Published:Updated:

பங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்! #SmartInvestorIn100Days நாள் - 37

#SmartInvestorIn100Days நாள்-37
News
#SmartInvestorIn100Days நாள்-37

பங்குச்சந்தையில் அதிக காலம் இருப்பதாலேயே ஒருவர் பங்குச்சந்தையில் பணம் பண்ணும் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

ஜுன்ஜுன்வாலாவின் பங்குச்சந்தை சித்தாந்தம்,``Buy right and hold tight”. `சரியானதை வாங்கு, தொடர்ந்து வைத்திரு’ என்பது அதன் அர்த்தம். நேற்று வெளியான அத்தியாயத்தில் பார்த்த டைட்டன் கம்பெனி பங்கில் அவர் அதைத்தான் செய்திருக்கிறார்.

ஜுன்ஜுன்வாலாவைப் பற்றி சொல்லும்போது `தேடி, அலசி ஆராய்ந்து, பேசிப் புரிந்துகொண்டு பங்குகளை வாங்குகிறார். அவருடைய வாங்கும் சக்தி அதிகம் என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகத்தினரிடமே பேசி அந்நிறுவனத்தின் வருங்கால வாய்ப்புகள் குறித்தெல்லாம் தெரிந்துகொள்கிறார்' என்பார்கள்.

2002 - 03-ம் ஆண்டுகளில் வாங்கிய டைட்டன் பங்குகளை இன்னமும் தொடர்ந்து வைத்திருக்கிறார். வாங்கியது நல்ல நிறுவனப் பங்கு. வைத்திருப்பது நீண்டகாலமாய்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிலர் வாங்குவது தற்செயலாக அல்லது மற்றவர் சொல்லியதைக் கேட்டு. அவர்கள் நல்ல நிறுவனப் பங்குகளை வாங்கிவிடுவார்கள். ஆனால், கைகொண்டுவிட்ட நல்ல பங்குகளை, அவர்கள் தொடர்ந்து வைத்திருக்க மாட்டார்கள். அதுதான் பெரிய பணம் செய்யாததற்கு காரணம்.

வேறு சிலர், சரியில்லாத நிறுவனப் பங்குகளை வாங்கிவிட்டு, அதை விலை இறங்க இறங்க, மேலும் மேலும் வாங்கிச் சேர்ப்பார்கள். கேட்டால், ஆவரேஜ் சராசரி செய்கிறேன் என்பார்கள். இதன் பெயர் `டினையல்’. தான், செய்தது சரிதான் என்று தனக்கே நிரூபித்துக்கொள்ள செய்வது இது.

Investment
Investment

பங்குச்சந்தையில் அதிக காலம் இருப்பதாலேயே ஒருவர் பங்குச்சந்தையில் பணம் பண்ணும் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

இடையில் ஓரிரு ஆண்டுகளைத் தவிர, 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நஷ்டம் செய்பவர்களை எனக்குத் தெரியும். பிரச்னை அவர்களிடம்தான் என்று உணராமல், அவர்கள் இன்னமும் வேறு எவரையோ, எதையோ குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீடு, மனை, பிளாட் வாங்க எவ்வளவு தேடுகிறோம்; விசாரிக்கிறோம்; ஆராய்கிறோம்; பேரம் பேசுகிறோம்! தங்கம், வெள்ளியைக்கூட தரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, எங்கே சரியானதாகக் கிடைக்கும் என்று மெனெக்கெட்டு, கடையைத் தேடி, தேர்ந்தெடுத்து வாங்குகிறோம். அப்படித்தானே பங்குகளும்... உழைத்த, சேமித்த பணத்தைக் கொடுத்து வாங்குவதுதானே! ஆனால், பலர் அதில் இவைபோல தேடி, ஆராய மாட்டார்கள்.

முன்பெல்லாம் நேரில் சந்திக்கும்போது, `என்னென்ன பங்குகள் இப்போது வாங்கலாம்?’ என்று கேட்பவர்கள் உண்டு; தொலைபேசியில் விவரம் கேட்டவர்கள் உண்டு. இப்போதுபோல ஊடகங்களில் பங்குச்சந்தை தகவல்கள் பெரிய அளவில் வராத காலம் அது. ஏதாவது நிறுவனப் பங்கைச் சொன்னால், அதை எழுதிக்கொள்ள என்னிடம் நிறுவனத்தின் பெயருக்கு சிலர் ஸ்பெல்லிங் கேட்டிருக்கிறார்கள்.

அந்த அளவுக்குத்தான் அவர்களுக்கு அந்த நிறுவனம் பற்றித் தெரியும். ஆனால், சொன்னதை வாங்கிவிடுவார்கள். ``கொஞ்சமாக வாங்குங்கள்”, ``விலை இன்னும் கொஞ்சம் குறைந்தபின் வாங்குங்கள்” என்பது போன்ற எச்சரிக்கைகளை பொருட்படுத்த மாட்டார்கள். நம் ஆலோசனைகளைப் புறந்தள்ளிவிட்டு, பெரிய அளவுகளில் உடனே பங்குகளை வாங்கிவிடுவார்கள்.

இப்போதும் அப்படிச் செய்பவர்கள் உண்டு. மொபைல் போனில், அவர்கள் கேட்காமலே, அவர்களுக்கு வரும் `ஸ்டாக் ரெகமென்டேஷன்ஸ்’ மற்றும் `கால்ஸ்’. அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், ஃபைனான்ஸ் பத்திரிகைகளில் சொல்லப்படும் பரிந்துரைகள், `ஸ்டாக் ஐடியாஸ்’ என அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின்படி வாங்கிவிடுகிறார்கள்.

Investments
Investments

அதுவும் கணிசமான `குவான்டிட்டி’ களில். பின்னர், நஷ்டம் ஏற்படும். விற்கத் தயங்க மாட்டார்கள். நஷ்டத்தைக் குறைக்க, தடுக்க `ஸ்டாப் லாஸ்’ போட்டு விற்றுவிட்டு வெளியேறிவிடுவார்கள். அடுத்த நாளே இல்லாவிட்டாலும் சில நாள்களில் மீண்டும் அதே அணுகுமுறையைக் கடைப்பிடிப்பார்கள். மீண்டும் நஷ்டம் அல்லது சொற்ப லாபம்.

உடனடி லாபம் கிடைத்துவிட்டதோ போயிற்று. அது மேலும் பிரச்னையை உண்டாக்கும். தான் செய்வது சரிதான் என்று முடிவு செய்து, மேலும் அதே நிறுவனப் பங்குகளை விலை உயர்ந்த பின்பும் வாங்குவார்கள். மேலும், கொஞ்சம் பணம் உள்ளே போகும்.

பங்குகளில் மட்டும் ஏன் இப்படி ஆராயாமல், அவசரமாகச் செய்கிறார்கள்?

வேறு என்ன! உடனடியாக விலை ஏறும் என்கிற ஆசை மற்றும் கணிசமான லாபம் மற்றும் கிடைப்பதும் சுலபமாகக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புகள்தான்.

பங்குகள் `முதலீட்டுக்கு’ என்றால், உடனடியாக லாபம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்ப்பவர்கள் `இன்வெஸ்ட்மென்ட்’ டுக்காக பங்குகள் வாங்கவில்லை. `டிரேட்’ செய்வதற்காக வாங்குகிறார்கள். `டிரேடி'ல்தான் உடனடி லாபம். சிலவற்றில் நஷ்டமானாலும் பரவாயில்லை என்கிற மனநிலை அல்லது போக்கு.

Investment
Investment

`இன்வெஸ்ட்மென்ட்’ என்பது முற்றிலும் வேறுபாடானது. வாங்கிவிட்டு அதிலேயே உட்காரவேண்டியது. அதனால், தேர்வு செய்வதில் அதிக கவனம், அக்கறை, நேரம் உழைப்பு எல்லாம் தேவை.

இரண்டு பகுதிகளும் முக்கியம். சரியானதைத் தேர்வுசெய்து வாங்கு. வாங்கியதை தொடர்ந்து வைத்திரு. இந்த இரண்டும்தான் பங்குச்சந்தையில் பணம் பார்ப்பதற்கான மந்திரங்கள்.

இடையில் விலை இறங்கினால்?

வாங்கியது நல்ல பொருள்தானே! விலை இறங்குவது நிறுவனத்தின் பிரச்னையால் அல்ல. சந்தையின் எதிர்பார்ப்பு, வேறு ஏதோ சூழ்நிலைகள், நிகழ்வுகள்தான் அதற்கு காரணம் என்றால், அதை ஏன் விற்க வேண்டும்?

ஆனாலும் சிலர் விற்கிறார்களே... அவர்களின் மனவோட்டம் என்னவாக இருக்கும்?

அவர்கள் எதிர்பார்ப்பு எல்லாம் லாபம். பெரிய அளவில் மற்றும் உடனடி லாபம். இதன் பெயர் ஆசை அல்லது பேராசை. ஆங்கிலத்தில் ஃகிரீட் (Greed) என்பார்கள். ஆனால் நிலைமை, வேறு ஏதோ காரணத்தால் விலை இறங்குகிறது. அதைக் கண்டு மேலும் விலை இறங்கிவிடுமோ என்கிற பயம் (Fear) இவர்களுக்கு.

பேராசை மற்றும் பயம் என்கிற இந்த இரண்டும், பங்குச் சந்தையில் பணம் செய்யவிடாது. ஒருவருக்குள் இருக்கும், உடனிருந்தே கெடுக்கும் எதிரிகள்.

அவர்கள் மனவோட்டம், `விலைதான் மேலும் விழப்போகிறதே! இப்போதைய விலையில் விற்றுவிட்டு, விலை இறங்கியபின் வாங்கினால், லாபம்தானே!’ இதுதான் அவர்கள் நினைப்பு. இந்த நினைப்பு முதலீட்டாளர், `இன்வெஸ்டார்' உடையதல்ல; டிரேடருடையது.

நல்ல பங்கை விற்றுவிடுவார்கள். பின்னர், வேறு பங்கை வாங்குவார்கள். அதையும் விற்றுவிடுவார்கள். சல்லடையில் தண்ணீர் பிடிப்பது போன்றது இவர்கள் செய்வது.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.