Election bannerElection banner
Published:Updated:

பங்குச்சந்தை அநியாயங்கள்... உஷார்! #SmartInvestorIn100Days நாள்-14

#SmartInvestorIn100Days
#SmartInvestorIn100Days

அடிக்கடி விலை உயர்வு கிடைக்காவிட்டாலும், பெரிய லாபங்களைக் கொடுக்காவிட்டாலும், ஸ்டாண்டர்ட் ஆன நிறுவனப் பங்குகளுடன் இருந்துவிடுவதே மேல். குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள்.

ஒருவர் கேட்கிறார், (காரணமாகத்தான் பெயரைக் குறிப்பிடவில்லை)

`நான் 13,000 ஆர்.காம் பங்குகள் வைத்திருக்கிறேன். எனக்கு அடக்கவிலை சராசரியாக 3.80 ரூபாய். அவற்றை வைத்திருக்கவா... விற்றுவிடவா?' என்று.

பார்த்து அதிக நாள் ஆகிவிட்டதே. என்னதான் விலை நடக்கிறது என்று தேடிப்பார்த்தேன். கடும் அதிர்ச்சி. கடந்த 11-ம் தேதி அன்று, வெறும் 70 பைசாவில் வர்த்தகம் முடிந்திருக்கிறது.

உடனடியாக என்னுடைய கண்கள் என்ன வால்யூம் நடந்திருக்கிறது, அதாவது எத்தனை பங்குகள் வர்த்தகமாகி இருக்கின்றன என்ற விவரத்தைத் தேடின. தேசிய பங்குச் சந்தையில், 95 லட்சம் பங்குகள் பரிவர்த்தனை ஆகியிருந்தது. தற்சமயம் வாசகர் நண்பர் விற்கவா என்று கேட்கிறார். நல்லவேளையாக விற்க இன்னும் வாய்ப்பு இருக்கிறது. இதே வாய்ப்பு அவருக்குப் பின்னால் கிடைக்குமா என்று யாரும் உறுதிசொல்ல முடியாது.

13,000 பங்குகளை 70 பைசாவாகப் பெருக்கினால், 9,100 ரூபாய் வருகிறது. இதில் தரகர் கமிஷன், வரிகள் போக விற்றால் அவருக்கு என்ன கிடைக்கும்? சுமார் 9,000 ரூபாய் கிடைக்கலாம். குறைந்தபட்சம் 9,000 ரூபாயையாவது அவர் மீட்டுவிடலாம். இது ஒரு அணுகுமுறை.

Share Market
Share Market

அவருடைய அடக்க விலை பங்கு ஒன்றுக்கு, 3 ரூபாய் 80 காசு. மொத்தம் 13,000 பங்குகளுக்கு 49,400 ரூபாய். இப்போது அவர் விற்றால் 40,000 ரூபாய் நஷ்டத்தைப் பதிவுசெய்ய வேண்டும். இதில் 40,000 ரூபாய் போய்விட்டது. இனி அந்த 9,000 ரூபாய் வந்தால் என்ன போனால் என்ன! என்றுகூட சிலர் யோசிக்கக்கூடும்.

அவர்களே, `ஒரு கால் ஏதாகிலும் நடந்து பின்னால் விலை ஏறி விட்டால் இப்போதைக்கு விற்றுவிட்டால், புக் செய்த நஷ்டம், நஷ்டம்தானே!’ என்றும் யோசிக்கலாம்.

பத்து மாதத்துக்கு முன்புகூட, 2019 ஜனவரியில், ஆர்.காம் பங்குகள் 13 ரூபாய் 50 காசு விலை நடந்திருக்கிறது. அவர்கள் அப்போதும் மேற்சொன்னவாறு யோசித்துக் காத்திருக்க முடிவு செய்திருக்கலாம்.

இப்போது அதன் விலை ஒரு ரூபாய்க்கும் கீழ். இது ஐந்து ரூபாய் முக மதிப்புள்ள பங்கு. இதே பங்கு, 2008-ம் ஆண்டு ஜனவரியில் 844 ரூபாய்!

இந்த அநியாயத்தை எங்கே போய் சொல்ல! இப்படிப்பட்ட அநியாயங்கள் வேறு எந்த சந்தையிலும், அசெட் கிளாசிலும் நடக்குமா என்று தெரியவில்லை. பங்குகளில் நேரடி முதலீடு – Direct Equity- என்பதன் மிக மோசமான அம்சமே இதுதான். காற்றில் கரைந்த கற்பூரம் போல, போட்ட பணம் கரைந்துபோய் விடுகிறது.

முன்பு பார்த்த GTL பங்குகளும் இப்படித்தானே, 3000 ரூபாயிலிருந்து ஒரு ரூபாய்க்கும் கீழ் விலை வந்துவிட்டது. இந்த அழகில் ஆர்.காம் பங்குகளின் புத்தக மதிப்பு ரூபாய் 44 என்றும் EPS, ரூபாய் 10 என்றும் அந்த இணையதளத்தில் காட்டுகிறார்கள்.

