Published:Updated:

பங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்! #SmartInvestorIn100Days நாள்-52

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை மொத்தம் ஆறுவிதமான காலகட்டங்கள் உண்டு.

`புல் ரன்’ எனப்படும் காளையின் ஓட்டம் சில ஆண்டுகள் நடக்கும். அதிகம் ஓடிக் களைத்திருக்கும் காளைகளை, உள்ளே புகும் கரடிகள் அடித்துவிரட்டும். கரடிகள் சில காலம் சுற்றித் திரியும். அது `பேர் ஃபேஸ்’. ஆனால், அவற்றாலும் அதிக காலம் ஆட்சி செய்யமுடியாது. வெளியில் இருந்த காலத்தில் பெற்ற புதுத்தெம்புடன் காளைகள் உள்ளே நுழையும், கரடிகளைத் துரத்தி அடிக்கும். அரியாசனம் ஏறி அமரும். மீண்டும் ஆட்சி செய்யும்.

காளையும், கரடியும்
காளையும், கரடியும்

ஆட்சி மாறும் நேரம், `இனி எல்லாம் இப்படித்தான்’ என்பது போலவே தோன்றும். ஓடுவது கரடியோ அல்லது காளையோ. அந்த நேரம் அவை தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கி வெளியேறும். ஆனால், நிச்சயம் அவை மீண்டு வரும். எப்போது என்பது ஒவ்வொரு முறையும் மாறலாமே தவிர, மாற்றம் வரும் என்பதில் மாற்றம் இல்லை. காளைகளும் கரடிகளும் எனப் பங்குச் சந்தையில் எப்போதும் இரண்டு கட்சிதான்.

என் அனுபவத்தில் நான் புரிந்துகொண்டது, பங்குச் சந்தையைப் பொறுத்தவரை மொத்தம் ஆறுவிதமான காலகட்டங்கள் உண்டு. முதலாவது, பங்கு விலைகள் உயர ஆரம்பிக்கிற காலம். இரண்டாவது, விலைகள் தொடர்ந்து உயரும் காலம். மூன்றாவது, விலைகள் மற்றும் சந்தைக் குறியீட்டு எண்களின் உச்சம் தொடும் காலம் இல்லை. உச்சம் தொடும் நாள் அல்லது நேரம். இதை Peak என்பார்கள். நான்காவது நிலை, விலைகள் இறங்க ஆரம்பித்தல்.

இப்போது, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சந்தை இருக்கும் `நிலை’ எது என்பதை மிகச் சரியாகச் சொல்ல முடியுமா என்று கேட்டால், என்னால் மட்டுமில்லை, அப்படிச் சொல்வது எவருக்குமே கடினம். ஆனால், ஓரளவு கணிக்கலாம்.
GDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா? #SmartInvestorIn100Days நாள்-49

ஐந்தாவது, மேலும் மேலும் விலைகளும் சந்தைக் குறியீட்டு எண்களும் தொடர்ந்து இறங்கும் காலம். ஆறாவது நிலை, இதற்குமேல் இறங்க முடியாது என்கிற`அடி விலை’. இதை ராக் பாட்டம் (Rock Bottom) என்றும் சொல்வார்கள். இதுவும் ஒரே ஒரு நாள் / ஒரு நேரம்தான் நடக்கும்.

பிப்ரவரி 14, 2014-ல் 6,048 என்ற அளவில் இருந்த தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி, இப்போது 2019 டிசம்பரில் 12,048 என்ற அளவில் இருக்கிறது.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. அப்படிப் பார்த்தால், சந்தைகள் இப்போது இருப்பது இரண்டாவது `நிலை’யான, `தொடரும் விலை உயர்வுகள்’ பகுதியில்.

மூன்றாவது நிலையான `உச்சம்’ இன்னும் வந்துவிடவில்லை என்று தோன்றுகிறது. சந்தை உச்சம் என்ற மூன்றாம் நிலையை அடைந்துவிட்டால், அதன்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால், இதுதான் உச்சம் என்று அது நேர்கிறபோது உணரமுடியாது என்பது அதில் உள்ள ஒரு சிக்கல்.

ஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா?#SmartInvestorIn100Days நாள்-51
Buy and Sell
Buy and Sell
உச்சத்தை மட்டுமல்ல, ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு சந்தைகள் நகர்வதைக்கூட , `சனிப்பெயர்ச்சி’, `குருப்பெயர்ச்சி’ போல முன்கூட்டி சரியாக நாள் குறித்துச் சொல்லமுடியாது. அவை மாறி கொஞ்ச காலம் ஆனபின், திரும்பிப்பார்த்தால்தான் அவை நடந்திருப்பது, நடந்துகொண்டிருப்பது தெரியவரும்.

2008-ம் ஆண்டு ஜனவரி மாதம், நிஃப்டி 6,200 புள்ளிகள் என்ற உச்சம் தொட்டபோது, எந்த நிபுணரும் ஆய்வாளரும், இதுதான் சந்தையின் `பீக்’. இனி இறக்கம்தான் என்று சொல்லவில்லை. அப்போதும்கூட, `எவற்றை வாங்கலாம்’. `எவை மேலும் விலைகள் உயரும்’ என்ற பரிந்துரைகள் வந்துகொண்டிருந்தன.

11.1.2008 அன்று 6,200 புள்ளிகளில் இருந்து குப்புற விழுந்த நிஃப்டி, 13.3.2009 அன்று வெறும் 2719 புள்ளிகள் என்ற அளவு கீழே விழுந்து, நீச்சத்தைப் பார்த்தது.

அதன்பின் உயர ஆரம்பித்து, 16.12.2010-ல் 5,948 புள்ளிகளைத் தொட்டது. உச்சம் பார்த்தது, நீச்சத்துக்கு வந்தது எல்லாம் படு வேகத்தில். இவற்றை சரியாகக் கணிக்க இயலாமல் போவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது, எல்லா சமயங்களிலும் ஓர் நிலையில் இருந்து அடுத்த நிலைக்குப் போக சந்தைக்கு ஒரே அளவு நேரம் தேவைப்படாது. களநிலையைப் பொறுத்து மாறும்.

ஆமாம், அது என்ன கள நிலைமை என்று கேட்கிறீர்களா? அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு