Published:Updated:

42% சரியுமா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு... திடீரென விலை சரிந்தது ஏன்?

Bombay Stock Exchange (BSE) building in Mumbai
Bombay Stock Exchange (BSE) building in Mumbai ( AP Photo/Rafiq Maqbool )

இந்தியாவின் மிகப்பெரிய லாபம் சம்பாதிக்கும், அதிக சந்தை மூலதனம் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென சரிவைச் சந்தித்திருப்பது பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தங்கத்தின் விலை இறங்கினாலும் செய்தி, ஏறினாலும் செய்தி. அப்படித்தான் இன்று ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்பதுதான், அந்த நிறுவனத்தில் எது நடந்தாலும் செய்தியாவதற்கு மிக முக்கிய காரணம்.

லாக்டௌன் காலகட்டத்தில், அனைத்து நிறுவனங்களும் பொருளாதார வீழ்ச்சி எனும் கடலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது, முகேஷ் அம்பானி மட்டும் எக்கச்சக்கமான முதலீடுகளைக் கொண்டுவந்தார். இதற்குக் காரணம், ஜியோ நிறுவனத்திலும், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்திலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோடி கோடியாய் பணத்தைக் கொண்டுவந்து கொட்டியதுதான். இதனால் கடனில்லா நிறுவனம் என்கிற பெருமையையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாக்டௌன் காலத்திலேயே தட்டிச் சென்றது.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடெய்ல் நிறுவனப் பங்குகள் மீது தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வந்தது ஒருபுறம் இருந்தாலும், முகேஷ் அம்பானியின் பிசினஸ் உத்தி மற்றும் முதலீட்டாளர்கள் அந்நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக ரிலையன்ஸ் பங்குகள் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்தன.

ஆனால், `யானைக்கும் அடி சறுக்கும்' என்பது போல, தொடர் ஏற்றத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த திங்கள்கிழமை (02.11.2020) அன்று 8.6% சரிந்தது. ஒரே நாளில் அதன் மொத்தச் சந்தை மதிப்பில் ரூ.1.23 லட்சம் கோடி குறைந்து ரூ.13.14 லட்சம் கோடியானது.

Mukesh ambani
Mukesh ambani
Photo: AP
குறைத்த சம்பளத்தை மீண்டும் கொடுக்கத் தொடங்கிய ரிலையன்ஸ்... போனஸூம் உண்டு!

இந்தியாவின் மிகப்பெரிய லாபம் சம்பாதிக்கும், அதிக சந்தை மூலதனம் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென சரிவை சந்தித்திருப்பது பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடையே ஒதுவிதமான கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், பங்குச் சந்தை நிபுணர்கள் இதை ஒரு நல்ல வாய்ப்பாகத்தான் பார்க்கிறார்கள். பங்கு விலை இறக்கத்துக்கு என்ன காரணம், இது முதலீட்டுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா என்கிற கேள்விகளைப் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

என்ன காரணம்?!

``ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிதாகப் பல துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துவந்தாலும் இந்தக் குழுமத்தின் 75% அளவிலான வருவாய் மற்றும் வர்த்தகம் அதன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தையே சார்ந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில காலாண்டுகளாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி ஏற்படாத நிலையிலும், பெட்ரோல் டீசல் பயன்பாடு இந்தியாவில் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத காரணத்தாலும், செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

`ரீடெயில் ராஜாவாகுமா ரிலையன்ஸ்?' ஃப்யூச்சர் டீலும், அமேசான் முட்டுக்கட்டையும்!

