பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பெண்களின் பங்களிப்பு..!

பெண்களின் பங்களிப்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்களின் பங்களிப்பு...

ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! -18

வரலாற்றில் இந்தியாவைப் பொறுத்த வரை, பெண்கள் வீட்டில் இருந்து குடும்ப நலத்துக்காகப் பாடுபடும் ஒரு நபராகவே இருந்து வந்துள்ளனர். இதனால் பொருளாதார வளர்ச்சியில், பெண்கள் நேரடியான பங்களிப்பை வழங்காத நிலையிலேயே இருந்து வந்தனர். இதன் காரணமாக, பணிசெய்யும் நபர்கள் மத்தியில் பெண் பணியாளர்களின் பங்களிப்பானது கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துகொண்டே வந்தது.

செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்
செளரப் முகர்ஜி, நிறுவனர், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்

தவிர, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 24,000 கற்பழிப்பு குற்றங்கள் நடந்தன. ஆனால், 2021-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 32,000 கற்பழிப்புக் குற்றங்கள் நடந்துள்ளன (ஆதாரம்: NCRB (archives) and the Wire). இதையெல்லாம் பார்த்தால், இந்தியா பாலின சமத்துவ ரீதியாக முன்னேற்றம் அடையாமல் பின்னோக்கிச் செல்கிறது என்றே நினைக்கத் தோன்றும்.

இந்த நிலை ஒருபக்கம் இருக்க, மேலும் ஆராய்ந்தால் இன்றைய இந்தியப் பெண்கள் அவர்களின் வாழ்க்கை நிலை மற்றும் பொருளாதாரம் மேம்படுவதற்காக அதிக அளவில் முயற்சி செய்கின்றனர் என்பது நமக்குப் புரியும். அனிருதா தத்தா எழுதிய ‘ஹாஃப் எ பில்லியன் அண்ட் ரைசிங்’ (2015 வெளியீடு) என்னும் புத்தகத்தில் இன்றைய இந்தியப் பெண்கள் அவர்களுடைய நேரம், சக்தி மற்றும் முயற்சியைக் குறைந்த அளவில் குடும்ப வாழ்க்கைக்காக செலவு செய்துவிட்டு, மீதமிருக்கும் நேரம், சக்தி மற்றும் முயற்சியைக் கொண்டு புதியவற்றைக் கற்றுக்கொள்ளுதல் அல்லது உருவாக்குதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான ஆராய்ச்சியில் அனிருதா தத்தா ஈடுபட்டபோது, இன்றைக்கு பெண்கள் அதிக எண்ணிக்கையில் நேரம் ஒதுக்கி, வீட்டிலிருந்து வெளியே வந்து, சிறிய பல விஷயங்களை உற்பத்தி செய்து அதிக வருமானம் ஈட்டுகின்றனர் என்பதைக் கண்டறிந்துள்ளார். இந்த வருமானம் பெரிய அளவில் இல்லாத போதும், அது அவர்களுக்கு ஓரளவுக்கான நிதி சுதந்திரத்தை அளிக்கிறது என்றும் அவர் கண்டறிந்துள்ளார்.

மீஷோ எனும் உள்ளூர் பொருள்களை சந்தைப்படுத்தும் ஆப் நிறுவனத்தின் வெற்றி இந்த ஆராய்ச்சி முடிவுக்கு சான்றாக இருக்கிறது. இந்த ஆப் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. மீஷோ ஆப்பில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களில் பெரும்பான்மையானவை காட்டேஜ் மற்றும் மைக்ரோ தொழில்முனைவில் ஈடுபட்டுள்ள உள்ளூர் பெண்களுடையதாக இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

இது தவிர, பணியாளர்களின் எண்ணிக்கை குறித்த டேட்டாவைப் பணியாளர்களின் வயது மற்றும் பாலினம் (Labour Force Participation Rate - LFPR) என்ற கோணத்தில் பார்த்தால், இன்னும் பல புதிய விஷயங்கள் நமக்கு புரிய வரும். LPFR டேட்டாவின்படி, 15 முதல் 24 வயது வரையிலான வயது உள்ள பெண்கள் பணியில் இருப்பது 2010-ம் ஆண்டில் இருந்து குறைந்துகொண்டும், 25 முதல் 35 வயது வரையிலான பெண்கள் பணியில் இருப்பது சீரான அளவிலும், 35+ வயதில் இருக்கும் பெண்கள் பணியில் இருப்பது அதிகரித்தும் வருகிறது.

