பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் எல்லாப் பங்குகளும் பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் பகுதியில் டிரேட் ஆகாது. சந்தை நிர்வாகங்கள், ஆராய்ந்து சில பங்குகளை மட்டும்தான் அனுமதிக்கும். பின்னர், பட்டியலிலிருந்து எந்தப் பங்கையும் விலக்கலாம்.
தற்சமயம், தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 147 பங்குகள் பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் பகுதியில் பரிவர்த்தனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை `டெரிவேட்டிவ்ஸ்’ வர்த்தகம் என்றும் சொல்வார்கள்.
டெரிவேட்டிவ்ஸ் என்றால், `ஒன்றில் இருந்து உருவாக்கப்பட்டது’ என்று பொருள். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம், விற்கலாம். அது நடப்பது கேஷ் அல்லது ஈக்விட்டி மார்க்கெட்டில். விற்பவர் பங்கை டெலிவரி கொடுக்க வேண்டும். வாங்குபவரின் டிமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும்.
கேஷ் மார்க்கெட்டில் அப்படி வாங்கி விற்கப்படும் பங்குகளின் உரிமை, விற்பவரிடம் இருந்து வாங்குபவருக்குப் போய்விடும். அதனால்தான், வாங்கிய தேதிக்குப் பின் அறிவிக்கப்படும் டிவிடெண்ட், உரிமைப் பங்குகள், போனஸ் பங்குகள் எல்லாம் வாங்கியவருக்கே சொந்தமாகின்றன.

ஆனால், டெரிவேட்டிவ்ஸ் பகுதியில் அப்படியல்ல. இந்தப் பகுதியில் உண்மையான நிறுவனப் பங்குகளை விற்பதோ வாங்குவதோ இல்லை. அதனால்தான் டெலிவரி, டிவிடெண்ட், உரிமைப்பங்குகள் எல்லாம் கிடையாது. குறிப்பிட்ட நிறுவனத்தின் விலை உயருமா, குறையுமா என்கிற யூகங்களை வைத்து நடக்கும் பரிவர்த்தனை; வியாபாரம் அது. பங்குகள் கைமாறுவதில்லை. அதன் காரணமாகத்தான் அவற்றுக்கு `டெரிவேட்டிவ்ஸ்’ என்று பெயர்.
நிறுவனப் பங்குகள் தவிர, பங்குச் சந்தை குறியீட்டு எண்களையும் பங்குகள் போலவே பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் பகுதியில் வாங்கவும் விற்கவும் செய்யலாம். இவற்றை, `இன்டெக்ஸ் பியூச்சர்ஸ்’ என்பார்கள்.
தேசிய பங்குச் சந்தையில், `நிஃப்டி 50’ என்ற குறியீட்டு எண்ணும், `பேங்க் நிஃப்டி’ என்ற குறியீட்டு எண்ணும் வாங்கி விற்கக்கூடிய டெரிவேட்டிவ்ஸ்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் பகுதியில் மார்க்கெட் லாட் 500 என்றும் MRF நிறுவனப் பங்கிற்கு மார்க்கெட் லாட், 10 என்றும் பார்த்தோம் அல்லவா... அதுபோல இன்டெக்ஸ் பியூச்சர்ஸுக்கும் `மார்க்கெட் லாட்’ உண்டு.
கடந்த சில ஆண்டுகளாக, நிஃப்டி 50-யின் மார்க்கெட் லாட் 75 ஆக இருக்கிறது. பேங்க் நிஃப்டியின் மார்க்கெட் லாட் 20. நிறுவனப் பங்குகளின் மார்க்கெட் லாட்ஸ் தேவைப்படும்போது மாற்றப்படுவதைப்போல, இவற்றின் லாட் சைஸ்களும் மாற்றப்படும்.
147 பங்குகளுக்கும் இரண்டு இன்டெக்ஸ் பியூச்சர்களுக்கும் கேஷ் மார்க்கெட்டில் ஒரு விலை இருக்கும். அவற்றுக்கே, பியூச்சர்ஸ் மார்கெட்டில் சிறு வித்தியாசத்துடன்கூடிய வேறு விலை இருக்கும். உதாரணத்திற்கு, கடந்த ஜனவரி 10-ம் தேதி கேஷ் மார்க்கெட்டில், ரிலையன்ஸ் பங்கின் குளோசிங் விலை 1,547 ரூபாய். அதே பங்கின் பியூச்சர்ஸ் மார்கெட் குளோசிங் விலை, 1,551 ரூபாய். 4 ரூபாய் அதிகம்.

MRF நிறுவனப் பங்கின் கேஷ் மார்க்கெட் குளோசிங் விலை, 67,493 ரூபாய். அதே பங்கின் பியூச்சர்ஸ் மார்க்கெட் குளோசிங் விலை, 67,700 ரூபாய். 207 ரூபாய் அதிகம்.
அன்றைய தினம், நிஃப்டி 50 இன்டெக்ஸ் முடிவுற்றது 12,256 புள்ளிகளில். அதே இன்டெக்ஸ், பியூச்சர்ஸ் மார்க்கெட்டில் குளோசிங், 12,294 புள்ளிகளில்.
`இன்டெக்ஸ் டெரிவேட்டிவ்ஸை'ப் பொறுத்தவரை, புள்ளிகள்தான் அவற்றின் விலை. ஒரு `நிஃப்டி 50’ டெரிவேட்டிவ், 12,294 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. மார்க்கெட் லாட் 75.
ஒருவர், ஜனவரி 10-ம் தேதி 12,294 என்ற விலையில் ஒரு லாட் வாங்கிய பின், அடுத்த வர்த்தக நாளான ஜனவரி 13 அன்று, 50 புள்ளிகள் உயர்ந்திருக்கும் நேரம் அவர் விற்றால், அவருக்கு 50*75 என்ற விகிதத்தில், ரூபாய் 3,750 லாபம். குறைந்திருக்கும் நேரம் விற்றால், அந்த அளவு நஷ்டம். விற்பதற்கு ஜனவரி 30 வரை அவகாசம் உண்டு.

கவனித்திருக்கலாம், மேலே பார்த்த மூன்று டெரிவேட்டிவ்ஸுமே, கேஷ் மார்க்கெட்டில் இருப்பதைவிட, பியூச்சர்ஸில் கூடுதல் விலை அல்லது கூடுதல் புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இதை, `பிரீமியம்’ என்பார்கள். நிஃப்டி 50 அதிக பிரீமியத்தில் இருந்தால், மார்க்கெட்டின் `மூட்’ (mood) புல்லிஷ் (Bullish) ஆக இருப்பதாகக் கணிப்பார்கள்.
பியூச்சர்ஸில் வர்த்தகமாகும் டெரிவேட்டிவ்ஸை நியர், நெக்ஸ்ட் மற்றும் ஃபார் என்று நடப்பு மற்றும் அடுத்த இரண்டு மாதங்களில் ஏதாவது ஒரு கான்ட்ராக்ட்டில் வாங்கலாம் என்று முன்பு பார்த்தது நினைவிருக்கலாம். கேஷ் மார்க்கெட் விலைக்கும் பியூச்சர்ஸ் விலைக்கும் இடையே வேறுபாடு இருக்கும் என்பது போல, ஒரு பங்கின் பியூச்சர்ஸ் விலைக்குள் வெவ்வேறு மாத கான்ட்ராக்ட்டுகளில் வெவ்வேறு விலைகள் இருக்கும்.
உதாரணத்திற்கு MRF நிறுவனப் பங்கின் 10.1.2020 என்ற ஒரே நாளில் முடிவுற்ற
· கேஷ் மார்க்கெட் குளோசிங் விலை, 67,493 ரூபாய்.
· ஜனவரி பியூச்சர்ஸ் மார்க்கெட் குளோசிங் விலை, 67,700 ரூபாய்.
· பிப்ரவரி பியூச்சர்ஸ் மார்க்கெட் குளோசிங் விலை, 67,316 ரூபாய்.
· மார்ச் பியூச்சர்ஸ் மார்க்கெட் குளோசிங் விலை, 68,282 ரூபாய்.
சில பங்குகளுக்கு, மூன்றாவது மாதமான மார்ச்சுக்கு குறிப்பிட்ட நாளன்று வர்த்தகம் நடந்திருக்காது. அதனால் விலை இருக்காது.
- முதல் போடலாம்
சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.