்புகள்

(ii) 3-ம் காலாண்டு முடிவுகள்

(iii) முக்கிய நிலைகளின் சவால் திறன் மற்றும் அதை தொடர்ந்த சந்தை செயல்பாடு

(iv) சந்தைக்குள் வரும் முதலீடு

Share Market (Representational Image)
Share Market (Representational Image)

எனவே மேலே குறிப்பிட்டுள்ள காரணிகள் குறித்து தெளிவு பிறக்கும் வரை இப்போதைக்கு உள்ள வரம்பிலேயே இருக்க வாய்ப்புள்ளது. நல்ல தரமான பங்குகளை அவற்றின் நிதிநிலை முடிவுகளின் அடிப்படையில், சரியான இறக்கத்தில் வாங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம். மேலும் பீதி அடைய வேண்டாம். இறக்கங்கள் சாதாரண சந்தை நடவடிக்கைதான். அதேபோல்தான் அதிலிருந்து மீண்டும் ஏற்றம் காண்பதும்.

எனவே வீணாக கவலைப்படுவதை விட இறக்கங்களை வாய்ப்புகளாகக் கருத வேண்டும். இறக்கத்துக்காக காத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம். இப்போது சிறிய முதலீடுகளை மேற்கொண்டு சந்தையின் நகர்வுகளில் சவாரி செய்ய கற்றுக்கொள்ளுங்கள். கரையில் இருந்துகொண்டே நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. எனவே தற்போதைய சந்தையின் நிலைப்பாடு… தயாராக இருங்கள் அடுத்தடுத்து நிறைய காத்திருக்கிறது.

தமிழில்: ஜெ.சரவணன்