Published:Updated:

பங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #SmartInvestorIn100Days - நாள் 3

ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும் பொருளாதார ஏற்ற இறக்கங்களை அலசும் தொடர்!

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

நல்ல பங்குகளின் ஐந்து லட்சணங்கள்

எந்த நேரமானால் என்ன, சிறு அளவுகளில் தொடர்ந்து வாங்குங்கள் என்று சொல்லியிருந்தோம். கூடவே நல்ல பங்குகளாகத் தேர்ந்து என்றும் அழுத்திச் சொல்லியிருந்தோம். நல்ல பங்கு என்றால், நல்ல நிறுவனத்தின் பங்கு. அவற்றை எப்படித் தேர்வு செய்வது? நல்ல பங்கின் லட்சணங்கள் என்ன? பக்கம் பக்கமாகச் சொல்லிக்கொண்டே போகலாம். யாருக்கு நேரமிருக்கிறது, படிக்க! அதனால் நச்சென்று நான்கு அல்லது ஐந்து மட்டும் சொல்லி விடுவோம்.

⦁ வளர்ச்சியில் இருக்கும் துறையில் இயங்கும் நிறுவனம் - இண்டஸ்ட்ரி

⦁ லாபம் ஈட்டும் நிறுவனம், தொடர்ந்து ஈட்டும் வாய்ப்பிருக்கும் நிறுவனம்- பிராபிடபிளிட்டி

⦁ ஈட்டும் லாபத்தை ஷேர் ஹோல்டர்களுடன் நன்கு பகிரும் நிறுவனம்- டிஸ்டிரிபூஷன் 

⦁ நேர்மையாக, வெளிப்படையாக , புரபஷனலாக நடத்தப்படும் நிறுவனம்- குட் கவர்னென்ஸ்

⦁ கணிசமான அளவில் தினசரி வர்த்தகமாகும் நிறுவனம் – லிக்விடிட்டி

இந்த ஐந்தையும் பார்க்கப் போகிறோம். இன்று, அதில் ஒன்றான குட் கவர்னென்ஸ் குறித்து மட்டும் பார்க்கலாம்.

Ramalinga Raju
Ramalinga Raju

சத்யம் கம்ப்யூட்டர் நினைவிருக்கிறதா? சக்கை போடு போட்ட கம்பெனி. பங்குச் சந்தையிலும் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருந்தது. பின்னர்தான் தெரிய வந்தது, செய்யாத லாபத்தை செய்ததாகக் காட்டி, ராமலிங்க ராஜு என்ற அதன் நிறுவனத் தலைவர் பல ஆண்டுகள் ஏமாற்றி வந்தது. 2008ம் ஆண்டு, 544 ரூபாய்க்கு விலை போய்க்கொண்டிருந்த அதே பங்கு, தகிடுதத்தங்கள் தெரியவந்ததும், வெறும் 6 ரூபாய் 50 காசுக்கு கை மாறியது. 

வளர்ச்சியில் இருந்த இண்டஸ்ட்ரிதான்; லாபம் ஈட்டிய நிறுவனம்தான்; ஈட்டக்கூடிய நிறுவனம்தான்; நல்ல டிவிடெண்ட் எல்லாம் கொடுத்த லார்ஜ் கேப், லிக்விடிட்டி இருந்த நிறுவனப் பங்குதான். ஆனால்,  நிர்வாகம் மோசம் என்று தெரிய வந்ததும் தூக்கி எறிந்துவிட்டார்கள். பங்குகள் என்பது எவரோ நடத்தும் நிறுவனத்தில்,  நம்பி பலரும் செய்யும் முதலீடு... அங்கே தில்லு முல்லுகள் நடந்தால் இந்த நிலைமைதான். ஆக, ’குட் கவர்னென்ஸ்’ என்பது மிகவும் முக்கியம்.

குட் கவர்னென்ஸின் ஒரு அங்கம், நிர்வாகிகள் நிறுவனத்தின் நலனை மட்டுமே மனதில் வைத்து வேலை செய்வது, முடிவுகள் எடுப்பது. சுயநலத்திற்கு அல்ல. இப்போது பரபரப்பாக இருக்கும் ஒரு செய்தி அலசலுடன் அதை ஒப்பிட்டுப் பார்த்தால் கூடுதலாகப் புரிய வரும்.