பிறகு ஏன், இதை வைத்திருப்பதா, விற்பதா என்றெல்லாம் சிறு முதலீட்டாளர்களுக்குச் சந்தேகம் வராது! அவர்கள் எப்படி முடிவெடுப்பார்கள்? அந்தப் பங்கு குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் moneycontrol.com-ல் அந்தப் பங்குக்கு கீழ் பலர் கமென்ட் போட்டிருக்கிறார்கள்.

share market
share market
நல்ல பங்குகள்... ஆபத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்? - ஓர் உதாரணம் #SmartInvestorIn100days நாள் 11

ஒருவர் சொல்கிறார், `நான் லட்ச ரூபாய் இதில் முதலீடு செய்யத் தயார். இப்பொழுது 50,000 பங்குகளை வாங்கி விடுவேன். பிறகு விலை 50 காசு வந்ததும் இன்னும் கொஞ்சம் வாங்குவேன்’ என்று.

மற்றொருவர் கமென்ட் போட்டிருக்கிறார், `வேண்டுமென்றே 70 காசுக்கு இன்றைய விலையை முடித்திருக்கிறார்கள். உள்ளே ஆபரேட்டர்கள் இயங்குகிறார்கள். இந்த நிறுவனத்தில் ஏதோ நல்லது நிச்சயம் நடக்கப்போகிறது. அதனால், அதற்குமுன் பொதுமக்களிடம் இருக்கும் பங்குகளை விலை குறைத்து பிடுங்குகிறார்கள்.’

என்னத்தைச் சொல்ல!

இதுபோன்ற பங்குகளில் இருந்து ஒதுங்கிவிடுவது மட்டுமே நன்மை தரும். ஏற்கெனவே வாங்கி வைத்திருப்பவர் வேண்டுமானால் காத்திருக்கட்டும். மற்றபடி இது தொடக்கூடாத பங்குகளில் ஒன்று மட்டுமல்ல. தொடக்கூடாத குழுமப் பங்குகளில் ஒன்று.

இதுபோல இன்னும் சில கேள்விகளும் வந்திருக்கின்றன. எல்லாம் ஆயாசம் தரும் கேள்விகள். ஆனாலும் தேர்வுசெய்து ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லக் காரணம், இதுபோலவே செய்துகொண்டு இருக்கும் ஏராளமானவர்களை எச்சரிக்கத்தான்.

தவறு என்பது தெரியவந்தால், தாங்கள் செய்யும் தவறுகள் குறித்து உணர்வார்கள். அதனால்தான்.

ஒருவர் கேட்கிறார், `இந்தியா புல்ஸ் ஹவுஸிங் 500 பங்குகள் 744 ரூபாய் விலையிலும் எஸ் பேங்க் பங்குகள் 101 ரூபாய் விலையில் 200 பங்குகளும், 3 மாதங்களுக்கு முன்பு வாங்கினேன். இப்போது சென்செக்ஸ் உயர்ந்த போதிலும் இந்தப் பங்குகளின் விலைகள் உயரவில்லையே. இவற்றை வைத்திருக்கவா... விற்றுவிடவா?’

வங்கி
வங்கி
மொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா?! #SmartInvestorIn100Days நாள்-12

மற்றொருவர் கேட்கிறார், `வக்ராங்கி பங்கு நிலைமை என்ன? IDBI நிறுவனப் பங்குகளை என்ன செய்வது? சவுத் இந்தியன் பேங்க் ஷேர்களை என்ன செய்வது?’

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் 1,750 ரூபாய்க்கு மேல் விலைபோன பங்கு. கடந்த ஏப்ரலில் கூட 825 ரூபாய் நடந்திருக்கிறது. இப்போது அந்த நிறுவனத்துக்குச் சிக்கல்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு IDBI பங்கு விலை, 84 ரூபாய். இப்போது ரூபாய் 29 ரூபாய்.

வக்ராங்கி மற்றொரு ஏமாற்றுக்காரப் பங்கு. பிப்ரவரி 2018-ல் விலை 505 ரூபாய். தற்போது 25 ரூபாய்.

NMDC. பங்கு விலை 2015-ல் 175 ரூபாய். தற்போது 95 ரூபாய்.

இவற்றில் NMDC மற்றும் IDBI பங்குகள் காலப்போக்கில் மீளலாம். மற்ற நிறுவன பங்குகள் குறித்து ஏதும் சொல்ல இயலவில்லை. அந்த நிறுவனங்களின் நிர்வாகிகளே பங்கு விலைகளில் ஆர்வம் காட்டுகிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.

அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்வது, அடிக்கடி விலை உயர்வு கிடைக்காவிட்டாலும், பெரிய லாபங்களைக் கொடுக்காவிட்டாலும், ஸ்டாண்டர்ட் ஆன நிறுவனப் பங்குகளுடன் இருந்துவிடுவதே மேல். குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள். அவர்களால்தான் முழுத்தகவல்களைப் பெறமுடியாது. மேலும் அவர்களைக் குறிவைத்துதான் வலை வீசப்படுகிறது.

- முதல் போடலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு