முதலீட்டில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 16 டிப்ஸ்! #SmartInvestorIn100Days

`ஸ்மார்ட் இன்வெஸ்டார் இன் 100 டேஸ்' என்கிற தலைப்பில் கடந்த 99 அத்தியாயங்களாக செய்ய வேண்டியது, செய்யத் தேவையில்லாதது மற்றும் செய்யக் கூடாதது என்று பலவற்றையும் பார்த்திருக்கிறோம். இது 100-வது அத்தியாயம்.
சிக்ஸர்கள் அடிப்பது, பந்தை ஆட்டக்களத்துக்கு வெளியில் தூக்கி அடிப்பது, தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுப்பது எல்லாம் பெருமைகள்தான். சந்தோஷம்தான். ஆனால், மொத்த போட்டியில் வெல்ல வேண்டும். அதுதான் முக்கியம். சிக்ஸர்கள், ஹாட்ரிக் போன்ற ஒரு சில வெற்றிகள் மட்டுமே ஆட்டத்தின் வெற்றியாகாது.
ஒரு டூல் பாக்ஸில் பலவித உபகரணங்கள் இருக்கும். அதில் இருக்கும் பலவற்றையும் பயன்படுத்தும் விதம் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்து ஒருவர் தெரிந்துகொள்வதில் சுவாரஸ்யம் காட்டலாம். ஆனால், அவை எல்லாவற்றையும் அவர் பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயம் இல்லை. எது தேவையோ, அதை சரியாகப் பயன்படுத்தினால் போதும்.
பங்குகள் குறித்தும் அவ்வாறு பலரும் சொல்லும் வெவ்வேறு அணுகுமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்வது சுவாரஸ்யம்தான். தெரிந்துகொள்வதில் தவறில்லை. ஆனால், அந்த எல்லாவற்றையும் நாம் செய்து பார்க்க வேண்டும். செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. பணம் செய்வதுதான் குறிக்கோள் என்றால், பங்குச் சந்தையில் அதற்கு பல நிச்சய வழிகள் உண்டு. பலர் சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
`ஸ்மார்ட் இன்வெஸ்டார் இன் 100 டேஸ்' என்கிற தலைப்பில் கடந்த 99 அத்தியாயங்களாக செய்ய வேண்டியது, செய்யத் தேவையில்லாதது மற்றும் செய்யக் கூடாதது என்று பலவற்றையும் பார்த்திருக்கிறோம். இது 100-வது அத்தியாயம். மொத்தத்தில் என்ன சொல்கிறேன் என்பதை 16 பாயின்டுகளாகப் பார்க்கலாம்.

100 என்பது அதிகம் என்றுதான் தொடக்கத்தில் நினைத்தேன். ஆனால், போகப் போகத்தான் எல்லாவற்றையும் சொல்ல 100 என்பது மிகக்குறைவான நாள்கள் என்று புரிந்தது. எழுத, விளக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பது எனக்குத் தெரியும், உங்களுக்கும் தெரியும். ஆனாலும், இந்த 100 நாள்களில் பலவற்றைப் பற்றியும் பார்த்திருக்கிறோம் என்பதும் உண்மை.
இந்தத் தொடரின் 100-வது நாளில் மனநிறைவாக இருக்கிறது. இவ்வளவு இடமும், இத்தனை வாசகர்களுடன் கருத்துகளை பகிர்ந்துகொள்ள வாய்ப்பும் கொடுத்த விகடனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்- சோம வள்ளியப்பன்
இனி, மொத்த தொடரின் கதைச் சுருக்கம்.
1. முதலீட்டுக்காக இருக்கிற மொத்தப் பணத்தையும் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யாமல், அவரவர் வயது, பணம் தேவைப்படும் நேரங்கள், ரிஸ்க் குறித்த மனப்பாங்கு ஆகியவற்றைப் பொறுத்து மொத்த முதலீட்டின் ஒரு பகுதியை மட்டுமே பங்குகளில் போடலாம்.
2. அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களின் பங்குகளை வாங்காமல், ஓர் அளவிலான சில நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யலாம்.