கொரோனா தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து உருவான ஊரடங்கு காரணமாகச் சில்லறை வணிகத்திலும் பலவீனம் ஏற்பட்டது. இதனால் ரிலையன்ஸ் ரீடெய்ல் விற்பனையும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

மேலும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 5.7 டாலராக சரிந்ததன் விளைவாக செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் 15 சதவிகிதம் சரிந்து ரூ. 9,567 கோடியாகப் பதிவாகி இருக்கிறது. வருமானத்திலும் 24% சரிவைப் பதிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் பங்குகள் 187% உயர்ந்து நிகர லாபம் ரூ.2,844 கோடியாக இல்லாமல் இருந்திருந்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கதி இன்னும் மோசமாகியிருக்கும்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை ரூ.2,300-ஐ எட்டியபோது `அந்தப் பங்கை வாங்காமல் விட்டுவிட்டோமே!' என்று பலரும் யோசித்திருப்பார்கள். அவர்களுக்கு தற்போதைய வீழ்ச்சி, நீண்ட கால அடிப்படையில் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

சில வெளிநாட்டுத் தரகு நிறுவனங்கள் கணித்திருப்பது போல, தற்போதைய விலையிலிருந்து 40 சதவிகிதத்துக்கு மேல் இறக்கம் காண்பது உண்மையானால், முதலீட்டாளர்களுக்கு நிச்சயமாக இது ஒரு நல்ல வாய்ப்பு" என்றார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை செவ்வாய்க்கிழமையான நேற்று (03.11.2020) வர்த்தகம் முடியும் போது 1.44% குறைந்து 1850.40 ரூபாய் என்கிற நிலையில் வர்த்தகமானது. ஆனால், புதன்கிழமை அன்று இந்தப் பங்கின் விலை 3.40% உயர்ந்து வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

தரகு நிறுவனங்களின் கணிப்பு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மோசமான காலாண்டு முடிவுகளை மையமாக வைத்து மேக்யூரி (Macquarie) நிறுவனம் வெள்ளிக்கிழமை (30.10.2020) விலையான 2,054 ரூபாய் அளவீட்டில் 42% வரையில் சரியும். இதனால் ஒரு பங்கின் விலை சுமார் 1,195 ரூபாய் வீழ்ச்சி அடையும் என அறிவித்துள்ளது.

மேக்யூரி நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மீது செய்யப்படும் முதலீட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

பங்குச்சந்தை சரிவு
பங்குச்சந்தை சரிவு
vikatan

மேக்யூரி நிறுவனத்தைப் போல, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகளைக் கணித்து முதலீட்டுத் தரத்தை நிர்ணயம் செய்யும் பல பங்குச் சந்தை தரகு நிறுவனங்களும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு முதலீட்டுக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளன. எம்கே குளோபல், எடெல்விஸ் செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் `Hold' எனவும், பி.ஓ.பி கேப்பிடல் `Reduce' என்றும் சொல்லியிருக்கின்றன. ஆனால், மோதிலால் ஆஸ்வல், பிரபுதாஸ், கோல்டுமேன் சாஸ் ஆகிய நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் `Buy' தரத்தைக் கொடுத்துள்ளன.

காப்பாற்றிய ஜியோ!

கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்த இரண்டாம் காலாண்டு முடிவில் ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் 187% அதிகரித்து, ரூ.2,844 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.990 கோடியாக இருந்தது. இந்த ஜூன் மாதத்திலேயே இதன் லாபம் 12.9% உயர்ந்து ரூ.2,513 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. செயல்பாட்டு வருவாயும் 33% உயர்ந்து ரூ.17,481 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.13,130 கோடியாக இருந்தது. இதன் ஒருங்கிணைந்த நிகர லாபமும் 19.8 சதவிகிதமாக உயர்ந்து ரூ.3,020 கோடி ரூபாயாக உள்ளது. இந்நிறுவனத்தின் எபிட்டா வருவாயும் 8.7% அதிகரித்து ரூ.7,971 கோடியாக உள்ளது. எபிட்டா மார்ஜினும் 42.5 சதவிகிதத்திலிருந்து 43.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

40.56 கோடி
செப்டம்பர் காலாண்டில் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை!

கொரோனா காலத்தில் இணையப் பயன்பாடு அதிகரித்த காரணத்தால் விலையும் அதிகரித்தன. இதையடுத்து ஒரு பயனாளரிடமிருந்து வரும் சராசரி வருமானமும் கடந்த வருடம் இருந்த 120 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல, நடப்பு 2020-21-ம் நிதி ஆண்டின் ஜூன் காலாண்டில் 39.83 கோடியாக இருந்த ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, செப்டம்பர் காலாண்டில் 40.56 கோடியாக அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு