பங்குகள் டிரேடு செய்யும்போது கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்! #SmartInvestorIn100Days நாள்-73

எல்லா நேரமும் நீங்கள் சந்தையில் ஏதாவது பொஸிஷன் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. சரியாக இல்லையென்றால், நிச்சயமான அறிகுறிகள் தென்படாவிட்டால், சும்மா இருங்கள்.
முந்தைய அத்தியாயத்தில், `டீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா?' என்பதைப் பார்த்தோம். இன்று பங்குச்சந்தையில் டிரேடு செய்பவர்களுக்குத் தேவைப்படும் 18 வகையான ஒழுக்கங்களைப் பற்றி பார்க்கலாம்.
1. எவ்வளவு பணம் நஷ்டமானால் உங்களால் தாங்க முடியுமோ, அவ்வளவு பணத்தை மட்டும் சந்தைக்கு எடுத்து வாருங்கள். அதற்கு மேல் போக வேண்டாம்.
2. எடுத்து வந்த பணம் முழுவதற்கும் டிரேடு செய்ய வேண்டும் என்பதில்லை. 25% அளவாவது விட்டு வையுங்கள். 75% பணத்துக்கு டிரேடு செய்தால் போதும்.

3. ஒரே சமயத்தில் பல `பொஷிஷன்’ கள் எடுக்காதீர்கள். சிந்திக்க, ஆராய, கவனிக்க இயலாது.
4. சில டிரேட்கள் நஷ்டம் தரலாம். அது இயல்புதான். நஷ்டம் அளவானதாக இருக்க வேண்டும்.
5. ஸ்டாப் லாஸ் போட்டுத்தான் டிரேடு செய்ய வேண்டும். பின்னர் அதை உங்கள் விருப்பத்துக்கு மாற்றாதீர்கள். குறிப்பிட்ட பங்கிற்கு அந்த நேரத்தில் எது தகுமோ அதுதான் ஸ்டாப் லாஸ். அது நம் விருப்பமான எண் அல்ல.
6. லாபங்களை தொடரவிடுங்கள். நஷ்டங்களை உடனே தடுங்கள்.
7. லாங் டிரேடில் வாங்கியதன் விலை, தொடர்ந்து உயர்கிறபோது, கிடைக்கிற லாபத்தை உறுதிசெய்ய, ஸ்டாப் லாஸை உயர்த்திக்கொண்டே போகலாம். ஷார்ட் டிரேடிலும் விற்ற பின் விலை இறங்கிக்கொண்டே போனால், ஸ்டாப் லாஸ் அளவையும் இறக்கிக்கொண்டே போங்கள்.
8. எல்லா நேரமும் நீங்கள் சந்தையில் ஏதாவது பொஸிஷன் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. சரியாக இல்லையென்றால், நிச்சயமான அறிகுறிகள் தென்படாவிட்டால், சும்மா இருங்கள். `ஏதாவது ஒரு டிரேட்’ என்பது ஆபத்தானது.
9. விலை குறைவதாலேயே ஒரு `பை டிரேட்’ என்பதோ விலை அதிகம் உயர்கிறது என்பதாலேயே ஒரு `செல் டிரேட்’ அல்லது ஷார்ட் என்பதோ ஆபத்தில் முடியலாம். (எஸ் பேங்க் பங்கை எவ்வளவு பேர் வாங்கி லாபம் பார்க்க முயன்றார்கள்!)

10. விவரங்கள் கவனித்து, இண்டிகேட்டர்கள் பார்த்து, திட்டமிட்டு செய்யவேண்டியது, டிரேடிங். சந்தை நடந்துகொண்டிருக்கும்போது திடீரென, செய்வதல்ல. அதற்கென்று ஒரு திட்டம் வேண்டும். ஜெயிக்க வேண்டும். தோற்றால் போவது, பணம் மற்றும் டிரேடிங்கிற்கு எடுத்து வந்திருக்கும் முதலீடு.
11. ஒரு டிரேடால் எவ்வளவு தரமுடியுமோ, அவ்வளவுதான் தரமுடியும். நமக்குத் தேவை என்பதாலோ, அன்றைக்குப் பிற டிரேடுகளில் நமக்கு நஷ்டம் என்பதாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, இல்லாததை டிரேடால் தர இயலாது. அதிகம் வேண்டி லாபத்தைப் பதிவு செய்யவோ (Booking Profit) நஷ்டத்தை தடுக்கவோ (Cutting the loss) கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது. பின்பு லாபம் போய், நஷ்டம் ஏற்படும்.
12. பதற்றமடையக் கூடியவர்கள், நஷ்டங்களை திரையில் கூட பார்க்க சகிக்காதவர்கள், பரபரப்பானவர்கள், டிரேடிங்கிற்கு வரவேண்டாம். நிறைய சோதனைகள் உண்டு.

13. தவறவிட்ட டிரேடு போகட்டும். எதையும் துரத்தாதீர்கள். வேறு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
14. சந்தைக்கு எதிரான போக்கு எப்போதாவதுதான் லாபம் கொடுக்கும். கிடைத்தால் பெரிதாக கிடைக்கும்போல தெரிந்தாலும், கிடைக்கும் வாய்ப்புகள் எப்போதாவதுதான் நிகழும். விலை போகிற டிரெண்டில் பயணிப்பது கூடுதல் நேரங்களில் லாபம் தரும்.
15. டிரேடு செய்ய வாங்கிய ஒன்றை விலை இறங்கிவிட்டது என்பதற்காக, முதலீட்டுக்கு என்று மாற்றி யோசித்து, தொடராதீர்கள். இரண்டும் வேறு வேறு.
16. நீங்கள் யோசித்த விதம் சந்தையில் நடக்கவில்லை என்றால், அதை ஏற்றுக்கொண்டு டிரேடிலிருந்து அப்போதைக்கு நகர்ந்துவிடுங்கள். நீங்கள் சரிதான் என்பதை உங்களுக்கு நீங்களே நிரூபித்துக்கொள்ள, மேலும் மேலும், அதே திசையில் பயணிக்க வேண்டாம். கூடுதல் பொசிஷன்கள் எடுத்து பெரிய ரிஸ்க்கில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

17. எவரைக் காட்டிலும் சந்தை பெரிது. அதற்கு கூடுதலாகத் தெரியும்.
18. `கான்ட்ராக்ட் நோட்’ கள் வழங்கப்பட்டாலும், நீங்களே தனியாக ஒரு நோட் புத்தகத்திலோ, கம்ப்யூட்டரிலோ, செய்யும் டிரேட்கள் அனைத்தையும் விவரங்களுடன் எழுதுங்கள். வாரம் ஒருமுறையும் மாதம் ஒருமுறையும் அதைப் பாருங்கள். உங்கள் செய்முறை (பேட்டர்ன்) என்ன என்பதையும், எங்கே தவறவிடுகிறீர்கள், எதில் சரியாக வருகிறது என்பனவற்றையும் தெரிந்துகொண்டு, உங்கள் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்கள் செய்யுங்கள்.
- முதல் போடலாம்
சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.