3. திட்டமிட்டு ஒதுக்கியிருக்கும் தொகையில் கிட்டத்தட்ட முக்கால் அளவுக்கு முதலீடு செய்துவிட்டு, பிற காரணங்களுக்காக சந்தை இறங்கும்போது, வாங்குவதற்காகக் காத்திருக்கலாம்.
4. முன்பு பார்த்த சில முக்கிய `லட்சணங்கள்’ இருக்கிற பங்குகளில் மட்டுமே முதலீடு என்கிற கட்டுப்பாட்டு வரையறை வைத்துக்கொள்ளலாம்.
5. சந்தை நடவடிக்கைகளை மாற்றங்களைக் கவனிப்பதுடன், அதே அளவு அல்லது அதைவிடக் கூடுதலாக நாம் வாங்கியிருக்கும் பங்குகளின் நிறுவன செயல்பாடுகளை, அவற்றுக்கான வியாபார வாய்ப்புகள்/ ஆபத்துகளைக் கவனிக்க வேண்டும்.
6. தேர்வுசெய்து வாங்கிய பங்குகளை அடிக்கடி விற்று, போர்ட்போலியோவை மாற்றிக்கொண்டிராமல் கணிசமான காலத்துக்கு வைத்திருக்க வேண்டும்.
7. டிரேடு செய்து பணம் சம்பாதிக்க, சில தனித்திறன்கள் தேவை. முழு வேலைக்குப் போகிறவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் டிரேட் செய்வதைத் தவிர்த்துவிடலாம். அதிக பரிச்சயம் இல்லாத, ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ், கமாடிட்டி டிரேடிங், கரன்சி டெரிவேட்டிவ்ஸ், இன்ட்ரஸ்ட் ரேட் ஃப்யூச்சர்ஸ் போன்றவற்றை முயன்று பார்க்காமல் இருப்பதே நல்லது.
8. தங்கம் என்பது, அணிந்துகொள்வதற்கான நகைகள் மற்றும் எதிர்கால குடும்ப நிகழ்வுகளில் தேவைகளுக்காக என்பதுவரை சரி. அதில் லாப நஷ்டக் கணக்குப் பார்க்க முடியாது. அதற்காக மாதம் ஒரு கிராம் போல சேமிக்கலாம். டிமேட் முறையிலும் தங்க கிராம்கள் வாங்கிச் சேர்க்கலாம். ஆனால், முதலீட்டுக்காகத் தங்கம் என்பது, இதுவரை நடந்திருப்பவற்றைப் பார்த்தால், வங்கி வட்டி அளவுகூட நீண்டகாலத்தில் பலன் தரவில்லை.

9. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வங்கி, அஞ்சலக டெபாசிட்டுகள் பாதுகாப்பானவை. மற்றவர்களும் அவசரத்துக்கு எதிர்பாராத செலவுகளுக்குத் தேவைப்படும் ஓரளவு பணத்தை, பிக்செட் டெபாசிட்டுகளாகப் போட்டு வைக்கலாம். ஐந்தாண்டுக்கால டெபாசிட் பணத்துக்கு பிரிவு 80சி-யின் வருமான வரி விலக்கும் கிடைக்கிறது. தவிர, டெபாசிட் இன்ஷூரன்ஸ் தொகையும் சமீபத்தில் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
10. கிரெடிட் கார்டுகளைச் சரியாகப் பயன்படுத்தினால், ஓரளவு வட்டி மீதமாகும் என்பது உண்மைதான். அதேசமயம், அதன்மூலம் அது கொடுக்கும் தைரியத்தில், சக்திக்கு மீறி செலவு செய்யும் பழக்கம் உண்டாகிவிடும் ஆபத்து இருக்கிறது என்பதும் அதே அளவு உண்மை. இயன்றவரை கிரெடிட் கார்டுகளைத் தவிர்ப்பதே நல்லது.
11. பரஸ்பர நிதிகளில் அதிக AUM இருக்கிற, நல்ல ஃபண்டு ஹவுஸ்கள் நடத்துகிற, லார்ஜ் கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

12. நீண்டகாலம் விட்டு வைக்கக்கூடிய பணத்துக்கு மட்டும் ஈக்விட்டி எஸ்.ஐ.பி. (SIP) போடலாம். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் தேவைப்படும் பணத்தை, டெப்ட் அல்லது இன்கம் ஃபண்டுகளில் (Debt or Income Funds) எஸ்.ஐ.பி போடலாம்.
13. இரண்டுக்கும் மேற்பட்ட `ஃபண்ட் ஹவுஸ்’களில், வெவ்வேறு திட்டங்களில் தனித்தனியே, எஸ்.ஐ.பி என்பது முதலீட்டின் ரிஸ்க்கை பரவலாக்கும், குறைக்கும்.
14. ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆகியவை அவசியம். ஓரளவு பிரீமியம் கட்டி அவற்றைத் தொடங்கிவிட்டு, பின்பு, மெல்ல மெல்ல `சம் அஸ்யூர்டு’ எனப்படும் மொத்த தொகையைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகலாம்.
15. பரஸ்பர நிதிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் நடத்தும் பென்ஷன் திட்டம் அல்லது NPS போன்ற ஏதாவது ஒன்றில் சிறு அளவு தொகை கொண்டாவது, ஓய்வு காலத்துக்காகப் பணம் சேமிக்க ஆரம்பிப்பது அவசியம். போகப்போக தொகைகளை உயர்த்திக்கொண்டே போகலாம். துரிதமாகத் தொடங்கி தொடர்ந்து செய்ய வேண்டியது முக்கியம்.
16. ஒரு குடும்பத்துக்கு ஒரு சொந்தவீடு அல்லது பிளாட் அவசியம்.

இயன்ற அளவு செலவுகளைக் கட்டுப்படுத்தி, பணத்தை சேமித்து, தகுந்த பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டு என சரியான இடங்களில் முதலீடு செய்து, தேவையான காப்பீடுகள் எடுத்து, சொந்த வீட்டில், செளகரியமாக சந்தோஷமாக, முழு வாழ்க்கை வாழ, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
- நிறைவுற்றது