தமிழ்நாட்டில் பெரிதாகத் தெரியவில்லையே தவிர மற்றபடி, மும்பையையும் மகாராஷ்ராவையும் நான்கு நாட்களாகக் கலக்கிக்கொண்டிருக்கும் ஒரு செய்தி. PMC வங்கி பற்றியது. இதை PNB என்று தவறாகப் புரிந்துகொண்டு தேவையில்லாமல் சிலர் பயந்தது, தனிக் கதை.

PMC Bank
PMC Bank

137 கிளைகளைக் கொண்ட, PMC என்றழைக்கப்படும் பஞ்சாப் அண்டு மாகாராஷ்ட்ரா கோ ஆப்ரேடிவ் வங்கியிலிருந்து, அதில் பணம் வைத்திருப்பவர் எவரும் 1,000 ரூபாய்க்கும் மேல் எடுக்கத் தடை என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை சில நாட்களுக்கு முன்பு திடீரென்று அறிவித்தது ரிசர்வ் வங்கி. மேலும், வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜார்ஜ் தாமஸ்  இடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் இடத்தில் ஜே.பி.போர்யா என்பவர் அட்மினிஸ்டிரேட்டராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த செய்திகள் பல்வேறு ஊடகங்களிலும் வேகமாக பரவ, கிளம்பியது பீதி. வங்கியின் பல்வேறு கிளைகளிலும் பணம் எடுக்க டெபாசிட்தாரர்கள் கூடிவிட்டார்கள். மும்பை, சியோன் கிளைக்கு வெளியே தள்ளுமுள்ளு, போராட்டம்.

அதே சமயம் மற்றொரு போராட்டமும் நடந்தது. நடத்தியவர்கள் அந்த வங்கியின்  மேலாளர்களும் ஊழியர்களும். அவர்கள் கோஷமிட்ட இடம், HDIL நிறுவனத்தின் உயரதிகாரிகள் வீடுகளுக்கு வெளியில். தவிர, அவர்கள் வங்கியின் சேர்மன் வீட்டுக்கு வெளியிலும் கூடி கத்தினார்கள். வங்கியில் பணம் எடுக்கத் தடை என்றால் வங்கி ஊழியர்கள் ஏன் போராடவேண்டும்? அதுவும் வேறு ஏதோ ஒரு  நிறுவன அதிகாரிகள் வீடுகள் முன்பு எதற்காகப் போராடவேண்டும்? தவிர அவர்கள் வங்கியின்  சேர்மன் வீட்டிற்கு வெளியே?

காரணம் இருக்கிறது. PMC வங்கி வழங்கியிருக்கும் 8,383 கோடி ரூபாய் கடனில் HDIL நிறுவனத்துக்கு மட்டும் கொடுத்திருப்பது 2,500 கோடி. அந்தப் பணம் திரும்பி வரவில்லை. அதனால் வாராக் கடனென்று,  NPA -ஆகக் காட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படிக் காட்டப்படவில்லை. வங்கியிடம் இருக்கும் கேஷ் ரிசர்வ் 1,000 கோடி ரூபாய்தான். ஆனால், வங்கி HDIL நிறுவனத்துக்குக் கடன் கொடுத்து, NPA  ஆக நஷ்டமடைந்திருக்கும் தொகையோ ரூ.2,500 கோடிகள். அதனால், நிச்சயமாக PMC வங்கி சிக்கலில் இருக்கிறது.

PMC Bank
PMC Bank

இதெல்லாம் போக, பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் பேங்க் போன்ற  பொதுத்துறை வங்கிகள், HDIL நிறுவனத்துக்கு அவை கொடுத்த கடனுக்குப் பணம் வரவில்லை என்று தேசிய கம்பெனி லா டிரிபூனல், NCLT-யில் புகார் கொடுத்திருந்த நிலையிலும், PMC வங்கி மட்டும் HDIL-க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மேலும் 96.50 கோடி ரூபாய்  புதிய கடன் கொடுத்திருக்கிறது. வரவேண்டிய பணம் வராத நிலையில் ஏன் மேலும் HDIL நிறுவனத்துக்கு கடன் கொடுக்க வேண்டும்?.

