Published:Updated:

யெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா? இன்னும் விலை வீழுமா? #SmartInvestorIn100Days - நாள் 10

இந்தப் பெரிய, ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் ஒரு செய்தியை உரக்கச் சொல்கிறது.

யெஸ் பேங்க் #SmartInvestorIn100Days
யெஸ் பேங்க் #SmartInvestorIn100Days

'கேள்விகள் கேட்கலாம். தேர்வு செய்யப்பட்ட கேள்விகளுக்கு சோம.வள்ளியப்பன் பதில் சொல்வார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்ததற்கு ஏராளமான ரெஸ்பான்ஸ். மகிழ்ச்சி.

கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்ல இடம் போதுமா என்று தெரியவில்லை. காரணம், வந்திருப்பது அவ்வளவு கேள்விகள்.

பலரும் எஸ் பேங்க் பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஜவஹர், குமார், சாய்பிரணவ், எஸ். தனசேகரன்.

1. யெஸ் பேங்க் பங்கை வாங்கிவைத்தேன். இப்போது வாங்கிய விலையிலிருந்து 50 சதவிகிதம் விழுந்து கிடக்கிறது. அது, நிஃப்டி 50-ல் மற்றும் சென்செக்ஸ் 30-ல் இருப்பதால், பொறுமை காப்பின் பயன் கிட்டுமா? என்னிடம் 100 ரூபாய் விலையில் மொத்தம் 1000 பங்குகள் உள்ளன. ஆலோசனை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

- ஜவஹர்

2. யெஸ் பேங்க் பங்குகளுக்கு என்ன ஆச்சு?

- குமார்

3. தற்போதைய சூழ்நிலையில் யெஸ் பேங்க் நிலவரம் என்ன?

-சாய் பிரணவ்

4. யெஸ் பேங்கில் வைத்திருக்கும் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா?

- எஸ். தனசேகரன்

பொதுவாக, முதலீட்டாளர்களிடம் இருக்கும் ஓர் எதிர்பார்ப்பு, ஒரு பங்கு குறியீட்டு எண்ணில் சேர்க்கப்படுகிறதென்றால், அதன் பின் அதன் விலை உயரும் என்பதாக இருக்கும். அப்படி எண்ணித்தான் ஜவஹர், நீங்களும் எஸ்.பேங்க் பற்றி கேள்வி கேட்டிருக்கிறீர்கள். ஆனால், ஆய்வு தரும் தகவல் என்ன தெரியுமா?

share Market
share Market

இதுவரை நிஃப்டியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 21 நிறுவனப் பங்குகளில் 19 பங்குகள், அதன்பிறகு அடுத்த ஆண்டில் பங்கு விலையில் நெகட்டிவ் ரிட்டர்ன்ஸ் கொடுத்தன என்பதுதான். அப்படியென்றால், நிஃப்டியில் சேர்த்தபின் அவற்றின் விலைகள் இறங்கியிருக்கின்றன. ஒன்றிரண்டு பங்குகள் அல்ல. 21 பங்குகளில் 19 பங்குகளின் விலைகள். சமீபத்திய எடுத்துக்காட்டு, நெஸ்லே இந்தியா பங்கு. 2019, செப்டம்பர் 27-ம் தேதி அன்று முதல் இண்டியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்குக்குப் பதிலாக நெஸ்லே இந்தியா பங்கு, நிப்டி 50 குறியீட்டு எண்- இண்டெக்ஸில் சேர்க்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளிவந்த அன்று, வர்த்தகத்தில் நெஸ்லே இந்தியா பங்கு விலை 2.9 சதவிகித உயர்வும், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் 7 சதவிகித வீழ்ச்சியும் கண்டன.

நிஃப்டியில் சேர்க்கப்படுவதற்கு முதல் நாள், நெஸ்லே இந்தியா பங்கு விலை 13,941 ரூபாய். சேர்க்கப்பட்ட அன்று 13,740 ரூபாய்தான். தற்சமயம், அதாவது அக்டோபர் 4-ம் தேதி அன்று அதன் விலை மேலும் குறைந்து, 13,441 ரூபாய் என்கிற அளவில் வர்த்தகமானது. பின்னர் உயரலாம், வேறு காரணங்களுக்காக.

ஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்! #SmartInvestorIn100Days - நாள் 9

ஆக, சென்செக்ஸ், நிஃப்டி போன்ற குறியீட்டு எண் பட்டியலில் சேர்க்கப்படுவதால் மட்டுமே ஒரு பங்கின் விலை உயர்ந்துகொண்டு போகும் என்பதில்லை. அவை சேர்க்கப்படுவதற்குக் காரணம், அந்தப் பங்குகள் அதிகம் வர்த்தகம் ஆகின்றன என்பதுதான். தேசிய பங்குச் சந்தை, அதன் குறியீட்டு எண்ணில் ஒரு நிறுவனத்தின் பங்கைச் சேர்ப்பதற்கு கவனிக்கும் காரணங்களை அதன் இணையதளத்தில் கொடுத்திருக்கிறார்கள். பார்க்க...

ஆனால், இதில் ஒரு பங்கின் விலை ஏற்றத்திற்கு அவசியமான நிறுவனத்தின் வியாபாரம், லாபம், லாபப் பகிர்வு, வரவிருக்கும் வியாபார வாய்ப்புகள் போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் ஒரு பங்கு நிஃப்டியில் சேர்க்கப்படுவதற்குத் தகுதியாகத் தெரிவிக்கப்படவில்லை. ஒரு பங்கு குறியீட்டு எண்ணில் சேர்க்கப்படுவது, அந்தப் பங்கை டிரேட், ஸ்பெகுலேட் செய்ய உதவலாம். முதலீடு செய்வதற்கு அல்ல.

அடுத்து, நான் 100 ரூபாயில் இந்தப் பங்கை வாங்கினேன். பொறுமை காத்தால் பலன் கிட்டுமா? என்று கேட்கிறீர்கள்.

கடந்த ஜூன் மாதம், யெஸ் பேங்க் பங்கு 100 ரூபாய் இருந்திருக்கிறது. நீங்கள் வாங்கியதிலிருந்து தற்போது இறக்கம்தான்! உங்கள் வருத்தம் புரிகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 393 ரூபாய் இருந்த பங்காயிற்றே, இவ்வளவு இறங்கியிருக்கிறதே! இதைவிடவுமா இறங்கும் என்று நினைத்து நீங்கள் வாங்கியிருக்கலாம்.

சில பங்குகள் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு விலை உயர்ந்துகொண்டே இருப்பதைக் கவனிப்பவர்கள், முன்பு வாங்கி, சொற்ப லாபத்துக்கு விற்றுவிட்டு, ஏனடா விற்றோம் என்று அதன் தொடர் விலை உயர்வைப் பார்த்து வருத்தப்பட்டுக்கொண்டிருப்பவர்கள், அது விலை இறங்கிய போது வாங்கத் தவறியவர்கள் என்று சந்தையில் பலர் கொஞ்சம் பரபரப்பாக இருப்பார்கள்.

அந்த விதத்தில், எஸ் பேங்க் பங்கையும் பலர் கவனித்திருப்பார்கள். அதன் விலை வீழ்கிறபோது, ஆர்வத்துடன் வாங்கியிருப்பார்கள். தொடர்ந்து வாங்குவார்கள்.

Yes Bank
Yes Bank

மேலோட்டமாகப் பார்த்தால், நீங்கள் செய்தது சரிதான். 393 போனது இப்போது ரூபாய் 100 மட்டுமே என்பதால் வாங்கியிருப்பீர்கள். ஆனால், அதன்பின்பும் தொடர்ந்து விழுந்து, அக்டோபர் 1-ம் தேதி 32 ரூபாய்க்கு வந்தது.

393 ரூபாய் எங்கே, 32 ரூபாய் எங்கே!

இடையில் வாங்காதவர்கள் ஏன் வாங்கவில்லை? அவர்களுக்கு மட்டும் அப்படியென்ன கூடுதல் விவரம் தெரிந்திருக்கும் என்று கேட்கிறீர்களா? அது டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த விஷயம். ஒரு பங்கின் விலை தொடர்ந்து விழும்போது, அதன் விலையில் டிரெண்ட் ரிவர்சல் வந்தால்தான் விவரம் தெரிந்தவர்கள் வாங்குவார்கள். அதைப் பற்றி பின்னர் பார்க்கலாம்.

பங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #SmartInvestorIn100Days - நாள் 3

யெஸ் பேங்க் பங்கு விலை இவ்வளவு வீழ்வதற்கு நிறுவனத்தின் ஃபண்டமென்டல்ஸ் மட்டும் காரணமல்ல. அந்நிறுவனத்தின் பங்குகளை மிக அதிக எண்ணிக்கையில் வைத்திருப்பவர்கள் பெரிய அளவுகளில் சந்தையில் விற்பதுதான் காரணம்.

சமீபத்தில், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் அவர்களிடம் அடமானம் வைக்கப்பட்ட யெஸ் பேங்க் பங்குகளை, அடமான விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு வர்த்தகம் நடக்க ஆரம்பித்ததால், விற்றிருக்கிறார்கள். அதன் புரமோட்டர் ராணா கபூர், அவரிடம் இருந்த பங்குகளைக் கணிசமாக விற்றிருக்கிறார். மிகக்குறுகிய காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான பங்குகள் விற்கப்படுவதால், விலை தலைகுப்புற விழுகிறது.

share market
share market

45 ரூபாய் விலையில் அக்டோபர் 4-ம் தேதி அன்று தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமான யெஸ் பேங்க் பங்குகளின் எண்ணிக்கை, 51 கோடி சொச்சம். மும்பை பங்குச் சந்தையில் மற்றுமொரு 3.8 கோடி.

இந்தப் பணம் போனால் போகிறது என்று நினைப்பவர்கள் மட்டும், இந்த விலைகளில் வாங்கலாம். இந்த அமளி எல்லாம் அடங்கியபின் விலை உயர்ந்தாலும் உயரலாம். அதற்கு முன் மேலும் இறங்கினாலும் இறங்கலாம்.

லஷ்மி விலாஸ் பேங்க், யெஸ் பேங்க்...  தத்தளிக்கும் தனியார் வங்கிகள்!

100 ரூபாய் விலையில் வாங்கியவர், இயன்றால் மேலும் கொஞ்சம் வாங்கி சராசரி விலையைக் குறைத்துக்கொள்ளலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. போட்ட பணம் வரை போதும், விட்டு விடுங்கள் என்றும் சொல்லத் தோன்றுகிறது. காரணம், யெஸ் பேங்க் பங்கு விலை என்ன ஆகும் என்று இன்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எதற்கும் நாளைய பதிவையும் பார்த்துவிட்டுச் செய்யுங்கள்.

அடுத்தடுத்த கேள்விகளுக்கான பதிலை மற்றுமொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்.

சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவுசெய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.