இந்தவித பாசிட்டிவ்வான மாற்றத்தைக் கொண்டு வந்தது எது, இந்த மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பெண்களின் பங்களிப்பு..!

கல்வி கற்றல் மற்றும் பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்களிப்பு அதிகரிப்பு...

கல்வி கற்பதில் பெண்கள் வெறுமனே எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் ஆண்களைவிட அதிகரிக்கவில்லை. இந்தவித அதிகரிப்பானது மிகவும் வேகமாகவும் இருந்து வருகிறது. 2011-ம் ஆண்டில் இந்தியாவில் பெண்களின் எழுத்தறிவு என்பது 64.6% என்ற அளவில் இருந்தது. இதே காலகட்டத்தில் ஆண்களின் எழுத்தறிவானது 80.6 % என்ற அளவில் இருந்தது.

ஆனால், 1951-லிருந்து 2011-க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் பெண்களின் எழுத்தறிவு வளர்ந்த அளவானது ஆண்களின் எழுத்தறிவு வளர்ச்சியைவிட இரண்டு மடங்கு அதிக அளவில் இருந்தது (ஆண்டொன்றுக்கு பெண்கள் 4% வளர்ச்சியையும் ஆண்கள் சுமார் 2% வளர்ச்சியையும் இந்த கால கட்டத்தில் சாராசரியாக அடைந் திருந்தனர்).

இது தவிர, கல்வியின் ஒவ்வொரு படிநிலையிலும் கல்வி பயின்ற ஒவ்வொரு நூறு ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கை அடிப்படை யில் பார்த்தால், 40-க்கும் குறைவான பெண்கள் என்கிற நிலையிலிருந்து 90 என்ற எண்ணிக்கைக்கு எல்லா படிநிலையிலும் பெண்களின் எண்ணிக்கையானது அதிகரித் திருந்தது.

மேலும், 10-வது மற்றும் 12-வது தேர்வுகளில் வெற்றி பெறுகிற பெண்களின் எண்ணிக்கை ஆண் களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இது அதிக அளவிலான பெண்கள் கல்வி பயில்வதையும் அத்துடன் மட்டுமல்லாமல் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதையுமே காட்டுகிறது.

15 முதல் 24 வயது வரையிலான பெண்கள் அதிக அளவில் கல்வி பயில்வதே LPFR-ல் இந்த வயது டைய பெண்களின் எண்ணிக்கை குறையக் காரணமாக இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. அதாவது, கல்வியைத் தொடர்வதின் காரணமாகவே பெண்கள் குறைந்த வயதில் வேலைக்கு வருவது என்பது கணிச மான அளவில் எண்ணிக்கை ரீதி யாகக் குறைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.

வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பெண்களின் பங்களிப்பு..!

மேலும், இந்தியப் பொருளா தாரத்தில் சேவைகளின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்து (கிட்டத்தட்ட 53% அளவில் இருக்கிறது) பெரும் பகுதியாக உருவெடுத்துள்ளதும், கல்வியில் பெண்கள் பெற்றுள்ள அதிகப்படியான திறனும் ஒன்றுக் கொன்று இசைவாகச் செயல்பட்டு சேவைத் துறையில் பெண்களின் பங்களிப்பானது கணிசமான அளவில் அதிகரிக்க உதவியுள்ளது. மேலும், சேவைத் துறையின் பங்களிப்பானது கடந்த காலத்தில் கணிசமான அளவில் அதிகரித் துள்ளது; அந்தத் துறையில் வெற்றி பெற்ற பல நிறுவனங்கள் உருவாகி யுள்ளன.

இதன் அடிப்படையிலேயே பெண்கள் பல்வேறு துறைகளில் பணிக்குச் சேர்ந்தாலுமே இவர் களுடைய பங்களிப்பானது சேவைத் துறையில் அதிக அளவில் தொடர்ந்து இருந்து வருகிறது.

அதிக நாள்கள் கல்வி பயில்வ தாலும் அப்படிக் கல்வி பயின்றபின் வேலைக்குப் போவது அல்லது சொந்தமாகத் தொழில் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாலும் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் வயதும் அதிகரித் துள்ளது.

இதையுமே பொருளாதார அடிப்படையில் ஒரு பாசிட்டிவ் விஷயமாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால், திருமணம் என்பது தள்ளிப் போடப்படும்போது பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறையவே செய்யும். இப்படிக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தால், அது மக்கள் தொகையைக் கணிசமாகக் குறைத்து, பெர்கேப்பிட்டா வருமானம் உயர வழிசெய்வதாக இருக்கும்.

வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பெண்களின் பங்களிப்பு..!

மின்சாரம் மற்றும் இன்டர்நெட்டின் தாக்கம்...

2018-ம் ஆண்டு வாக்கிலேயே இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் மின் இணைப்பு வசதியைப் பெற்றுவிட்டது. மின்வசதி கிடைப்பதால் வாய்ப்புகள் அதிகரிக்கவே செய்கிறது. அதிலும் பெண்களுக்கான வாய்ப்பு என்பது இன்னமுமே அதிகரிக்கிறது.

உதாரணமாக, வாஷிங் மெஷின், பொதுவான சமயலறை எலெக்ட்ரிக் உபகரணங்கள், குழாயில் வருகிற குடிநீர், கேஸ் இணைப்பு போன்றவை பெண்கள் குடும்பத்துக்காக செலவிடும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்துவிடுகிறது. அவர்கள் கையில் ஒவ்வொரு நாளும் கணிசமான அளவில் உபரி நேரம் கிடைக்கிறது.

நம் நாட்டில் கோவிட்-19-க்கு முன் ஸ்மார்ட்போன் என்பது வேலைக்குச் செல்லும் நபர்களிடம் (பெரும்பாலும் ஆண்கள்) மட்டுமே இருந்தது. கோவிட்-19-க்குப் பின் குழந்தைகளின் கல்விக்கு ஸ்மார்ட்போன் தேவை என்றானது. இந்த ஸ்மார்ட்போன்கள் பெண்களாலும் பயன்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. இது தகவல் பரிமாற்றத்துக்கான வாய்ப்பைப் பெண்களுக்குத் தந்தது. இதில் ஏற்கெனவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இருந்து வந்த சமச்சீரற்ற நிலையைச் சீரடையச் செய்ததோடல்லாமல் அவர்கள் புதிய வகையில் வருமானம் ஈட்டவும் உதவியாக இருந்தது.

ஸ்மார்ட்போன் மற்றும் மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் இன்டர்நெட் வசதி என்ற இரண்டும் சேர்ந்து பெண்களுக்கு வங்கி, வைப்புநிதி போன்ற சேமிப்பு வசதிகளைத் தந்ததோடு மட்டுமல்லாமல், கிரிப்டோ கரன்சி வரையிலான பல்வேறு முதலீடுகளை அணுக உதவியது. இந்த வித வசதிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து இன்று பெண்கள் தங்களுக்கென்று ஓர் இலக்கை வகுத்துக்கொள்ள உதவுவதுடன், ஆண்களை விட தீர்க்கமாக அந்த இலக்கு நோக்கி பயணிப்பதற்கான முயற்சிகளை எடுக்க உதவுகிறது.

உள்ளூர் முன்மாதிரிகள் ஏற்படுத்தும் தாக்கம்...

பணிக்குச் சென்றும் சொந்தமாகத் தொழில் தொடங்கியும் இன்றைக்குப் பெண்கள் காணும் முன்னேற்ற மானது அவர்களை வருங்கால சந்ததியருக்கு ஒரு முன்மாதிரியாக உருவாக்குகிறது. பெண்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்களை (பள்ளியில் இருக்கும் ஆசிரியையில் தொடங்கி, வாழ்வில் முன்னேறுவதற்காக பக்கத்து நகரத்துக்குச் சென்ற அதே ஏரியாவில் வசிக்கும் பெண் வரையில்) பார்த்தே அவர்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வதாகவே அனிருதா தத்தா தன்னுடைய புத்தகத்துக்காக இந்திய அளவில் பல்வேறு பெண்களுடன் உரையாடியபோது கூறினார்கள். மேலும், அக்கம்பக்கம் இருக்கும் வெற்றிகரமான பெண்களையே தங்களுடைய ரோல்மாடலாகக் கொண்டு செயல்படுவதாகவும் அவர்கள் கூறியதாக எழுதியுள்ளார்.

இன்றைக்கு சிற்றூர்களுக்கு நீங்கள் பயணித்தால் மளிகைக் கடைகள், பியூட்டி பார்லர்கள், சிறு உணவகங்கள் போன்றவற்றைப் பெண்களே நடத்திவருவதைக் கண்கூடாக உங்களால் பார்க்க முடியும். இந்தவிதத் தொழில்முனைவுகள் அவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டு காலத்துக்கு முன்பிருந்ததைவிட அதிக அளவிலான நிதி சுதந்திரத்தைத் தந்துள்ளது என்பதை மறுக்கவே முடியாது.

இது தவிர, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலுமே நிர்வாக ரீதியிலான பதவிக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப் படுவது என்பது 2015-ம் ஆண்டில் இருந்ததைவிட 2022-ம் ஆண்டில் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது என்பதை யும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பெண்களின் பங்களிப்பு..!

பொருளாதார மற்றும் முதலீட்டு ரீதியில் இது ஏற்படுத்தும் தாக்கம்...

பெண்கள் இந்தியாவின் ஜி.டி.பி-யில் கிட்டத்தட்ட 17% பங்களிப்பை ஆற்றுகிறார்கள் என்று ‘சிஸ்டர்ஹுட் எகானமி’ என்னும் சலீல் சோப்ராவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே ரீதியில், ‘‘இன்னும் பெண்கள் பணிக்குப் போக தொடங்கினால் 700 பில்லியன் டாலர் அளவிலான பங்களிப்பை 2025-ம் ஆண்டுவாக்கில் இவர்களால் தர முடியும்’’ என்றும் அவர் கூறுகிறார்.

ஜி.டி.பி-யில் பங்களிப்பு உயர்வை விட்டுவிடுவோம். ஒரு நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50% அளவு இருக்கும் பெண்களின் பங்களிப்பு வேகமாக உயர்ந்தால், நாட்டின் வளர்ச்சி கணிசமான அளவில் இருக்கும் என்று உணர்ந்துகொள்வதற்கு பெரிய அளவிலான கணக்குகள் போடப்பட வேண்டியதில்லை தானே!

கோவிட்-19க்குப் பின் மீண்டு வரும் உலகில் பொருளாதார ரீதியாக வேகமான வளர்ச்சியைக் காணும் நாட்டில் முதன்மையான நாடாக இருக்கும் இந்தியாவில் அதிகரிக்கக் காத்திருக்கும் பெண் களின் பங்களிப்பானது நாட்டின் பொருளாதாரத்தை வேகமான வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

இதனால் இந்தியா தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு வேகமாக வளர்ச்சி அடையும் பொருளா தாரத்தைக் கொண்டிருக்கும் நாடுகளில் முன்னணி நாடாக இருக்கும் என்பதும் நிச்சயம் நடக்கவே போகிறது!

(இன்னும் சொல்கிறேன்)