2015-ம் ஆண்டு முதல் PMC வங்கிக்கு சேர்மனாக இருக்கும் வார்யம் சிங், 2006 முதல் 2015 வரை HDIL நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர். மேலும் HDIL நிறுவனத்தின் கணிசமான எண்ணிக்கையிலான பங்குகளை (1.91% ) வைத்திருப்பவர். அவருடைய ஈடுபாட்டால்தான் இதெல்லாம் நடந்திருக்கிறது என்று கருதும் ஊழியர்கள் அவர் வீட்டு வாசலிலும் போராட்டம் செய்திருக்கிறார்கள்.

அர்பன் கூட்டுறவு வங்கியான PMC வங்கியை, அதன் கண்காணிப்பு ஆணையமான, ரிசர்வ் வங்கி இவற்றை எல்லாம் ஏன் முன்கூட்டியே கண்டறியவில்லை? கடன்பெறும் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர், கணிசமான அளவு நிறுவனத்தின் பங்குகள் வைத்திருப்பவர்,  வங்கியின் தலைவராகிறார். தனக்கு ஆதாயமிருக்கும் நிறுவனத்துக்குத் தொடர்ந்து கடன்கள் கொடுக்கிறார்.  இது அனுமதிக்கப்பட்டிருக்கிறதே! இப்படிப் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இதில் வேடிக்கை அல்ல, வேதனை என்னவென்றால், ரிசர்வ் வங்கியின் அலுவலர்கள் கோ ஆப்ரேட்டிவ் சொசைட்டி, PMC வங்கியில் 105 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருக்கிறார்கள். வங்கித் தரப்பில் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் பேசுகிறபோது `வங்கியில் போதுமான அளவு சொத்துகள் இருக்கின்றன. HDIL சேர்மனின் மகன் கொடுத்திருக்கும் பர்சனல் கேரண்டி இருக்கிறது. எவரும் பயப்பட வேண்டாம்’ என்கிறார்.

'நம்புங்கள், உங்கள் பணம் பத்திரமாக இருக்கிறது இதெல்லாம்  தற்காலிகம்தான்' என்று வங்கிக்கு வெளியில் சுவரில்  எழுதித் தொங்கவிடப்பட்டிருக்கிறது. 'நாங்கள் நம்பியது ரிசர்வ் வங்கியை அல்லவா? இப்படி ஆகலாமா?' என்று  கோபத்துடன் கேட்கிறார்கள் பரிதாபத்துக்குரிய வாடிக்கையாளர்கள். வங்கிகள்தான் பாதுகாப்பு என்று நம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி நடக்க விடலாமா? என்னத்தச் சொல்ல!

அடுத்த அறிவிப்பாக, முன்பு எடுத்ததையும் சேர்த்து ஒருவர் அதிகபட்சம் 10,000 வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. பணம் போட்டிருப்பவர்கள் பெரும்பாலும் சாதாரணமானவர்கள் என்பதால் டெபாசிட் போட்டிருப்பவர்களில் 60 சதவிகிதம் மக்கள் அவர்கள் போட்டிருக்கும் முழுத் தொகையையும் எடுத்துவிடலாமாம். பரவாயில்லை.

`நிர்மலா சீதாராமனின் வரிச் சலுகை அறிவிப்பு!’ - 10 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் பங்குச்சந்தை

இந்த வங்கிக்கு 137 கிளைகள் இருக்கின்றன; இது 36 ஆண்டு பழைமையான வங்கி; 11,677 கோடி ரூபாய் டெபாசிட் இருக்கிறது; 8,383 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது; 100 கோடி லாபம் பார்க்கிறது என்றெல்லாம் மட்டும் பார்த்தால் போதுமா... இதன் நிர்வாகத்தை என்னவென்று சொல்ல... இதற்குத்தான் ’குட் கவர்னென்ஸ்’ முக்கியம் என்பது.

பங்குகள் வாங்குகிற போது, அதுவும் நீண்ட காலத்திற்கு வைத்திருக்கப் போகிறோம் என்றால், தேர்ந்தெடுத்துத்தான் பங்குகளை வாங்க வேண்டும். தேர்வில் இந்த அம்சமும் பார்க்கவேண்டும்.

- முதல் போடலாம்

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.